நோக்கிப் பார்
அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை (சங் 34:5)
ஆவிக்குரிய மற்றும் ஆத்துமாவுக்கடுத்த பெலவீனங்களை, பெலவீனங்களாகவே வைத்துக்கொண்டு, சரீரப் பிழைப்புக்காக மாத்திரம் ஏதாகிலும் தடையின்றி தொடர்ந்து கிடைத்துக்கொண்டேயிருந்தால் அதுவே வாழ்க்கையினைக் காப்பாற்றிக்கொள்ளப் போதுமானது என்ற எண்ணத்துடனேயே இன்றும் பலர் தேவனை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தங்களுடைய தேவையினையும் விருப்பத்தினையுமே எப்போதும் தேவனுக்கு முன் வைப்பதினால், தேவனுடைய தேவையும், விருப்பமும் அநேகருடைய கண்களுக்கோ இறக்கும்வரை அதாவது அவர்களது வாழ்க்கையின் இறுதிவரை தெரியாமலேயே போய்விடுகின்றது. சரீரத்திற்காகவே வாழ்ந்துகொண்டிருக்கும் பலருடைய ஆத்துமாக்கள் மரித்த நிலையிலேயே இருப்பதும், மரித்துப் போன ஆத்துமாவைச் சுமந்துகொண்டிருக்கும் பெட்டியைப்போன்றே அவர்களது சரீரம் தேவனுடைய பார்வையில் காணப்படுவதும் வேதனைக்குரியதே. அப்படிப்பட்டவர்களைக் குறித்தே, 'மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்' (மத் 8:22) என்கிறார் இயேசு. ஆத்துமாவை மரித்த நிலையில் வைத்துக்கொண்டு, சரீரத்தை மாத்திரம் அலங்கரித்துக்கொண்டிருந்தால், நாம் 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே.' (மத். 23:27)
ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான் (அப் 3:1-5). தேவனும், தேவ மனிதர்களும், ஊழியர்களும் மனிதர்களை உற்றுப் பார்ப்பதின் நோக்கம், சரீர தேவைகளைச் சந்தித்துவிட்டு மீண்டும் அவர்களை அவர்கள் இருந்த நிலையிலேயே உட்காரவைத்துவிட்டுப் போக அல்ல; மாறாக, தேவாலயத்திற்கு உள்ளே அவர்களைப் பிரவேசிக்கச்செய்து, தேவனைச் சந்திக்கச்செய்யும்படியாகவே.
தேவாலத்திற்குள் அழைத்துச் செல்லவேண்டும் என்று மனிதர்களை தேவன் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, சரீரத்தின் தேவைகள், மற்றும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் ஏதாகிலும் அவரது கரத்திலிருந்து கிடைத்துவிடாதா? என்று அவரையே நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் இன்றும் அநேகர் உண்டே. அவருடைய பார்வைக்கும், மனிதர்களுடைய பார்வைக்கும்தான் எத்தனை வித்தியாசம்? அவர் ஆத்துமாவைப் பார்த்துக்கொண்டிருக்க, ஆசீர்வாதத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் உண்டே. மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1 சாமு. 16:7) என்ற வார்த்தைகள் எத்தனை உண்மையானவவைகள். நாடோறும் தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே, தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷன் வைக்கப்பட்டிருந்தபோது (அப். 3:2), தேவாலயத்திற்குள் போகிறவர்கள் எவரும் அவனை உள்ளே அழைத்துச் செல்லவேண்டும் என்று எண்ணவில்லை; மாறாக, இருக்கிற இடத்திலேயே எதையாகிலும் கொடுத்துவிட்டுத்தான் போய்க்கொண்டிருந்தார்கள். ஆலயத்தின் வெளியிலே பிச்சைகாரனிடத்தில் செய்ததுபோலத்தான், ஆலயத்திற்கு உள்ளே பிதாவினிடத்திலும் செய்திருப்பார்களோ! வெள்ளியையும் பொன்னையும் காணிக்கையாகக் கொடுத்துவிட்டு, ஆத்துமாவைக் குறித்த கரிசனையற்றவர்களாக இருந்திருப்பார்களோ?
ஜெப ஆலயத்திற்குச் சென்ற மக்கள் அன்று அவனை பழக்கப்படுத்தியதைப்போல, இன்றும், ஊழியர்கள் பலரும் ஊனமாயிருக்கும் ஆத்துமாக்களை தேவாலயத்தின் உள்ளே அழைத்துச் செல்லாமல், ஆசீர்வாதங்களை மட்டுமே அவர்களின் கைகளில் கொடுத்துவிட்டுப் போக நினைக்கிறார்கள், அத்தகைய பழக்கத்திற்குள்ளேயே அவர்களை வழிநடத்துகிறார்கள், ஆவிக்குரிய கூட்டங்கள், ஆவிக்குரிய கூடுகைகள், குடும்ப முகாம்கள் என்ற போர்வையில் ஒழுங்குபண்ணப்படும் இடங்களில் கூட, ஆசீர்வாதங்களுக்கடுத்த சத்தமே ஓங்கி ஒலிக்கிறது; ஆத்தும அறுவடை? என்ற கேள்விக்கு விடை காண்பது இயலாததாகிவிட்டது. வாசலிலிருந்தே ஆசீர்வாதத்தை வாங்கி வாங்கிப் பழகின பலருக்கு, தேவாலத்தின் உள்ளே வரவோ மனதில்லை. அலங்கார வாசலிலேயே தேவனுடைய பார்வையில் அலங்ககோலமான ஆத்துமாக்களுடனேயே அமர்ந்திருக்கிறார்கள். உள்ளே போகிறவர்களே, நீங்கள் ஏதாகிலும் எங்களுக்குக் கொடுத்துவிட்டுப் போங்கள், ஆனால், எங்களை மட்டும் வாசலிலேயே விட்டுவிடுங்கள் என்று சொல்லும் நிலையிலேயே காணப்படுகின்றனர். 'ஆசீர்வாதம்' என்றதும் முண்டியடித்துக்கொண்டு முன்னே வரும் ஒரு கூட்டம், 'ஆத்தும விடுதலை' என்றதும், 'பாவமன்னிப்பு' என்றதும் 'ஞானஸ்நானம்' என்றதும் அப்படியே பின்வாங்கிவிடுவது பரிதாபத்திற்குரியதே.
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்று சொன்னபோது, கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை, கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார் (எண்;. 21:5,6,8); அப்படிப் பிழைத்துக்கொண்டவர்கள் ஏராளம்; என்றாலும், சரீரப்பிரகாரமான மரணத்தினின்று தற்காலிகமாகவே அது அவர்களைத் தப்புவித்தது. என்றபோதிலும், மனந்திரும்பாத அவர்களுடைய சரீரம் வனாந்தரத்திலேயே விழுந்துபோனதே. அவர்களுடைய எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை (எண்; 26:65). நம்முடைய சரீரம் தப்புவிக்கப்பட்டு, ஆத்துமாவோ கானானைச் சென்று சேராமல், வனாந்தரத்திலேயே வீழ்ந்துபோய்விடக்கூடாது என்பதில் நாம் எத்தனை கவனமாயிருக்கவேண்டியது அவசியம். ஆசீர்வாதங்களையே நாடுவோரின் அநேகருடைய வாழ்க்கை இப்படியானது வேதனையானதே.
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவா 3:14-16) என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து வாசிக்கின்றோமே. நோக்கிப் பார்த்து பிழைப்பதற்கு மாத்திரமல்ல, நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கிறதற்கும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்வது அவசியம். நித்திய ஜீவனை அல்ல ஜீவனைத் தப்புவிக்கவே இன்னும் பலர் தேவனண்டை வருகின்றனர்.
ஆண்டவரை நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்வதோடு மாத்திரமல்லாமல், அவரது பிரகாசமும் நம்முடைய வாழ்க்கையில் வீசவேண்டியது அவசியம். இயேசு ஜனங்களை நோக்கி: 'நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்' (யோவா 8:12) என்று தன்னை அறிமுகப்படுத்தினதோடு, 'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது' (மத் 5:14) என்று திசையறியாமல் திகைக்கும் இவ்வுலகத்திற்கு 'கலங்கரை விளக்காக' நம்மையும் காண்பிக்கத்; தவறவில்லையே. அவரை நோக்கிப் பார்த்ததால், மோசேயின் முகம் பிரகாசித்ததே (யாத். 34:35). அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை (சங் 34:5) என்றும் வாசிக்கின்றோமே. இத்தகைய பிரகாசம் நம்முடைய வாழ்க்கையில் மாத்திரமல்ல, நாலா திசைகளிலும் வீசவேண்டும்.
அதுமாத்திரமல்ல, அவர் நமக்கு திட்டம்பண்ணி வைத்திருக்கின்ற, அழைப்பின் திசைகளையும் எல்லைகளையும் நோக்கிப் பார்த்து புறப்பட்டுச் செல்லவேண்ய பொறுப்பும் நமக்கு உண்டு. கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார் (ஆதி 13:14) என்றார். பிழைப்புக்காக மாத்திரமே அவரை நோக்கிப் பார்த்துக்கொண்டு, அவர் தரும் பிரகாசத்தைப் பெற்றுக்கொள்ளாமலும், அவர் காட்டும் திசையில் பயணிக்க மனதில்லாமலும் வாழும் மக்கள் இன்றும் அநேகர் உண்டு. ஒளியை பெற்றுக்கொண்ட பின்னரும் ஒளிந்திருந்தால், பழி நம்மீது சுமரும்.
Comments
Post a Comment