சூத்திரம்
பயணத்தின்போது தேவனை பக்கத்திலேயே வைத்துக்கொண்டால், சத்துரு நமக்கு விரோதமாகச் செய்யும் சதிகளின் சத்தங்களும் நமது காதுகளை வந்தெட்டும். சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணிக்கொண்டிருந்தபோது (2இரா 6:8), தேவனுடைய மனுஷனான எலிசாவோ, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான் (2இரா 6:9,10). இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷனான எலிசா இஸ்ரவேலின் ராஜாவோடு இருந்ததினாலேயே இந்த பாதுகாப்பு சாத்தியமாயிற்று.
இத்தனையாய் சீரிய ராஜாவினிடமிருந்து தேசத்தைக் காப்பாற்றியபோதிலும், சில நேரங்களில் தேவனுடைய மனுஷ னாகிய எலிசா உடனிருப்பதையும், தேவ மனுஷன் மூலமாக வெளிப்படும் தேவனது வல்லமையையும் இஸ்ரவேலின் ராஜா உணர்ந்துகொள்ளவில்லை. சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் குஷ்டரோகியாயிருந்தபோது, நாகமானின் வீட்டில் பணிவிடை செய்துகொண்டிருந்த, இஸ்ரவேல் தேசத்திலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டுவரப்பட்ட சிறுபெண் நாகமானின் மனைவியாகிய தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்று சொன்னாள் (2இராஜா. 5:2-3). அப்பொழுது சீரியாவின் ராஜா: நல்லது நீ போகலாம், இஸ்ரவேலின் ராஜாவுக்கு நிருபம் தருகிறேன் என்றான்; அப்படியே அவன் தன் கையிலே பத்துத் தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறைபொன்னையும், பத்து மாற்றுவஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டுபோய், இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்த நிருபத்தைக் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது (2இரா 5:5,6). சீரிய ராஜாவின் நிருபத்தைக் கண்டதும் இஸ்ரவேலின் ராஜா கோபமடைந்துவிட்டான். இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கிவிடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்கச் சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றானே (2இரா 5:7). இயேசு கிறிஸ்துவின் பிறப்பின்போது, நட்சத்திரத்தைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு, ஏரோதுவின் அரண்மனைக்குச் சென்று 'யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' (மத். 2:2) என்று சாஸ்திரிகள் கேட்டதைப் போலவே, 'தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால்' என்ற சிறுபெண் சொன்னதை மறந்து, ராஜாவினிடத்தில் நாகமான் போனது, ராஜ்யங்களிடையே விரோதம் உண்டாகக் காரணமானது. என்றபோதிலும், ஒரு சிறுபெண் தேவனுடைய மனுஷனும், தீர்க்கதரிசியுமான எலிசாவைக் குறித்து அறிந்துவைத்திருந்ததைக் கூட, இஸ்ரவேலின் ராஜா அறிந்துவைத்திருக்கவில்லையே. இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட செய்தியைத் தேவனுடைய மனுஷனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்வானேன்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான். (2இரா 5:8)
மேலும், எலிசா அழைத்துக்கொண்டுவந்த தனக்கு விரோதமான சத்துருக்களை 'வெட்டிப்போடலாமா' (2இராஜா. 6:21) என்றல்லவா இஸ்ரவேலின் ராஜா கேட்டான். எலிசாவோ 'நீர் வெட்டவேண்டாம், இவர்கள் புசித்துக் குடிப்பதற்கு அப்பமும் தண்ணீரும் வையும்' (2இராஜா. 6:22) என்றல்லவோ சொன்னான். சத்துருக்களை நம்முடைய கைகளில் ஆண்டவர் ஒப்புக்கொடுக்கும்போது, ஆத்திரம் வெளிப்படுகிறதா? அல்லது, சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு (நீதி. 25:21) என்ற ஆண்டவருடைய சூத்திரம் செயல்படுகின்றதா?
Comments
Post a Comment