வேலையா? பேழையா?
தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாகச் சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார். (ஆதி 7:16)
காவலில் வைக்கப்படுவதற்குக் காரணம் காப்பாற்றப்படுவதற்கே என்பதை சில நேரங்களில் நாம் அறிந்துகொள்வது அவசியம். சுற்றியிருக்கும் வேலிகள் நாம் வெளியேற இயலாதபடிக்கு அடைத்துவிட்டனவே என்ற ஒரு புற பதிலை மாத்திரம் நமது மனதில் சுமந்துகொண்டிராமல், வெளியிலிருக்கும் அழிவுகள் உள்ளே நுழைந்துவிடாதபடிக்கு நம்மைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும் அரண்கள் அவைகள் என்று உணர்ந்துகொள்வோமென்றால், நம்முடைய சிந்தனை மாறிவிடும், சிறை என்ற உணர்வும் மறைந்துபோம்; பாதுகாப்பு என்ற பதிலே மனதை நிரப்பிநிற்கும். பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்ற இடத்தையும், சில நேரங்களில் நாம் சிறை என்றே மனதில் நினைத்துக்கொண்டிருப்பதால், நம்முடைய சிந்தனையே மாறிப்போய்விடுகின்றது, சில நேரங்களில் 'ஏன் எனக்கு இந்த நிலை' என்ற கேள்விகளையே கேட்டு கேட்டு தேவனுக்கு எதிரானதாகவும் தவறிவிடுகின்றது. வெளிப்புறத்திலிருக்கும் ஆபத்தைக் குறித்த அறிவு நமக்கு இல்லாமற்போவதே இதற்குக் காரணம்.
மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினபோது, அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாக மாறினபோது, மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தபோது, பூமி கொடுமையினால் நிறைந்திருந்தபோது (ஆதி 6:5,12,13), தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார் (ஆதி 6:6,7). என்றபோதிலும், தன்னோடு சஞ்சரித்துக்கொண்டிருந்த ஏனோக்கை எடுத்துக்கொண்டதுபோல (ஆதி. 5:24)
நோவாவை எடுத்துக்கொள்ளாமல், குடும்பத்தோடுகூட பேழையில் பத்திரமாகக் காப்பாற்றினார்.
வரவிருக்கும் அழிவைக் குறித்து பலமுறை நோவா ஜனங்களை எச்சரித்தான். நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா (2 பேது 2:5) என்றே பேதுரு தனது நிருபத்தில் நோவாவைக் குறித்து எழுதுகின்றார். என்றபோதிலும், அவனது பிரசங்கத்தில் எஞ்சியதும், மிஞ்சியதும் எட்டு பேரைக் கொண்ட அவனது குடும்பம் மாத்திரமே. என்றாலும், அதனை தோல்வியாக நினைத்து நோவா சோர்ந்துபோகவில்லை; தன்னைக் காக்கும்படியாக கர்த்தர் கொடுத்த பேழையைக் கட்டும்படியான அடுத்த பணியையும் தளர்வின்றி வெற்றிகரமாகச் செய்யத் தொடங்கிவிட்டான். ஜனங்களைக் காக்கும் பிரசங்க வேலை ஒருபுறமிருந்தாலும், தன் குடும்பத்தைக் காக்கும் பேழையைக் சிறப்பாகக் கட்டத் தொடங்கிவிட்டான் நோவா.
பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் இப்படி கிரியை செய்யக்கூடும். யாரிடத்திலாவது நம்மால் இயன்ற அளவு சுவிசேஷம் அறிவிக்கும் பணியினை நாம் செய்தும், இறுதிவரை எவரும் ஏற்றுக்கொள்ளாமல் நம்மையும், சுவிசேஷத்தையும், ஆண்டவரையும் அசட்டைபண்ணிக்கொண்டிருந்தால், இறுதியில் நம்மை அவரோடு எடுத்துக்கொள்ளும் முயற்சியிலோ, பூமியிலேயே நம்மைக் காப்பாற்றும் முயற்சியிலோ அல்லது நம்மை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி அவர் விரும்பும் வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியிலோ கர்த்தர் இறங்கிவிடுவது உறுதி.வேலையை விட்டு விட்டு பேழையைக் கட்டும் பணியில் நாம் ஒருவேளை இறங்கவேண்டியதிருக்கும். அது நமது பணியைச் செய்து முடித்ததற்காக ஆண்டவரிடமிருந்து கிடைக்கும் பிரதிபலனாகவோ, பரம அழைப்பாகவோ இருக்கக்கூடும்.
கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இவ்விரண்டு பணியும் மிக மிக முக்கியமானது. உலகிற்கு ஊழியம் செய்வது மாத்திரமல்ல, தன்னைத் தானே காத்துக்கொள்வதிலும் உறுதியாகக் காணப்படவேண்டும். ஊழியம், ஊழியம் என்ற போர்வையில் தன்னுடைய பாதுகாப்பின் உடையை இழந்துவிட்ட மனிதர்கள் உண்டு. ஊழியம் ஊழியம் என்ற பெயரில் ஜனங்களோடு மாத்திரமே ஐக்கியம் கொண்டு, அவர்களைச் சந்திப்பதிலேயே குறியாயிருந்து, கர்த்தருடைய சமுகத்தையும், அவருடனான ஐக்கியத்தையும் மறந்துவிட்டவர்கள் அநேகர் உண்டு. தன்னுடைய குடும்பத்தையும் அதிலுள்ளவர்களையும் காக்கும் பேழையைக் கட்டும்படியாக கர்த்தரிடத்திலிருந்து வந்த கட்டளையை அலட்சியம்பண்ணிவிட்டு, ஜலப்பிரளயம் வரும்வரை ஜனங்களுடனேயே நின்றுகொண்டு 'ஊழியம்' என்ற பெயரில் பேழையின் உள்ளே ஏறாமல் பிரசங்கித்துக்கொண்டு ஜனங்களோடேயே அழிந்துவிடாதபடிக்கு நாம் கவனமாயிருக்கவேண்டும். அவர்களுடைய ஊழியம் விலையேறப்பெற்றதாக ஒருவேளை உலகத்தில் மனிதர்களின் பார்வையில் காணப்பட்டாலும், அவர்களது பேழையோ பாதுகாவலின்றி பிழையானதாகவே கர்த்தருக்கு முன் காட்சியளிக்கும். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் (1கொரி 9:27) என்று பவுல் தன்னைக் குறித்து எழுதுகின்றாரே. சிம்சோனைப்போல, நமது சரீரம் சத்துருக்களோடு சரிந்துவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம்.
Comments
Post a Comment