Skip to main content

சபை சாரத்தை இழப்பது ஏன்?


சபை 

சாரத்தை இழப்பது ஏன்? 

(Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar)


'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினவரும், அவைகளையெல்லாம் காப்பாற்றுகிறவருமாகிய (நெகே. 9:6) அவருக்கே துதி, கனம், மகிமை உண்டாவதாக. 

  நானே கர்த்தர், வேறொருவர் இல்லை; என்னைத் தவிரத் தேவன் இல்லை (ஏசா. 45:5) என்றும், அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை (அப். 4:12) என்றும், பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை (ஏசா. 45:22) என்றும், வேறொரு சுவிசேஷம் இல்லையே (கலா. 1:7) என்றும், போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது (1கொரி. 3:11) என்றும், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல் (எபி. 10:26) என்றும் வௌ;வேறு வாக்கியங்களில் 'வேறொன்று இல்லை' என்று வேதம் தெளிவாக நமக்குப் வலியுறுத்திப் போதிக்கின்றபோதிலும்,  

நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாகவிற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன் (ரோமர் 7:14,15) என்று சொல்லுமளவிற்கும்,  என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது (ரோமர் 7:23) என்று கூறுமளவிற்கும் பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் பல்வேறு நிலைகளில் நம்முடைய வாழ்க்கையில் ஒருவேளை உண்டாகக்கூடும். என்றாலும், 'கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே' (ரோமர் 8:2) என்ற வெற்றியின் முழக்கமும், மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (1 கொரி. 15:55,57) என்ற ஆர்ப்பரிப்பின் சத்தமும் நிரந்தரமாக நம்முடைய வாழ்க்கையில் ஒலித்துக்கொண்டேயிருக்கவேண்டுமே. 

இத்தகைய வெற்றியின் சத்தம் நமது வாழ்க்கையில் ஒலித்துக்கொண்டேயிருக்குமென்றால், 'தலைக்கல்லும்' (சங்கீதம் 118:22; சகரி. 4:7) 'ஜீவனுள்ள கல்லும்' (1 பேதுரு 2:4), 'பிரதான மூலைக்கல்லுமாகிய' (1 பேதுரு 2:7) கிறிஸ்துவின் மேலே, 'ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் நாம் கட்டப்பட்டுவருகின்றோம்' (1 பேது 2:5) என்பதை அறிந்தவர்களாக நம்மால் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியுமே. சரீரமான சபையில் அங்கங்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், இத்தகைய ஜெய தொனியின் சத்தம் தொனித்துக்கொண்டிராவிட்டால், 'அங்கங்கள் ஒவ்வொன்றையும், ஆங்காங்கே சிறைபிடித்து' தன்னுடைய கட்டுப்பாட்டில் கட்டிவைத்துக்கொண்டு, முழு சபையையும் கர்த்தர் விரும்பும் பாதையில் சத்துரு செயல்படாமற் செய்துவிடக்கூடுமல்லவா. 

அதுமாத்திரமல்ல, கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் கிறிஸ்துவை அறியாமலும், இரட்சகராக அவரை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளாமலும், அவரது அன்பின் ஆழத்தை அறியாமலும் மற்றும் தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்காமலும் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களையும், அத்துடன், நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1 கொரி. 3:16) என்ற சத்தியத்தை உணராமலும் மற்றும் தங்கள் சரீரமாகிய ஆலயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் கட்டிடங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கும் மனிதர்களையும், அவ்வாறே, வம்சா வழியில் வந்தபோதிலும் வேதத்திற்கு விலகி நடக்கும் தலைமுறையினரையும்,  உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையில் சபை உள்ளடக்கிக்கொண்டிருப்பது, சபையை செயலற்ற நிலையை நோக்கியே நகர்த்துகின்றது என்பதையும் ஒருபோதும் நாம் மறுக்கமுடியாதே. ஒருபுறம் ஏலியின் குமாரர்களைப் போல தலைமுறையினர் தேவனுக்குத் தூரமாகச் சென்றுகொண்டிருக்க (1 சாமு. 2:12), சாமுவேலைப் போன்ற தேவ சத்தத்தைக் கேட்கும் சிறுவர்களாவது சபையில் எழும்பாவிட்டால் (1 சாமு. 3:10) அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே.

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய் (வெளி. 3:1-3) என்று சர்தை சபைக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகள், இன்றைய நாட்களிலும் பல சபைகளுக்குப் பொருந்தக்கூடியது அல்லவா! 

மேலும், 'ஆனாலும், தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்' (வெளி. 3:4) என்ற சர்தை சபையினைப் பற்றிய ஆண்டவருடைய அறிக்கை, அவருடைய சித்தத்தின்படி செய்யும் 'சில பேர்' (minority) மாத்திரமே அங்கு இருந்ததைக் சுட்டிக்காட்டுகின்றதே. இச்சிறு கூட்டத்தினர், சபையில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் (majority) மற்ற மக்களை ஆண்டவர் விரும்பும் திசையில் இழுத்துச் செல்ல முயற்சித்தாலும், அநேக நேரங்களில் சபைகளிலோ அது சாத்தியமற்றதாகவே காணப்படுமல்லவா!   

ஆவிக்குரிய வாழ்க்கையின் எவ்வித அனுபவமும் இல்லாமல், விருப்பமும் இல்லாமல், பெருவாரியான கூட்டத்தினரை மாத்திரம் தங்கள் பக்கத்தில் வைத்துக்கொண்டு, ஆலயத்தை ஆள நினைக்கும் மனிதர்களும் இந்த நாட்களில் சபைகளில் பெருகிவருகின்றனர். 'தெயுதாஸைப் போலவும்' (அப். 5:36), 'யூதாஸைப் போலவும்' (அப். 5:37) சிலர் எழும்பி, சபைகளுக்குள் அநேக ஜனங்களை தங்கள் பக்கத்தில் இழுக்கக்கூடுமே. இன்றைய நாட்களிலும், பல ஆலயங்கள் இத்தகையோரின் ஆதிக்கத்துக்குட்பட்டுவிட்டதினால் செயல்படக்கூடாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதுடன், மேய்ப்பர்களின் செயல்பாட்டையும் ஒடுக்கிவிட்டது என்பது மறுக்க இயலாது அல்லவா. அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள் (அப். 5:36); என்றும், அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள் (அப். 5:37) என்கிறதுமான நிலையினையும் சபையில் உண்டாக்கிவிடுகின்றதே. இத்தகைய சேதத்தை சபைக்குள் உருவாக்கும் மனிதர்களை இன்றைய சபைகள் அடையாளம் கண்டுகொள்ளவேண்டியது எத்தனை அவசியம்.

  மேலும், அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? (2 கொரி. 6:14,15) என்பதை உணராமலும், 'நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்' (ரோமர் 12:2) என்பதை அறியாமலும், இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது (லூக்கா 16:13) என்ற சத்தியத்தைக் கைக்கொள்ளாமலும், ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும் (மத். 9:16) என்ற வேத வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமலும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களால், பல சபைகள் தேவன் விரும்பும் திசையில் முன்னேற முடியாமல், முடங்கியே கிடக்கின்றன.

அதுமாத்திரமல்ல, சபையில் தங்களது பங்களிப்பை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், கிறிஸ்துவில் வளருவதோடு மாத்திரமல்லாமல், கிறிஸ்துவின் பெலனையும் கூடவே உணர்ந்தவர்களாகச் செயல்படவேண்டியது எத்தனை அவசியம்.  சன்மானத்தை எதிர்பார்த்து, சபிக்கும்படியாக வந்த பிலேயாம், 'தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு' (எண்;. 23:22) என்றல்லவோ சபையாகிய இஸ்ரவேல் ஜனத்திற்கு இருக்கும் பெலத்தை எடுத்துரைத்தான். இதனை மறந்து, கண் கண்டவைகளுக்கெல்லாம் சபை பயந்துகொண்டிருக்கக்கூடாதே. தங்களுக்கு இருக்கும் பெலனை உணராததினாலேயே, பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள் (யாத். 14:10). பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கிற தேவ ஜனங்களின் பெலன் பிலேயாமின் கண்களுக்குத் தெரிந்தபோதிலும், பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கும் ஜனங்களோ தங்கள் பெலனை உணராமலேயே பயணித்துக்கொண்டிருந்தார்கள். 'வெட்டுக்கிளிகளாகவே தங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஜனங்கள் இன்றைய நாட்களிலும் சபையில் உண்டல்லவா' (எண். 13:33). இவர்கள் தங்கள் எண்ணங்களாலும், சிந்தனைகளினாலும் மற்றும் வாயின் வார்த்தைகளினாலும் தங்களை மாத்திரமல்ல, முழு சபையினையுமே சோர்ந்துபோகச் செய்துவிடுவார்கள்.  

அவ்வாறே, சீரியாவின் ராஜா, குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பி, எலிசாவும் அவனது வேலைக்காரனும் இருந்த பட்டணத்தை வளைந்துகொண்டதை, தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் கண்டபோது, பயந்துபோன வேலைக்காரன் எலிசாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான் (2 இராஜா. 6:14,15). தங்களுக்குச் சாதகமாக நிற்கும் தேவனது சேனையைப் பார்க்காததினால் உண்டான பயம் அது. அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்று ஜெபித்தபோது, உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; கண்கள் திறக்கப்பட்டபோதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை வேலைக்காரனால் காண முடிந்தது. (2 இராஜா. 6:17) 

இன்றைய நாட்களிலும், தேவனால் தங்களுக்கு அருளப்பட்டிருக்கும் பாதுகாப்பையும், பெலனையும் உணராமல் பல வேளைகளில் உலகத்தின் காரியங்களைக் கண்டு சபை கண்ணீர்வடித்துக்கொண்டிருப்பது, பல சூழ்நிலைகளில் சபையின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக மாறிவிடுகின்றது.  'தனக்கு இருக்கும் சக்தியை உணராததினாலேயே, இன்றைய நாட்களில் சபை சாரமற்ற நிலையில் காணப்படுகின்றது. இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம். தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் (அப் 5:38,39) என்பதுதானே அப்போஸ்தலர்களைக் குறித்து பரிசேயனாகிய கமாலியேல் கூறின வார்த்தை.

சத்துருவின் சூழ்ச்சிகளினால் ஒருவேளை சரீரமாகிய சபையில் காயங்கள் உண்டாகக்கூடும், ஆனால் ஒருபோதும் அவைகள் சபையைக் காணாமற்போகச் செய்துவிடமுடியாது. இத்தனை வலுவான அஸ்திபாரம் சபைக்குக் காணப்பட்டபோதிலும், போடப்பட்டிருக்கின்ற அஸ்திபாரத்தை அசைக்க பெலனில்லாதபோதிலும், இருக்கும் இடத்திலேயே சாரமற்றதாக சபையை வைத்துவிட சத்துரு பல விதங்களில் முயற்சிப்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். எப்படி சாரமற்ற உப்பு 'உபயோகித்தாலும் உபயோகிக்காவிட்டாலும் பலனுமில்லை பயனில்லை' என்ற நிலையில் காணப்படுகின்றதோ,  அந்த நிலையிலேயே சபையையும் வைத்துவிட விரும்புகின்றான் சத்துரு. 

அநேக நேரங்களில், ஆலய ஆராதனைகளில் கலந்துகொள்ளும்போது, பேதுருவைப் போல 'எங்களுக்கு என்ன கிடைக்கும்?' (மத். 19:27), என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் என்ன பக்தி விருத்தி உண்டாகும்? என்பதை மாத்திரமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் மக்கள் அநேகர். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் தேர்ச்சி, சபையில் உள்ள பிற மக்களின் பக்திவிருத்திக்காகப் பயன்படவேண்டுமே. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக (மத். 22:39) என்ற இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் கற்பனையை அவரை ஆராதிக்கும்போது நாம் மறந்துவிடக்கூடாதல்லவா. ஆவிக்குரிய வாழ்க்கையில் இத்தகைய தேர்ச்சியும், முதிர்ச்சியும் நம்முடைய வாழ்க்கையிலும் அவசியமானது. அப்படிச் செய்தால் மாத்திரமே, சரீரமாகிய சபையில் அவயவங்களாகிய ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் பயனுள்ளவர்களாக மாற முடியும்.  

இது ஒருபுறமிருக்க, சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது. காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே? தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார் (1 கொரி. 12:14-18) என்றுதானே வேதத்தில் வாசிக்கின்றோம். இதனை மறந்தவர்களாக, சபையின் அங்கங்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு செயல்படவேண்டியவர்கள், வரங்கள் கிடைத்ததும் விலகிச் சென்றுவிடுவது விண்ணகத்தின் பார்வையில் விரோதமானதுதானே. இதனாலேயே இன்றைய நாட்களில் அநேக சபைகள், கண்கள் இல்லாமலும், காதுகள் இல்லாமலும், மூக்கு இல்லாமலும், செவிகள் இல்லாமலும், கைகள் இல்லாமலும், கால்கள் இல்லாமலும் காணப்படுகின்றன. சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; என்ற சத்தியத்தை நாம் மறந்துவிட்டால், இணைந்து செயல்படுவது இயலாததாகிவிடுமல்லவா.  

இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார் (1 கொரி. 12:11); என்றபோதிலும், ஒரே இடத்தில் ஒற்றுமையாக இருந்து சரீரமாக செயல்படுவது பல நேரங்களில் சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது. சபை என்ற சரீரத்தில் இணைந்திருப்பதற்குப் பதிலாக, வரம் பெற்ற மனிதர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறு இடங்களில் தனித்து இயங்கிக்கொண்டிருப்பதினால், சபையில் இருக்கும் ஜனங்கள், ஒவ்வொரு அவயவத்தைத் தேடியும் வௌ;வேறு இடங்களுக்குச் செல்லநேரிடுகின்றது. அதுமாத்திரமல்ல, ஜனங்களுக்கும் சமநிலையில் ஆவிக்குரிய போஷாக்கு சரிவர கிடைக்காமற்போய்விடுகின்றது. சபை தனது சாரத்தை இழக்காதிருக்கவேண்டுமென்றால், இந்தச் சத்தியத்தினை நாம் புரிந்து செயல்படவேண்டியது எத்தனை அவசியமானது.  

நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார் (எபே. 4:11-13) என்றும், அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது (எபே. 4:16) என்றும் வாசிக்கின்றோமே. இத்தகைய 'சரீர வளர்ச்சியை' மனதிற்கொள்ளாமல், அவயவமாகிய தங்களின் வளர்ச்சியை மாத்திரமே சிந்தித்துக்கொண்டிருக்கும் மனிதர்களாலேயே, சபையின் சமநிலை பறிக்கப்படுகின்றது. 

மற்றும், ஆத்துமாக்களைக் குறித்த கரிசனை அற்றுப்போனதினால், பல்வேறு சபைகள் இன்றைய நாட்களில் சாரமற்ற நிலையில் காணப்படுகின்றன. இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார் (அப். 2:47) என்பது அப்போஸ்தலர்களின் நாட்களின் அனுபவம். அப்படியென்றால், அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்க (ரோமர் 10:14,15), சுவிசேஷப் பணிக்கு சபை எத்தனை முக்கியத்துவம் அளிக்கவேண்டும். 

அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர் தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள் (அப். 8:1) என்றும், சிதறிப்போனவர்கள் எங்குந் திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள் (அப். 8:4) என்றும் வாசிக்கின்றோமே. 'அப்போஸ்தலர்; தவிர' என்ற வார்த்தைகள், அப்போஸ்தலர்களால் உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறையினரான சபையின் 'அங்கத்தினரை' சுவிசேஷப் பணி செய்ய அனுப்புவதற்காகவே துன்பங்கள் அனுமதிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றதே.  அதனாலேதானே, 'பிலிப்பு பிரசங்கியாக அறிமுகமாகின்றான், அடையாளப்படுத்தப்படுகிறான் (அப். 8:5), ஸ்தேவான் இரத்தசாட்சியாக மரிக்கின்றான்' (அப். 7:60); இவர்கள் சபையில் பந்தி விசாரிப்பிற்காகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்களல்லவா? (அப். 6:5) இத்தனை வலிமையான சுவிசேஷகர்களை 'சுவிசேஷப் பணிக்காகப் பயன்படுத்தாமல், சபை உள்ளேயே அடக்கிவைத்தால், அறிவிக்கப்படாத இடங்களை சுவிசேஷம் அடைவது எப்படி?' 

எப்படியாகிலும் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்காகவே இவைகள் ஆண்டவரால் அனுமதிக்கப்படுகின்றன என்பதனை மறந்து, துன்பம் உண்டான உடன் இன்றைய நாட்களில் சபைகள் தங்கள் செயல்கள் அனைத்தையும் சுருக்கிக்கொண்டு, சுவருக்குள் அடங்கி அமைதியாகிவிடுவதும், சுவிசேஷம் அறிவிக்காமல் சும்மா இருந்துவிடுவதும், இயங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிடுவதும்,   தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளத் தயங்கிவிடுவதும் ஆண்டவரின் எதிர்பார்ப்பிற்கு எதிரானதுதானே! 'என்னைப் போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை' (நெகே. 6:11) என்ற நெகேமியாவின் வைராக்கியம் நமக்குள்ளும் நெருப்பாய் எரியட்டும்.  

நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று ஜனங்கள் சொல்லிக்கொண்டதைப் போல (ஆதி. 11:4), இன்றைய நாட்களிலும், நாம் பரந்து விரிந்துவிடாதபடிக்கு, சத்துரு சபைகளுக்குள் நுழைக்கும் பல்வேறு தந்திரங்களை நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டியது அவசியமல்லவா.  பரந்து விரியவேண்டும் என்பதை நாம் மறந்துவிட்டால், சபையின் சாரம் தேசத்தை மூடாமல் ஓரிடத்திலேயே தேங்கிவிடுமல்லவா. 

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16:26) என்ற ஆரம்ப வரிகளையே மறந்துவிட்டு, உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுக்கே சபைகளில் முக்கியத்துவம் கொடுத்து, பிரசங்கங்களில் அவைகளே வலியுறுத்திக் கூறி சபையை உலகத்தோடு உட்காரவைத்துவிடாமல், உன்னதத்தின் வெளிச்சத்தை உலகிற்கு காட்டும் விளக்குகளாக சபைகளை மாற்ற கர்த்தர் கிருபை செய்வாராக!  

 

இரட்சிக்கப்பட்டோரால் நிறைகிறதா சபை இன்று?

இத்தரையின் ஈர்ப்பின்றி வளர்கிறதா சபை நன்று? 

இறந்ததாக இருக்கிறதோ உயிருள்ள பெயரோடு?

இறுதியான காலம் இது எழும்பட்டும் உயிரோடு


ஆத்துமாக்களை மறந்து ஆசீர்வாதங்களைத் தேடலாமா?

ஆஸ்திகளே ஆத்துமாவின் ஆனந்தம் எனச் சொல்லலாமா?

ஆலயத்தில் அடுத்தவரை மறந்து சுயம் தேடலாமா?

ஆராதனை அனைவருக்கும் இதனை நாம் மறக்கலாமா? 


சரீரத்தின் அங்கங்கள் சிதறி நாம் கிடக்கலாமா?

சபை என்னும் சரீரத்தை செயல்படாது முடக்கலாமா?

சுவிசேஷம் நம் பணி இதனை நாம் மறக்கலாமா? 

சொல்லாத இடங்களுக்குச் செல்லாமல் இருக்கலாமா?


பூலோகச் சேனைகளுக்குப் பூமியில் அஞ்சலாமா?

பாதாள வாசல்களுக்குப் பயந்து நாம் நடுங்கலாமா? 

பலமான பாதுகாப்பு பிதா, இதை மறக்கலாமா?

பரலோகச் சேனையின் வீரர்கள் பின்வாங்கலாமா?



அன்பரின் அறுவடைப் பணியில்

அன்பு சகோ. P.J. கிருபாகரன்

 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி