ஊமையான ஊழியன்
தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். (லூக் 1:20)
கர்த்தருக்கு ஊழியம் செய்துகொண்டிருக்கும் ஓர் மனிதன், ஜனங்களிடத்தில் பேசக்கூடாதபடிக்கு ஊமையாக மாறிவிட்டால் தேவ வார்த்தை ஜனங்களுக்குக் கடத்தப்படுவது எப்படி? சொல்லப்படுவது எப்படி? ஆசாரியனான சகரியாவின் வாழ்க்கையில் இத்தகைய நிலை ஏற்பட்டது. அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் பிறந்தவன் சகரியா, அவனுடைய மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி (லூக். 1:5). அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள் (லூக் 1:6). அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; எலிசபெத்தோ மலடியாயிருந்தாள்; அவர்கள் இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தனர் (லூக். 1:7). தேவாலயத்தில், ஆசாரியனுடைய அலுவலகத்தில் பணி செய்துகொண்டிருந்தான் சகரியா. தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான் (லூக் 1:8,9). ஆசாரியக் குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், வயதானவனாக இருந்தபோதிலும் வாய்ப்புக்காகக் காத்திருந்தான் சகரியா. என்றபோதிலும், அவனுடைய ஊழியத்தின் நாட்களில் அவன் ஊமையாகவே இருக்கும் நிலை உண்டானது. வாய்ப்பு கிடைத்தபோதிலும் கூட அவனால் வாய் பேச முடியவில்லை.
ஜனங்கள் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள் (லூக். 1:10), சகரியாவுக்கோ ஆலயத்தினுள்ளே தரிசனம் கிடைத்தது. தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக (லூக் 1:13) என்றான். அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான் (லூக் 1:18). அப்பொழுது தேவதூதன், இதோ,தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான் (லூக் 1:20). தேவாலயத்தை விட்டு சகரியா வெளியே வந்தபோது 'பேசக்கூடாதிருந்தான்' (லூக். 1:22); 'கேட்கக் கூடாதவனாயிருந்தான்' (லூக். 1:62). ஜனங்களோ, தேவ சமூகத்திலிருந்து வரும் ஆசாரியனான சகரியாவன் வார்த்தைகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். சகரியா ஊமையாகவே ஊழியம் செய்தான், ஊழியத்தின் நாட்கள் நிறைவேறியவுடனே வீட்டுக்கும் ஊமையாகவே போனான் (லூக். 1:23). தேவனைத் தேடி வந்த ஜனங்களிடத்தில் பேச முடியாமலும், தேவனைத் தேடிவந்த ஜனங்களின் வார்த்தைகளைக் கேட்க முடியாமலும் அவன் காணப்பட்டான்.
எலிசபெத் குமாரனைப் பெற்றெடுத்தபோது, அயலகத்தாரும், பந்து ஜனங்களும் வந்து தகப்பனுடைய நாமத்தின்படியே குழந்தைக்கு 'சகரியா' என்று பெயரிட எண்ணினார்கள் (லூக். 1:58,59). எலிசபெத்தோ, 'யோவான்' என்று பெயரிடவேண்டும் என்றாள் (லூக். 1:60). குழந்தைக்கு யோவான் என்ற பெயரிடவேண்டும் என்று மனைவியாகிய எலிசபெத்துக்கு ஏற்கனவே எழுதிக்காண்பித்திருந்தான் சகரியா. எவரிடத்திலும் பேசக்கூடாமலும், மற்றவர்களது வார்த்தைகளைக் கேட்கக்கூடாதவனாகவும் இருந்த சகரியாவின் நிலை பரிதாபமே! மனைவிக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் 'யோவான்' என்ற பெயரை எழுதிக் காண்பித்தபோதே, சகரியாவின் வாய் திறக்கப்பட்டது (லூக். 1:64).
கர்த்தருக்கு ஊழியம் செய்யும் நம்முடைய வாழ்க்கையில் தேவன் மேல் உள்ள விசுவாசம் எத்தகையது? 'இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?' (எரே 32:27) என்று சவால்விடும் தேவனையே நாம் சந்தேகிக்கின்றோமா? ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு' (ஆதி 17:1) என்றும், 'உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன்' (ஆதி 17:2) என்றும் சொன்னார். ஆனால், ஆபிரகாமோ, 'நூறு வயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான் (ஆதி. 17:1).
கர்த்தருடைய ஊழியத்தை செய்துகொண்டிருக்கும் நாம் கர்த்தரைச் சந்தேகிப்போமாகில், நாமும் ஊமையாவர்களாகவும், செவிடர்களாகவுமே மாறிவிடுவோம். நமக்கே தேவனைக் குறித்த சந்தேகம், தேவன் எனது எதிர்காலத்தைப் பார்த்துக்கொள்வாரா என்ற பயம், தேவன் எனது தேவைகளைச் சந்திப்பாரா என்ற அச்சம், 'எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு' (யோபு 23:14) என்ற வசனத்தைக் கொண்டிருந்தும், 'கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்' (சங்கீதம் 138:8) என்ற வசனத்தைக் கொண்ருந்தும், ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத் 6:26) என்ற வசனத்தைக் கொண்டிருந்தும், இன்னும், இன்றும் நம்முடைய விசுவாசம் பெலவீனப்பட்டே காணப்படுவதற்குக் காரணமென்ன?
மற்றவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படியாக அழைக்கப்பட்ட நாம் இத்தகைய நம்பிக்கையற்றவர்களாகக் காணப்படுவோமாயின், ஊழியர்களாக நாம் காட்சி தந்தும், ஊமையரும், செவிடருமாகவே காணப்படுவோம். நாமே தேவனை விசுவாசிக்கவில்லையென்றால், மற்றவர்களை விசுவாசத்திற்குள் நடத்துவது எப்படி? முன்பு நமது கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போட்டுவிட்டு; பின்பு நமது சகோதரர்களின் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்க்கவேண்டும் என்பதுதானே இயேசுவின் போதனை (மத் 7:5).
இத்தகைய காரணத்தினாலேயே, இத்தகைய நம்பிக்கைக் குறைச்சலை மனதில் சுமந்து அலைவதினாலேயே அநேக ஊழியர்கள், மிஷனரிகள் அழைக்கப்பட்டிருந்தாலும், ஊழியர்களாக அனுப்பப்பட்டிருந்தாலும், செவிடர்களும், ஊமைகளுமாகவே உலாவருகின்றனர்; சத்தியத்தைப் பேச அஞ்சுகிறார்கள்; தேவ சத்தத்தைப் பிரதியொலிக்கப் பயப்படுகிறார்கள்; இவர்களால் உலகத்திற்கும் பரத்திற்கும் பயன் இல்லை. 'உன் வாயிலே எக்காளத்தை வை' (ஓசி 8:1) என்று கர்த்தர் சொல்லும் நேரத்தில் ஊத பயப்படுபவர்கள் இவர்கள். மற்றவர்கள் தங்கள் குறைகளை, தேவைகளை, ஜெப விண்ணப்பங்களை இவர்களிடம் சொல்லும்போதும், 'அது நடக்குமா?' என்ற சந்தேகத்துடனேயே ஜெபிக்கும் ஊழியர்கள் இவர்கள். எனவே, ஜனங்களின் குறைகளைக் கேட்கக் கூடாதபடிக்கும் அவர்கள் மாறிவிட்ட செவிகளை உடையவர்கள். அழைக்கப்பட்டும், அமர்த்தப்பட்டும், ஆசாரியனாக மாறியும், ஜனங்களுக்கு ஊழியம் செய்ய முடியாமல் போன சகரியாவைப் போல, நாமும் ஊமையான ஊழியர்களாக மாறிவிடாதபடிக்குக் கர்த்தர் காப்பாராக. நமக்கும் தேவனுக்கும் இடையிலான உறவில் விரிசல் இல்லை; ஆனால், விசுவாசத்தில் விரிசல் இருக்கிறது. தேவன் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களின் மேல் நமக்கு நம்பிக்கை உண்டா? விசுவாசம் உண்டா? நமக்கு தேவன் செய்யும் காரியங்களில் நாம் அவிசுவாசமாயிருக்கின்றோமா? இப்படிப்பட்ட தடுமாற்றம், நம்முடைய ஊழியத்தின் ஓட்டத்தை தடை செய்யும்.
Comments
Post a Comment