மணவாட்டியும், மணவீடும்
நாம் யார்? என்றும் எங்கு செல்ல ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்றும், எப்படிப்பட்டவர்களாக மாறும்படி ஆயத்தமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதையும் அறியுங்கால், ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆனந்தம் மேலிடும். மண்ணினால் நாம் உருவாக்கப்பட்டிருந்தாலும் நாம் தேவசாயலையும், தேவரூபத்தையும் உடையவர்கள் (ஆதி. 1:26). நாம் தேவனுக்குச் சொந்தமானவர்கள், தேவனின் சம்பத்தானவர்கள் (மல். 3:17). மண்ணினால் உருவாக்கப்பட்ட நாம் 'மனிதர்கள்' என்று அழைக்கப்பட்டாலும், மனதில் அவரை உட்காரவைத்துவிட்டால் 'மணவாட்டிகள்' என்றே அழைக்கப்படுகின்றோம். பாவத்தில் சிக்குண்டு, மகிமையை இழந்த மனிதனை மணவாட்டியாக்கிக்கொள்ளும் பிதாவின் மாபெருந்திட்டத்திலேயே இயேசு இப்புவிக்கு வந்தார்.
ஈசாக்கிற்கு பெண் தேடிச் சென்ற ஆபிரகாமின் வேலைக்காரன், தேவ நடத்துதலின்படி பெண்ணைக் கண்டுபிடித்துவிட்டபோது, வெள்ளியுடமைகளையும், பொன்னுடமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான் (ஆதி. 24:53). ஆனால், இயேசுவோ தனது பயணத்தில் 'தன்னையே கொடுக்கவேண்டியதாயிற்று'. ஒரு பாவமும் செய்யாதவராயிருந்தபோதிலும், குற்றமற்றவராகவே இத்தரையில் வாழ்ந்தபோதிலும் தன்னுடன் நம்மைச் சேர்த்துக்கொள்ளும் விருப்பத்தில் தன்னையே சிலுவையில் பலியாக்கிக்கொண்டார் இயேசு. அவருடைய மரணத்தின் சத்தியத்தைப் புரிந்துகொண்டால், சிந்திய ரத்தம் நமக்கே என்றறிந்துகொண்டால், மணவாளனுக்கு உள்ளத்தில் இடம்கொடுத்துவிட்டால், நாம் 'மணவாட்டியாக' மாறிவிடுவோம்.
அவருடைய மணவாட்டியாயிருக்கும் ஸ்தானத்தை இழந்துவிடவேண்டாம். ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப் புறப்படுவார்களாக (யோவேல் 2:16) என்கிறான் யோவேல் தீர்க்கதரிசி. மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய், மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்த சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று (யோவான் 3:29) என்று சொன்னான் யோவான். யோவான், தன்னை இயேசுவின் தோழனாக எண்ணினார். ஆனால், நாமோ இயேசுவின் மணவாட்டிகள். திருமண வீட்டிற்கு வந்து விருந்துண்டு, வாழ்த்திச் சென்றவர்களைக் காட்டிலும், மணவாளனின் அருகே நிற்கும் மணவாட்டிக்கு அதிக மகிழ்ச்சி உண்டாயிருக்குமல்லவா. இத்தகைய மகிழ்ச்சிக்குள் நீங்கள் இன்று இருக்கின்றீர்களா? என் உங்களை நீங்களே ஆராய்ந்துபாருங்கள்.
