மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான். (2 சாமு. 11:1)
'வீரனை வீட்டிலேயே வைத்துவிடவேண்டும்' என்ற சத்துருவின் திட்டத்திற்கு நாம் ஒருபோதும் ஒத்துப்போய்விடக்கூடாது. மண்ணைப் போட்டு விதையை மூடிவைத்துவிட்டாலும், வானத்திலிருந்து மழைநீர் விழும்போது, தரையினை உடைத்துக்கொண்டு தலையினை நிமிர்த்தி முளையைக் கிளப்பி பின் மரமாகவோ அல்லது செடியாகவோ உயர்ந்து, கனிகளால் நிறைந்து உலகத்திற்குத் தன்னை அது அடையாளம் காட்டுவதைப்போல, யெகோவா கர்த்தரை அறிந்த மனிதனை தரையோ, சிறையோ, பஞ்சமோ, பட்டினியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, மனிதர்களால் உண்டாகும் தீமைகளோ அடைத்துவைப்பது என்பது கூடாதது; உயிருள்ளவரை உயிர்கொடுத்தவருக்காக அவன் தொடர்ந்து ஓடிக்கொண்டேதானிருப்பான். சாக்குப் போக்குகளுக்கெல்லாம் போக்குக் காட்டி, போகவேண்டிய இலக்கை நோக்கி விரட்டிக்கொண்டிருக்கும் அழைப்பு ஒன்றிற்கே அவன் அடிபணிவான்.
வேதவாக்கியம் சொல்லுகிறபடி, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார் இயேசு (யோவான் 7:38). ஆத்துமாவிலே ஜீவனும், உள்ளத்திலே ஜீவத்தண்ணீருள்ள நதிகளும் பாய்ந்து ஓடிக்கொண்டேயிருந்தால், அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங் 1:3) என்ற வசனம் நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் நிறைவேறும்; நம்முடைய வாழ்க்கையில் உண்டாகும் கனிகளை மறைக்க சத்துருவின் கைகளால் ஒருபோதும் முடியாது. வெட்டினாலும் துளிர்ப்போம், கனிகளானாலும் பிறரை வாழவைப்போம், புதைத்துவிட்டாலும் விதையாக முளைத்து நிற்போம்.
இத்தகைய நிலையினை தனது வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தி பழகியதினால்தான், மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் (ரோம 8:39) என்று முழக்கமிடுகின்றார் பவுல். மரணமே நம்மை மணவாளனோடு கூடத்தான் இணைக்கிறது; அப்படியிருக்க, இவ்வுலகத்தின் பாடுகள் மணவாளனுடனான பிணைப்பைப் பிரித்துவிடுவது என்பது கூடுமோ?
பவுல் மாத்திரமல்ல, இத்தகைய பிணைப்பை உணர்ந்து உயிர்வாழ்ந்த தேவ மனிதர்கள் ஒவ்வொருவரும் இதனையே பாடமாக பின்சந்ததிக்கும் விட்டுச் சென்றிருக்கின்றனர். போத்திப்பாருடைய வீட்டில் யோசேப்பு இருந்தபோது, வேசித்தனப் பார்வையோடு போத்திப்பாரின் மனைவி யோசேப்பைச் சுற்றிவந்தபோதிலும், கர்த்தரிடமிருந்த தொடர்பிலிருந்து யோசேப்பை அவளால் துண்டித்துவிட முடியவில்லையே. சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது, யெகோவாவினுடனான தொடர்பினையோ சிறையால் துண்டித்துவிட முடியவில்லை. 'சயனி' என்று அவள் சொன்னபோதிலும், 'நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி' (ஆதி 39:9) என்ற வார்த்தை அவனது ஆவிக்குரிய மனக் கணனியிலிருந்து கணீரென வந்ததே.
'பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்' (லூக் 15:18) என்று தடம்புரண்டுபோய் மீண்டும் தகப்பனண்டை வந்து சேர்ந்த இளைய குமாரனைப் போலவோ அல்லது, 'தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்' (சங் 51:4) என்றும், 'நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்' (சங் 51:7) என்றும் சொன்ன தாவீதைப் போலவோ யோசேப்பு போரிலே தோற்று தகப்பனண்டை திரும்பவில்லை மாறாக, சத்துருவின் போர்முறையைப் புரிந்துகொண்டு முளையிலேயே அதனைக் களையெடுத்துவிட்டான்; இத்தகைய நிலைக்கு நாமும் முன்னேறவேண்டுமே. வேலியடைத்து சத்துரு வைத்தாலும், வேலியை உடைத்துக்கொண்டு வர ஆண்டவர் அனுமதித்தாலும், அவருடனான உறவிலிருந்து நம்மைப் பிரித்துவிட அவனால் கூடாது.
போத்திப்பாரின் வீட்டில் இருந்த நேரத்திலும், கர்த்தர் யோசேப்போடே இருந்தார்' (ஆதி 39:2); அப்படியே, யோசேப்பு சிறையில் வைக்கப்பட்டபோதிலும்கூட அவருடனான அவனது உறவை சிறை பிரித்துவிடவில்லை. கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு; யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனை தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான் (ஆதி 39:3,4).
அப்படியே, பவுலும் சீலாவும் சிறைச்சாலலையிலே அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் (அப் 16:25); சிறையிலும் தேவனோடு இருந்த அந்த உறவு, சிறைச்சாலைக்காரனை, 'ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்' (அப் 16:30) என்று சொல்லவைத்ததே. பேதுரு சிறையிலிருந்தபோதிலும், கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்ததே (அப் 12:7). தானியேல் சிங்கக்கெபியிலே போடப்பட்டபோதிலும் உறவு வெளிப்பட்டது, சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ என்பவர்கள் எரிகிற அக்கினிச் சூளையின் நடுவே வீசப்பட்டபோதிலும் உறவு வெளிப்பட்டது. இத்தகைய உறவினை வெளிப்படுத்தும் வீரர்களாக நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள நம்மை அர்ப்பணிப்போம்.
யோபு தன் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தபோதிலும், அவரை இழந்துவிடவில்லை. அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் (யோபு 2:9) என்று சொன்ன வேளையிலும், அவரை இழந்துவிட அவன் ஆயத்தமாயில்லை. 'நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ' என்றானே (யோபு 2:10). ஆஸ்தியல்ல, அவரல்லவா யோபுவின் கண்களுக்கு முக்கியமானச் சொத்தாகத் தென்பட்டார். ஆனால், இன்றைய நாட்களில் அநேக மனிதர்களின் வாழ்நிலையை சத்துரு தலைகீழாக மாற்றிவைத்திருக்கிறானே; அனைத்தையும் பெற்றுக்கொண்டு, தக்கவைத்துக்கொண்டு, அவரை இழந்துநிற்குமளவிற்கு மனிதர்களின் இதயத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டானே. ஆத்துமாவைச் சாந்த சத்தியத்தைச் சரீரத்தைச் சார்ந்ததாக்கச் சத்தமிட்டு, உடலை சுகமாக வாழவைக்கவும், ஆத்துமாவையோ எரிநரகத்தில் தள்ளவும் சத்துரு செய்யும் முயற்சிக்குத் தப்பிக்கொள்ளுவோம். ஆத்துமாவில் அவரோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்களே வீரர்கள்.
தாவீதை வீரனாக அறிமுகப்படுத்தியது யுத்தமே. சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் (1சாமு 18:7) என்று ஸ்திரீகள் பாடினார்களே. 'ஒருவன் ஆயிரம் பேரைத் துரத்துவான்' என்ற சூத்திரத்தைச் சத்தியவேதம் போதிக்கிறது (உபா. 23:10, உபா. 32:30, யோசு. 23:10, ஏசா. 30:17), அப்படியே, நூறுபேர் பதினாயிரம் பேரைத் துரத்துவார்கள் (லேவி. 26:8) என்றும், நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி (2 சாமு. 18:3) என்று தாவீது அறிமுகப்படுத்தப்படுவதன் அர்த்தம் அவனுக்குள் இருக்கும் கர்த்தருடைய பெலத்தையே குறிக்கிறது. தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு (எண்; 23:22) என்று இஸ்ரவேல் ஜனங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனரே. ஆம், பிரியமானவர்களே நாம் சாதாரணமானவர்கள் அல்ல, பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் (1யோவா 4:4) என்ற அறிவு நமக்கு அவசியம் தேவை; அப்பொழுதுதான் நாம் சத்துருவின் சத்தத்திற்குப் பயப்படாமல், யுத்தத்திற்குப் புறப்பட்டு முன்னேறிச் செல்லுவோம். எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன் (சங் 3:6) என்று தாவீது சொல்வதைப் போல துணிச்சலுடன் அவருக்காக பணித்தளங்களில் பாளையமிறங்குவோம்.
உலகத்திலே நாம் பிறந்தது எதற்காக? உயிரோடு வாழ்வது எதற்காக? என்ற கேள்விகளுக்கான பதிலை, படைத்தவர் எழுதிக்கொடுத்திருக்கும் வேதத்தின் அடிப்டையில் ஆராய்ந்து பார்த்தால், வாழும் இந்த உலகத்தில் வருங்காலத்தின் பல்வேறு காரியங்களைக் குறித்தும் அனுதினத் தேவைகள் குறித்தும் நாம் கவலை கொண்டாலும், இயேசுவின் இரண்டாம் வருகைக்குப் பின் இந்த உலகம் நம்முடையது அல்ல என்ற தெளிவு என்ற அறிவு நமக்குள் ஊடுருவிவிடும். சோதோமைப் போல, ஓர்நாள் அக்கினிக்கு இரையாகப்போகின்ற உலகத்தின்மேல் அளவுகடந்த ஆசை வைக்காமல், நித்திய ஜீவனுக்குரிய ஓசையே நிதமும் நமது காதுகளில் தொனித்துக்கொண்டிருக்குமானால், பரதேசிகள் என்ற உணர்வு வாழ்க்கையின் ஒவ்வொரு முனையிலும் நம்மில் பரவிவிடும். அங்கும் இங்கும் பொருட்களைச் சேர்த்துச் சேர்த்துக் கூட்டை உருவாக்குகின்றன பல பறவைகள், ஆனாலும் சில பறவைகளோ தற்காலிகமாக கிடைக்குமிடத்தில் தங்கிவாழும் வழக்கமுடையவைகளாகவுமிருக்கின்றன.
நித்திய ஜீவனுக்குள் நுழையவேண்டும், பரN;லாகத்தில் நமக்காக அவர் ஆயத்தம்பண்ணியிருக்கும் ஸ்தலத்தில் பாதம் பதிக்கவேண்டும் என்ற அவரது சித்தத்திற்கடுத்த சிந்தையிலிருந்து மனிதனைச் சிதைத்து, அழியவிருக்கும் உலகத்திலேயே அஸ்திபாரமிடும் ஆஸ்திக்கு நேராக மனிதனைத் திசை திருப்புகிறான் சாத்தான். பெருவெள்ளம் வந்ததைப் போல, வருகை வந்துவிட்டால் மண்ணில் கட்டியது ஒன்றும் நிற்காதே! நம்முடைய உழைப்பையும், ஊதியத்தையும் உலகத்திற்காகவே செலவழித்துக்கொண்டிருந்தால், உன்னத்தின் சிந்தை நம்மிலே ஒழுகிவிடும்.
அக்கினிக்கு இரையாகப்போகும் உலகத்தில் அனைத்தையும் சேர்த்துவைப்பதிலேயே குறியாயிருந்தால், அவைகள் எரியும் நாட்களில் நமது கண்களில் கண்ணீர்தான் சொரியும். லோத்துவின் மனைவி பின்னிட்டுப் பார்த்ததைப் போல, தீவிரமாய் தப்பிப்போகவேண்டிய காலத்தில் திரும்பிப் பார்க்க நேரிட்டுவிடும். சேர்த்துவைத்த செல்வங்கள் நம்மை பரலோகம் சேரவிடாமல் தடுத்துவிடாதபடியும், ஆபத்துக் காலத்தில் உலக ஆசீர்வாதங்களோடு ஒட்டிக்கொண்டு வாழ்ந்துவிடாமலும் கவனமாயிருப்போம். உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் (மத் 6:21) என்று இயேசு போதித்தாரே.
