காலம் அவர் கையிலே
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான் (பிர 3:11) என்று கர்த்தரைக் குறித்தN;தார் சரியான அறிவை எழுதிவைத்துள்ளான் சாலமோன், ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு (பிர. 3:1-8) என்பதையும் சாலமோன் குறிப்பிடுகின்றான். இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டெடுக்கும்போது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார் (யாத் 9:5). அப்படியே யோபுவும், எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார் (யோபு 23:14) என்று சொல்லுகின்றார். கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே நடந்த கலியாணத்தின்போது, 'என் வேளை இன்னும் வரவில்லை' (யோவான் 2:4) என்றார். 'என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது' (சங். 31:15) என்று சங்கீதக்காரனும் அறிக்கை செய்கின்றான். சாத்தானால் சோதிக்கப்பட்டு, தேவனுக்கு ஜெயத்தைப் பெற்றுத் தந்த யோபு, 'பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவா?' (யோபு 7:1) என்று சொல்லுகின்றான். எகிப்பு தேசத்திற்கு விரோதமாக பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வருவார் என்றும், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள் (எரே. 46:13,17) என்று சொன்னார். காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார் (கலா 4:5). 'காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்' (மாற். 1:15) என்று இயேசு பிரசங்கித்தார். ஆம், பிரியமானவர்களே நமது காலங்கள் கர்த்தருடைய கரத்திலேயே இருக்கிறது.
என்றாலும், காலத்தின்படி நம்மை இயக்குகிறவரும், நடத்துகிறவரும், காலத்திற்கான திட்டங்களைச் செய்துமுடிக்க நம்மை உந்தித் தள்ளுகிறவரும் அவரே என்பதையும் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். 'காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே' என்ற பாடல் நமக்கு அவ்வப்போது எச்சரிப்பூட்டக்கூடியதே. 'நாட்கள் பொல்லாதவைகளானதால், காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்' (எபி. 5:16) என்பதும், புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் (கொலோ. 4:5) என்பதும், இப்பொழுதே அனுக்கிரகக் காலம் (2கொரி. 6:2) பவுலின் ஆலோசனையல்லவா. பல்வேறு இடங்களுக்கு நாம் நகர்த்தப்படும்போதும், பல்வேறு மனிதர்களை வாழ்க்கையில் சந்திக்க நேரிடும்போதும், தேவன் குறித்த காரியங்களை நாம் அறிந்திருக்காவிடில் காலங்கள் கடந்துவிடும், செய்து முடித்திருக்கவேண்டிய நேரத்தில் செயலிழந்து நிற்பவர்களாகவே நாம் காணப்படுவோம். காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபசேங்களை மறுபடியும் உபதேசசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள் (எபி. 5:12) என்ற வார்த்தை நம்முடைய வாழ்க்கைக்குப் பொருத்தமானதாகிவிடும். காலத்தின்படி நம்மை இயக்கும் கர்த்தரின் கரத்தை அறிந்துகொள்ளுவோம். ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்கடுக்கனுக்கும், அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி (நீதி. 25:14). ஆனால், பல நேரங்களில் பல்வேறு மனிதர்களை நாம் சந்திக்கும்போது, ஏற்ற வேளையில் சொல்லவேண்டிய வார்த்தைகளைச் சொல்லாமல் நாம் விட்டுவிடுகின்றோம். மனந்திரும்பாதோர்க்கு சொல்லவேண்டிய வார்த்தைகளை, வழிதப்பி நடப்போருக்குச் சொல்லவேண்டிய வார்த்தைகளை, எச்சரிப்பின் வார்த்தைகளை, அன்பின் வார்த்தைகளை காலத்தை அறியாததினால் விட்டுவிடுகின்றோம்; இதனால் ஏற்படும் இழப்புகள் நமக்குத் தெரிவதில்லை; நம்முடைய வார்த்கைளுக்காகவும், சந்திப்பிற்காகவும் ஏங்கிக்கிடக்கும் மக்கள் மாத்திரமே அதனை அறிவர். நீங்கள் அறிவிக்கவேண்டிய இடத்தில் அமைதியாயிருந்தால், அறிந்துகொள்ளவேண்டியவர்கள் பாவத்தில் அடக்கம்பண்ணப்பட்டுவிடுவர். கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் (ரோமர் 10:14,15). இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நாம் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் நமக்கு கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் நம்மை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நாம் கேட்கும்படி நம் செவியைக் கவனிக்கச்செய்கிறார் (ஏசா 50:4). காலைதோறும் கேட்கும்படி செவியைச் சாய்த்தால் மாத்திரம் போதாது, கேட்டவைகளை சொல்லவும் நாம் அறிந்திருக்கவேண்டும்.
சிலுவைப் பாடுகளை இயேசு சந்திக்கும் முன்னர், பஸ்காவை ஆசரிக்க அவர் விரும்பியபோது, இயேசு பேதுருவையும், யோவானையும் அழைத்து, நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார் (லூக் 22:8). நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டபோது, நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போய், அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள் (லூக் 22:9-11) என்றார். விசித்திரமான ஓர் நிகழ்வை இவ்விடத்தில் நாம் காணமுடியும். நகரத்தில் அசையும் கட்டிடங்கள், வீடுகள் போன்றவற்றை அடையாளம் சொல்லாமல், நடக்கும் மனிதனை அடையாளமாகச் சொன்னார் இயேசு. அப்படியே அவர்கள் போய், தங்களிடத்தில் இயேசு சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். சீஷர்களின் வேகத்தையும், தண்ணீர் குடம் சுமந்து வரும் மனிதனின் வேகத்தையும் கட்டுப்படுத்தினால் மாத்திரமே இந்தச் சந்திப்பு சாத்தியமாகும். சீஷர்கள் சற்று பிந்தி சென்றாலோ அல்லது தண்ணீர்குடம் சுமந்து செல்லும் மனிதன் சற்று முந்திச் சென்றுவிட்டாலோ நொடிப்பொழுதிலும் சந்திப்பினை இழந்துவிட நேரிடும். இருவரையும் இணைக்கவேண்டிய பொறுப்பு அவருடையதாயிருந்ததே.
இயேசு நாயீன் என்ற ஊருக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒரு வாலிபனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள். இயேசுவும், மரித்துப்போன வாலிபனும் சந்திக்கும் நிலை உண்டானது. மரித்துப்போன வாலிபனை சற்று முந்தி கொண்டுபோயிருப்பார்களென்றால், அவன் கர்த்தரை அல்ல கல்லறையையே சந்தித்திருப்பான். ஆபிரகாமின் வேலைக்காரன் தன் எஜமானின் மகனான ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றபோது, தண்ணீர் துரவண்டையில் நின்று, நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் (ஆதி 24:14) என்று சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்தவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்தாள் (ஆதி 24:15). 'இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது' (ஆதி. 24:50) என்று சொல்லப்பட்டு, ஈசாக்கு-ரெபேக்காள் திருமணம் நடைபெற்றது. மோசேயினிடத்தில் பேசிக்கொண்டிருந்த கர்த்தர், 'உன்னைச் சந்திக்க ஆரோன் புறப்பட்டு வருகிறான்' (யாத். 4:14) என்று சொன்னதுடன், ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டு போ' என்றார் (யாத். 4:27). எலியாவையும் சாறிபாத் ஊரிலிருந்த விதவையையும் சந்திக்கச் செய்தவர் அவரே (1இராஜா. 17:9). தேவதூதன் கொர்நேலியுவை அழைத்து, நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி (அப் 10:5) என்று சொன்னதுடன், பேதுருவையும் கர்த்தர் ஆயத்தப்படுத்தினார் (அப். 10:9-16). பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள். நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார் (அப் 10:19,20).
தேவன் நம்மைச் சந்திக்கச் செய்யும் மனிதர்களோடு இருக்கும் பணியை நாம் அறிந்துகொண்டதுண்டா? எதற்கு அவர்களைச் சந்தித்தோம் என்று நமக்குத் தெரியுமா? ஆண்டவர் ஒரு காரியத்திற்காக சந்திக்கச் செய்திருக்க, நாமோ அதை அறியாமல், வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கலாமோ. உலகத்தைப் பற்றியெல்லாம் பேசிவிட்டு, அவர்களுக்குரியதை பேசாமல் விட்டுவிடுகின்றோமா? பயணத்திலோ, ஊழியத்திலோ எவரையாவது நாம் சந்திக்கும்போது, இவருடன் என் பணி என்ன? என்பதை அறிந்துகொள்ள முயற்சிப்போம். இல்லையேல், தேவையற்றவைகளையும், தேவனுக்கு விரோதமானவைகளையும் பேசி தேவ திட்டத்தை குலைத்துப்போட்டுவிடுவோம். தேவன் கொண்டுவரும் மணமகளை அல்லது மணமகனை அடையாளம் கண்டுகொள்ள ஜெபிப்போம். தேவன் தருவதை விட்டுவிட்டு நாமாகத் தேடி அலைந்துகொண்டிருக்கவேண்டாம். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், சமயத்திலும் கர்த்தரின் சித்தத்தை அறிந்துகொள்ள நாம் முற்படுவோம். தேவன் இணைப்பதை மாம்சம் பிரித்துவிடாதபடிக்கு எச்சரிக்கையுடன் வாழ்வோம். காலம் அவர் கையிலே, அறிந்துகொண்டு அவருக்கேற்ப செலவழிப்பது நம் கையிலே.
Comments
Post a Comment