தவறு, தவறு, தவறு
தவற்றிலிருந்து தப்பிக்க தவற்றையே தொடர்ந்து செய்துகொண்டிருப்பதும், எவ்விதத்திலும் அச்செயல்கள் தீர்வாகாமல் தொடர்ந்து தவற்றிலேயே சிக்கிக் தவிப்பதும் அநேக மக்களுடைய தொடர்கதையாகிவிட்டது. தாங்கள் செய்வது தவறு என அறிந்தும், தெரிந்தும், தவற்றினை தவற்றினைக் கொண்டே சரிக்கெட்ட நினைப்பது மதியீனம்.பொய்யை மறைக்க பொய், திருட்டை மறைக்க திருட்டு, குற்றத்தை மறைக்க குற்றம் என்று வாழ்க்கையின் வழியெங்கும் தவறுகளையே விதைகளாக விதைத்து, விதைத்து வாழ்நாட்களின் கடைசியில் அதன் பலனையும் அறுத்துக்கொண்டிருக்கின்றார்கள் பலர். நீதியின் பாதையில் இவர்களது பாதங்கள் நுழைகிறதில்லை, தொடர்ந்து பாவத்தின் வழிகளிலேயே பிரயாணிக்கின்றன. தற்காலிகமாகத் தங்களைத் தற்காத்துக்கொள்ள எத்தணித்து, மேலும் மேலும் தவறுகளையே செய்துகொண்டு, அத்தனையும் வெளிப்படும்போது தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வகையறியாதவர்கள் இவர்கள். எனவே இயேசு, ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து. பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் (மத் 5:23-26) என்று போதித்தார். நாம் சிறைச்சாலைக்குச் செல்லும் முன்னதாக, நல்மனம் பொருந்தி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் வழியினைத் தெரிந்துகொள்ளுவோம். தவறுகளின் மேல் தவறுகளைச் செய்து, செய்து அநேகர் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் அத்தனை பெலத்தையும் இழந்துவிட்டனர். இப்படி, தனது வாழ்க்கையில் தவற்றினையே தொடர்ந்து செய்த உக்கிராணக்காரனைக் குறித்து இயேசு தனது உவமையில் குறிப்பிடுகின்றார்.
ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.(லூக் 16:1,2)
ஐசுவரியவானாகிய ஒரு மனிதன் தனது வீட்டில் உக்கிராணக்காரன் ஒருவனை பணிக்கு அமர்த்தி, வீட்டின் காரியங்களையும், கணக்குகளையும் கண்காணிக்கும்படியாகவும், அத்துடன் பல்வேறு பொறுப்புகளையும் அவனுக்கு வழங்கியிருந்தான். தனது ஆஸ்திகளின் மேல் அவனை அதிகாரியாக வைத்திருந்தான்; எஜமானின் கண்களுக்கு முன் உண்மையான ஊழியக்காரன் போலவே அவன் நடித்துக்கொண்டிருந்தான்; ஆனால், உண்மையிலோ அவன் எஜமானின் ஆஸ்தியை அழித்துப்போடுகிறவனாயிருந்தான். ஆஸ்திகளை காப்பாற்றும்படியாகவே எஜமானால் வைக்கப்பட்டிருந்தபோதிலும், அவனது போக்கோ எஜமானின் நோக்கத்திற்கு விரோதமாயிருந்தது. தனது செயல்கள் எஜமானுக்குத் தெரியவரவில்லை என்ற எண்ணத்தில் அவனது தவறுகளும் தொடர்ந்துகொண்டேயிருந்தது. எஜமானின் வீட்டில் இருந்துகொண்டே, எஜமானிடத்திலிருந்து கூலியையும் பெற்றுக்கொண்டே எஜமானுக்கு விரோதமாக செயல்பட்டுக்கொண்டிருந்தான் அவன். தன்னை நம்பியிருந்த எஜமானுக்கு துரோகம் இழைத்துக்கொண்டிருந்தான். என்றபோதிலும், சுற்றத்தாரின் மூலமாக அது எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது (லூக். 16:1). அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான் (லூக் 16:2). எஜமானால் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவன் தன் உக்கிராணத்துவத்திலிருந்து நீக்கப்பட்டான். திருந்திக்கொள்ள எத்தனையோ சந்தர்ப்பம் கிடைத்தபோதிலும், எஜமான் தன்னைக் காணவில்லை என்ன மனநிலையே அவனுக்குள் மேலோங்கி நின்றதால், மனந்திரும்பும் மனம் அவனுக்கு இல்லாதிருந்தது.
தள்ளப்பட்ட உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன் (லூக் 16:3) என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்; அவனது நிலை அதுவே. வேலை செய்கிறதற்கு அவனிடத்தில் பெலனில்லை, மற்றவர்களிடத்தில் கேட்கவும் விருப்பமில்லாதவன் அவன். எனவே, மீண்டும் தவற்றையே தெரிந்துகொள்கிறான். உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு; தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான். பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான் (லூக் 16:4-7).
தவறு செய்து தான் கண்டுபிடிக்கப்பட்டபோது, எஜமானிடத்திற்குச் சென்று மன்னிப்பு கேட்கும் மனம் அவனுக்கு வரவில்லை; தவற்றிலிருந்து திருந்தி வாழும் தன்மை அவனிடத்தில் காணப்படவில்லை. மீண்டும் தவற்றையே செய்து தனது வாழ்க்கையினைக் காப்பாற்ற முயற்சிக்கிறான். நம்முடைய நிலை எப்படி? தவறான காரியங்களை நாம் செய்து கண்டுபிடிக்கப்படும்போது, மேலும் தவறானவைகளையே செய்ய முற்படுகின்றோமா அல்லது செய்த தவற்றினைத் திருத்திக்கொள்ள முற்படுகின்றோமா? யாராவது நம்மிடத்தில் நமது குற்றத்தைச் சொன்னால், இவர் எப்படி என்னைச் சொல்லலாம், எனது குறையைச் சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கின்றது? என்று தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல், மேலும் தவறுகளையே செய்ய முற்படுகின்றோமா? குடும்பத்திலோ, அலுவலகத்திலோ தவறுகளைச் செய்து தள்ளப்படும்போது மனந்திரும்புதலுக்குப் பதிலாக, மன்னிப்புக்குப் பதிலாக, தவற்றினை ஒத்துக்கொண்டு வாழ்க்கையைத் தொடருவதற்குப் பதிலாக, நமது தவற்றினைக் கண்டுபிடித்தவர்களுக்கு விரோதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றோமா?
இரட்சிக்கப்பட்டு, வாழ்க்கையில் தொடர்ந்து தவற்றையே செய்துகொண்டிருந்து, உணர்வற்றவர்களாக மாறி, இறுதியில் இரட்பின் சந்தோஷத்தையே இழந்து நிற்கும் பரிதாபமான வாழ்க்கைக்குள் நாம் தள்ளப்பட்டுவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம். இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.(2கொரி 6:2)
தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருந்தபோது, உரியாவின் மனைவியாகிய பத்சேபாளைக் கண்டான். அவள் மேல் ஆசை கொண்டவனாக, ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான் (2சாமு. 11:1-4). இந்த தவற்றைச் செய்ததோடு தாவீது நி;ன்றுவிடவில்லை, அதனை மறைக்கவேண்டுமென்றால், அவளது கணவனைக் கொலைசெய்யவேண்டும் என்ற எண்ணமும் அவனுக்குள் உருவானது. மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் (2சாமு. 11:15) என்று உரியாவுக்கு விரோமாக நிருபத்தை எழுதினால், உரியா மரணமடைந்தான். ஆனாலும், தான் செய்த தவற்றை தேவனுக்கு முன்பாக தாவீதினால் மறைக்க முடியவில்லையே. நாத்தான் தீர்க்கதரிசியின் மூலமாக தனது பாவம் அறிவிக்கப்பட்டபோது, 'நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன்' (2சாமு. 12:13) என்று தனது தவற்றை ஒத்துக்கொண்டு மனந்திரும்பினான் தாவீது, தனது சிங்காசனத்தையும் காத்துக்கொண்டான்.
இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரனென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன். மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவசியமாம் (1கொரி 4:1,2) என்றும், மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவசியமாம் (1கொரி 4:2) என்றும், ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானபிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும், ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும் (தீத் 1:7-9) என்றும் பவுல் எழுதுகின்றாரே. தேவனுடைய வீட்டின் உக்கிராணத்துவத்தைப் பெற்ற நாம் உண்மைக்குப் புறம்பாக வேலை செய்வோமென்றால், தேவனால் நிச்சம் உதறிவிடப்படுவோம். நாம் தவறும் சிறிய பகுதிகளுக்கும் தேவனிடம் சென்று மன்னிப்பு கேட்கவும், உக்கிராணத்துவத்தைத் தொடரவும் கற்றுக்கொள்ளுவோம்.
Comments
Post a Comment