Skip to main content

புரிந்துகொள்!

 

புரிந்துகொள்!


அப்பொழுது ஆனூன், தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப்பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான். (2சாமு. 10:4)

நமக்கு அருகிலிருக்கும் மனிதர்களைக் குறித்தும், ஆலோசனை அளிக்கும் மனிதர்களைக் குறித்தும் நாம் கவனமுடன் இருக்கவேண்டும். சற்று கவனம் சிதறினால்கூட, நம்மை அவர்கள் கர்த்தரை விட்டு தூரமாகத் துரத்திவிடவும், திசை திருப்பிவிடவும், நம்பும் மனிதர்களுக்கே நம்மை எதிரிகளாக  மாற்றிவிடவும் கூடும். சிங்காசனத்தை எதிர்நோக்கியிருந்த சாலமோனைச் சரிந்துவிழச் செய்த அவனது சக நண்பர்களைப் போல (1 இராஜா. 12:10,11), நம்மையும் சக நண்பர்களே சரிந்துவிழவும் செய்துவிடக்கூடும். 

அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ்-ன் குடும்பத்திலிருந்து தான் பெற்ற நன்மைக்கு கைமாறாக (2 சாமு 17:27-29), தானும் அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற விருப்பத்துடன், நாகாஸ்-ன் மகனாகிய ஆனூனிடத்தில் தனது ஊழியர்களை அனுப்பினான் தாவீது. 'ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயை செய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயைசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்' 

(2 சாமு. 10:2) என்றே வாசிக்கின்றோம். தேவ மனிதனான தாவீதின் மனதில் தனக்கு உதவி செய்த மனிதர்களுக்கு தயை செய்யவேண்டும் என்ற எண்ணம் உயர்ந்திருந்தபோதிலும், ஆனூனின் அருகிலிருந்த அவனது பிரபுக்களோ, தாவீதின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், ஆனூனை நோக்கி: 'தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன் ஊழியக்காரரை உம்மிடத்திற்கு அனுப்பினான்' என்றார்கள் (2 சாமு. 10:3). தயை செய்யவேண்டும் என்ற விருப்பத்துடனும், ஆறுதல் சொல்லவேண்டும் என்ற மனதுடனும் தாவீது ஆட்களை அனுப்பியிருந்தபோதிலும், அருகிலிருந்த பிரபுக்களின் ஆலோசனைக்கு அடிபணிந்த ஆனூன், தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப்பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான் (2சாமு 10:4). அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜா, அந்த மனுஷர் மிகவும் வெட்கப் பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிக்கோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான் (2சாமு 10:5). அதுமாத்திரமல்ல, தயை செய்யவேண்டும் என்றிருந்த தாவீதை புரிந்துகொள்ளாமல், தாவீதுடன் போருக்கும் ஆயத்தமானான் ஆனூன் (2 சாமு. 10:6). அநேக நேரங்களில் நமக்கு வரும் நன்மைகளை நாமே கெடுத்துக்கொள்ளுகின்றோம். நமக்கு நன்மை செய்யவேண்டுமென்றிருக்கின்ற ஆண்டவருக்கும், அவரால் அனுப்பப்படும் ஊழியர்களுக்கும் நம்மை எதிராளியாக மாற்றிவிடுகின்றோம். இறுதியில் நன்மைகளையும், தயையையும் இழந்து நிற்பதோடு மாத்திரமல்லாமல், போரிட்டு தோல்வியைத் தழுவின பின்பே அனுப்பப்பட்டவர்களது பெலத்தையும்; புரிந்துகொள்ளுகின்றோம். (2 சாமு. 10:19) 

மேலும், இன்றைய நாட்களிலும், நற்செய்தியையும், பரலோகத்தின் தேவன் நமது கைகளில் அருளியிருக்கும் ஆறுதலின் வசனங்களையும் சுமந்தவர்களாக ஆத்துமாக்களைத் தேடி புறப்பட்டுச் செல்லும் நம்முடைய வாழ்க்கையிலும் தாவீதின் ஊழியர்களுக்கு நிகழ்ந்த காரியங்கள் நிகழக்கூடும். பரலோகத்தின் ராஜாவாகிய தேவனையும், 'ராஜாவின் காரியம் அவசரம்' என்ற மனதுடன் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாக புறப்பட்டுச் சென்றுகொண்டிருக்கும் நம்மையும் புரிந்துகொள்ளாமல் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் கூட்டம் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யக்கூடும். எனினும், நம்மைப் புரிந்துகொள்ளாத மனிதர்களால் நம்முடைய வாழ்க்கையில் உண்டாகும் புண்களைக் குறித்தே அனுதினமும் நமது சிந்தைகளில் போராடிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை; அவகளை நினைத்து நினைத்து கவலைகொள்ளவேண்டிய நிர்ப்பந்தமும் நமக்கு இல்லை; தாவீதின் ஊழியர்கள் எரிகோவில் தங்கியிருந்ததுபோல, அவைகள் ஆறும்வரை நாம் ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்திருந்து, புதுபெலனோடு புறப்பட்டுச் செல்லுவோம்; யுத்தம் கர்த்தருடையது. 


நன்மை செய்தவர்களுக்கு தயை செய்யக் கற்றுக்கொள்.

உன்னைத் தேடிவருபவரைப் புரிந்துகொள். 

அருகிலிருப்பேரின் ஆலோசனைக்கு அடிமையாகிவிடாதே.

•      புரிந்துகொள்ளாதோர்களால் உண்டாகும் புண்களைக்குறித்து  கவலைகொள்ளாதே.

காயங்கள் ஆறும்வரை கர்த்தரின் பாதத்திலேயே காத்திரு. 


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...