பாதுகாக்கும் கரம்
அடைக்கலமாக மாத்திரமல்ல, அரணாகவும் நம்மைச் சூழ நின்று பாதுகாத்துவருகின்றவரும், ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய் (சங். 50:15) என்று நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறவரும், கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார் (யோவேல் 3:16) என்று தனது வாக்குத்தத்தத்தை யோவேல் தீர்க்கதரிசியின் மூலமாக மீண்டும் உறுதிப்படுத்துகிறவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.
இதனை, தாவீது தனது அனுதின வாழ்க்கையில் நன்கு அறிந்திருந்ததினால் மாத்திரமல்ல அதன் நன்மைகளையும் கூடவே அனுபவித்ததினாலேயே, கர்த்தர் தன்னைத் தன்னுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்த நாளிலே பாடும்போது, 'உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்' (சங். 18:29) என்று பாடுகின்றான்; ஆம் பிரியமானவர்களே, தேவன் நம்மோடு கூட இருக்கும்போது, 'தடைகள் ஒருபோதும் நம்மைத் தடுப்பதில்லை' மாறாக, நமக்குள் இருக்கும் தேவ பெலத்தை வெளிப்படுத்தவே அவைகள் பாதைகளில் மறித்து நிற்கின்றன. இத்தகைய பரம பெலத்தோடு ஒவ்வொரு நாளும் நமது பாதங்கள் வழிநடக்க கர்த்தர் கிருபை செய்வாராக!
இன்றைய நாட்களில், சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியிலும், அடிமைத்தனத்தில் கட்டப்பட்டிருக்கும் ஜனங்களை விடுவிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கும் நாமும் இந்த சத்தியத்தின் ஆழத்தை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். தேவ விருப்பத்தின்படி ஜனங்களை விடுவித்து, தேவனுடைய பாதையில் நாம் அவர்களை வழிநடத்திச் சென்றாலும், வழியில் சந்திக்க நேரிடும் பல்வேறு சூழ்நிலைகள் சில நேரங்களில் ஜனங்களை சோர்வுக்குள்ளாக்கிவிடுகின்றன, எதிர்மறையாகச் சிந்திக்கச் செய்துவிடுகின்றன, பயணத்தைத் தொடர இயலாதபடி பாதையில் பாதியில் ஜனங்களை தடுத்து நிறுத்திவிடுகின்றன, பழைய நிலைக்கே மீண்டும் அவர்களை இழுத்துச் சென்றுவிடுகின்றன. இத்தகைய நிலையில், போராட பெலனின்றி, போதும் என்ற மனதோடு ஆவிக்குரிய வாழ்க்கையில் குன்றிவிட்ட, மற்றும் நின்றுவிட்ட மக்கள் அநேகர். விடுவிக்கப்படும்போது மாத்திரமல்ல, வழிநடக்கும்போதும் அவர் கூடவே வருகிறார் என்ற நம்பிக்கை உள்ளத்தில் இருந்தால் மாத்திரமே 'பின்நோக்கேன் நான்' என்ற அர்ப்பணிப்போடு ஆவிக்குரிய பயணத்தில் முன்நோக்கிச் செல்லமுடியும். தேவனை பின்தொடரும் ஜனத்தின் உள்ளங்களில் இந்தச் சத்தியத்தினை ஊன்ற விதைக்கவேண்டியது ஒவ்வொரு ஊழியனின் கடமை. எகிப்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, கானானை நோக்கிச் சென்ற இஸ்ரவேல் மக்களின் பயணத்தின் சில பகுதிகள், எதிர்ப்புகளைச் சந்தித்துவரும் இந்நாட்களில் இதனை நமக்கு உணர்த்துவிக்கப் போதுமானது.
தன்னுடைய ஜனமான இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து கர்த்தர் விடுவித்து, தாசனாகிய மோசேயைக் கொண்டு கானானுக்கு நேராக வழிநடத்திச் சென்றபோது, 'நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக' (யாத். 14:2) என்று மோசேயைக் கொண்டு கட்டளையிட்டார் கர்த்தர். ஏனென்றால், 'அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது' (யாத். 14:3) என்ற மாயையான ஒரு பிம்பத்தை பார்வோனின் கண்கள் காணும்படியாகவே அப்படிச் செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் பாளையமிறங்கவேண்டிய இடத்தைக் காட்டிக்கொடுத்தது மாத்திரமல்ல, பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, 'நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்' (யாத். 14:4) என்றும் கூடவே கூறுகின்றார் கர்த்தர். இத்தகைய சூழ்நிலையினை இன்றைய நாட்களில் நம்முடைய ஊழியத்தின் பாதையிலும் கர்த்தர் உருவாக்கக்கூடும். கட்டப்பட்டிருந்த ஜனங்களை விடுவித்து நாம் அழைத்துச் செல்லும்போது, சத்துருக்களின் இருதயத்தை கடினப்படுத்தி நம்மைப் பின்தொடரும்படி கர்த்தர் அழைத்துவரக்கூடும். நமக்கு எதிரான சிந்தைகளோடும், அழித்துவிடவேண்டும் என்ற ஆக்ரோஷத்துடனும் அவர்களுடைய இருதயத்தை தேவன் கடினப்படுத்தவும்கூடும். எல்லா பங்கங்களிலும் பயணிக்க இயலாதபடி வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் காணப்படும்போது, என்ன செய்வது என்று திகைத்து அங்கலாய்த்துக்கொண்டிருக்கும்போது, நாம் இருக்கும் இடத்திற்கே சத்துருக்களை ஆண்டவர் அழைத்துவரக்கூடும்.
இத்தகைய சூழ்நிலைகளை ஜனங்கள் சந்திக்க நேரிடும்போது, ஏன் நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனை நேரிடுகின்றது என்றே எண்ணத் தோன்றும். என்றபோதிலும், தேவ பிள்ளைகளாகிய நம்முடைய பயணத்தின் பாதையில், தேவன் மகிமைப்படும்படியாகவே அவரால் அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். அத்துடன், பின்தொடரும் சத்துருக்களைக் கண்டு பயந்துவிடாமல், அதற்குப் பின்னால் பொதிந்திருக்கும் பரலோக திட்டத்தையும், பரமனின் இரகசியத்தையும் கூடவே அடையாளம் கண்டுகொள்ளவேண்டியதும், அறிந்துகொள்ளவேண்டியதும் அவசியம்.
ஆம் பிரியமானவர்களே, எவர்களிடமிருந்து தேவன் தன் ஜனத்தை விடுவித்துக் கொண்டுவந்தாரோ, எவர்களால் கடினமாக தன் ஜனம் எகிப்தில் வேலைவாங்கப்பட்டதோ, எவர்களால் கொடுமையாக தன் ஜனம் எகிப்தில் நடத்தப்பட்டதோ, எவர்கள் தனக்கும் தன்னுடைய ஜனத்திற்கும் எதிராக எதிர்த்து நின்றார்களோ, எவர்கள் தன்னை அறிய மனதில்லாமல் அவமதித்தார்களோ, எத்தனை முறை வாதைகளைச் சந்தித்தும் அவரை அறிய மனமில்லாமல் எதிரிகளாகவே நின்றார்களோ, அவர்களை அழிக்கும்படியாக அவர்களது ஸ்தானங்களை விட்டு அழைத்துவரவேண்டும் என்பதும், 'நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படவேண்டும்' (யாத.; 14:4) என்பதுமே கர்த்தருடைய திட்டமாயிருந்தது; இது பின்நாட்களுக்கான ஓர் திருஷ்டாந்தமே. இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்
(மத். 21:44) என்பதை அறியாமலும், கன்மலையாகிய கிறிஸ்துவின் மேலேயே அவருடைய ஜனங்களின் கால்கள் நிற்கின்றன (சங். 40:2) என்பதைக் காணாமலும், பார்வோனைப்போல நம்மையும் மற்றும் நாம் விடுவித்து அழைத்துச் செல்லும் மக்களையும் பின் தொடரும் மனிதர்கள் இன்றைய நாட்களிலும் உண்டல்லவா. இத்தகைய மனிதர்களை ஊழியத்தின் பாதையில் இன்றைய நாட்களில் நாமும் சந்திக்கின்றோமல்லவா. எனினும், இத்தகையோரைக் கண்டு நாம் அச்சம் கொள்ளவேண்டிய அவசியமில்லை. கல்லின் மேல் மோதி நொறுங்கவும், கடலின் ஆழத்தில் அமிழ்ந்துபோகவுமே கர்த்தர் அவர்களை அனுமதித்திருக்கின்றார்.
