Skip to main content

இருப்பிடம் எங்கே? இதயம் எங்கே?

 இருப்பிடம் எங்கே? 

இதயம் எங்கே?


தனியொரு மனிதன் தவறிழைத்துவிட்டால், அவன் செய்துவிட்ட தவற்றிலேயே அவனைத் தனியே விட்டுவிட்டு, அவனை விட்டு விலகி, தூரமாகச் சென்றுவிடுபவரல்ல நமது தேவன். மாறாக, நேரடியாகவோ, தேவ மனிதர்கள் மூலமாகவோ அல்லது தீர்க்கதரிசிகள் மூலமாகவோ அவனைத் தட்டிக் கேட்டு, திருத்த முயற்சிப்பவர். அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் அவன் சற்றாகிலும் செவிகொடாமற் போகும் பட்சத்தில், தன் வழிகளையும் மற்றும் தவறுகளையும் திருத்திக்கொள்ளாத பட்சத்தில், அவனைத் தண்டித்தாகிலும் அல்லது சிட்சித்தாகிலும் மீண்டும் அவனை தன் வசமாக இழுத்துக் கொள்ளணே;டும் என்று விரும்புபவர் நமது தேவன். 'இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்' (லூக். 19:10) என்ற இயேசு கிறிஸ்துவைக் குறுpத்த அறிமுகத்தோடு, 'நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான்  இழந்துபோகவில்லை' (யோவான் 18:9) என்ற அவரது அர்ப்பணிப்புள்ள ஜெபம் எத்தனை ஆழமான அர்த்தமுள்ளது. 'உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ? (லூக். 15:4) என்பதும் அவரது போதயின் வரிகளல்லவா!

பாவம் செய்து, தேவ சமுகத்தை விட்டு விலகி, ஒளித்துக்கொண்டிருந்த ஆதாமை, 'நீ எங்கே இருக்கிறாய்?' (ஆதி. 3:9) என்று தேவனே தேடிவந்தார். ஆதாமும் ஏவாளும் ஒளித்துக்கொண்டிருந்த இடத்தை அவர் அறிந்திருந்தபோதிலும், 'நீ எங்கே இருக்கிறாய்?' என்று கேட்பதின் நோக்கம் என்ன? ஆதாம், தன்னுடைய வாயினாலே தனது இருப்பிடத்தைக் கூறவேண்டும் என்பதற்காகத்தானே. பிரியமானவர்களே! அநேக நேரங்களில், குடும்பத்தாரின் மற்றும் உலகத்தாரின் கண்களுக்கு மறைவாக அநேக பாவமான காரியங்களைச் செய்து, நம்முடைய பாவ வாழ்க்கையின் பாவமான பகுதிகளை அவர்கள் கண்டுவிடாதபடி, அவர்களுக்கு நம்மை மறைத்துக்கொண்டாலும் அல்லது நல்லவர்களாக உலகத்திற்கு நம்மைக் காட்டும் பொருட்டு, நல்லதோர் குடும்பத்தில், சபையில், ஐக்கியத்தில் இணைத்து அவர்களுக்குப் பின்னால் நம்மை ஒளித்துக்கொண்டாலும், தேவனுடைய கண்களுக்கோ நம்முடைய வாழ்க்கை மறைவானது அல்ல! 

'என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத்  தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது. உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி' (சங். 139:2-12) என்பதுதானே அவரைக் குறித்த தாவீதின் அறிவு. நாம் இருக்கிற இடத்தை அதாவது பாவிகளாக நாம் இருக்கிற இடத்தை அவர் அறிந்திருந்தபோதிலும், நமது வாயினாலே 'நாம் எங்கே இருக்கிறோம்' என்று அறிக்கையிடவேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. 

இருக்கும் இடத்தை நாம் அறிக்கையிட்டால் மாத்திரம் போதாது, இருதயத்திலிருந்து பாவமன்னிப்பிற்கேற்ற மனந்திரும்புதலும் நம்மிலே உண்டாகவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார். 'புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ' (ஆதி. 3:11) என்று ஆதாமினிடத்தில் தேவன் கேட்டபோது, 'ஆம், ஆண்டவரே, புசித்துவிட்டோம், எங்களை மன்னித்துவிடும்' என்று ஆதாம் தேவனிடத்தில் கேட்கவில்லை; மாறாக, 'என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்' (ஆதி. 3:12) என்று, காரணத்தைத்தான் கர்த்தருக்கு முன்பாக வைக்கின்றான். ஏவாளின் நிலையும் இதுவே; 'சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன்' (ஆதி. 3:13), சர்ப்பத்தின் மூலம் தூண்டப்பட்டிருந்தாலும், வஞ்சிக்கப்பட்டிருந்தாலும், அதைச் செய்துவிட்டதினால் 'தவறு இப்பொழுது தங்கள் வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றது' என்ற சத்தம் அவர்களது இருதயத்திலிருந்து தொனிக்கவில்லை; தண்டனையைப் பெற்று, ஏதேனிலிருந்தும் அவர்கள் துரத்தப்பட்டதற்கானக் காரணம் இதுவே! 

இன்றைய நாட்களிலும், அநேகர், தங்கள் இருப்பிடத்தை தேவனிடத்தில் சொல்லுவதில்லை; அவ்வாறு நாம் அறிக்கையிடுவோமென்றால், எத்தகைய உளையான சேற்றிலிருந்தும் நம்மைத் தூக்கியெடுக்க அவர் வல்லமையுள்ளவர். அதுமாத்திரமல்ல, 'நாங்கள் பாவிகள்' என்று ஒத்துக்கொள்ளும் அநேகர், தங்கள் இருப்பிடத்தை அறிந்தபின்னும், ஆண்டவருக்கு அதை அறிவித்த பின்னும், இருதயத்தின் ஆழத்திலிருந்து 'பாவ மன்னிப்பினைப்' பெற விரும்புவதில்லை; தங்கள் இருப்பிடத்தினை அறிந்த பின்னும் இன்னமும் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. இத்தகைய மனிதர்களை, அவர்களின் இருப்பிடத்திற்கு தேவ மனிதர்களே தேடிச் சென்று அவர்களை விடுவிக்க முயன்றாலும், 'நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது' (2பேதுரு 2:22) என்ற வார்த்தைகளே மீண்டும் மீண்டும் அவர்களது சரித்திரத்தில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும். அதுமாத்திரமல்ல, அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு,  திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக் கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் (லூக். 11:24-26) என்று வாசிக்கின்றோமே! பாவத்திலிருந்து இன்னமும் விடுதலையடையாதிருப்பதற்குக் காரணம் இதுவே! 

    உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை இச்சித்து, அவளோடு விபச்சாரம் செய்து தாவீது பாவத்தில் விழுந்தபோது, கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார் (2சாமு. 12:1). கர்த்தருடைய ஊழியனும் தீர்க்கதரிசியுமாகிய நாத்தான், உவமையின் மூலமாக தாவீது செய்த பாவத்தின் உண்மையை உணரச்செய்தபோது, தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன் என்றான்; நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்.(2சாமு 12:13). தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி. 28:13) என்ற வார்த்தைகள் தாவீதின் வாழ்க்கையில் எத்தனை நிதர்சனமானவைகள். தனது பாவங்களை அறிக்கையிட்டதினால்தானே தாவீது தேவனிடத்தில், பாவமன்னிப்பினையும் அத்துடன் கூடவே இரக்கத்தையும் பெற்றுக்கொண்டான். பாவமன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெற்றனுபவிக்கவேண்டுமென்றால், தாவீதைப் போன்ற அறிக்கையிடுதல் நம்முடைய அகத்திலும் தேவையல்லவா! தண்டனையைப் பெற்றாலும், தேவனண்டை சேரவேண்டும் என்பதே நமது இலட்சியமாயிருக்கட்டும். 

    இளைய குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னானே (லூக். 15:21)! இத்தகைய அர்ப்பணிப்பு நம்மிடத்திலும் காணப்பட்டால் மாத்திரமே, தந்தை என்ற ஸ்தானத்தில் அவரை நமது வாழ்க்கையில் தக்கவைத்துக்கொள்ளமுடியும். 




Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி