ஆவிக்குரிய ஞானம்
பிரச்சனைகள் வாழ்க்கையில் உருவாகும்போது, பிரிந்துபோவது மட்டுமே அதற்குத் தீர்வாகிவிடாது. ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகின்ற (1 பேது 2:5) கற்களாகிய நாம், குடும்பமாயினும், சபையாயினும், ஸ்தாபனமாயினும், பிரச்சனைகளின் நிமித்தம் கட்டடத்திலிருந்து பெயர்ந்து கீழே விழுந்துவிட்டால் அல்லது மற்றவரை பெயர்ந்துவிழும்படிச் செய்துவிட்டால், அது நம்முடைய ஆத்துமாவுக்குக் காயத்தை உண்டாக்கிவிடுவது மாத்திரமல்ல, அடுத்தவருடைய நியாயத்தையும் நிதானிக்க இயலாமல் அவர்களை நிர்மூலமாக்கிவிடும் நிலைக்கு நம்மைத் தள்ளி அவர்களது உள்ளத்திலும் கல்லெறிந்துவிடும். பிளவுகளை சரிசெய்வதற்குப் பதிலாக, பிரிவுகளைப் பெரிதாக்கும் மனிதர்கள் பெருகினால், அது தேவராஜ்யத்திற்கு பேரிழப்பையே கொண்டுவரும்.
அப்போஸ்தலருடைய நாட்களில் உண்டான பிரச்சனைகளை, தேவஞானத்தின்படி அப்போஸ்தலர்கள் அலாதியாகத் தீர்த்துவைத்தார்கள். சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள் (அப். 6:1). இந்த பிரச்சனையினால், கிரேக்கர்களும், எபிரெயர்களும் ஒருவருக்கொருவர் எதிரிகளைப்போல தங்களைப் பார்த்து, தனித்தனியே பிரிந்திருக்கக்கூடும். 'தங்கள் விதவைகள் விசாரிக்கப்படவில்லை' என்று கிரேக்கர்கள் கூறுவது, எபிரெயர்கள் எபிரெயர்களையே நன்றாக விசாரிப்பதில் முக்கியத்துவம் காட்டுகின்றனர் என்பதையே மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றது. இன்றைய நாட்களிலும், சபைகளில், ஸ்தாபனங்களில், ஊழியங்களில் ஏற்படும் இத்தகைய பிரச்சனைகள் மனிதர்களை பங்குபோட்டுப் பிரித்துவிடுகின்றன; ஒன்றாக இணைந்து கட்டப்பட்டவைகளே; எனினும், ஒருமனமில்லாததினாலும், ஒத்துப்போகாததினாலும் உயரமாய் சிகரமாய் உருவாக்கப்பட்டவைகள் மனிதர்கள் இல்லாமல் சிறியதாகிவிடுகின்றன. தகுதியானவர்கள் இருப்பினும், ஊரைச் சேர்ந்தவர்கள் என்றும், உறவைச் சேர்ந்தவர் என்றும், உதிரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தெரிந்தவர்கள் என்றும் அளிக்கப்படும் முன்னுரிமைகள் அடுத்தவரது உரிமையையே பறித்துவிடுகின்றதே; நாங்கள் விசாரிக்கப்படவில்லை என்று மற்றவர்களைச் சொல்லவைத்துவிடுகின்றதே. இதனால் இன்றைய நாட்களிலும் பல ஊழியங்களில் உண்டாகும் பிரச்சனைகள் ஏராளம். மேலும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, உரிமையிழந்தவர்களே மீண்டும் உதறப்பட்டுவருவதும் பல ஊழியங்களில் தொடர்கதையாகிவருகின்றது.
பிரச்சனைகளைக் கண்டபோதிலும், அப்போஸ்தலர்கள், தங்களுடைய பணியில் தடம்புரண்டுவிடவில்லை; நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் (அப் 6:4) என்று உறுதியாக அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இன்றோ, பல ஊழியங்களில் உண்டாகும் பிரச்சனைகள் அநேக தலைவர்களுடைய தலையைத் தாக்கிவிட்டதற்குக் காரணம், எல்லாவற்றையும் தாங்களே தீர்க்கவேண்டும் என்ற மனநிலையோடு, ஆலோசனை வழங்குவதற்குப் பதில் தங்கள் தலையினையும் உள்ளே நுழைத்துவிட்டதே. இந்த தாக்கம், அவர்கள் வேதவசனத்தைப் போதிப்பதிலும் பாதிப்பை உண்டாக்கிவிடுகின்றது. எனவே, அப்போஸ்தலர்கள், இத்தகைய பிரச்சனையிலிருந்து தங்களை விலக்கிக் காத்துக்கொண்டார்கள்.
மேலும், பிரச்சனை பிரிவினையாகும்படியாக அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிடவுமில்லை. அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல. ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம் (அப் 6:1-3) என்றே அவர்களுக்கு பதிலுரைத்தார்கள். 'பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற' என்று தெரிந்துகொள்ளப்படவேண்டியவர்களுக்கு இருக்கவேண்டிய தகுதியை மாத்திரம் அப்போஸ்தலர்கள் அவர்களுக்குச் சுட்டிக்காட்டியதுடன், 'உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்' என்று அவர்கள் தாங்களே தெரிந்துகொள்ளும்படியாக ஆலோசனையும் கூறினார்களே. பிரச்சனையைக் கொண்டுவந்தவர்களாலேயே பிரச்சனை தீர்க்கப்பட்விட்டது; இந்த ஆவிக்குரிய ஞானம் இன்றைய தலைவர்களிடத்திலும் வேண்டும்.
Comments
Post a Comment