கொடுத்தது கொடுக்கவே
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவா 3:16)
'தேவன் கொடுத்ததைக் கொண்டாடும் நாளே' கிறிஸ்து பிறப்பின் பண்டிகை. தேவனால் தங்களிடத்தில் கொடுக்கப்பட்டதை, தேவனுக்கே திருப்பிக்கொடுக்க சிலர் மறந்துவிடுகிறார்கள், வேறுசிலர் மறுத்துவிடுகிறார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள் (மத் 6:20) என்றார் இயேசு கிறிஸ்து. மண்ணிலுள்ள பொக்கிஷங்களை மனப்பூர்வமாகக் கொடுப்போமென்றால், மறுவாழ்விலும் அதன் பலனைக் நம்மால் காண இயலும். 'உலத்தில் சம்பாதித்தவைகளை உலகத்திலேயே அனுபவித்தால் போதும்' என்ற மனதுடையோர், மரணவேளையில் மண்ணிலேயே அதனை விட்டுச்செல்ல நேரிடும். நம்முடைய பொக்கிஷத்தை பரலோகத்திற்குக் கொண்டுசெல்லும் ஒரே வழி, கிறிஸ்துவுக்காக அதனை செலவுசெய்வதே. எனவே தாவீது, என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்; பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய் (சங் 16:2,3) என்று தன் இருதயம் தன்னிடத்தில் பேசிக்கொண்டதை, நாம் வாசிக்கும்படியாக பதிவுசெய்திருக்கிறார். ஆபிரகாம், அன்னாள் ஆகியோரின் வாழ்க்கை இந்நாள் வரை நமது மனதை ஆக்கிரமிப்பதின் அர்த்தம் கர்த்தர் கொடுத்ததை கர்த்தரிடமே கொடுத்துவிட அவர்கள் ஆயத்தமாயிருந்ததே.
இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றபோது, அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான் (மாற் 10:21,22); பொக்கிஷங்கள் அனைத்தும், தான் அனுபவிப்பதற்காகவே என்ற நினைவோடு வாழ்ந்தவன் அவன். தனக்கு இருந்த நிறைவு அவனது கண்ணில் புரையாயிருந்தது. 'தேவன் அவனிடத்தில் அன்புகூர்ந்ததினால்' கொடுத்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க அவன் ஆயத்தம்; ஆனால், அவைகளை மற்றவர்களுக்கு அன்புகூர்ந்து கொடுக்கவோ அவன் ஆயத்தமாயில்லை. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக (மத் 19:19) என்ற மறுமுனை அவனது வாழ்க்கையைப் பாதிக்கும் கூர்முனையாயிருந்தது.
சிலர், தங்களிடத்தில் உள்ளதைக் கொடுக்காவிட்டாலும், தங்களுக்குச் சமமாகப் பிறருக்குக் கொடுக்கப்படுவதை விரும்புவதில்லை. எஜமான் தன் ஊழியக்காரியகாரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு (மத் 20:8) என்று சொன்னபோது, முந்தி அமர்த்தப்பட்டவர்களின் கண்கள் காணும்படியாக, பிந்தி அமர்த்தப்பட்டவர்கள் முதலில் வந்து கூலியை வாங்கிச் சென்றார்கள். அதனைப் பார்த்துக்கொண்டிருந்த முந்தி அமர்த்தப்பட்டவர்கள், தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், ஆனால், அவர்களுக்கும் ஆளுக்கு ஒவ்வொரு பணமே கொடுக்கப்பட்டபோது, 'எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்' (மத் 20:10-12). மற்றவர்களுக்கு கொடுக்கப்படுவதைப் பார்த்து, பார்த்து தங்களுடைய மனதின் திருப்தியை இழந்தவர்கள் இவர்கள்.
சிலரோ, மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்போது வாசலுக்கு வெளியே நின்றுவிடுகின்றார்கள். இளைய குமாரன் எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம் (லூக் 15:21-23) என்றான். இளைய குமாரனுக்குச் செய்யப்படுவதை அறிந்த மூத்த குமாரனோ வீட்டிற்கு வெளியிலே நின்றுவிட்டான். (லூக். 15:28)
Comments
Post a Comment