இரண்டாம் வருகையில், மகிமையிலே நாம் மறுவீட்டிற்குள் பிரவேசிக்கவும், பிதாவின் ஒளியில் மிளிரவும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ளவர்களாக நம்மை தமக்கு முன் நிறுத்திக்கொள்வதற்காகவே இயேசு சிலுவையில் தன்னை ஒப்புக்கொடுத்தார் (எபே. 5:27). மணவாட்டியின் அலங்கரிப்பைப் பெறவேண்டுமென்றால், மணவாளன் இயேசுவே என்பதை அறிந்துகொள்ளவேண்டும், மணவாளனுக்கு வாழ்க்கையை அர்ப்பணிக்கவேண்டும், அவர் விரும்புகிற வண்ணம் நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாய் வாழவேண்டும். மணவாட்டிக்குரிய அலங்கரிப்பு உங்கள் வாழ்க்கையில் உண்டா? அயர்ந்துவிட்டாலும், அசுத்தம் புகுந்துவிடும்; அஸ்திபாரம் ஆடிவிடும், களைகள் உட்புகுந்துவிடும் எச்சரிக்கை! மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கு ஒப்பாகவே 'இரட்சிப்பின் வஸ்திரம்' நமக்குக் கொடுக்கப்படுகின்றது (ஏசாயா 61:10). வழியில் கிடந்த நம்மை, ஜலத்தினால் முழுக்காட்டி, இரத்தமற ஸ்நானம்பண்ணுவித்து, எண்ணெய் பூசி, சித்திரத்தையலாடையை உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச் சால்வையையும் கொடுத்து, ஆபரணங்களால் அலங்கரித்து, கைகளிலே கடகங்களையும், கழுத்திலே சரப்பணியையும்போட்டு, நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், காதுகளில் காதணியையும், தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தார் (எசே 16:12); இவ்விதமாய்ப் பொன்னினாலும் வெள்ளியினாலும் நாம் அலங்கரிக்கப்பட்டோம். நல்ல சமாரியனான அவர், நம்மைக் கண்டபோது நம்மேல் ஊற்றிய திராட்சரசம் தன் இரத்தமே. அவருடைய இரத்தத்தினலேயே நாம் நீதிமான்களாக்கப்பட்டிருக்கின்றோம் (ரோமர் 5:9). எனவே தாவீது, 'நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் (சங். 51:7) என்று வேண்டுதல் செய்கின்றான். மண்ணான நம்மைக் கழுவி மணவாட்டியாக மாற்றி அலங்கரிப்பது மணவாளனே. திருந்திய இளையகுமாரனுக்கு தகப்பன் வீட்டில் நடந்தது உங்களுக்கு நினைவிருக்கட்டும் (லூக். 15:22-24).
மணவாட்டியை மாத்திரம் அலங்கரிக்கச் சொல்லிவிட்டு, மணவீட்டை விட்டுவிட்டுகிறவரல்ல நம் தேவன். மணவீட்டையும் அழகாக அலங்காரம் செய்கிறவர் அவர். மகிமையில் நாம் ஆயத்தமாகத் தங்கியிருக்கும் வீடு எப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொண்டால் ஆனந்தம் பெருகுமே. மகிமையில் நாம் தங்கியிருக்கும் புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது (வெளி. 21:2,10). அதின் பிரகாசம் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப் போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப் போலவும் இருந்தது. மதில்களோ வச்சிரக்கல்லால் ஆனது, நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப் பொன்னாயிருந்தது. அதன் அஸ்திபாரமோ சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வச்சிரக்கல், இந்திரநீலம், சந்திரகாந்தம், மரகதம், கோமேதகம், பதுமராகம், சுவர்ணரத்தினம், படிகப்பச்சை, புஷ்பராகம், வைடூரியம், சுநீரம், சுகந்தி போன்ற கற்களால் பதிக்கப்பட்டதாயிருந்தது (வெளி. 21:17-20). இந்த கற்களையெல்லாம் பூமியில் நீங்கள் பார்த்திருக்கிறீர்களோ இல்லையோ நான் அறியேன். ஒருவேளை இன்றைய நாட்களில் இணையதளத்தில் இவைகளில் புகைப்படங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கலாம்; என்றாலும், அதத்தனையையும் நேரில் கண்டு, சொந்தமென்று உரிமைபாராட்டும் நாள் இப்புவியில் என்று கிடைக்குமோ நானறியேன்! மணவாட்டியாகிய நம்மை மாத்திரமல்ல, மணவாட்டி வாழும் இடம் முழுவதையுமே அலங்கரிப்பவர் நம் பிதா. திருமண வீட்டில், மணப்பெண் மாத்திரமா அலங்கரிக்கப்பட்டிருப்பாள்? திருமண வீடே அலங்கரிக்கப்பட்டு குதூகலமாயிருக்குமல்லவா? நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் (யோவா 14:3) என்றாரே இயேசு. அந்த மணவீடு நமக்குத்தான்; அந்த மணவாட்டி நாம்தான். இச்சத்தியம் உங்கள் இருதயத்தில் அழுந்தப் பதிய ஆண்டவரை வேண்டுகின்றேன்.
பரம எருசலமே
பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய்
அழகாக ஜொலித்திடுதே
ஆமென் அல்லேலூயா.... அல்லேலூயா (3)
என்ற பாடலை அறிந்தவர்கள் ஒருமுறை பாடி மகிழுங்கள்.
Comments
Post a Comment