எகிப்திலிருந்து விடுவித்துக் கொண்டுவரப்பட்ட ஜனங்களும், 'இருதயத்திலே எகிப்திற்குத் திரும்பினதினால்' (அப். 7:39) அல்லவோ கானானை இழந்தார்கள். சிலையாகிப் போன லோத்துவின் மனைவியின் வாழ்க்கையிலிருந்து வரும் செய்தியும் இதுவே. நம்மிடத்திலிருந்தாலும், 'வெள்ளியும் பொன்னும் அவருடையது' (ஆகாய் 2:8) என்ற மனநிலையுடன் வாழப் பழகிக்கொள்ளவேண்டும்; இல்லாவிட்டால், 'வெள்ளியும் பொன்னும் எங்களிடத்தில் இல்லை' (அப். 3:6) என்று சந்தோஷத்துடனும் வெளியேறிச் செல்வது கடினமானதாகிவிடும். அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே (1கொரி .7:30,31). தகப்பனைக் கண்டதும் கையிலிருக்கும் பொருளை கீழே போட்டுவிட்டு ஓடிச் செல்வதைப் போன்ற உணர்வு, வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எப்போதும் உண்டாயிருக்கவேண்டும்.
சுகமான இடம் என்று லோத்துவினால் கண்டறியப்பட்ட சோதோமின் மேலும், கொமோராவின் மேலும் கர்த்தர் வானத்திலிருந்து கந்தகத்தையும், அக்கினியையும் வருஷிக்கப்பண்ணினாரே, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டாரே. நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்று தெரிந்துகொள்ளுதலுக்கு லோத்துவுக்கு ஆபிரகாம் இடமளித்தபோது, லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கோமோராவையும் அழிக்குமுன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப்போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான் (ஆதி 13:9-12)
லோத்து தெரிந்துகொண்ட இடத்தைக் குறித்து வேதம் கொடுக்கும் அறிமுகம், 'அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது' என்பதே. அதன் செழிப்பு, மரம், செடிகொடிகள், விளைச்சல்கள், காய்கனிகள், நீர்வளம் அனைத்தும் ஏதேனைப் போல இருந்தது; ஆனால், அதில் குடியிருக்கிற மக்களோ எகிப்து தேசத்து மக்களைப் போல இருந்தார்கள். தேசத்தின் வளமையையும், செழிப்பையும், அதிக வருமானம் கிடைக்கும் என்ற எண்ணத்தையும் மாத்திரம் கருத்தில் கொண்டு, எகிப்தியர்களைப் போன்ற கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட மனிதர்கள் ஏராளம் உண்டு. தேங்காய்த் துண்டை திண்ணுவதற்காக எலி கூண்டிற்குள் நுழைந்து சிக்கிக்கொள்வதைப் போலவும், கருவாட்டுத் துண்டின் வாசம் மூக்கை நுழைப்பதால் தன்னையே கட்டுப்படுத்த முடியாத பூனை கூண்டிற்குள் சென்று அந்த ஒரு கருவாட்டுத் துண்டை மாத்திரம் கடித்துத் தின்றுவிட்டு, வெளியேற முடியாமல் தவிப்பதைப் போலவும் அநேகருடைய வாழ்க்கை இந்த உலகத்திலும் மாறியிருக்கிறது.
இந்த உலகத்தின் சுகத்தை அனுபவிக்க நினைத்து, உலகம் விரித்து வைத்திருக்கும் கூண்டிற்குள் எல்லாம் நுழைந்தால் இத்தகைய விளைவைத்தான் நாம் சந்திக்கவேண்டியிருக்கும். சுகத்தின் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருப்பவர்களும், ஒரு நாளில் இப்படிப்பட்ட சூழ்நிலையினைச் சந்திக்கவேண்டியிருக்கும். நோவாவின் நாட்களில் நடந்தவைகளையும், சோதோம் கொமாராவுக்கு நோரிட்டவைகளையும் சிந்தையில் நிறுத்திக்கொண்டால், வாழும் உலகம் நம்முடையது அல்ல என்ற தீர்ப்பு நமக்குக் கிடைத்துவிடும்.
அழகு, படிப்பு, வேலை, வருமானம், நகை, வசதி, நிறம் போன்றவைகளை மட்டுமே முன்னிறுத்தி, திருமணங்களை நிச்சயித்து, மணமகள் அல்லது மணமகனது அடுத்த பக்கத்தைப் பார்க்கத் தவறிவிடுபவர்களின் நிலையும், கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப் போலவும் இருக்கும் நிலைக்கு ஒப்பானதே. விலையுயர்ந்த கார் கிடைக்கலாம், ஆனால் வீட்டில் நிம்மதி கிடைக்காது. இத்தகைய நிலையை நினைக்கும்போது, என் தந்தை பாடும் ஓர் பாடல் எனது ஞாபகத்தில் வருகிறது.
(மகனுக்குப் பெண் பார்க்கும்படி ஆபிரகாம் தன் வேலைக்காரனுக்குச் சொல்லி அனுப்புவதை மையப்படுத்தி எழுதப்பட்ட பழையதோர் பாடல். இப்போதைய கீர்த்தனைகளில் இடம்பெறவில்லை)
பாவங்களிலிருந்து விடுதலையாகி பிதாவுக்கு பிள்ளைகளாக மாத்திரமல்ல, நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகிற்கு ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் நாம் அமர்த்தப்பட்டிருக்கிறோம் (வெளி. 5:10). ராஜாக்கள் என்ற பதவி உயர்வு, அரண்மனை சுகத்தை அனுபவிப்பதற்கு அல்ல, இந்த உலகத்தை போரிட்டு சுதந்தரிப்பதற்கே. இந்த அறிவினையே சாத்தான் இன்றைய நாட்களில் அநேகரது சிந்தையிலிருந்து அகற்ற முயற்சிக்கிறான். போர்வைக்குள் மூடிப் படுத்துக்கொண்டு போரை மறந்துவிடச் செய்கிறான். செழிப்புள்ள உபதேசத்தை மட்டுமே சிந்தையிலேற்றி, அரண்மனை சுகத்திற்குள் அநேகரை அடைத்துவிட முற்படுகிறான். காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள் (எபி 5:12) என்று எழுதப்பட்டுள்ளதைப் போல, 'காலத்தைப் பார்த்தால் போரிடவேண்டிய உங்களை, போர்வையிலிருந்து வெளியே இழுத்துக்கொண்டுவரவேண்டியதாயிருக்கிறது' என்று சொல்லும் நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்து என்றால் சரீரத்திலும் வீட்டிலும் 'சுகம்' என்ற சொல்லை மட்டுமே முன்னிறுத்தி வேண்டுவதால், போர்வீரன் என்ற அழகு அநேகருக்குப் போய்விட்டது.
இருபுறமும் கருக்கான பட்டமான கர்த்தருடைய வார்த்தையை, ஒருபுறம் வாசித்துவிட்டு வீட்டில் வைத்துவிட மாத்திரமல்ல, மறுபுறம் பிறரை ஆதாயப்படுத்த போருக்காகவும் பயன்படுத்தவேண்டும். தனக்கு பிரயோஜனமான வசனங்களை மட்டும் வீடு முழுக்க ஒட்டி வைத்துக்கொண்டு, ஊரிலிருக்கும் ஒருவருக்குக் கூட இயேசு கிறிஸ்துவை அறிவிக்காமலிருப்பவர்கள் போர் காலத்தை மறந்துவிட்டவர்களே.
பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ? (யோபு 7:1) என்று எழுதுகிறார் யோபு.
நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய் இப்படி நடக்கவேண்டும். நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும், இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. (ரோமர் 13:11)
யுத்தம் என்பது அரண்மனை சுகத்திற்கு அப்பாற்பட்டது, யுத்தத்துக்குப் புறப்படவேண்டுமென்றால் அரண்மனையை விட்டு முதலாவது வெளியேறவேண்டும்.
Comments
Post a Comment