இயேசுவும்,
இம்மானுவேலரும்
பிதா இந்த உலகத்திற்கு அனுப்பிய இயேசுவை சரிவர நாம் அறிந்துகொண்டால் மாத்திரமே, அவர் அனுப்பப்பட்டதின் ஆனந்தத்தைத் பூரணமாக நாம் அனுபவிக்கமுடியும். ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என்கிறார் இயேசு (யோவான் 17:3). அநேக பெயர்கள் வேதத்தில் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், ஏசாயா தீர்க்கதரிசி அனுப்பப்படவிருந்தவருக்கான சில பெயர்களை தீர்க்கதரிசனமாக முன்னறிவித்தான் 1. அதிசயமானவர் 2. ஆலோசனைக் கர்த்தா 3 வல்லமையுள்ள தேவன் 4. நித்தியப் பிதா 5. சமாதானப்பிரபு (ஏசாயா 9:6) 6. இம்மானுவேல் (ஏசாயா 7:14) என்பவைகளே அவைகள். உலகத்திற்கு வரும் இயேசு 'தேவன்' என்றும் 'பிதா' என்றும்கூட பெயரிடப்பட்டிருந்ததை இங்கு நாம் காணமுடியும். குமாரனாக அவர் வந்திருந்தாலும், பிதாவையே அவர் வெளிப்படுத்தினார். எனவே, 'என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்' (யோவான் 14:9) என்றார் இயேசு. மேலும், 'நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்' (யோவான் 8:16) என்றும், 'என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார்' (யோவான் 8:29) என்றும் சொன்னாரே.
அவர் பிறந்தபோது, தேவதூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு, 'அவள் (மரியாள்) ஒரு குமாரனைப் பெறுவாள்; அவளுக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்' (மத். 1:21) என்று சொன்னான். அதைத் தொடர்ந்து, 'இம்மானுவேல்' என்று ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட பெயரையும் மத்தேயு இணைத்து எழுதுகின்றார். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம் (மத். 1:23). இவ்விரண்டு பெயர்களும் இணைந்துகொண்டதே நமது கிறிஸ்தவ ஜீவியம். நம்முடைய வாழ்க்கையில் இயேசுவாக அவரை அறிந்திருக்கவேண்டும், அப்படியே அவர் இம்மானுவேல் என்ற அறிவும் நமக்கு வேண்டும். இயேசுவாக அவர் ஏற்றுக்கொள்ளப்படாமல், இம்மானுவேலராக அவர் நமது வாழ்க்கையில் உடனிருக்கமுடியாது.
'தமது ஜனங்களுக்கு' (வச. 21) அவர் செய்யும் முதற்பணி 'இயேசு' என்ற பெயரிலேயே; 'பாங்களை நீக்குவதும், அவர்களை இரட்சிப்பதுமே;' சுவிசேஷப் புத்தகங்கள் அனைத்தும் முன்நிறுத்துவது 'இயேசு' என்ற பெயரையே. பிசாசுகளும் 'இயேசு' என்ற பெயராலேயே அவரைக் கண்டு அலறின. 'இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ?' (மத். 8:29) என்றன. 'இயேசு' என்ற நாமத்தை எதிர்கொள்ள பிசாசுகளுக்கும் சக்தியில்லாதிருந்தது. 'இயேசு' என்ற நாமத்தைச் சொல்லி 'எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ?' எனச் சொல்லும் பிசாசுகள், அந்த நாமத்தைச் சுமக்காத மனிதர்களையோ வேதனைக்குள் தள்ளிவிடுகின்றன. விடுவிக்கும் 'இயேசு' என்ற நாமத்தை அறியாமல், பாவத்திலேயே வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டிருந்த மனிதனான திமிர்வாதக்காரனை, அந்த நாமமே விடுவித்தது (மத். 9:2). வியாதியினின்று விடுதலைக்கும், பிசாசினின்று விடுதலைக்கும், பாவத்தின் பிடியிலிருந்து விடுதலைக்கும் 'இயேசு' என்ற நாமமே உபயோகப்படுத்தப்பட்டது. நாமும் இன்று ஜெபிக்கும் போது, 'இயேசுவின் நாமத்தினாலே' என்றுதானே ஜெபிக்கின்றோம். இயேசுவின் நாமத்தில் வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் என்றே பவுல் எழுதுகின்றார் (பிலி. 2:10). 'இயேசு' என்ற நாமம் இத்தனை வல்லமையுடையதாயிருந்தாலும், இன்னும் அந்த நாமத்தின் பெலத்தை தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்காமலும், அந்த நாமத்தை அறிக்கையிடாமலும் இருக்கும் மக்கள் அநேகர்.
இந்த 'இயேசு' என்ற நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய், அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது (யோவான் 1:12). நாம் இயேசுவின் பிள்ளைகள் என்று சிறுவயதில் போதிக்கப்பட்டாலும், சிறுவர்களுக்குப் போதித்து வந்தாலும், 'நாம் பரலோகத்திலிருக்கிற பிதாவுக்கே புத்திரராயிருக்கிறோம்' என்பதே இயேசுவின் போதனை (மத். 5:45). மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன் என்றார் இயேசு (மத். 10:32). இதன் அர்த்தம் என்ன? மனிதர்களுக்கு முன்பாக 'இயேசு' என்ற நாமத்தை அறிந்துகொண்டவன், அது பாவங்களை நீக்கும் நாமம் என்று அறிக்கை செய்கிறவன், பாவங்களை அறிக்கையிட்டு அந்த நாமத்தினால் விடுதலை பெற்றுக்கொண்டவன் எவனோ, அவனையே பிதாவுக்கு இயேசு அடையாளம் காட்டுகின்றார். 'இயேசு' என்ற நாமத்தை அறிந்திராவிட்டால், இயேசுவால் பிதாவின் முன் நீங்கள் அறிக்கைபண்ணப்படமாட்டீர்கள். 'இயேசு'வை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே 'பிதாவை, அப்பா பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவீகாரத்தின் ஆவியை நாம் பெறமுடியும்' (யோவான் 8:15; கலா. 4:6).
அப்படி அதிகாரம் பெற்றவர்களே 'இம்மானுவேல்' அதாவது தேவன் நம்மோடிருக்கிறார் என்ற நாமத்தை அனுபவிக்கிறவர்கள். 'இயேசு நம்மோடு' என்ற நிலையிலிருந்து 'தேவன் நம்மோடு' என்ற நிலைக்கு நம்மை உயர்த்துவதே 'இம்மானுவேல்' என்ற நாமம். 'பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு' (மத். 6:6), 'பிதாவை மகிமை கிடைக்கட்டும்' (மத். 5:16), 'பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்' (மத். 6:8), 'எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளும் காலம் வரும்' (யோவான் 4:21,23), 'பிதாவுக்கே கனம்' (யோவான் 5:22). நம்முடைய கிரியைகளுக்கு பலன் அளிப்பவரும் பிதாவே (மத். 6:4). நமக்குள் இருந்து பேசுவதும் 'பிதாவின் ஆவியானவரே' (மத். 10:20) என்று போதகத்தின் பற்பல இடங்களில் பிதாவையே இயேசு அடையாளம் காட்டிக்கொடுத்தார். இயேசுவை ஏற்றுக்கொண்ட சீஷர்களை 'பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே' என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். குமாரன் எவனுக்கு அவரை (பிதாவை) வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவன் தவிர வேறொருவனும் பிதாவை அறியான் (மத். 11:27) என்றார் இயேசு. இதன் பொருள் என்ன? குமாரனை கண்டுகொண்டால் மாத்திரமே பிதாவையும் கண்டுகொண்டு, 'இம்மானுவேல்' என்ற நாமத்தைச் சுமந்து வாழமுடியும். 'பிதாவும், இயேசுவும்' ஒன்றாயிருந்ததைக் காட்டும் நாமமே 'இம்மானுவேல்' என்னும் நாமம்; அந்தப் பெயருக்கு இயேசு பொருத்தமானவர்.
இயேசு இந்த உலகததிற்கு வந்தபோது, பிதாவைக் காண்பிக்கிறவராக மாத்திரமல்ல, பிதாவின் அதிகாரத்தையும் செயல்படுத்துகிறவராக இருந்தார். அதிகாரம் பெற்று வந்த அவர், தனது அதிகாரத்தை மாத்திரம் செயல்படுத்திக்கொண்டேயிராமல், தன்னையே நமக்காக பலியாகவும் கொடுத்தார்; இதுவே 'இயேசு' என்ற நாமம். 'உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன' என்று பாவங்களை மன்னிக்கும்போது நேரடியாகவே சொன்ன இயேசு, தனக்கு விரோதமாக ஜனங்கள் எழுந்து நின்றபோதோ, 'பிதாவே, இவர்களுக்கு மன்னியும்' (லூக். 23:34) என்று பிதாவை நோக்கி ஜெபித்தார். அப்படியே, 'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்' என்றார் (லூக். 23:46). மன்னிப்பு பிதாவினிடத்திலிருந்தே நமக்குக் கிடைக்கிறது, பிதாவும் இயேசுவும் இணைந்திருப்பதினால், இயேசுவிலிருந்தே நமக்குக் கிடைத்துவிடுகின்றது.
'இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம்' (மத். 1:23). இயேசுவை ஏற்றுக்கொண்டதினால் நாம் பிதாவோடு இருக்கிறோம்; இதுவே இயேசுவின் இவ்விரு பெயர்கள் வெளிக்கொணரும் சத்தியம். தேவனை நம்மோடு வைத்துக்கொள்ளவேண்டுமெனில், இயேசுவாக அவரை ஏற்றுக்கொள்வதே நமது முதற்கடமை.
Comments
Post a Comment