செட்டைகளுள்ள மனிதர்கள்
வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும் பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும், அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படிஅவரை ஏவவும் தொடங்கினார்கள். (லூக் 11:53,54)
நம்மை நெருங்கி நிற்கும் மக்களையும், நம்மை நெருக்கும் மக்களின் எண்ணங்களையும் புரிந்துகொள்ளாமல்,வாயினாலே அவர்களின் வலையில் விழுந்து நமது வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது. நம்முடைய வாயிலிருந்து பொல்லாதவைகள் புறப்படுமென்றால், பொல்லாதவன் அதையே பொறுக்கிக்கொண்டு செல்லுவான். நம்முடைய வாயின் வார்த்தைகளில் பொல்லாததைப் பொறுக்கிக்கொண்டு, தெருத் தெருவாய் அதனைத் தூற்றி, பொல்லாதவன் என்ற கூண்டுக்குள் அடைத்து, மற்றர்வர்ளை நீதி செய்யவைத்து, தன்னை நிரபராதியாக்கிக்கொள்ளும் மனிதர்களின் வார்த்தைகளுக்கு நாம் தப்பிக்கொள்ளவேண்டும். நாம் ஜெபம் பண்ணும்போது கூட, 'அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பக்கூடாது' (மத். 6:7) என்று ஆலோசனை கூறியவர் இயேசு. மேலும், 'நாம் பேசும் வீண் வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும்' (மத். 12:36) என்று நம்மை எச்சரித்தார் இயேசு. நம்முடைய வார்த்தைகள், நியாயத்தீர்ப்பின் நாளில் வழக்காக மாறி நம்மோடு வாதிடும் நிலையே நாமே நமக்கு உண்டாக்கிக்கொள்ளக்கூடாது.
இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ ? (1சாமு 2:3). கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான் (சங் 15:1-3) என்று தாவீதும் தனது சங்கீதத்தில் பாடியுள்ளானே. நாம் சத்தியரைப் பேச அழைக்கப்பட்டவர்கள், சத்தியத்தைப் பேச அழைக்கப்பட்டவர்கள்; இதனை விட்டு விலகுவோமென்றால், நாம் சத்துருவின் வலையில் மாட்டிக்கொள்ளுவோம்.வார்த்தையில் நாம் விழுந்துவிட்டால், வாழ்க்கையிலும் நாம் வீழ்ந்துவிடுவோம். வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. (நீதி 4:24)
முதலாவதாக, திரித்துப் பேசுபவர்களாக திரிந்துகொண்டிருக்கும் மக்களும் உலகத்தில் உண்டு. நாம் சரியாகப் பேசினாலும், இவர்கள் அதனைத் திரித்து எதிரிக்கு அம்பாக்கிக் கொடுப்பார்கள். இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்று (யோவா 2:19) தன்னுடைய மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் குறித்தும், தன்னுடைய சரீரமாகிய ஆலயத்தைக் குறித்தும் (யோவா. 2:21) இயேசு பேசினார். 'நீங்கள் இடித்துப் போட்டால், நான் எழுப்புவேன்' என்று இயேசு சொன்னார். இடிக்கிறவர்கள் யூதர்கள், இடிக்கப்படப்போகிறது இயேசுவின் சரீரம். ஆனால், அவர்களோ இவ்விரண்டையும் மாற்றிப் பேசினார்கள். தாங்கள் இடிக்கிறவர்கள் என்பதற்குப் பதிலாக அவரை இடிக்கிறவர் என்று சொன்னார்கள்; அவருடைய சரீரத்திற்குப் பதிலாக யூதர்களுடைய ஆலயத்தைச் சொன்னார்கள். கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள் (மாற் 14:57-58). இயேசுவுக்கு உண்டான சூழ்நிலையே நமக்கும் உண்டாகலாம். நாம் சத்தியத்தைப் பேசினாலும், இத்தகையோரால் நாம் சத்துருவாகவேண்டிய நிலை உண்டாகலாம். உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லத் தெரியாதவர்கள்; அதற்கு மிஞ்சி பேசி தீமையை உண்டாக்கிவிடுகிறவர்கள் (மத் 5:37). அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்பட்டுக்கொள்பவர்கள் (சங் 59:12). நாம் பேசுபவைகளைத் தவறாகப் புரிந்துகொள்வோர்களால் நமக்குப் பிரச்சினைகளே உருவெடுக்கும்.
இரண்டாவதாக, நம்மைத் தவறாகப் பேசத் தூண்டுபவர்களும் நம்மைச் சுற்றிலும் உண்டு. நம்முடைய வாயில் ஏதாவது கிடைத்துவிடாதா, எதையாவது பேசிவிடமாட்டோமா என்ற எதிர்பார்ப்புடன், எதிரிக்குச் சாதகமான சிந்தையுடனிருக்கும் மக்கள் இவர்கள். நமது நேர்மையான பேச்சும், வசனத்தின்படியான வார்த்தைகளும் இவர்களை வீழ்த்தப் போதுமானவைகள். இயேசு தேவாலயத்தில் வந்து, உபதேசம் பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள் (மத். 21:23). இயேசுவின் பதிலில் குற்றம் கண்டுபிடித்துவிடவேண்டும் என்பதே அவர்களது நோக்கமாயிருந்தது. இயேசுவோ அவர்களை நோக்கி: யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டு (மத். 21:25) அவர்களிடமிருந்து தன்னை தப்புவித்துக்கொண்டார். பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள் (லூக் 20:20). இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். அவர்களுடைய தந்திரத்தை இயேசு அறிந்துகொண்டார், ஒரு பணத்தை அவர்களுக்குக் காண்பித்து, 'இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்' (லூக். 20:22-24). அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள் (லூக் 20:26).
போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான். பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான். மூன்றாஞ்சகோதரனும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள் (லூக் 20:28-33). அதற்கு இயேசு, 'அவர் மரித்தேரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்' (லூக். 20:38) என்ற பதிலில் அவர்களை வீழ்த்தினார்.
மூன்றாவதாக, கோள் சொல்லித் திரிவோரையும் நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர் (லேவி 19:16). கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான் (நீதி 16:28). யாரிடத்தில் கேட்டதை யாரிடத்தில் சொல்லவேண்டும், யாரிடத்தில் சொல்லக்கூடாது என்ற பகுத்துச் சொல்லத் தெரியாதவர்கள் இவர்கள். உள்ளத்தில் அடக்கிவைக்கவேண்டியவைகளை, ஊரெல்லாம் கொட்டடித்துக் கூறுபவர்கள். யாரிடமாவது எதையாவது கேட்டு யாரிடத்திலாவது சொல்லவேண்டும் என்ற துடிப்போடிருப்பவர்கள் இவர்கள். மற்றவர்களைக் குறித்து பேசி, மரியாதையைத் தேடுபவர்கள். இப்படிப்பட்டோரின் முன் வார்த்தைகளை அளந்து பேசாமல், அனைத்தையும் பேசிவிடுவது, சுற்றிலும் தீ வைத்துக்கொண்டு தப்பிச் செல்வதற்கு வழியற்ற நிலையில் உயிரை மாய்த்துக்கொள்வதற்குச் சமானம். என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் (சங் 39:1) என்கிறான் தாவீது. நமக்கு முன்னே நிற்பவர்கள், நீதிமான்களா, துன்மார்க்கர்களா, நம்மை பிறரிடத்தில் குறை கூறுபவர்களா, கோள் சொல்பவர்களா என்பதை அறியாமலேயே பல நேரங்களில் நாம் அத்தனைக் காரியங்களையும் கொட்டிவிடுகின்றோம்; முடிவில் அதுவே நமக்கு எதிரிடையாக மாறிவிடுகின்றது. இவர்கள் செட்டைகளுள்ளவர்கள், நம்மிடத்தில் கேள்விப்பட்டதையும், நாம் சொன்னதையும் பறந்து பறந்து அறிவிப்பவர்கள். ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும் (பிர 10:20). நமக்கு எதிரே நிற்பவர்கள் செட்டைகளுள்ளவர்களா? நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய் (நீதி 6:2) என்ற நிலை நமக்கு உண்டாகிவிடக்கூடாது.
பெனாதாத் சீரியரை இஸ்ரவேலரோடு யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு வந்தான். என்றபோதிலும், தீர்க்கதரிசியின் வார்த்தையின்படி தேவன் சீரியரை இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார் (1இராஜா. 20:26,28). அலங்கம் இடிந்து விழுந்தது; பெனாதாத், நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையிலே பதுங்கினான் (1இராஜா. 20:30). அபோது பெனாதாத்தின் ஊழியக்காரர், இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடே வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்பண்ணுகிறான் என்றார்கள். அதற்கு இஸ்ரவேலின ராஜா, இன்னும் அவன் (பெனாதாத்) உயிரோடே இருக்கிறானா, அவன் என் சகோதரன் என்றான் (1இரா 20:32). அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து, உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது, அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான் (1இரா 20:33). அப்பொழுது தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் விசனமுமாய்த் தன் வீட்டிற்குப்போகப் புறப்பட்டுச் சமாரியவுக்கு வந்தான் (1இரா 20:42-43). 'அவன் என் சகோதரன்' என்று சொன்ன வார்த்தைகளினால் இஸ்ரவேலின் ராஜா பிடிபட்டான்.அவனுடைய வார்த்தைகளை எதிரி கையில் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேல் ராஜாவுக்கு நண்பனாக மாறி, தேவனுக்கோ பகைஞனாகிவிட்டான். எச்சரிக்கையோடிருப்போம், எச்சரிக்கையாய் பேசுவோம், நாம் தேவனுடையவர்கள்.
என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.(சங் 19:14)
Comments
Post a Comment