Skip to main content

ஆகாரமா? ஆதாரமா?

ஆகாரமா? ஆதாரமா?

 

அழைப்புப் பெற்றவனை அசையவிடாமல் தடுக்கவும், முன்னேறவிடாமல் முட்டுக்கட்டையிடவும், இருக்கும் இடத்திலேயே ஆணியடித்துக் காயப்படுத்தவும், சத்துரு செய்யும் முயற்சிகள் அநேகம்; அவனது யுத்தத்தின் தந்திரங்களை நாம் அறிந்துகொள்ளவேண்டும். சத்துருவினுடைய ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் நம்முடைய வாழ்க்கையின் ஆதாரங்களைக் கைப்பற்றிவிடக்கூடாது; சத்துருவின் ஆளுகைக்குள் இழுத்துச் சென்றுவிடக்கூடாது, நம்முடையவைகளை சத்துருவுக்கு இரையாக்கிவிடக்கூடாது. அழைக்கப்பட்டோரே, தெரிந்துகொள்ளப்பட்டோரே, கிறிஸ்துவின் சேனை வீரரே, உங்களிடத்தில் ஒட்டும் நபர்களைக் குறித்தும், உங்களிடத்தில் வந்து ஒதுங்கும் நபர்களைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்; எங்கிருந்து வந்தவர்கள் அவர்கள் என்ற உணர்வில்லாமல், உங்கள் அழைப்பினைப் பறிகொடுத்துவிடவேண்டாம். நண்பர்களாகவும், உறவினர்களாகவும், உடன் பணியாட்களாகவும், கணவனாகவோ அல்லது மனைவியாகவோகூட உங்னுடைய வாழ்க்கையில் சத்துரு தன்னுடையவர்களை ஊடுவச்செய்ய எப்போதும் ஆயத்தமாயிருக்கிறான் என்ற அறிவு உங்களை தற்காப்புக்கு நேராக நடத்தட்டும். அப்படியே, நீங்கள் ஒட்டும் நபர்களோடும், நீங்கள் ஒதுங்கும் இடங்களோடும் எச்சரிக்கையாயிருங்கள். என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது என்று ஜெபிக்கும் வேளையில், என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும் (சங் 31:15) என்று ஜெபிக்கவும், கவனமாய் நடக்கவும் தவறவேண்டாம். உங்கள் எதிர்காலத்தைத் தன்னுடைய கையில் எடுத்துக்கொள்ளவும், தந்திரத்தினால் உங்களுடையவைகளைத் தன்னுடைய கையில் ஏந்திக்கொள்ளவும் சத்துரு செய்யும் யுத்தத்தின் யுக்திகளில் தோற்றுவிடாதிருங்கள்.

இதோ, நான் சாகாப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான். அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ;ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான். (ஆதி 25:32-34)

ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள். ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி: கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம். உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு. உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப் பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்க வேண்டும் என்றார்கள். (எண்; 32:1-5)

கானானுக்குள் பிரவேசிக்க தேவன் இஸ்ரவேல் மக்களை அழைத்திருந்தார்; ஆனால், ருபன் புத்திரரும், காத் புத்திரருமோ, அழைக்கப்பட்ட இடத்திற்குச் செல்ல மனமற்றவர்களாக, தற்போது கண்களுக்கு முன் காணப்படும் பசுமையான இடத்தில் மயங்கி, அங்கேயே இருந்துவிட்டனர்.

ஏசாவின் வாழ்க்கையில் மாத்திரமல்ல, ரூபன் மற்றும் காத் புத்திரரின் வாழ்க்கையில் மாத்திரமல்ல, விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படும் ஆபிரகாமின் வாழ்க்கையிலும் பக்கவழியாக நுழைந்து சத்துரு உண்டாக்கிய பாதிப்புகளை அன்று மாத்திரமல்ல, இன்றுவரை உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

ஆதாரத்தை விட்டுவிட்டு சேதாரத்தோடு வாழும் மனிதர்கள்

வாழ்க்கைக்கு ஆதாரமானவைகளை அகற்றிப்போடவும், வாழ்வின் அஸ்திபாரங்களை இடித்துத்தள்ளவும் சத்துரு எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறான். அதற்கான யுத்தங்கள் சத்தத்தோடு நடக்காவிட்டாலும், மனிதர்கள் சறுக்கிவிழும்படி சத்தமில்லாமல் அரங்கேறிக்கொண்டேவருகின்றன. எதற்காக நீங்கள் அழைக்கப்பட்டவர்கள் என்ற அறிவினை இழக்க எது எதையோ உங்களுக்கு முன்னே காட்டி, தனக்குப் பின்னால் உங்களுடைய தடங்களும் பதியும்படி திசைதிருப்புகிறவன் அவன். எனவே, சத்துருவின் ஆயுதங்கள் நம்மைத் தாக்கிவிடாதபடி தற்காத்துக்கொள்வது நமது கடமை. கையில் பணத்தோடு நிற்கும் குழந்தை ஒன்றிடம், சாக்லேட் ஒன்றைக் கொடுத்து பணத்தைப் பறித்துக்கொள்வது எத்தனை எளிதான காரியமோ, அத்தனை எளிதாகவே ஜனங்களுக்குள்ளும் அவன் கிரியை செய்கிறான். பச்சிளம் குழந்தை சாக்லேட்டின் சுவையை மாத்திரமே அறிந்தது, பணத்தின் மதிப்பினையோ அறியாதது. எனவே, சாக்லேட்டிற்காக பணத்தைக் இழக்கிறோமே என்ற உணர்வு அதற்கு உண்டாவதில்லை.

சுவைத்த ஒன்றிற்கு மீண்டும் மீண்டும் அடிமையாகி அதுவே வேண்டும் வேண்டும் என்பதுதான் மனித மனம்; அதனால், சுவைக்காத ஒன்றை இழந்துவிடுகிறார்கள் அவர்கள். சிற்றின்பங்களினால் கிடைக்கும் தோஷத்தினைச் சந்தோஷம் என்றும், பரிசுத்தத்திற்காகவோ அத்தகையவற்றை இழக்கவேண்டும் என்றும் திருகிப் போதித்து, 'வாழ்க்கை வாழவே' என்ற கோஷத்தையும் அவ்வப்போது காதுகளில் ஒலித்து, மனிதர்களின் வாழ்க்கையை ஒழித்துவிடுவதுதான் சத்துருவின் திட்டம். 'கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்' (சங் 34:8) என்று வாய்ப்புகள் பல கொடுக்கப்பட்டாலும், சந்தர்ப்பங்கள் பவவற்றைச் சந்தித்தாலும், வாழ்க்கையின் வாயிலில் கூட அந்த ருசியை அனுமதிக்காமல், வாசற்படியில் நின்று ஆண்டவரைத் தட்டிக்கொண்டிருக்கச் செய்துவிடுகின்றனர் மனிதர்கள் பலர். ஆத்துமாவுக்கு ஆதாரமான ஆண்டவரை அறியாமல், ஆத்துமாவைச் சேதாரப்படுத்தும் ஆவிகளால் மனிதர்களின் வாழ்க்கையினை நித்திய நரகாக்கினைக்கு நேராகப் பயணிக்கும்படி சத்துருவின் பல்வேறு திட்டங்கள் தள்ளிவிடுகின்றன. தொட்டுப் பார்க்கும் மனிதர்களைத் தொற்றிக்கொள்ளும் பாவங்களை, உயிர் விட்டுப் பிரியும் வரை உடலுடனேயே வைத்திருக்கவேண்டும் என்று விரும்புபவன் சாத்தான். இறுக்கமாகப் பிடித்து, இறக்கும் வரை விலகிச் செல்ல மனமற்ற நிலையில் வாழும்படி, மனிதர்களோடு மண்ணானவைகள் பல ஒன்றித்துவிடுகின்றன. சிகரெட், சினிமா, சாராயம், வேசித்தனம் போன்றவைகளின் போதைகளை தற்காலிகமாக உடலில் ஊற்றி, நிரந்தரமான இரட்சிப்பின் சந்தோஷத்தின் பக்கம் அவர்களை நகரவிடாதபடி நிறுத்திவைக்கிறான் சாத்தான். கறைபடிந்த ஆத்துமாக்களாக வாழ்க்கையின் கடைசிவரை மனிதர்கள் தன்னுடைய கையிலேயே இருக்கவேண்டும் என்பதுதான் சாத்தானின் விருப்பம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

மற்றொருபுறம், தேவைகளுக்காக தேவனை விட்டுப் பிரிந்துவிடுகின்றனர் பல மனிதர்கள். 'கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும் தரித்திரர் ஆனதில்லை, இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டமடைந்தோர் நஷ்டப்பட்டதில்லை' என்ற பாடல் வரிகளை அநேக முறை நாம் பாடியிருப்போம். எனினும், தரித்திரத்துக்காக கிறிஸ்துவை நாம் இழந்துவிடக்கூடாது, ஆதாயத்துக்காக ஆண்டவரை விட்டுப் பிரிந்துவிடக்கூடாது. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை (யாக் 1:17) என்று பிதாவை அறிமுகப்படுத்துகிறார் யாக்கோபு. மேலும், முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33) என்று தேவைகள் சந்திக்கப்படும் வழியைக் குறித்து தெளிவாகப் போதித்தார் இயேசு.

நமக்குத் தேவையான எதையாவது கொடுத்துவிட்டு, தேவனுடையவைகளை நம்மிடமிருந்து சிறந்தவைகளையும், தேவ சித்தத்திற்குட்பட்டவைகளையும் திருடிக்கொள்வதுதான் சத்துருவின் திட்டம். பசித்திருக்கும் நேரத்தில், உதவியற்றவர்களாயிருக்கும் நேரத்தில், நெருக்கப்படும் நேரத்தில், வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், பணமோ பொருளோ அவசியமாகத் தேவைப்படும் நேரத்தில் சத்துருவின் இந்தத் திட்டம் அநேகரிடத்தில் அமோகமாகப் பலித்துவிடுகின்றது.

நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை (2கொரி 4:8,9) என்ற பவுலின் அர்ப்பணமிக்க வரிகளின் வேலிகளுக்குள் வாழ்க்கையை வைத்துக்கொள்ளப் பழகுவோம். எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன் (சங். 121:1) என்ற நிலையான பார்வையை விட்டு மாறாதிருப்போம். 'எலியாவை போஷித்தவர் என்னையும் போஷிப்பார்' என்ற சத்தியம் நம்மைத் தேற்றட்டும். 'விடுவிக்காமற்போனாலும்' (தானி. 3:18) என்ற அர்ப்பணிப்பு நம்மை முன்னேறச் செய்யட்டும். இவைகளைத் தவிர்த்துவிட்டு, சத்துருவின் விதவிதமான கண்ணிகளுக்குள் தஞ்சம் தேடிச் சென்று சிக்கிக்கொள்ளவேண்டாம்.

ஆகாரமும் ஆபிரகாமும்

ஆபிரகாமுக்கு கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கு ஆதாரமானவள் சாராள். ஆபிரகாம் இருந்த கானான் தேசம் பஞ்சத்திற்குட்பட்டபோது, ஆகாரத் தேவை ஆபிரகாமை அசைத்தது; எகிப்திலே ஆகாரம் உண்டென்பதை அறிந்த ஆபிரகாம், எகிப்து தேசத்திலே தங்கும்படி போனான் (ஆதி. 12:10). ஆபிரகாமை விட்டு சாராளை அகற்றி, வாக்குத்தத்தத்திலிருந்து அவர்களை விலகி வாழச் செய்யும்படியான சூழ்நிலைக்கு ஆபிரகாம் தனது வாழ்க்கையில் இடங்கொடுத்தான்.

கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்றார் (ஆதி 12:1,2). சொன்னதோடு மாத்திரமல்லாது, ஆபிரகாமை கானானுக்கும்; கொண்டுவந்து சேர்த்து, 'உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்' (ஆதி. 12:7) என்று வாழவிருக்கும் தேசத்தையும் அடையாளம் காட்டிக்கொடுத்தார். இத்தனை பெரிய வாக்குத்தத்தம் ஆபிரகாமின் குடும்பத்தில் கருவில் இருக்கும்போதே, அதனைக் கலைத்துவிடும் காரியங்களும் எதிர்த்து வந்தன. வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்த ஆபிரகாமுக்கு, அதனைச் சாத்தியமாக்கக்கூடிய சந்ததியோ இல்லாதிருந்தது.

உண்டான பஞ்சத்தைக் கண்டு ஆபிரகாம் ஓடியபோது, அவன் மஞ்சத்துக்குரியவளைத் திருடிக்கொள்ளவோ பார்வோன் ஆயத்தமாயிருந்தான். பஞ்சம் ஆபிரகாமை எகிப்துக்கும், சாராளையோ எகிப்தில் பார்வோனின் அரமனைக்கும் அனுப்பியது.

இப்படிப்பட்ட பிரிவினைகளை பல குடும்பங்களில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சத்துரு இன்றும் உருவாக்கிவருகிறான். பன்முகப் பிரச்சனைகளால் குடும்பங்களைப் பிரித்துவிடுகிறான். தேவாலயத்தில் செய்த உடன்படிக்கையினை உடைப்பதும், உருக்குலைப்பதிலும்தானே சத்துருவின் சதி. கிறிஸ்துவின் பிள்ளைகளாக, ஆலயத்தில் கணவனும், மனைவியுமாக நின்று வாக்களித்த அந்த வாக்குத்தத்தம் பூரணமாக நிறைவேறிவிடாதபடி, பிரித்து ஆளும் சத்துருவின் சூத்திரங்களை அறியாமல், சூழ்நிலையின் நிமித்தமாக, ஒருவரையொருவர் தங்களைத் தாங்கள் காப்பாற்றிக்கொள்ள விரும்பி பிரிந்துவிடுவோம் என்று முடிவுடன் ஏற்றுக்கொள்ளப்படும் 'விவாகரத்துக்கள்' இன்றைய நாட்களில் வேகமாகப் பரவிவருகிறன. ஆலயத்தில் ஆண்டவர் இணைத்துவிட்டால் என்ன, நீதிமன்றத்தில் நான் பிரித்துவிடுகிறேன் என்று எதிரியாய் எதிர்துருவத்தில் நிற்கும் அவனது தந்திரத்தினால் தரைமட்டமாகிப்போயின பல குடும்பங்கள். ஆவிக்குரிய வாழ்க்கையை இழந்து நிற்கும் குடும்பத்தில் அதனைச் சாத்தியமாக்குவது அவனுக்கு எளிதாகிவிடுகிறது. கர்த்தருக்குள் வாழும் குடும்பங்களே! எச்சரிக்கையாயிருங்கள், உங்களைப் பிரித்துவிடும் சத்துருவின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாதிருங்கள். வலைகளை அடையாளம் கண்டுகொண்டு வாழப்பழகுங்கள். உங்கள் வாழ்க்கையை சத்துருவின் வாய்க்குக் கொடுத்துவிடாதிருங்கள்.

எகிப்தியர்களைக் குறித்தும், அவர்களால் தனக்கு நேரிடக்கூடிய ஆபத்தைக் குறித்தும் ஆபிரகாம் அறிந்திருந்தான். எனவே, ஆபிரகாம் தனது மனைவியாகிய சாராளை நோக்கி: எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்று சொல்லுகிறான் (ஆதி 12:12,13). ஆபிரகாம் சொல்வதின் அர்த்தமென்ன? மனைவி என்றால் புருஷனைக் கொன்றுவிட்டு சாராளை எடுத்துக்கொள்வார்கள்; சகோதரி என்றால், புருஷனை உயிரோடே விட்டுவிட்டு சராராளை எடுத்துக்கொள்வார்கள் என்பதுதானே. தாவீது பத்சேபாளை எடுத்துக்கொண்டபோது, உரியாவைக் கொன்றுபோட்டானல்லவா, அப்படியே அபிமெலேக்கு ராஜாவும் ஆபிரகாம் சாராளை சகோதரி என்று சொன்னதினால், ஆபிரகாமை உயிரோடே விட்டுவிட்டு உயிரோடே சாராளை எடுத்துச் சென்றான்; 'சுத்தமான கைகளோடு இதைச் செய்தேன்' என்றும் சொல்கிறானே. இந்த இரு வகையில், இரண்டாம் வகையைத் தெரிந்துகொண்டான் ஆபிரகாம்; என்றாலும், அது வாக்குத்தத்தத்திற்கு விரோதமான வழியல்லவா.

ஆபத்தைக் குறித்த இத்தனை அறிவிருந்தபோதிலும், ஆகாரத்திற்காக எகிப்திற்கு போகாமல் அவனால் இருக்கமுடியவில்லை. சராராளைக் கொண்டுபோனால் பரவாயில்லை, தன்னைக் கொன்றுவிடக்கூடாது என்பதுதான் அவனது எண்ணமாயிருந்தது. சாராளுக்கு அரமனையில் ஆகாரம் கிடைக்கட்டும், எனக்கு எகிப்து தேசத்தில் எங்காவது ஆகாரம் கிடைக்கட்டும் எப்படியோ இரண்டு பேருக்கும் ஆகாரம் கிடைத்தால் போதும் என்று நினைத்தான் அவன். அதற்காக, முன்னமே தன்னை ஆயத்தப்படுத்தியுமிருந்தான் ஆபிரகாம்.

தேவைகளுக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து, கணவனை அல்லது மனைவியை விட்டுப் பிரிந்து வாழும் சூழ்நிலையினை மனிதர்களே தங்களுக்கு ஏற்படுத்திக்கொள்கின்றனர். ஆபிரகாம் எகிப்துக்குப் பயணப்பட்டுப் போனது போல, மனைவியைத் தனியாக விட்டு விட்டு எங்கோ தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்போர் ஏராளம். ஆதாரமான இல்லற வாழ்க்கையினை இழந்துவிட்டு, ஆகாரத்தை சேர்த்துக்கொண்டேயிருப்பதினால் என்ன பயன்? இயேசு தனது உவமையில் சொன்ன ஐசுவரியவான்களைப்போல நம்முடைய வாழ்க்கை மாறிவிடக்கூடாதே. 'ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு' என்று அவர்கள் தங்கள் ஆத்துமாவோடே சொல்லும் நேரத்தில், 'மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்?' (லூக். 12:20) என்ற கேள்வி தேவனால் முன்வைக்கப்படுமென்றால் அத்தகைய ஐசுவரியத்தைச் சேர்த்த உங்களது என்னவாயிருக்கும்? இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டுச் சேர்த்தவைகளை இனிமேல்தான் அனுபவிக்கப்போகிறேன் என்று அமரும்போது, ஆயத்தமில்லாத ஆத்துமாவுக்கு அழைப்பு வருகிறது. அந்த ஒரு இரவிலே அவன் தன் ஆத்துமாவுக்காக என்னத்தைச் சேர்த்துவிடமுடியும்? ஆத்துமாவில் ஆண்டவரை ஏற்றுக்கொண்டாலும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுத்தாலும், இரட்சிப்பின் சந்தோஷத்தைக் கூட அனுபவிப்பதற்கு கால அவகாசம் இல்லாமற்போயிற்றே; சேகரித்தவைகளையோ விட்டுப்போகும் இரவாகத்தான் அது இருக்கும். வெள்ளம் வீட்டின் மேல் மோதியடிக்கும்போது, பூமியதிர்ச்சி வீட்டை அசைக்கும்போது, இறந்தாலும் பரவாயில்லை என்று வீட்டுக்குள் இருக்காமல், எல்லாவற்றையும் விட்டு ஓடிவிடுவதுதானே உங்கள் விருப்பமாயிருக்கும். 'இன்னும், இன்னும் என்ற மனது, மண்ணுக்குள் போகும்வரை மனிதனை விட்டு அகலுவதில்லை, அதிலேயே அவன் அகப்பட்டுக்கொள்கிறான்.

ஐசுவரியமாய் இருக்கவேண்டும் என்பதற்காக, வாழ்க்கைக்குப் போதுமான பணத்தை, வாழ்க்கைக்கு மீதியாகக் குவித்து, வாழ்வினை மிதித்துவிடவேண்டாம். பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார் இயேசு (லூக் 12:15). பொருளைக் குவித்துவிட்டு ஜீவனை விட்டுவிடாதீர்கள். இயேசுவே ஜீவன், என்றாலும், தேவன் கொடுத்த ஜீவனையும் பிரித்துவிட்டு வாழ்வது குடும்ப வாழ்க்கை அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பார்வோனாக உங்கள் வாழ்க்கையில் உட்புகும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், அவைகளுக்கு அடிமையாகிவிடாதிருங்கள். 'வேகிறதைப் பார்க்கிலும் விவாகம்பண்ணுவது நலம்' என்றார் பவுல், ஆனால், சத்துருவோ விவாகம் பண்ணிய பின்னும் மனிதர்களை விலக்கிவைத்து வேகவைத்துவிடுகின்றான்.

ஆபிரகாமுக்குத் தேவையான ஆகாரத்திற்காக, ஆண்டவருக்குத் தேவையான, ஆபிரகாமின் சந்ததி உண்டாவதற்குத் உறுதுணையான சாராளை ஆபிரகாம் இழக்கவிருந்தான். பார்வோனுடைய பார்வையிலிருந்து விலகியிருப்பதுதான் பாதுகாப்பானது என்பதை அறியாமல், ஆகாரம் இருக்கிறது என்பதற்காக, ஆபத்தான சூழ்நிலைக்குள் அகப்பட்டுக்கொண்டானே. எகிப்திற்குச் சென்று ஆகாரத்தை ஆபிரகாம் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, மனைவியையோ பறிகொடுத்தான். ஆபிரகாமின் மனைவியை உடலுக்கு ஆகாரமாக்கிக்கொள்ள ஆயத்தமாயிருந்தான் பார்வோன். ஆபிரகாமின் வயிற்றுப் பசி தீர்ந்துகொண்டிருந்த நேரத்தில், பார்வோனின் உடற்பசி சாராளை ருசிக்கத் தருணம் தேடிக்கொண்டிருந்தது. ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழுகுள்ளவளென்று கண்டார்கள். பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள் (ஆதி 12:14,15).

சாராளை பார்வோனிடத்தில் விட்டுவிட்டு ஆபிரகாம் எப்படி வாழ்ந்திருப்பான்? 'கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே' (ஆதி. 15:1) என்று அங்கலாய்த்த ஆபிரகாம், 'இப்போது நான் பெண்ஜாதியும் இல்லாமல் இருக்கிறேனே' என்று புலம்பியிருக்கலாம். ஆபிரகாம் சாராளை பார்வோனுக்குக் கொடுத்ததினால், ஆபிரகாமின் சந்ததியை நானூற்று முப்பது வருஷம் பார்வோன் வைத்திருக்க கர்த்தர் அனுமதித்தார். இதுவே இஸ்ரவேலரின் அடிமைத்தனத்திற்குக் காரணம்.

பிரியமானவர்களே! உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் தீர்மானங்களைக் குறித்து கவனமாயிருங்கள். அவைகள் தேவைகளைக் கொடுத்துவிட்டு, தேவனையோ உங்களை விட்டுப் பிரித்துவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். மாம்சீக திருப்திகளுக்காக, ஆவிக்குரிய வாழ்க்கையை அடகுவைத்துவிடும் மனிதர்கள் அநேகர். முன்னே ஆபத்து ஆயத்தமாயிருந்தாலும், ஆபிரகாமின் கண்களுக்குத் தெரிந்தது ஆகாரமே. ஆகாரத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள், வரவிருக்கும் ஆபத்தைக் குறித்து அக்கறை கொள்ளாமற்போய்விடுகின்றனர். வேலியைத் தாண்டி, அடுத்தவரது தோட்டத்தில் பயிரை மேய்ந்து மாட்டிக்கொண்ட மாட்டைப்போன்றது ஆபிரகாமின் பிற்கால சந்ததி. தேவனை நோக்கிப் பார்க்காமல், தேவைகளை மாத்திரமே நோக்கிப் பார்த்துக்கொண்டு, அவைகளை எப்படியாகிலும், எங்காகிலும், எவரைக் கொண்டாகிலும் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று முன்னேறுவோரின் வாழ்க்கை ஆபத்திற்குள்ளேயே முடங்கிவிடுகின்றது. கடன் வாங்கி வட்டி கட்ட இயலாமல் தங்களுக்கு இருந்த கடைசிச் சொத்து வரையிலும் விற்றுக் கொடுத்து வீதியில் நிற்கும் நிலை உண்டாகிவிடுகின்றது. தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான் (1யோவான் 5:18) என்ற வசனத்தை மறந்துவிடவேண்டாம்.

உதவி, என்று கேட்டுச் செல்லும் நேரத்தில், உங்களையோ உங்களுடையதையோ இழந்துவிடும் சூழ்நிலைகளுக்குள் சிக்கிக்கொள்ளவேண்டாம். உங்களுக்கான அத்தனையையும் செய்துகொடுத்துவிட்டு, பொக்கிஷமானவைகளைப் பிடுங்கிக்கொள்ளும் பார்வோன்களுக்கு கவனமாயிருங்கள்.

வாலிபன் ஒருவன் உதவி செய்கிறான் என்ற எண்ணத்தில், உதவியைப் பெற்றுக்கொண்டு, அந்த வாலிபன் உங்களை வசப்படுத்தச் செய்யும் தந்திரங்களையும் காணக்கூடாத குருடர்களாக இருந்துவிடாதீர்கள். எதிர்பாலினருடனான அதிக நெருக்கத்தினால் உடல்களே எரிந்துபோகும் நிலை உண்டாகும் என்பது எச்சரிக்கும் வார்த்தை. நண்பர்களாகத்தான் நினைத்தேன், அவனோ 'உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்கிறான் என்று புலம்பும் சகோதரிகள் ஏராளம்; அப்படிப்பட்ட நிலை சகோதரர்களுக்கும் வராமலில்லை. ஒன்றாகப் படித்தோம், உறவினர்கள், ஒரே இடத்தில் பணிபுரிகிறவர்கள் என்ற காரணங்களெல்லாம் எல்லைக்குள் வைக்கப்படவேண்டியவைகளே.

யோசேப்பு அழகான ரூபமும், சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான் (ஆதி. 39:6). அவன் வேலைக்காக எகிப்தியன் வீட்டிலே விற்கப்பட்டவன். என்றாலும், யோசேப்பை உதவிக்காக மாத்திரம் பயன்படுத்திக்கொள்ளாமல், உடலுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள முற்பட்டாள் எஜமானின் மனைவி. சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். (ஆதி 39:7) 'அவள் நித்தம் நித்தம் அப்படிப்பட்ட எண்ணத்துடனேயே யோசேப்பை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள்' (ஆதி. 39:10). அவளது எண்ணம் ஒருநாள் செயலில் வெளிப்பட்டபோது, அங்கிருந்தே வெளியேறினான், சிறையையும் ஏற்றுக்கொண்டான் யோசேப்பு. தனக்கு ஆதாரமாக இருக்கும் பரிசுத்தத்தை அழித்துவிட எஜமானின் மனைவி முயன்றபோது, உறவையே முறித்துக்கொண்டவன் அவன். இத்தகைய ஆபத்துக்களை அறிந்து, பெற்றோர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் இன்றைய காலத்தில் பல பிள்ளைகளுக்கோ அபத்தமாகத் தென்படுகின்றது. பெற்றோர்களை ஒன்றும் தெரியாத பேதைகளைப் போல பார்த்து, அவர்களது ஆலோசனைகளை அலட்சியம் செய்யும் பிள்ளைகள் பலர் ஆபத்தில் அகப்பட்டுக்கொள்கின்றனர். எதிர்துருவத்தால் தாங்கள் பிடிபடும்வரை தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றனர். வாழ்க்கையின் விளிம்பில் பயணித்து, வழுக்கிவிழுந்துவிடும் வாலிப சகோதர சகோதரிகள் ஏராளம். பாடத்தில் சந்தேகம் என்றோ, நிகழ்ச்சிகள் என்றோ, பிறந்த நாள் விழா என்றோ எதிர்பாலினரோடு அதிகம் உறவாடும் பொழுதுகள் ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறந்துவிடவேண்டாம். வாலிப வயதுள்ள எதிர்பாலினர் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதோ அல்லது திருமணம் ஆனவர்களாயிருந்தாலும், எதிர்துருவத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பதோ ஆபத்தில் முடிந்துவிட வாய்ப்பு உண்டு என்பதை மறந்துவிடவேண்டாம். எல்லையைத் தாண்டினால், சத்துருவின் சேனை வீரர்களால் பிடிக்கப்படுவது உறுதி. சத்துரு ஒன்றைக் கொடுத்துக்கொண்டிருந்தால், மற்றொன்றை உங்களிடமிருந்து பறித்துக்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்கு தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான் (2சாமு 13:1). சகோதரிதான் என்றாலும், சகோதரனோ சத்துருவினுடையவனாயிருந்தான். தாமரின்மேல் ஆசை வைத்திருந்த அம்னோன், அவளை அடைய திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான். இதை அறியாத தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப் போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு, சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள் (2 சாமு. 13:8,9). இத்தனை காரியங்களை தாமார் செய்துகொண்டிருக்கும்போது, அம்னோனின் கண்கள் என்ன செய்துகொண்டிருந்திருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள்.

அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான் (2சாமு 13:11) பசித்திருந்த ஆமான் தாமார் சுட்ட பணிகாரங்களையல்ல தாமாரையே பிடித்தான். 'நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார்' (2சாமு. 13:13) என்ற தாமாரின் வார்த்தைகளால் கூட அம்னோனைத் தாமதிக்கச் செய்யமுடியவில்லை. வெறி பிடித்திருந்த அவனது குறியில் சிக்கிக்கொண்டாள் தாமார். அண்ணன்தானே என்று நெருங்கிப்போய், கன்னிமையையே பறிகொடுத்து நின்றாள் தாமார்.

வாலிபர்களே! உள் அறைக்கு உங்களைக் கொண்டுவருவதற்கு எதிர் துருவத்தினர் செய்யும் திட்டங்களைப் பற்றிய அறிவு உங்களுக்கு உண்டா? காதலர்கள் என்ற பதத்தை அகற்றிவிட்டு 'பெண் நண்பர்கள்' என்ற பதத்தினால் ஏற்றுக்கொள்ளும் வண்ணமும், பெருமைப்பட்டுக்கொள்ளும் வண்ணமுமாக மேற்பூச்சாய் ஏமாற்றிவிட நினைக்கிறது இன்றைய உலகம். அநேகர் தங்கள் பெண் தோழிகளுடனேயே திருமணம் செய்துகொள்கின்றனர் என்பதும், திருமணத்திற்குப் பின்னும் பெண் தோழிகளுடன் தொடரும் உறவு கணவன் - மனைவி உறவைப் பிரித்துவிடுகின்றது என்பதும் இக்காலங்களில் அதிகரித்திருக்கக்கூடிய ஒன்று.

பாதுகாப்பான வளையம் என்று கருதப்படும் குடும்பத்திற்குள்கூட இன்றைய நாட்களில் சத்துரு உட்புகுந்து தனது காரியத்தைச் சாதித்து வருவது நாம் அறிந்ததே. பெற்ற தகப்பனே தனது பெண் பிள்ளையுடன் உடலுறவு வைத்துக்கொள்வதையும், அண்ணனே தங்கைகளோடு அவலட்சணமாகப் புணருவதையும் அன்றாடச் செய்தித்தாள்களே அம்பலமாக்கி, செய்தியாக வெளியிட்டுக்கொண்டிருக்கும் பட்சத்தில், அதனை எச்சரிக்கும் பொறுப்பில் பெரும் பங்கு ஊழியனான எனக்கு உண்டு என்று உணர்ந்தவனாகவே எழுதுகின்றேன்.

ஆபிரகாம் எகிப்தில் இருந்தபோது, சாராள் பார்வோனோடு இணைந்துவிடும் ஆபத்து உண்டானது. பார்வோனுக்கும் சாராளுக்கும் ஒரு குழந்தை பிறந்திருந்தால் என்னவாகியிருக்கும்? சந்ததியை உருவாக்கவேண்டிய சாராளே சத்துருவின் வலைக்குள் சிக்கிக்கொள்ளப்பார்த்தாளே. தனது உயிரைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக சாராளை விட்டுவிட்டான் ஆபிரகாம். ஆனால், கர்த்தரோ, சாராளுக்குள் எகிப்தியரின் சந்ததி உருவாகிவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார். சாராள், பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள். அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது. ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார் (ஆதி 12:15-17). பார்வோன், சாராளுடன் சேர்ந்தானா? இல்லையா? என்ற கேள்வி நமது மனதை வேதனைப்படுத்தும் ஒன்று.

வாதைகளையும், அதற்கான காரணத்தையும் பார்வோன் அறிந்துகொண்டபோது, பார்வோன் ஆபிரகாமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற்போனதென்ன? இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ (ஆதி 12:18,19) என்று சொல்லி ஆபிரகாமையும் சாராளையும் அனுப்பிவிட்டான்.

ஈசாக்கை பலியாகக் கேட்டு கர்த்தர் ஆபிரகாமைச் சோதித்தபோது, தந்தையின் வார்த்தைக்கு ஒப்ப தன்னுடைய வாழ்க்கையை பலிபீடத்தின் மீது ஒப்படைத்தான் ஈசாக்கு. அப்படியே, எகிப்துக்குப் போனபோது, புருஷனின் சொற்படி கேட்டு தன்னுடைய வாழ்க்கையை பலியாக வைக்க ஆயத்தமாயிருந்தவள் சாராள். எகிப்து எப்போதும் நம்மை ஈர்த்துக்கொள்ள ஆயத்தமாகவே இருக்கிறது; காத்துக்கொள்ளவேண்டியது நம்முடைய கடமை.

இதைப்போலொத்த மேலும் ஓர் நிகழ்வு ஆபிரகாமின் வாழ்க்கையில் நடைபெற்றது. ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பி சாராளை அழைப்பித்தபோதும், சாராளை விட்டுவிட்டான் ஆபிரகாம்; கர்த்தரே தடுத்தார் (ஆதி. 20:2-7).

சாத்தானின் வஞ்சகமும், தந்திரமும் எத்தனை கொடுமையானது? வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பலுகிப் பெருகும் சந்ததிக்குக் காரணமாகப்போகும் சாராளை பார்வோனுக்கும், அபிமெலேக்குவுக்கும் மனைவியாக்க நினைத்தானே. ஆண்டவர் சாராளின் கர்ப்பத்தை அடைத்துவைத்திருந்தது எத்தனை பாதுகாப்பானது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமான தேவனின் வல்லமை எத்தனை பெரியது (வெளி. 3:7). மோசேயை அனுப்பி இஸ்ரவேல் ஜனங்களை விடுவிப்பதற்கு முன்னமே, ஆபிரகாமின் நாட்களிலேயே வாதையை அனுப்பி சாராளை விடுவித்தார் தேவன்.

ஆபிரகாமின் வாழ்க்கை நமக்கும் பாடமல்லவா! தேவையற்ற இடங்களுக்கு, தேவன் விரும்பாத இடங்களுக்குச் சென்லும்போது, பசியோடு இருக்கும் பார்வோனின் கையில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து அருகிலேயே உள்ளது என்பதை மறந்துபோகவேண்டாம். சத்துருவின் பிடியிலிருக்கும் வீட்டிற்கோ, சாத்தானின் ஆதிக்கத்துக்குட்பட்டு வாழும் மனிதர்களைச் சந்திக்கவோ சென்று, இத்தகைய ஆபத்திற்குள் சிக்கி சின்னாபின்னமாகிப்போன குடும்பங்கள் ஏராளம், ஏராளம். முதலில் யோசிக்க மறுப்பவர்களையும், மறப்பவர்களையும் விபச்சாரிகளாக அல்லது விபச்சாரன்களாக வாழும் நிலைக்குள்ளும் சத்துரு தள்ளி வேடிக்கைப் பார்த்துவிடுகின்றான். இத்தகைய சூழ்நிலைகளை அடையாளம் கண்டுகொள்வது நம்முடைய கடமையே.

வரமாட்டேன் என்ற வஸ்தி

ராணி என்றும் ஸ்தானத்திலிருந்து விலக்கித் தள்ளப்பட்டவளாயிருந்தாலும், உலகம் அவளிடத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் உண்டு. அகாஸ்வேரு ராஜா பிரபுக்களுக்கும், ஊழியக்காரருக்கும் விருந்துபண்ணியபோது, தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும் அந்த விருந்துக்கு வந்திருந்தார்கள்; நூற்றெண்பதுநாளவும் அந்த விருந்து நடைபெற்றது. அந்த விருந்துக்குப் பின்னர், சூசான் அரமனையில் வந்திருந்த பெரியோர் முதல் சிறியோர் மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச் சேர்ந்த சிங்காரத் தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான் (எஸ்தர் 1:3-5). ஸ்திரீகள் தனியாகப் பிரிக்கப்பட்டு விருந்து கொடுக்கப்பட்டனர். அகாஸ்வேருவின் மனைவி வஸ்தி ஸ்திரீகளுக்கு விருந்து செய்தாள்.

ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் சௌந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக அவளை ராஜாவுக்குமுன்பாக அழைத்துவரவேண்டுமென்று, ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான் (எஸ்தர் 1:10,11). வஸ்தியோ வரமாட்டேன் என்றாள். வரமாட்டேன் என்ற வஸ்தியை விலக்கித் தள்ளினான் ராஜா. இன்றைய நாட்களில் தங்கள் அழகினைக் காட்டவேண்டும் என்ற நோக்கத்துடன், விதவிதமான ஆடைகளுடனும், அலங்காரங்களுடனும் வலம் வருகிறவர்கள் உண்டல்லவா. இப்படி வலம் வருகிறவர்களில் பலர் தங்கள் வீடுகளுக்குக்கூட திரும்ப இயலால், வீதியிலேயே சிக்கிக்கொள்கின்றனர். விலக்கித் தள்ளப்பட்டாலும், வஸ்தி இன்றைய பெண்களுக்கு ஓர் சிறந்த பாடத்தை முன்வைத்தே சென்றிருக்கிறாள்.

அகாஸ்வேரு வஸ்தியை வரவழைத்ததுபோல, இன்றைய நாட்களில் இணையதளங்கள் பல அழைப்புகள் விடுத்துக்கொண்டிருக்கின்றன.தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களைக் கூட வலைத்தளங்களில் வீசிவிட்டு, காண்போரின் வலைகளில் பலர் மாட்டிக்கொள்கின்றனர்.கயஉநடிழழம மற்றும் அதனைச் சார்ந்த பிற இணையதளங்களில் அழகழகாய் தங்கள் படங்களைப் பதித்து அரக்கர்கள் கைகளில் மாட்டிக்கொள்ளவேண்டாம். இன்றைய தலைமுறையினருக்கு இது விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் மாறிவிட்டது. செய்திகளைப் பறிமாறவும், செய்திகளைப் பரப்பவும், செய்திகளைப் பெறவும் உபயோகப்படுத்தப்படவேண்டிய தளங்கள் அவைகள் என்பதை அறியாமல், சிறைக் கைதிகளைப் போல தங்களையே அதற்குள் அடைத்துவைத்து வாழ்கின்றனர் பலர். தங்களையே காட்டிக்கொண்டிருக்கின்றனர். சாராள் பார்வோனிடத்தில் கொண்டுபோகப்பட்டதுபோல, உங்கள் புகைப்படங்கள் யாரோ ஒருவனைச் சென்று அடைய அதிகமான வாய்ப்பு உண்டு என்பதை மறந்துவிடவேண்டாம். படத்திற்கு சிலர் கொடுக்கும் உழஅஅநவெள பல உள்ளர்த்தங்களை அடக்கியது என்பது மறுப்பதற்கில்லை. மெல்ல மெல்ல, தங்கள் உள்ளத்தினைச் சொல்ல இத்தகைய தளங்களை தளவாடங்களாகவும் பலர் பயன்படுத்துகின்றனர். சத்துரு எதிராக உலாவருகிறான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தேவையற்ற உhயவவiபெ தேவையற்ற புகைப்பட பறிமாற்றங்கள்; இதனால் பிரிந்த குடும்பங்கள் பல, எழும் சந்தேகங்கள் பல, பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் உளவாளிகளைப் போலவும் இத்தகைய தளங்களில் உலாவருகின்ற நிலையும் மறுப்பதற்கில்லை, நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள் கூட நிறுத்திவைக்கப்படும் நிலையை உண்டாக்கிவிடுகின்றது. வரமாட்டேன் என்று சொல்லும் வஸ்தியைப்போல வாழப்பழகுங்கள். பெண்களே பார்வோன் கண்கள் உங்களுக்குப் பின்னால் இருப்பதை அறிந்தவர்களாக எச்சரிக்கையோடு வாழுங்கள்.

வாலிபனே, உன்னை போத்திப்பாரின் மனைவியைப் போன்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கலாம், வாலிபப் பெண்ணே உனை அம்னோன், அபிமெலேக்கு மற்றும் பார்வோன் போன்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கலாம; எனவே, எச்சரிப்போடு இணைதளத்தில் மாத்திரமல்ல, இருப்பிடங்களிலும் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போ, நான் வீட்டை விட்டே வெளியே வரக்கூடாதா? என்ற வாதமான கேள்விக்காக அல்ல, பாதுகாப்பாக வாழவே இந்த எச்சரிப்பின் ஆலோசனை.

தேவ பிள்ளைகளாகிய நாம், சத்துருவின் தந்திரங்களை அறிந்துகொள்ளுவோம், தேவனை விட்டுவிடாமல் தொடர்ந்து செல்லுவோம்; நம்முடைய பயணத்தின் முடிவு, தேவனை அடையட்டும். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி