அந்தரங்கம், வெளியரங்கம்
இயேசு சிலுவையில் மரித்த பின்னர், அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான். ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமுஎன்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். (யோவா 19:38-40)
கெத்சமனேயில் இயேசு ஜெபித்துக்கொண்டிருந்தபோது உடனிருந்த சீஷர்கள், அவர் பிடிக்கப்பட்டபோது சிதறி ஓடினர். இயேசு சந்திக்கும் பாடுகளில் தங்கள் சரீரமும் பங்கடைந்துவிடக்கூடாது என்ற பயம் சீஷர்களை அப்படிச் செய்யச் செய்தது. இயேசு ஊழியத்தைத் தொடங்கிய நாள் முதல், உடனிருந்து ஊழியம் செய்தவர்கள், அவர் செய்த அற்புதங்களைக் கண்ணாரக் கண்டவர்கள், அவர் பிணியாளிகளைச் சுகமாக்கியதுபோல தாங்களும் சுகமாக்க வரம் பெற்றிருந்தவர்கள், அசுத்த ஆவியைத் துரத்தும் வலிமை பெற்றிருந்தவர்கள். என்றபோதிலும், இத்தனை வரங்கள் அவர்களுக்கு பாடுகளைச் சந்திக்க பெலன் கொடுக்கவில்லைளூ மரணத்தைக் கண்டதும் ஓடி ஒளிந்துகொள்ளும் பெலவீனமானவர்களாகவே சீஷர்கள் காணப்பட்டனர். சீஷர்கள் யூதர்களுக்குப் பயந்து, அறைக் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தனர் (யோவான் 20:19). இயேசுவின் சரீரத்தைக் சிலுவையிலிருந்து இறக்கி கல்லறையில் வைக்கவும் சீஷர்கள் எவரும் முன்வரவில்லை. சரீரத்தைக் கேட்கச் சென்றால், தாங்களும் பிடிபட்டுவிடுவோம் என்ற பயம் அவர்களை நிறைத்திருந்தது. அவரை அறிந்தவர்கள் பயந்து ஒளிந்துகொள்ளும் நேரத்தில், ஒளிந்திருந்த மனிதர்கள் இருவர் பயமின்றி வெளியே வருகின்றனர்; இது தேவனின் செயல். யூதருக்குப் பயந்ததினால், அந்தரங்க சீஷனாக இருந்தவன் யோசேப்பு. ஆனால், இயேசுவுடன் வெளியரங்கமாகச் சுற்றித் திரிந்தவர்கள் ஒளிந்துகொண்டபோது, தன்னை அவன் வெளிப்படுத்தத் தொடங்கினான். அப்படியே, அந்தரங்கமாக இராத்திரியில் இயேசுவை சந்தித்து வந்த நிக்கொதேமுவும் (யோவா. 7:50) வெள்ளைப்போளமும், கரியபோளமும் கலந்து இயேசுவின் சரீரத்தைத் தேடி வெளியரங்கமாக வருகின்றான். இயேசுவை அறிந்த நாம் அவரை அறிவிக்கத் தயங்கும்போது, அவருக்காக செயல்படாதிருக்கும்போது, அந்தரங்கக் கிறிஸ்தவர்களாக வாழும் ஜனங்கள் பலரை தேவன் வெளியரங்கமாக்குவார்.
இயேசு சொன்ன இளைய குமாரனின் உவமை நமக்கு ஓர் நல்ல பாடம். ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 21:31) என்றார்.
இளைய குமாரனைப் போன்று இன்று பலர் இயேசுவைச் சந்திக்கும்போது, 'போகிறேன் ஐயா' என்று சொல்லியும் இன்னும் புறப்படாதிருக்கின்றனர். வேலையினிமித்தமாக, சுற்றியுள்ளோரின் வார்த்தைகளின் நிமித்தமாக, சூழ்நிலைகளின் நிமித்தமாக போக மனமற்றவர்களாக அவர்கள் மாறிவிட்டார்கள். தேவனுக்குக் கொடுத்த வாக்கிலிருந்து விழுந்துவிட்டவர்கள் அவர்கள். கிறிஸ்துவை அறிவிக்கவேண்டிய பல இளைய குமாரர்கள், அழைப்பைப் பெற்றவர்கள், போகிறேன் என்று சொன்னவர்கள் இன்னும் புறப்படாதிருக்கிறபடியினால், தேவன் பல மூத்த குமாரர்களை எழுப்புகின்றார். அவர்கள் ஒருகாலத்தில் இயேசுவை வெறுத்தவர்கள், சுவிசேஷத்திற்குத் தூரமாக வாழ்ந்தவர்கள், உலகத்தின் சிற்றின்பங்களிலும், பாவங்களிலும் வாழ்ந்தவர்கள்; என்றாலும், அவர்களுக்குள் இருந்த மனஸ்தாபம் அவர்களை மனந்திரும்பச் செய்தது. இயேசுவின் அன்பின் பக்கம் அவர்களை இழுத்தது, அழைப்பினை ஏற்றுக்கொள்ளச் செய்தது.
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ணவல்லவராயிருக்கிறார் என்று (லூக் 3:8) யோவானும் பிரசங்கித்தானே. போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்று பரிசேயர்கள் இயேசுவினிடம் சொன்னபோது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக் 19:39,40). கல்லை அப்பமாக்கிச் சாப்பிடும் ஆலோசனை சாத்தானிடமிருந்து வருகின்றது, ஆனால், கற்களை பிள்ளைகளாக்கி தேவனைக் கூப்பிடச் செய்யும் அற்புதம் தேவனிடத்திலிருந்து வருகின்றது. தேவ பிள்ளைகளாக மாற்றாமல், தேவனைக் கூப்பிடச் செய்யாமல், அநேக ஊழியர்கள் தன்னிடத்தில் வரும் மக்களை அப்பங்களாக மாற்றியே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் கற்களை பிள்ளைகளாக மாற்றுவது நமது பிரதானப் பணியாகட்டும். நாம் நம்முடைய வாயை அடக்கிக்கொண்டால், அந்தரங்க்தில் வாழும் அநேகரை தேவன் ஆயத்தப்படுத்துவார். வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை (மாற் 4:22). சத்தமிட்டுக் கூப்பிடுளூ அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.(ஏசா 58:1)
ஆதி அப்போஸ்தலர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, அடக்கப்பட்டார்கள், அடிக்கப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள், எச்சரிப்புக்கொடுக்கப்பட்டார்கள் என்றபோதிலும் அவர்கள் தொடர்ந்து சத்தியத்தையும், சுவிசேஷத்தையும் பிரசங்கித்துக்கொண்டேயிருந்தார்கள். மனுஷருடைய கோபங்களுக்குப் பயந்து, மகிமையான சுவிசேஷப் பணியினை நிறுத்திக்கொள்வதா? கூடாதே! அவர்கள் பயமுறுத்தப்பட்டபோதிலும் (அப். 4:29) தேவ வசனத்தை முழு தைரியத்தோடும் சொன்னார்களே (அப். 4:31). இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று ஆலோசனைச் சங்கத்தார் கட்டளையிட்டார்கள். என்றபோதிலும், பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே (அப் 4:18-20) என்றே பதிலுரைத்தனர். இத்தகைய தைரியம் இன்று நம்மிடத்திலும் காணப்படவேண்டும்.
Comments
Post a Comment