தேவ ஜனத்தின் விடுதலையினை விரும்பாதவர்கள், கர்த்தராலேயே அழிவினைச் சந்திக்கிறார்கள். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும் (மத். 18:6) என்று இயேசு கிறிஸ்துவும் போதித்தாரே. எகிப்தியர்களுடைய வாழ்க்கையில் திருஷ்டாந்தமாக நிகழ்ந்த இக்காரியமே, நம்மை பின்தொடர்ந்துவரும் சத்துருக்களுக்கும் பாடமாக அமையும். விடுவிக்கப்பட்டவர்களோடு உடன் இருப்பவரை அறியாததினாலேயே எகிப்தியர்கள் இஸ்ரவேலரைப் பின்தொடர்ந்து வந்தார்கள். கண் திறக்கப்பட்டவனாக இஸ்ரவேல் மக்களைப் பார்த்த பிலேயாமைப் போன்ற பார்வை பார்வோனுக்கு இல்லையே. சமுத்திரத்தின் கரையினிலே ஜனங்கள் அடைக்கப்பட்டிருப்பதை மாத்திரம் பார்த்த பார்வோனால், அவர்களை விடுவிக்கும்படியாகவும், அவர்களுக்கு வழி திறக்கும்படியாகவும் தேவனுடைய கரம் கூட இருக்கிறது என்பதையோ பார்க்க இயலவில்லையே. பார்வோனைப் போன்ற பெவீனமான பார்வையுடயோராகக் காணப்படும் மனிதர்கள் இன்றும் இந்த உலகத்தில் உண்டு. யாருக்கு விரோதமாக பின்தொடர்ந்து செல்லுகின்றோம் என்பதையும், கூடவே, பின்தொடருகின்ற மனிதர்களுக்கு உதவியாகச் செயல்படும் தேவனையும் அடையாளம் கண்டுகொள்ளாமல், தேவ மனிதர்களுக்கும் மற்றும் தேவனுடைய ஊழியங்களுக்கும் விரோதமாக எழும்பி நின்று, அடையாளமின்றி அழிந்துபோன மனிதர்கள் உலகில் ஏராளம் ஏராளம்.
தன் இரதத்தைப் பூட்டி, தன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு போனான் (யாத். 14:6,7) என்று பார்வோனின் சொற்பமான பெலத்தை படம்பிடித்துக் காட்டும் வேதம், 'இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப்போனார்கள்' (யாத். 14:8) என்ற பரிசுத்தரின் பெலத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு (எண்;. 23:22) என்றுதானே பிலேயாமும் எடுத்துரைக்கின்றான். ஆயுதங்கள் ஏதும் இல்லாதிருந்தாலும், ஆண்டவர் அவர்களோடு இருந்தார் என்ற ஆதாரத்தினைத்தானே இந்த வசனங்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. ஊழியத்தின் பாதையிலும், நம்மோடு கூட இருக்கும் தேவனைப் பார்க்க பெலனின்றி, நாம் இருக்கும் சூழ்நிலைகளை மாத்திரம் பார்த்து, வென்றுவிடலாம் என்று விரோதமாக எழும்பி வரும் மனிதர்களைக் குறித்து நாம் கலக்கமடையவேண்டிய அவசியமில்லை.
ஆனால், இஸ்ரவேல் ஜனங்களோ தேவ திட்டத்தை அப்போது புரிந்துகொள்ளவில்லை. பின்தொடரும் எதிரிகளைப் பார்க்கும்போது, நாம் நடத்திக்கொண்டுசெல்லும் ஜனங்களுக்குள்ளும் சில நேரங்களில் இத்தகைய மனநிலை உண்டாகக்கூடும். தங்களோடு கூட இருந்து தங்களைப் பாதுகாக்கும் பலத்த கரத்தை இஸ்ரவேல் மக்கள் உடனே உணராதிருந்ததுபோல, நம்மோடு கூட இருப்பவர்களும் உணராதிருக்கக்கூடும். பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தவர்களாகக் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டது மாத்திரமல்ல, மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே (யாத். 14:10-12) என்று புலம்பத் தொடங்கினதைப் போல புலம்பவும்கூடும். தேவன் பார்வோனையும், சேனையையும் எகிப்தை விட்டு வெளியே கொண்டுவந்துகொண்டிருக்கும்போது, இஸ்ரவேல் மக்களோ கர்த்தருடைய கரத்தின் பலத்தைக் காணாததினால், பயத்தினால் தங்களது சிந்தையில் மீண்டும் எகிப்திற்கே திரும்பிக்கொண்டிருந்ததைப் போன்ற நிலைக்கு நம்மோடு கூட இருப்பவர்களும் சிந்திக்கக்கூடும். என்றாலும், ஜனங்களை வழிநடத்திச் செல்லும் நாமோ, தலைவனாகிய மோசேயோ கர்த்தருக்குள் திடமாயிருந்து, 'பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்' (யாத். 14:13,14) என்று தைரியப்படுத்தினதைப் போல ஜனங்களை தைரியப்படுத்தவேண்டியது அவசியம்.
யுத்தம் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை மோசே அறியாதிருந்திருந்ததைப் போல, நாமும் ஒருவேளை அறியாதிருக்கலாம். ஜனங்கள் அதிகம் தன்னை நெருக்கினதினால், ஜனங்களின் நெருக்கத்தையே தேவனிடத்தில் மோசே பிரதிபலித்தது போல, நாமும் விண்ணப்பங்களில் தேவனிடத்தில் தொடர்ந்து தெரிவித்துக்கொண்டேயிருக்கலாம்; என்றாலும், 'நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு' (யாத். 14:15) என்றும், நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்' (யாத். 14:16) என்றும், தொடர் பயணத்திற்கான விடையினை மோசேக்கு தேவன் சொல்லிக்கொடுத்ததைப் போல நமக்கும் சொல்லிக்கொடுப்பது நிச்சயம். வழிநடத்திச் செல்லும் நம்மீது அவரது விழிகள் இருக்கின்றது என்பதை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம். தன்னுடைய வல்லமையை தேவன் தனியே வெளிப்படுத்திவிடவில்லை; மாறாக, மோசேயினிடமிருந்த கோலையும் அவர் உடன் உபயோகப்படுத்திக்கொண்டாரே; தாவீதின் வாழ்க்கையிலும் கோலியாத்திற்கு எதிரான யுத்தத்தில் நடந்தது இதுதானே. தன்னுடைய பலத்த கரம் செயல்பட நம்மையும் உடன் பங்காளர்களாக மாற்றுகிறவர் நமது தேவன்.
முன்னே செங்கடல் மறித்து நின்றாலும், பின்னே பார்வோன் தொடர்ந்து வந்தாலும், 'தங்களோடு தேவனுடைய பலத்த கரம் இருக்கின்றது என்ற சத்தியத்தினை இத்தகைய சம்பவம் புரிந்துகொள்ளும்படிச் செய்ததே'. தடைகள் உண்டானபோது புலம்பிக்கொண்டிருந்த தேவ ஜனம், தங்கள் கண்களின் முன்னே அது உடைக்கப்பட்டபோதோ, கர்த்தரைத் துதிக்கத் தொடங்கிவிட்டார்களே. 'என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்' (சங். 30:11) என்பதை அனுபவித்த வேளை அல்லவா அது. எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலைக் கடந்து அக்கரைக்குச் சென்றபோது, கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர் (யாத். 15:2) என்றும், கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது (யாத். 15:6) என்றும், நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது (யாத். 15:12) என்றும், நீர் அவர்களைக் கொண்டுபோய், கர்த்தராகிய தேவரீர் வாசம்பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர் (யாத். 15:17) என்றும் பாடுகிறார்கள். ஊழியத்தின் பாதையில் எதிர்ப்படும் சூழ்நிலைகளைக் கடக்கும்போது, நாமும் இத்தகைய ஆனந்தத்திற்குச் சொந்தக்காரர்களே!
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள். உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள் (ஏசா. 41:10-12) என்று ஏசாயா தீர்க்கதரிசியைக் கொண்டு கர்த்தர் உரைக்கும் வார்த்தைகள், இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்த பார்வோனுடைய வாழ்க்கையில் எத்தனையாய் பொருந்திப்போய்விட்டது.
அதுமாத்திரமல்ல, ஊழியத்தின் பாதையில் சத்துருக்கள் நம்மை தொடர்ந்து வந்தாலும், விடுவிக்கப்பட்ட ஆத்துமாக்களைத் தொட்டுவிடாதபடி தேவன் நடுவே நிற்கிறார் என்ற சத்தியத்தையும் இஸ்ரவேலர்களின் பயணக் குறிப்பிலிருந்து வேதம் படிப்பினையாக நமக்கு எடுத்துச் சொல்லுகின்றதல்லவா. தொடரும்படியாக பார்வோனை அனுமதித்த தேவன், விடுதலையான தன் ஜனத்தை தொட்டுவிடவோ அனுமதிக்கவில்லை. அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது; இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று (யாத். 14:19,20). நடந்து சென்றுகொண்டிருக்கும் தேவஜனத்தை, இரதங்களில் பின்தொடரும் எகிப்தியர்களால் நெருங்க முடியவில்லையே. நமக்கும், சத்துருக்களுக்கும் இடையிலே நிற்கும் தேவனை அடையாளம் கண்டுகொண்டவர்களாக, தொடர்ந்து ஊழியத்தில் முன்னேற, வரும் நாட்களில் கர்த்தர் கிருபை செய்வாராக.
யோபுவின் வாழ்க்கையிலும் நடந்தது இதுதானே. எப்படியாகிலும் யோபுவை அவனுடைய உத்தமத்திலிருந்து தள்ளி வீழ்த்திவிடவேண்டும் என்று விரும்பிய சாத்தான், தேவனை நோக்கி, நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? (யோபு 1:10) என்றுதானே யோபுவின் பாதுகாப்பினைக் குறித்து கூறுகின்றான். 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்பதுதானே தேவன் நம்முடைய பாதுகாப்பைக் குறித்து கூறும் வார்த்தை. எகிப்திலே வாதைகள் உண்டானபோதிலும், தன் ஜனத்தை அது தொடாதபடி ஆண்டவர் விசேஷப்படுத்தியிருந்தாரே (யாத். 8:23). இத்தகைய பாதுகாப்பு இன்றைய நாட்களில் நமக்கும் உண்டு. மீட்கப்பட்டவர்கள் மீண்டும் எகிப்திற்குத் திரும்பும்போது அல்ல, மீட்கப்பட்டவர்களை மீண்டும் எகிப்து தொடரும்போது தேவன் இடைநின்று காப்பது நிச்சயம். எத்தனையாய் சத்துருக்கள் எழும்பினாலும் தன்னுடைய பலத்த கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் பத்திரமாய் தன் ஜனத்தை வழிநடத்த கர்த்தர் போதுமானவர் என்ற நம்பிக்கை நாள்தோறும் நமது இருதயத்தை நிரப்பட்டும்.
இன்றைய நாட்களிலும், அடைக்கப்பட்டிருக்கும் சிறையினையும் கருத்தில் கொள்ளாமல், 'அவரிலேயே விசுவாசமாயிருந்து தொடர்ந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதிலேயே தீவிரம் காட்டிவந்த அப்போஸ்தலர்களைப் போல' பணித்தள ஊழியர்கள் தொடர்ந்து ஊழியத்தில் முன்னேறிச் செல்லும்படிக்கும், நெருக்கப்பட்ட நிலையில் காணப்படும் விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வீழ்ந்துபோகாதபடிக்கும், சமூக விரோதிகளால் எதிர்ப்பினைச் சந்தித்துவரும் பணித்தள ஊழியங்களுக்காகவும் தொடர்ந்து ஜெபிப்போம். தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்
(மீகா 2:13) என்ற வசனம் பணிமுனைகளிலும், ஊழியர்களின் பாதைகளிலும் மற்றும் ஊழியத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பிரதிபலிக்க உற்சாகமும், ஊக்கமுமான உங்கள் ஜெபங்கள் எங்களைத் தாங்கட்டும்.
விடுதலையானோரின் பயணத்தில்
வனாந்தரமானாலும் வழிவிடுமே
பார்வோன் வேகமாய் வந்தாலும்
பரத்தின் சேனை பிரித்திடுமே
முன்னே சமுத்திரம் அடைத்தாலும்
பின்னே சத்துரு தொடர்ந்தாலும்
பலமாய் அவர் கரம் உடனிருக்க
பாதைகள் நடுவிலே தோன்றிடுமே
கர்த்தரின் கண்களின் கருவிழி நாம்
சத்துரு விரலை வைக்கலாமோ
கால்கள் கன்மலையில் ஊன்றியிருக்க
கைகளை விரோதமாய் நீட்டலாமோ
தடைகள் நம்மைத் தடுப்பதில்லை
விடைகள் வரும்போது நிலைப்பதில்லை
பாதையில் பலமாய் மறித்தாலும்
பரத்தின் பெலனையே வெளிப்படுத்தும்
இறைவனை மதியா உள்ளமதையோ
இருதயக் கடினம் நிரப்பிவிடும்
இருதயக் கடினம் நிறைந்துவிட்டால்
இருப்பதும் நீரில் மூழ்கிவிடும்
Comments
Post a Comment