Skip to main content

கறையாலே கரையினிலே

கறையாலே கரையினிலே

 

இயேசுவின் ஒவ்வொரு செயல்களையும் 'ஏன்?' என்று அறிந்துகொள்ள முற்பட்டால், அது நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாகிவிடும். இயேசுவோடு உடனிருந்த யோவான், தனது சுவிசேஷத்தில் அவர் செய்த பல்வேறு அற்புதங்களை நமக்காக எழுதித்தந்திருந்தபோதிலும், அற்புதங்கள் நடைபெற்ற மற்றும் அற்புதங்கள் நடைபெறக் காரணமாயிருந்த இரண்டு குளங்களைக் குறிப்பிடுகின்றார்; ஒன்று 'பெதஸ்தா' மற்றொன்று 'சீலோவாம்'. பெதஸ்தா குளத்தின் ஓரத்தில் வியாதியஸ்தர்கள் சுகம்பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் படுத்துக்கிடந்தார்கள்; அந்தக் குளத்தைச் சுற்றிலும் குடியிருந்தவர்கள் அவர்களே. இந்தக் குளத்தில் சுகம்பெறவேண்டும் என்று காத்திருந்தவர்கள், மூன்று காரியங்களில் கவனமாயிருக்கவேண்டும். ஒன்று, சில சமயங்களிலேதான் தேவதூதன் அந்தக் குளத்தைக் கலக்குவான்; இரண்டாவது, யார் முந்தி அதில் இறங்குவானோ அவன்தான் சொஸ்தமாவான்; மூன்றாவது, ஒருமுறை குளம் கலக்கப்படும்போது கரையில் உள்ள அனைவருக்கும் சுகம் கிடைத்துவிடுவதில்லை, ஒருவனுக்கே சுகம் கிடைக்கும்; 'முந்தி இறங்குகிறவர்களுக்கு அல்ல' 'முந்தி இறங்குகிறவனுக்கே' (யோவான் 5:4). கிட்டத்தட்ட ஒரு விளையாட்டு மைதானம் போலத்தான் பெதஸ்தா குளமும் அதைச் சுற்றியிருந்த வியாதியஸ்தர்களும். சுற்றியிருந்த மனிதர்கள் வியாதியஸ்தர்களாக இருந்தபோதிலும், போட்டியில் என்றாவது ஜெயித்து சுகம் பெற்றுவிடவேண்டும் என்ற வீரர்களாகவே அங்கு களமிறங்கியிருந்தனர். சுகம் என்பதே முதல் பரிசு, இரண்டாம் மூன்றாம் பரிசுகள் இல்லை. மீந்தவர்களெல்லாம், அடுத்தப் போட்டிக்குக் காத்திருக்கவேண்டும். முந்தி ஓடமுடிந்தவர்களெல்லாம் சுகம்பெற்று வெற்றியுடன் மைதானத்தை விட்டு (குளத்தை விட்டு) வெளியேறிக்கொண்டிருந்தனர். ஓட இயலாத பலருக்கு உதவி செய்ய ஆயத்த நிலையில் பலர் அமர்ந்திருந்தனர். அவர்களெல்லாம், வியாதியாயிருக்கும் தங்கள் உறவினருக்கும், அண்டியோருக்கும், ஒண்டியோருக்குமே உதவிசெய்யக் காத்திருந்தனர். முப்பத்பத்தெட்டு வருஷம் வியாதியாயிருந்த மனுஷனோ எவருமின்றி தனியாக விடப்பட்ட நிலையிலிருந்தான். இயேசு அவனைச் சந்தித்தபோது, அவன் அவரை நோக்கி: 'ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான்' என்று அங்கலாய்த்தான் (யோவான் 5:7). 'கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை' என்பதை மட்டுமே அவன் குறையாகக் கூறிக்கொண்டிருந்தான். மற்றவர்கள் தனக்கு உதவிசெய்ய முன்வரவில்லை என்றே நினைத்துக்கொண்டிருந்தான்; அனது பாவமோ அவன் கண்களுக்குத் தென்படவில்லை. பாவமே அதற்குப் பிரதான தடையாயிருக்கிறது என்பதை அடையாளம் காணாமல், சுகம் வேண்டும் என்று காத்துக்கிடந்தவன் அவன். தன் வாழ்க்கையில் இருக்கும் உத்திரத்தை உணராமல், மற்றவர்களின் செயலிலே துரும்பைப் பார்த்துக்கொண்டிருந்தான் (மத். 7:3). குளம் கலக்கப்படும்போது ஒவ்வொரு முறையும் புறப்பட்டுச் சென்றாலும் தோல்வி, தோல்வி, தோல்வியே. அதற்குக் காரணம் பாவமே என்ற அறிவில்லாதிருந்தவன் அவன். இயேசு வந்தபோதே அவனுக்கு சுகம் கிடைத்தது; ஆம், அவன் குளத்தைச் சந்தித்து சுகம் பெறவேண்டியவனல்ல, இயேசுவைச் சந்தித்து சுகம்பெறவேண்டியவன். பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கவேண்டும் என்று விரும்புகிறவர் அவரல்லவா! (3யோவான் 1:2). ஆத்துமாவை அழிவில் விட்டு விட்டு சரீரத்துக்கு சுகும் வேண்டும் என்று தட்டை ஏந்திக்கொண்டு நின்றால் எப்படி? ஓருவேளை அவன் முந்தி இறங்கியிருந்தாலும், சரீர சுகத்தைத்தான் பெற்றிருப்பான், ஆத்துமாவிலோ பாவியாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்திருப்பான். எனவே அவனுடைய சுகம் தள்ளிப்போடப்பட்டிருந்தது. எனவே, இயேசுவும் அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார் (யோவா 5:14).

இயேசுவை அறியாதவனாக முந்தி குளத்தில் இறங்கி, சுகத்தைப் பெற்றிருந்தால், 'பெதஸ்தா குளத்தில் குணமானேன்' என்றுதான் சொல்லித் திரிந்திருப்பான். குளத்தின் மேலேதான் நம்பிக்கை வைத்திருப்பான்; 'பெதஸ்தா குளத்திற்குப் போங்கள் உங்களுக்கு சுகம் கிடைக்கும்' என்றுதான் பறைசாற்றியிருப்பான்; அவன் இயேசுவை இன்னாரென்று அறியாதவனாயிருந்தானே (யோவான் 5:13). ஆனால், இயேசுவைச் சந்தித்து சுகம் பெற்றதால், தேவாலயத்திலும் இயேசுவைச் சந்தித்து எச்சரிக்கப்பட்டதால், 'சொஸ்தமாக்கியவர் இயேசு' என்று அறிவிக்கத் தொடங்கினான் (யோவான் 5:15). நீங்கள் இயேசுவை அறியாமல், குளத்தில் கரையிலே காத்துக்கிடக்கும் கூட்டத்தில் ஒருவரா? முதலில் இயேசுவுக்கு உள்ளத்தில் இடங்கொடுங்கள், சரீரத்தில் கொந்தளிக்கும் அலைகள் தானாக அடங்கும். அப்படி அடங்காவிட்டாலும், அவருடைய கிருபை நம்மேல் சொரியப்பட்டு, அடக்கத்துக்குப் பின்னர் ஆத்துமா அமைதியாக அவரிடத்தில் பரத்திற்குச் சென்று அடங்கும். எவ்விதமானாலும், சரீரமல்ல, ஆத்துமாவுக்காகவே நாம் அவரிடத்தில் முதலில் முந்திக்கொள்ளவேண்டும்.

அநேகருடைய நிலை இந்நாளிலும் இதுவே, அந்தக் கூட்டத்துக்கு வாங்க சுகமாயிரும், இந்த உபவாச ஜெபத்துக்கு வாங்க உங்களுக்கு சுகமாயிரும், அங்கே ஒரு ஊழியர் இருக்கார் போய் ஜெபியுங்க உங்களுக்கு சுகமாயிரும், இந்த ஊழியத்துக்கு காணிக்கை கொடுங்க சுகமாயிரும் என்று பெதஸ்தாவைத்தான் பிரஸ்தாபப்படுத்திக்கொண்டிருக்கின்றனர் பலர். இந்த ஆலயத்திற்குச் சென்றால் எனக்கு சுகம் உண்டாகிவிடும், இந்த கூட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்றால் எனக்கு வியாதிகள் குணமாகிவிடும் என்று இயேசுவை விட்டு விட்டு கண்களை குளத்தை நோக்கித் திருப்பியிருக்கிறீர்களோ? இந்த ஊழியர் என்னைத் தொட்டுவிட்டால் சுகம் உறுதியாகக் கிடைக்கும் என்று பெதஸ்தா குளத்தண்டை அந்த வியாதியஸ்தன் காத்துக்கிடந்ததுபோலக் காத்துக்கிடக்கிறீர்களோ? பல கிறிஸ்தவ பத்திரிக்கைகளின் நிலையும் இதுவே, 'அந்தக் கட்டடம் கட்டுவதற்காக நான் காணிக்கை கொடுத்தேன், கர்த்தர் என்னை சுகமாக்கினார்' என்று சாட்சி சொல்லுவோரையே பத்திரிக்கையில் சாட்சிகளாக விளம்பரப்படுத்துகின்றனர், கௌரவப்படுத்தப்படுகின்றனர். 'அவர்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டதா?' 'இரட்சிக்கப்பட்டுவிட்டார்களா?' என்ற வரிகள் அதனிலும் மேலானது. இயேசுவை மறந்துவிட்டு, பெதஸ்தாவிலேயே தங்கள் பெயரை எழுதிவைத்திருக்கத் துடிக்கும் மக்கள் அநேகர். இயேசுவைச் சந்தியுங்கள், அவரே எல்லாவற்றிற்கும் பரிகாரி. இயேசுவைச் சந்திக்காமல் நீ சுகத்தைச் சந்திக்க முடியாது. பாவத்திலிருந்து வெளியே வா, இதயத்தில் இயேசுவை ஏற்றுக்கொள். பாவத்தை உடலில் வைத்துவிட்டு, வியாதிக்கு விடுதலை தருகிறவரல்ல இயேசு. பாவத்தை விட்டுவிட்டு வியாதிக்காக மாத்திரம் விடுதலை வாங்கித்தர போராடும் ஊழியர்களும், ஜெபங்களும் பெருகிவிட்டன; அவைகள் மனுஷர் காதுகளைத்தான் திருப்திப்படுத்துகின்றன.

ஒரு ஊழிய ஸ்தாபனத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது, அங்கிருந்த பெதஸ்தா மையத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வேதத்தில் எழுதப்பட்ட வண்ணம் மாதிரி வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்த பெதஸ்தா குளம் போன்ற மையத்தினை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, அதிர்ச்சியில் உறைந்துபோனேன். காரணம், அந்தக் குளத்தினுள் பலர் காசுகளைப் போட்டிருந்தார்கள். 'கங்கையில் பிற மதத்தினர் காசுகளை வீசி கும்பிடுவதற்கும், பெதஸ்தாவில் காசுகளை வீசுவதற்கும் என்ன வித்தியாசம்?'. என்ற கேள்விதான் என் உள்ளத்தில் உருவானது. கரையில் நிற்கும் இயேசுவை மக்கள் மறந்துவிட்டு, குளத்தையே நம்பிவிட்டார்கள் என்பதுதானே. தங்கள் ஆத்துமாக்களை மறந்துவிட்டு, பெதஸ்தாவில் ஆஸ்திகளைக் கொட்டும் மனிதர்கள் அநேகர்.

கப்பர்நகூமில் வீடு ஒன்றில் இயேசு போதித்துக்கொண்டிருந்தபோது, அந்த வீட்டின் வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள். அப்போது திமிர்வாதக்காரனை எப்படியாவது அவரிடத்தில் கொண்டுசென்றுவிடவேண்டும் என வாஞ்சித்த நாலுபேர், ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள் (மாற்கு 2:1-4). அந்த திமிர்வாதக்காரன் பாவியாயிருந்தான், பாவத்தினிமித்தமாகவே 'திமிர்வாதத்தை' தன் உடலில் பலனாகச் சுமந்துகொண்டிருந்தான். 'உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது' என்று சொல்லி இயேசு அவனைக் குணமாக்கியபோது, வீட்டின் கூரை வழியாக படுக்கையோடு இறங்கியவன், வீட்டின் வாசல்வழியாக படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசென்றான். உள்ளே வர வழிவிடாத ஜனங்கள், அவன் வெளியேற வழிவிட்டனர். இயேசுவைச் சந்திக்க வகைதேடு, கூட்டம் வழி விடாவிட்டாலும் கூரையைப் பிரித்தாகிலும் இறங்கிவிடு.

குளத்தில் சுகத்தைப் பெற்றுவிட்டு, இயேசுவைத் தேடிவரும் அனுபவமே 'பெதஸ்தா'. சுகம் கிடைகை;காதவரையில் குளம்தான் அவர்களுக்குத் தஞ்சம். ஆனால், 'சீலோவாம்' குளத்தின் அனுபவமோ, இயேசுவைச் சந்தித்த பின்னர் குளத்தை நோக்கிச் செல்வது. பிறவிக் குருடனை இயேசு சந்தித்தபோது, தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: நீ போய், ஸீலோவாம் குளத்திலே கழுவு என்றார். ஸீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான் (யோவா 9:6,7). யூதர்கள் அவனை நெருக்கியபோதிலும் அவன் மிரண்டுவிடவில்லை. பிள்ளையின் சுகத்தைக் கண்டபோதிலும், 'இயேசு' என்ற வார்த்தையை உச்சரிக்க பெற்றோர் பயந்துகொண்டிருந்தனர். ஆனால் அவனோ, 'அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ?' (யோவான் 9:28) என்று சவாலிட்டான். அதன் அர்த்தம் என்ன? அவன் சுகம் பெற்றவன் மாத்திரமல்ல, இயேசுவுக்கு சீஷனாகவும் மாறிவிட்டவன். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி