சத்துருவாய் நின்ற சரீரம்
அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். (லூக் 19:4)
கிறிஸ்துவின் கிட்டச் சேரக்கூடாமல், மறித்து நிற்கும் மாம்சத்தையும் தாண்டிச் சென்று, மனதோடு மனதாக அவரோடு ஒட்டி மணமாக வாழும் பாக்கியத்தைப் பெற்றனுபவிக்கும் மனிதர்களின் வாழ்க்கை பாக்கியம் பெற்றதே. என்றபோதிலும், தடைகளைத் தாண்ட இயலாதவர்களும், சத்துரு தோண்டிவைத்திருக்கும் குழிகளுக்குள் விழுந்து முழுவதுமாக மூழ்கிவிட்டவர்களும் உண்டு.
இயேசு கிறிஸ்து எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில், சகேயு அவரைப் பார்க்க வகைதேடினான் (லூக். 19:1-3). அரசாங்க பதவியிலிருந்தவன் சகேயு, அநேக அதிகாரிகளைச் சந்தித்தவன்; என்றபோதிலும், இயேசு கிறிஸ்துவைக் குறித்து அவன் கேள்விப்பட்டிருந்தபோது, 'அவர் எப்படிப்பட்டவரோ' என்று பார்க்க வகைதேடினான். அவரைச் சந்திக்க விரும்பவில்லை; மாறாக, தனது மனதில் அவரைக் குறித்து எழுந்திருந்த சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளும்படியாகவே சென்றான் சகேயு. இன்றும், இப்படிப்பட்ட நிலையில் காணப்படும் மக்கள் உண்டு; 'பங்கேற்பவர்களாக' அல்ல 'பார்வையாளர்களாகவே' பின்தொடரும் மக்கள் உண்டு.
பார்வையாளனாக, ஜனக்கூட்டத்திற்குள் சகேயு நுழைந்துவிட்டபோதிலும், சரீரமோ பார்ப்பதற்கு ஒத்துழைக்கவில்லை. அவன் குள்ளனாயிருந்தபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணமுடியவில்லை. எனவே, அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான் (லூக். 19:3,4). எத்தனை உயர்ந்த பதவியிலிருந்தாலும், எத்தனையாய் ஐசுவரியத்தைச் சேர்த்து வைத்திருந்தாலும், இயேசு கிறிஸ்துவைச் சந்திப்பதற்கோ சகேயுவின் சரீரம் ஒத்துழைக்கவில்லை. சகேயுவுக்கு உதவி செய்தது அந்த காட்டத்தி மரமே. அவ்வாறே, இயேசு கிறிஸ்து கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு, உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள். ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள் (மாற் 2:1-4). இயேசு கிறிஸ்துவைச் சந்திக்க திமிர்வாதக்காரனின் சரீரம் ஒத்துழைக்கவில்லை, அந்த நான்கு மனிதர்களே திமிர்வாதக்காரனுக்கு உதவி செய்தார்.
மேலும், எருசலேமில் ஆட்டுவாசலினருகே இருக்கிற பெதஸ்தா என்னும் குளத்தின் ஐந்து மண்டபங்களில் குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள் (யோவா 5:3). தேவதூதன் அந்தக் குளத்திலே இறங்கி, தண்ணீரைக் கலக்கும்போது, வியாதியாயிருந்தாலும் எழுந்து செல்லும் அளவிற்கு சரீரத்தில் பெலத்தோடு இரு;நதவர்களெல்லாம் சுகத்தைப் பெற்றுக்கொண்டுவந்தார்கள். முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஒரு மனிதனும் அங்கே காணப்பட்டான் (யோவான் 5:5). தூதன் தண்ணீரைக் கலக்கும்போது, எழுந்து செல்லும் அளவிற்கு அவனது சரீரம் ஒத்துழைக்கவில்லை. சகேயுவைப்போல, தானாக ஒரு உபாயத்தைத் தேடிக்கொள்ளவும் அவனால் இயலாத நிலை, திமிர்வாதக்காரனைத் நான்கு பேர் தூக்கிக்கொண்டு சென்றதைப் போல, தூக்கிக்கொண்டு செல்லவும் எவரும் ஆயத்தமாயில்லை; இப்படிப்பட்ட நிலையிலிருந்த அவனை இயேசு கிறிஸ்துவே தேடிவந்தார்.
நம்முடைய வாழ்க்கையிலும், ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் முன்னேறிச் செல்லுவதற்கு, நம்முடைய மாம்சமே தடையாகக் காணப்படக்கூடும். வேத வாசிப்பு, ஜெபம், உபவாசம் போன்றவைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கக்கூடும். என்றபோதிலும், அத்திமரம் போன்றவர்களை அடையாளம் கண்டுகொண்டால், திமிர்வாதக்காரனைத் தூக்கிச் சென்றதைப் போன்ற மனிதர்களின் கைகளில் நம்மை விட்டுக்கொடுத்தால், குளத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை விட்டு விட்டு, அருகிலேயே வந்து நிற்கும் கிறிஸ்துவை அறிந்துகொண்டால் விடுதலை நிச்சம். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் (1கொரி 9:27) என்ற வார்த்தை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறட்டும்.
Comments
Post a Comment