Skip to main content

பயணத்தைத் தடுக்கும் பயம்

பயணத்தைத் தடுக்கும் பயம்

 

கிறிஸ்து பிறப்பின் நாளைக் கொண்டாட முனைந்து நிற்கிற நாம், தேவனுடைய செயல்களின் இரகசியத்தை அறிந்துகொண்டால், தொடர்ந்து அடியெடுத்து வைக்க அது உதவியாயிருக்கும். எத்தனை முறை வேதத்தை நாம் வாசித்திருந்தாலும், 'ஏன்' என்ற கேள்வி இன்னும் பல இடங்களில் நமக்கு உண்டு. எல்லாம் நமக்கு வெளிப்படுத்தப்பட்டிராவிட்டாலும், வெளிப்படுப்த்தப்படவேண்டியவைகளை தேவன் மறைத்துவைக்காமல் வெளிப்படுத்தியிருக்கிறார்; இது அவர் நம்மேல் கொண்ட அன்பின் நிமித்தமே. எழுதப்பட்டவைகளையும், நமக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளையும் கொண்டு அவரை அறிந்துகொண்டு முன்றேறிச் சென்றால், 'சந்தேகங்கள்' என்று நிற்கும் இடங்களை 'சத்தியங்ளைக்' கொண்டு வென்று நாம் முன்னேறிச் செல்லமுடியும். எங்கும், எவ்விடத்திலும் நாம் தங்கிவிடுவதை விரும்புபவரல்ல தேவன்; நமது பயணம் தொடர்ச்சியானது, தொடர்ந்துகொண்டேயிருக்கவேண்டியது. வாழ்க்கையின் முடிவு மாத்திரமே நமது இப்புவி யாத்திரையை முடித்துவைக்கும்; வாழும்போது அல்ல.'உறையில் கிடக்கும் வாளைப் போல' பத்திரமாய் வாழ முற்பட்டு, 'தேவன் எங்களை கண்ணின் மணியைப்போலக் காத்தார்' என்று சாட்சியும் சொல்லிவிட்டு, வெட்டும் வேலையை வாள் செய்யாதிருந்தால், அதனால் பிரயோஜனம் என்ன? அதன் தன்மை வெளிப்படவேண்டுமே. பிரியமானவர்களே, தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் படைத்ததின் நோக்கம் உண்டு, அந்த நோக்கத்தின் தன்மை வெளிப்பட்டேயாகவேண்டும். அது தேவனின் பார்வையில் படவேண்டும், அது தேவராஜ்யத்திற்காகப் பயன்படவும் வேண்டும். அது என்ன? என்று அறிந்துகொண்டவர்களுக்கு மாத்திரமே, எங்கே, என்ன செய்யவேண்டும் என்ற அறிவும் இருக்கும். கூர்முனையை வைத்திருந்தும், ஊர் ஊராகச் சென்று எதிரியின் பிடியிலிருக்கும் மனிதர்களை விடுவித்து, மந்தைக்குள் சேர்க்கும் பணியை மறந்துவிட்டால், பத்திரமாய் இருக்கும் உன்னால் பயன் என்ன? தேவ ராஜ்யத்திற்காக முன்னேறிச் சென்று ஆத்துமாக்களை ஆதாயம் செய்து, ஜீவனையும் விதைத்துவிட்ட பல மிஷனரிச் சரித்திரங்களை வாசித்தவர்கள் நாம்; என்றாலும், அவர்களின் வாழ்க்கையை நமது வாழ்க்கையில் அப்பியாசப்படுத்துவதிலோ விலகியோடிவிடுகிறோமே.

அறியாதவர்கள் மத்தியிலும் அவரை அறிவிக்கவேண்டும் என்ற கரிசனையைக் கொண்டவர்கள் நாம். எனவே, இயேசுவை அறியாதவர்களை பாவத்தில் திண்டாடவிட்டுவிட்டு, அறிந்துகொண்டவர்களுடன் மாத்திரம் இணைந்து கிறிஸ்மஸை கொண்டாடிவிட்டால் போதும் என்ற மனநிலை நமக்குள் காணப்படக்கூடாது. உலக இரட்சகர் பிறந்திருக்கிறார் என்ற சந்தோஷத்தை எண்ணி ஒருவரோடு ஒருவர் நாம் மகிழ்கொண்டாடினாலும், அறியாதோர் ஒதுக்கப்பட்டுவிடக்கூடாது.

இயேசுவை அறிவிப்பதில் அநேகருக்கு ஆசை உண்டு, என்றாலும் அவர்களைத் தடுத்து நிறுத்துவது பயமே. அந்த கிராமத்திற்குச் சென்று கிறிஸ்துவை அறிவித்தால் என்ன ஆகும்? இந்த நகரத்துக்குச் சென்று கிறிஸ்துவை அறிவித்தால் என்ன நடக்கும்? அங்கிருக்கும் கிறிஸ்துவுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியதிருக்குமோ? என்ற நினைவு பலரை புறப்படாமற்செய்துவிட்டது. அழைப்பைப் பெற்றவர்கள் பலர் அமர்ந்திருப்பதற்குக் காரணம் இதுவே. 'ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது' (மத். 26:41) என்றார் இயேசு. உற்சாகமான ஆவியை ஓடவிடாமல், இந்த பலவீனமான மாம்சத்தைப் பார்த்துக்கொண்டே படுத்துக்கிடப்போர் பலர், பின்வாங்கி நிற்போர் பலர். எனவே தாவீது, 'உற்சாகமான ஆவி' என்னைத் தாங்கும்படிச் செய்யும் (சங். 51:12) என்று ஜெபித்தான். நம்முடைய ஆவி உற்சாகமுள்ளதாயிருந்தால், சரீரத்தினால் அதனை ஒடுக்கிவிடமுடியாது. மாறாக, ஆவியே சரீரத்தை ஒடுக்கும். பவுலின் அறிக்கையும் இதுவே, 'என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்' (1கொரி. 9:27) என்றார் அவர். மாம்சீக பயம், மாம்சீக நினைவுகள், மாம்சீக எதிர்பார்ப்புகள், மாம்சீக சிந்தைகள், மாம்சீகத்தில் சந்திக்கும் சம்பவங்கள், எதிர்கால சிந்தனைகள், பிள்ளைகளைப் பற்றிய பேராசைகள் அனைத்தையும் மனதிற்கொண்டு ஆவியின் ஓட்டத்தை நிறுத்திவிடக்கூடாது.

இயேசு இந்த உலகத்தில் பிறந்தபோது, ஏரோது அவரைக் கொல்ல வகைதேடினான். இயேசுவை குழந்தையாகக் கையில் வைத்திருந்த யோசேப்பு, என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? என்று பயந்துகொண்டிருந்த நேரத்தில், தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான் (மத் 2:13). யோசேப்பு அப்படியே செய்தான். என்றபோதிலும், ஏரோது இறந்தபின்பு, கர்த்தனுடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான். அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான். ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போனான் (மத் 2:19-22). மோசேயின் நிலையும் இப்படியே, தன் ஜனத்தை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டுவர அவனை தேவன் அழைத்தபோது, 'நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத் தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள்' (யாத். 4:19) என்று அவனுக்கு எடுத்துச் சொல்லவேண்டியதிருந்தது.

பிரியமானவர்களே! தேவன் நம்மைக் காப்பாற்றவேண்டிய நேரத்தில் காப்பாற்றுகின்றார்; அதே வேளையில் நம்மை புறப்பட்டுச் செல்லும்படி அவர் சொல்லும் நேரத்தில், நாம் உடனே புறப்பட்டுச் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். அநேகருக்கு ஒளிந்துகொள்ள ஆசை, ஆனால் மீண்டும் ஓட ஆசையில்லை. கர்த்தர் எலியாவை நோக்கி, 'நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு' என்றார் (1இரா 17:3). அப்படியே எலியா ஓடி ஒளிந்துகொண்டான். நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் (1இரா 17:9) என்றபோது, எலியா எழுந்து சாறிபாத் ஊருக்கு ஓடிப்போனான். என்றபோதிலும், யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொன்னபோது (1இரா 19:2), பயம் அவனைச் சூழ்ந்துகொண்டது, அவன் எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச் சேர்ந்த பெயர்செபாவுக்குப் புறப்பட்டுப்போனான் (1இரா 19:3). வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம்போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்தவனாக, 'தான் சாகவேண்டும்' என்று சொன்னான். பயம் அவனைச் சுற்றிக்கொண்டபோது, அங்கிருந்து புறப்பட அவன் மனதற்றவனாயிருந்தான். 'நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்' என்று சொன்னபோதிலும், பிரயாணத்தையும், அதன் தூரத்தையும் குறித்து அவன் கவலைப்படவில்லை.

கிறிஸ்துவுக்குள் அன்பானோரே! பயம் உங்கள் பயணத்தை நிறுத்திவிடாதபடி எச்சரிக்கையாயிருங்கள். அழைப்பு பெற்றோரே, ஊழியத்திற்கென ஒப்புக்கொடுத்தோரே உங்கள் அழைப்பை பயம் பாதித்துவிடாதபடி கவனமாயிருங்கள். தேசத்தின் அரசு கிறிஸ்தவத்திற்கு விரோதமாக செயல்படுகின்றது; கிறிஸ்மஸ் தினத்தையே கவனிக்க மறுக்கிறது, இப்படியானால், கிறிஸ்துவைப் பற்றிச் சொன்னால் எனக்கு எப்படியோ என்ற பயம் உங்களுக்கு உண்டாகவேண்டாம். பிராணணை வாங்கத் தேடும் மனிதர்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் பயணிக்க பாதையை தேவன் ஆயத்தம்பண்ணிக்கொடுக்கும்போது, அதனைத் தட்டிக்கழித்துவிடாதீர்கள். பயத்தை மனதில் சுமந்து பயணத்தை நிறுத்திவிடாதீர்கள். காப்பவரும் உண்டு, பாதை காட்டுபவரும் உண்டு. 
தேவன் யோசேப்பை குடும்பமாக எகிப்துக்குக் கூட்டிச் சென்றதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது, ஏரோதுவினிடமிருந்து குழந்தையாகிய இயேசுவை காப்பாற்ற தேவன் எடுத்த முடிவு இது. நரியாக செயல்பட்ட ஏரோதுவினிடத்தில் யோசேப்பு குழந்தையாகிய இயேசுவை பறிகொடுத்துவிடாதபடி எடுத்த முடிவு இது. சத்துருவினுடைய கரத்திலிருந்து நம்மைத் தப்புவிக்க, இத்தகைய இடமாற்றத்தை நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் செயல்படுத்தலாம். எனினும், ஆவிக்குரியவர்களாக பலர் இதனை அடையாளம் கண்டுகொள்வதில்லை. ஏதோ ஒரு இடத்தில் ஊழியம் செய்து, அவ்விடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு போனால், ஏதோ பின்வாங்கிவிட்டதைப்போன்ற உணர்வுக்குள்ளாகின்றனர். ஒரே இடத்தில் நிலையாய் அனைத்தையும் கட்டுவோருக்கு இத்தகையது சாத்தியமற்றுப்போய்விடுகின்றது. ஆண்டவேர போகச் சொன்னாலும், அந்த பணித்தளத்தில் தாங்கள் சவதரித்துவைத்த ஆஸ்தியை விட்டுப்போக இயலாதவர்களாகிவிடுகின்றனர். தேவனே அசைக்க இயலாத அவர்களது ஸ்திரத்தன்மையினால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகிவிடுகின்றது.

கர்த்தர் எலியாவை நோக்கி, 'நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு' என்றார் (1இரா 17:3). ஆகாப் என்னைக் கொன்றாலும் பரவாயில்லை, நான் இங்கிருந்து செல்லமாட்டேன் என்று முரண்டுப்பிடிக்கவில்லை எலியா. ஆபத்தை அறிந்தவனாக எழுந்து புறப்பட்டான். அங்கிருந்து சாறிபாத் ஊருக்குப் போகச் சொன்னபோதிலும் அவன் எழுந்து போனான் (1இராஜா. 17:9). கர்த்தர் செய்யும் இந்த முறை, பின்மாற்றத்தைக் குறிப்பதில்லை.

இரண்டாவதாக, இயேசு பெத்லகேமில் பிறந்திருந்தபோது, அவரைக் காண சாஸ்திரிகள் புறப்பட்டு வந்தார்கள். அதனைத் தொடர்ந்து, பலர் இயேசுவைக் காண வந்துகொண்டேயிருந்திருக்கக் கூடும். தொடர்ச்சியாக ஜனங்கள் வந்துகொண்டேயிருப்பார்களென்றால், இயேசுவைக் கண்டுபிடிப்பது ஏரோதுவுக்கு எளிதாகிவிடும். எனவே, தேவன் அவரை எகிப்துக்குக் கொண்டுபோனார். வரிசையாக எறும்புகள் அணிதிரண்டு சென்றுகொண்டிருப்பதைக் கவனித்துக்கொண்Nடு சென்றால், இனிப்பு எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது எளிதாகிவிடுமல்லவா. சுகத்திற்காகவும், தேவைகளுக்காகவும் நம்மைத் தேடிவரும் மக்களைக் கொண்டு நம்மைக் கண்டுபிடித்துவிடமுடியும். அப்படிப்பட்ட நேரத்தில், அவர்களிடமிருந்து நம்மைப் பிரிப்பதற்காக தேவன் ஒளித்துவைக்கின்றார். இயேசு எங்கே பிறந்திருக்கிறார் என்பதை எனக்குச் சொல்லுங்கள் என்று சாஸ்திரிகளுக்குச் சொன்னான் ஏரோது, ஆனால், அந்த வழியாக ஏரோது இயேசுவைத் தேடி வந்துவிடக்கூடாது என்று, சாஸ்திரிகளின் வழியையே கர்த்தர் மாற்றி அனுப்பினார். எனவே, இயேசுவைக் கண்டுபிடிப்பது ஏரோதுவுக்கு கடினமாயிற்று. ஆகையால், மொத்தமாக ஆண்குழந்தைகள் அனைத்தையும் கொன்றுவிட்டால், இயேசுவும் அதற்குள் சிக்கிக்கொள்வார் என்று நினைத்தவனாக, பெத்லகேமிலும், அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலை செய்தான் ஏரோது (மத். 2:16).

2005-ம் ஆண்டு பீஹாரில் விரோதிகள் என்னைத் தாக்கி, அருகிலிருந்த வயலில் போட்டுவிட்டுச் சென்றனர். எனது வலதுகரமும், வலதுகாலும் செயலற்ற நிலையில் கிடந்தேன் நான். அப்போது என்னிடத்தில் ஒரு கைப்பேசி இருந்தது. அவர்கள் என்னைப் போட்டுவிட்டுச் சென்று நீண்ட நேரம் ஆனபின்பு, அந்த வயலினருகே இரண்டு நபர்கள் வந்து நின்று பேசிக்கொண்டிருந்தனர்; என்னையோ கதிர்கள் மூடியிருந்ததால் அவர்கள் கண்கள் காணவில்லை. அப்போது, யாரோ ஒருவர் என்னை கைப்பேசியில் அழைக்க, அது ஒலிக்கத் தொடங்கியது. நான் பயந்துபோனேன், ஐயோ யாரும் போன் செய்யாமலிருந்தால் நன்றாயிருக்குமே, போன் சத்தத்தைக் கேட்டால் அருகில் நிற்பவர்கள் என்னை மீண்டும் பிடித்துவிடுவார்களே என்று பயந்துகொண்டிருந்தேன். ஆம், பிரியமானவர்களே, தேடி வருவோர் நம்மைக் காட்டிக்கொடுக்காவிட்டாலும், தேடிவருவோரின் மூலமாக சத்துரு நம்மைக் கண்டுபிடித்துவிடமுடியும். தேவன் நம்மைக் குறித்து வைத்திருக்கும் திட்டத்தினை நிறைவேற்றவேண்டுமென்றால், நம்மைக் குறித்து தேவன் வைத்திருக்கும் காரியங்களை நிறைவேற்ற, தேவன் நகர்த்தும் இடங்களுக்கு நமது கால்கள் நகரவேண்டும். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி