Skip to main content

ஆறுதலா? ஆண்டவரா?

ஆறுதலா? ஆண்டவரா?

 

பாடுகளையும், உபத்திரவங்களையும் நாம் சந்திக்க நேரிடும்போது, நாம் எத்தகையோருடன் ஒட்டிக்கொள்ளுகின்றோம் என்பதில் கவனமாயிருந்தால், இயேசுவை இழந்துபோகமாட்டோம், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சியிலும் குன்றிப்போகமாட்டோம். வேதனைகளின் மத்தியிலும் தேவனையே முதன்மையாக்கிக்கொள்ளவேண்டும். துக்கத்தின் மத்தியிலிருக்கும் நமது துக்கத்தைப் பெருக்குவோரும், 'ஆறுதல்' என்ற பெயரில் வேதனையையே நமக்கு நினைப்பூட்டிக்கொண்டிருப்போரும் அநேகர். ஆறுதல் கிடைக்கிறதைப் போன்ற தோற்றமுடைய அவர்களது வார்த்தையிலேயே தொடர்ந்துநாம் அமர்ந்திருந்தால், அமிழ்ந்துபோகும் நிலைக்கும் நமது வாழ்க்கைத் தள்ளப்பட்டுவிடும். அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன் (ஆப 3:17,18) என்ற மனநிலையினையே நமது வாழ்க்கையினை கிறிஸ்துவுக்குள் நிலைநிறுத்தப் போதுமானது. தப்புவியாமற்போனால் தப்பிப்போவதல்ல, 'தப்புவியாமற்போனாலும் அவரே தேவன்' என்பதுதான் நமது வாயிலிருந்து வரவேண்டிய முழக்கம்.

'மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்' (லூக் 10:42) என்பதை மாத்திரமே நாம் அடிக்கடி பிரசங்கித்திருக்கின்றோம், பிரசங்கத்திலும் பலர் சொல்லுவதைக் கேட்டிருக்கின்றோம். என்றாலும் மார்த்தாளின் நற்செயல்களை நாம் மறந்துவிட முடியாது. இயேசு மனந்திரும்புதலின் செய்தியைச் அவளது கிராமத்திற்குக் கொண்டுவந்தபோது, இயேசுவை தனது வீட்டில் ஏற்றுக்கொண்டவர் மார்த்தாள் (லூக். 10:38). கிராமத்திற்குள் இயேசு நுழையும்போதே நல்லபங்கைத் தெரிந்துகொண்டாள் மார்த்தாள். வீட்டிற்குள் இருப்பதற்கு இயேசுவுக்கு மார்த்தாள் இடம் கொடுத்ததாலேயே, இயேசுவின் பாதத்தருகே அமர்ந்திருப்பதற்கு மரியாளுக்கு இடம் கிடைத்தது. மரியாள் நல்ல பங்கைத் தெரிந்துகொள்ள காரணமாயிருந்தவள் மார்த்தாள் அல்லவா!

ஆறுதலின் மத்தியிலும் ஆண்டவரையே தேடிய மார்த்தாள்: லாசரு இறந்துபோன சூழ்நிலையில், மார்த்தாளும் மரியாளும் வீட்டில் துக்கத்துடன் அமர்ந்திருந்தனர். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவரைச் சந்திக்கும்படி எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள் (யோவான் 11:20). ஆறுதல் சொல்லிக்கொண்டிருப்போரின் கூட்டத்திலிருந்து இயேசுவைச் சந்திக்க எழுந்து சென்றவள் மார்த்தாள். லாசருவின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படியாக யூதரில் அநேகர் அவர்களது வீட்டிற்கு வந்திருந்தார்கள் (யோவான் 11:9). மார்த்தாளும், மரியாளும் அவர்களுடைய ஆறுதல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, இயேசு வருகிறார் என்கிற செய்தி காதில் வந்தெட்டியது; உடனே அவரைச் சந்திக்கும்படிக்கு அவள் எதிர்கொண்டுபோனாள். இயேசு வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும், வீட்டிற்கு வரட்டும் என்று வீட்டு வாசலில் காத்திராமல், கிராமத்தைத் தாண்டி வெளியிலேயே அவரைச் சந்திக்கச் சென்றவள் மார்த்தாள் (யோவான் 11:30). மரியாளோ ஆறுதல் சொல்வோரின் வார்த்தைகளைக் கேட்டவளாகவே அவர்களோடே ஒட்டிக்கொண்டிருந்தாள். அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை (1தெச 4:13) என்ற பவுலும் ஆலோசனையாக எழுதுகின்றாரே.

மார்த்தாளைப்போல, நமக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டேயிருக்கும் மனிதர்களிடமிருந்து எழுந்து அவரைச் சந்திக்கச் செல்லும் பெலன் நமக்கு உண்டா? கஷ்டங்களை, துன்பங்களை, உடனிருப்போரின் மரணங்களை நாம் சந்திக்கும் நேரத்தில் நம்மில் அநேகருடைய நிலையும் மரியாளின் நிலையைப் போன்றேதான் காணப்படுகின்றது. அங்கிருந்து எழுந்து, இயேசுவைச் சந்திக்க நம்மால் செல்லமுடியவில்லை. மனிதர்களுடனேயே நம்முடைய துக்கங்களைப் பகிர்ந்துகொண்டவர்களாக, அவர்களுடனேயே நமது நேரங்களைச் செலவிடுகின்றோம். உடனிருந்த யூதர்கள் மரியாளுக்கு எத்தகைய ஆறுதலைச் சொல்லியிருப்பார்கள் என்பதை பின்வரும் வசனங்களிலிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும். 'இவர் அவனை எவ்வளவாய் சிநேகித்தார்' (யோவான் 11:36), 'குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா? (யோவான் 11:37) போன்ற வார்த்தைகள்தான் ஆறுதல் செய்வோரின் வாயிலிருந்து வந்துகொண்டிருந்தது. இப்படிப்பட்ட வார்த்தைகள் இயேசுவுடனிருந்த அவர்களுடைய உறவுக்கு விரோதமானவைகள் அல்லவா. எனவே இயேசு, கல்லறைக்குச் சென்றதும், சூழ்ந்து நிற்கும் மக்களின் விசுவாசத்தை வர்த்திக்கும்படியாக, 'பிதாவே, நீர் எனக்குச் செவிசொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும், நீர் என்னை அனுப்பினiதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன்' (யோவான் 11:41,42) என்று ஜெபித்தார். லாசருவை உயிரோடு இயேசு எழுப்பியபோது. மரியாளிடத்தில் வந்திருந்த யூதர்களில் பலர் இயேசுவினிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். மரியாளைச் சுற்றியிருந்த அவிசுவாசிகளின் கூட்டத்தை விசுவாசத்திற்குள் நடத்தவேண்டியது இயேசுவின் கடமையாயிருந்தது. துன்பங்களை நாம் சந்திக்க நேரிடும் வேளைகளில், நம்மைச் சுற்றி இத்தகைய விசுவாசமற்ற சந்ததியார் சூழ்ந்திருந்தால், தேவனுக்கும் நமக்கும் இடையிலான உறவைக் குறைத்து, தூரத்தைக் கூட்டிவிடுவார்கள். நம்முடைய நிலை என்ன? நாம் எங்கே இருக்கிறோம்? தன் சகோதரனாகிய லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிப்போன நிலையிலும், தாமதமாக இயேசு வந்துகொண்டிருக்கின்ற நேரத்திலும், சடலம் நாறிப்போயிருக்குமே என்று உணர்ந்திருந்தும், இயேசுவைத் தேடிச் செல்ல மார்த்தாள் தயங்கவில்லை. கலக்கமுற்று அவள் பேசின வார்த்தையினால், முற்றும் களங்கமாகவே பார்க்கப்படவேண்டிய பாத்திரமல்ல மார்த்தாள். மரியாள் வீட்டுக்குள் நல்லபங்கைத் தெரிந்துகொண்டாள், மார்த்தாளோ கிராமத்திற்குள் அவர் நுழையும்போதே நல்லபங்கைத் தெரிந்துகொண்டவள்.

மரணத்தைப் புரிந்துகொண்ட மார்த்தாள்: 'ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால், என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும், நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். அப்பொழுது, இயேசு மார்த்தாளை நோக்கி: 'உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்' என்றார் (யோவான் 11:21-23). தொடர்ந்து, 'நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்றும், உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள் (யோவா 11:25-27). இயேசுவுக்கும் மார்த்தாளுக்கும் இடையே இத்தனை சம்பாஷணைகள் நடந்துகொண்டிருந்த நேரத்திலும், மரியாள் அங்கு வரவில்லை. கல்லறையினிடத்திற்குச் சென்ற இயேசு, கல்லை எடுத்துப் போடுங்கள் என்று சொன்னபோது, மார்த்தாள் இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே என்றாள் (யோவான் 11:39). இயேசுவை சந்தித்த மார்த்தாளுக்கு, சகோதரனின் மரணத்தைத் தாங்கிக்கொள்ளும் வலிமை கிடைத்தது. லாசருவை உயிரோடு கூட எழுப்பவேண்டும் என்று இயேசுவை அவள் வற்புறுத்தவில்லை. சகோதரனை உயிரோடு எழுப்பாவிட்டாலும் பரவாயில்லை, எனக்கு நீர் போதும் என்ற நிலைக்கு மார்த்தாளின் மனது உயர்ந்திருந்தது.

ஆறுதல் சொல்லுவோரின் கூட்டத்திற்குள் அமர்ந்துகொண்டிருந்த மரியாளிடத்திற்கு மார்த்தாள் சென்று, தன் சகோதரியாகிய மரியாளை (கூட்டத்தின் மத்தியில்) இரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்று (யோவான் 11:28) அழைக்கவேண்டியதாயிற்று. மரியாள் எழுந்துபோகும் நேரத்திலும், வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று நினைத்தவர்களாகவே அவளுக்குப் பின்னே போனார்கள் (யோவா 11:31). மரியாளின் துக்கத்தைக் கண்ட அவர்கள் அவளது பயணம் கல்லறையை நோக்கியதுதான் என்று உணர்ந்தார்கள். மரியாள் எழுந்து செல்லும்போது, உடனிருந்த யூதர்களும் எழுந்து சென்றார்கள், அவள் அழுதபோது, உடனிருந்த யூதர்களும் அழுதார்கள் (யோவான் 11:32). ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த ஜனங்களோடு மரியாள் ஒட்டிக்கொண்டிருந்ததை இந்நிகழ்வு தெளிவாக்குகின்றதே.

துன்பங்களின் மத்தியில் ஆறுதல் சொல்பவர்களுக்கா அல்லது ஆண்டவருக்கா யாருக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். துன்பங்கள் சூழும்போது, ஆலயத்தை மறந்துவிடுவதும், குடும்ப ஜெபத்தைக் கைவிடுவதும், ஊழியத்தை மறந்துவிடுவதும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். வருத்தங்கள் பல வந்தாலும், வாழ்க்கையில் தொடர்ந்து செல்லவே நாம் அழைக்கப்பட்டவர்கள்.

மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்தபோதும், ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் (யோவான் 11:21) என்றுதான் சொன்னாள்; மரியாள் இயேசுவிடம் வந்தபோதும், ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் (யோவான் 11:32) என்றுதான் சொன்னாள். ஆனால், மரியாள் சொல்லி அழும்போது, அவளோடு கூட இருந்தோரும் அழுதனர். நமக்கு நேரிடும் வேதனைகளை தேவனிடம் நேரடியாகத் தெரியப்படுத்தினால், மார்த்தாளைப் போன்ற நல்லதோர் ஆறுதலையும், அறிவையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நம்முடைய துக்கங்களுக்காக அழுவோரின் கூட்டத்தை தேவனுக்கு முன் கூட்டக் கூடாது. இஸ்ரவேல் ஜனங்களுக்குள் இருந்த அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; அவர்களது இச்சை இஸ்ரவேலரையும் அழச்செய்தது (எண். 11:4). நம்மைச் சுற்றி நிற்கும் ஜனங்களின் அழுகை நம்மை மாற்றிவிடக்கூடாது. நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் (அப் 21:13) என்ற பவுலின் அர்ப்பணிப்பு நம்மிலும் உருவாகட்டும்.  

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி