Skip to main content

முதல் ஆட்டம் உனக்கு முதலோ எனக்கு

 

முதல் ஆட்டம் உனக்கு
முதலோ எனக்கு

 

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது (சங் 23:5). இது தாவீதின் வார்த்தை மாத்திரமல்ல, தாவீதின் வேராகிய இயேசுவை விசுவாசிக்கின்ற நம்முடைய வார்த்தையுங்கூட. என்றாலும், எதிரே சத்துரு நிற்கும்போது மனிதர்கள் பலருக்கு உதறல் எடுக்கத் தொடங்கிவிடுகின்றது. 'யுத்தம் கர்த்தருடையது' (1 சாமு. 17:47) என்ற விசுவாசத்தை சுமந்தே வாழ்க்கையில் அடியெடுத்துவைக்கவேண்டியவர்கள் நாம். 'உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது' (சங் 91:7) என்ற வார்த்தையின்படி, நம்மை அணுகமுடியாத சத்துரு அருகில் வருவதைக் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. நமக்கு வெற்றியையே கொடுக்கும் தேவன், ஒவ்வொரு முறையும் யுத்தத்தை நடத்தும் விதம் வௌ;வேறானது; அது சத்துரு அறியாதது. நமக்காக தேவன் எங்கிருந்து புறப்படுகின்றார், எவ்விதம் வருகின்றார் என்பதையே அறியாத அவனால் என்ன செய்துவிடமுடியும்? அவரது பாதையை அறிய அவரது பக்தர்களாகிய நம்மால்தான் முடியும். போரைத் தொடங்கும் முன், நீர் யாரைச் சார்ந்தவர் என்ற சந்தேகக் குரல் எழுப்பவேண்டிய அவசியமில்லை. அவரது பட்டயம் பகைவர்களைத்தான் துழைக்கும், நம்மையோ பரலோகத்தில் நுழைக்கும். சத்துருக்களுக்கு முன்பாக பயத்தை தேவன் ஆயத்தப்படுத்தவில்லை, பந்தியையே நமக்கு ஆயத்தப்படுத்துகின்றார்; ஆயத்தமாகுங்கள்.

தேவமனிதனான எலியாவின் நாட்களில், தேவன் அவன் உடனிருந்து, அவனையும், தன்னையும் நிரூபித்தார். எலியா எதிரிகளை சந்தித்த விதம் இன்று நம்முடைய வாழ்க்கைக்கு சத்தியம்.

தேவனையும், தன்னையும் நிரூபிக்கும் போருக்கு எலியா ஆயத்தமானபோது, ஜனங்களோ ஆயத்தமில்லாதவர்களாயிருந்தார்கள். ஆட்சியும், அரசனும், பாகால் தீர்க்கதரிசிகளின் கோரச் செயல்பாடுகளும் ஜனங்களை தேசத்தில் அமைதிப்படுத்தியிருந்தன. தேவன் பக்கம் நின்றுவிட்டால், நமது நிலை என்ன ஆகுமோ என்ற பீதியை விட்டு மீளாமல், இருபுறமும் சாயாமல், நடுநிலை வகிப்பவர்களைப் போல இருந்தார்கள். வெற்றி யாருக்கு கிடைத்தாலும், அவர்கள் பக்கம் சாய்ந்துகொள்ளலாம் என்ற எண்ணமுடையவர்கள்; நடுநிலை வகிப்பவர்கள் எல்லாரின் குணமும் இதுவே.

குந்தியிருந்த ஜனங்கள்

அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. (1இரா 18:21)

குந்தி குந்தி நடக்கும் ஜனங்களால், அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சார்ந்தோருக்கும், சபைக்கும் பிரச்சனையே. இரண்டு நினைவுகளால் குந்தி குந்தி நடக்கும் ஜனங்களை இழுக்க முடியாமல் சபை என்னும் வண்டி பல இடங்களில் திணறிக்கொண்டிருக்கிறது; சபை பிந்தி பயணிப்பதற்கும் காரணம் இதுவே. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான் (யாக் 1:8) என்று எழுதுகிறார் யாக்கோபு. அவனுக்கு எங்கே நிற்கவேண்டும் என்று தெரியாது, இங்கே நிற்பதா அல்லது அங்கே நிற்பதா? ஆண்டவரின் பக்கமா அல்லது அரசனின் பக்கமா? என்று குழம்புகிறவன் அவன். இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? (மத். 22:17) என்று கேள்வி கேட்க தெரிந்தவர்கள்; ஆனால், 'இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்' (மத். 22:21) என்று இயேசு சொன்னபோது, அதை எப்படிச் செய்யவேண்டும் என்று செய்யவதறியாது விழித்தவர்கள். யாருக்கும் பகையாளியாக இருந்துவிடக்கூடாது என்று நடுவே நின்று நாசமாய்ப்போனவர்கள் ஏராளம். நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன் (வெளி 3:16) என்பதுதான் சத்தியத்தின் வெளிப்படுத்துதல்.

யேசபேலைக் குறித்த பயம், ஜனங்களுக்குள்ளேயும் பரவியிருந்தது. ஜனங்களும் தங்களை தேவஜனம் என்று வெளிப்படுத்திக்கொள்ள பயந்திருந்தார்கள். இரட்டை வேடமிடுகிறவர்களைப் போல வாழ்ந்துகொண்டிருந்தார்கள். எதிரி அவர்களைக் காணும்போது, தன்னுடையவர்களா அல்லது தேவனுடையவர்களா என்று அடையாளம் கண்டுகொள்ள இயலாதபடி வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஜனங்களின் அப்படிப்பட்ட வாழ்க்கையினாலே, அவர்கள் தங்கள் உயிரை யேசபேலின் கையிலிருந்து தப்புவித்துக்கொண்டிருந்தனர். எனக்கு அன்பான கிறிஸ்துவை பின்பற்றும் சகோதர, சகோதரிகளே இன்றும் இப்படிப்பட்ட காரியம் நடைபெறவில்லையோ? கர்த்தர் ஒருவரே தெய்வம், பாகால் தெய்வம் அல்ல என்று வெளிப்படையாய்க் கூற பெலனுள்ளவர்கள் எத்தனை பேர்? எலியாவைப் போல மேடையில் முழங்கும் தேவ ஊழியர்கள் பலரின் பிசரசங்கங்களைக் கேட்டும், பிரதியுத்தரம் எதுதும் சொல்லாமல் புறப்பட்டுப் போகிறீர்களோ? நீங்களே இரண்டு நினைவுகளினால் குந்தி குந்தி நடக்கிறவர்கள். சலூகைகள் பலவற்றைப் பெறவேண்டும் என்பதற்காகவும், வேலைவாய்ப்பில் இடம் வேண்டும் என்பதற்காகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் தங்கள் சான்றிதழ்களில் மதத்தினை 'இந்து' என்று எழுதிக்கொள்கிறார்களே. கிறிஸ்தவர்கள் என்றால், பிற்படுத்தப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுவோம் என்ற அச்சம் அவர்களுக்கு. கிறிஸ்தவர்களாயிருந்து, இந்து என்று எழுதிக்கொள்பவர்களையே குறிப்பிடுகிறேன்; இந்துக்களாயிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை குறிப்பிடவில்லை.

உங்களில் வாழ்கிறவரை, வெளிப்படையாய் பேசுங்கள், உங்களை இரட்சித்தவரை வெளிப்படையாய் அறிவியுங்கள்; உங்களை நேசித்தவரையும் நீங்கள் நேசிப்பவரையும் தேசம் அறியட்டும். கர்த்தர் ஒருவரே தெய்வம் என்று சொல்வதற்காக கழுத்தையுங் கொடுக்க தயங்காதிருங்கள். நீதிபதியாகிய தேவன் நாம் நியாயத்தின் பக்கம் நிற்பதைப் பார்க்கட்டும். ஈராக் தேசத்தில், இஸ்லாமிய தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்தபோது, கிறிஸ்தவர்கள் பலர் 'தாங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்' என்று வென்று குவிந்தார்கள். சரீரத்தை தீவிரவாதிகளிடம் கொடுத்துவிட்டு, ஆவியில் தேவனோடு இணைந்துகொண்டார்கள். மறுதலிக்க மனமற்ற அவர்கள் மறுவாழ்வில் நுழைந்துவிட்டார்கள்.

முந்தி கொடுக்கப்பட்ட வாய்ப்பு

பாகாலின் தீர்க்கதரிசிகளை எலியா எதிர்கொண்டபோது, அவர்களுக்கு முன்பாக அவன் விட்ட சவாலில், அவர்களுக்கே முதலிடம் கொடுத்தான். அவர்களுக்கு ஏன் இந்த வாய்ப்பு முதலில் கொடுக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தையும் எலியா கூறுகின்றான். எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் (Majority) நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லி கூப்பிடுங்கள் என்றான் (1இரா 18:25).

தானியேலின் நாட்களிலும் நடந்தது இதுவே. பிரதானிகளும் தேசாதிபதிகளும் கூட்டங்கூடி ராஜாவினிடத்தில் போய், அவனை நோக்கி: தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க. எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்தத் தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனைபண்ணினார்கள் (தானி 6:7). அப்போது தேசத்தில் ராஜாவாயிருந்த தரியு, அந்தக் கட்டளைப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தான் (தானி. 6:6-9).

அகாஸ்வேரு அரசாண்ட நாட்களில், ஆமான் ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல. ராஜாவுக்குச் சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்றான் (எஸ்தர் 3:9).

பிரியமானவர்களே, உங்கள் பிரதியுத்தரம் என்ன? அமைதியாயிருந்தால், ஆட்சியில் தப்பித்துக்கொள்ளளாம் என நினைக்கின்றீர்களோ? நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும் (எஸ்தர் 4:14) என்ற மொர்தெகாயின் வார்த்தைகள் நமது மௌனத்தை உடைத்தெறியட்டும். ஆனந்திப்போம், ஆர்ப்பரிப்போம் சத்துருவின் கோட்டைக்கு உள்ளே இருப்பவர்களுக்கல்ல, வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் நமக்குத்தான் வெற்றி. 

தேசம் யேசபேலின் வசமாய் இருந்தது, தன்னுடைய தீர்க்கதரிசிகள் மாத்திரமே இனி உயிரோடு இருக்கவேண்டும் என்ற வைராக்கியமான எண்ணத்துடன், தேசத்திலிருந்த தேவனுடைய தீர்க்கதரிசிகளை சங்கரித்துக்கொண்டிருந்தாள் யேசபேல். தேசத்தில் சிறுபான்மையாயிருந்த தேவஜனத்தை இல்லாமலேயே அவேண்டுமென்பதே யேசபேலின் எண்ணமாயிருந்தது.

அப்பொழுது எலியா, கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்;க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர். இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கக்கடவர்கள்; நான் மற்றக் காளையை அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன். நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லி கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன், அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள் (1இரா 18:24).

பாகால் வழிபாட்டில் சிக்கியிருக்கும் ஜனங்களுக்கும் முன்பாகவும், பாகாலையே வணங்கும் அரசனுக்கு முன்பாகவும், பாகால் தீர்க்கதரிசிகளுக்கு முன்பாகவும் நிற்கும் எலியாவின் தைரியமான வார்த்தைகள்தான் இவைகள். 'தெய்வம் யார்?' என்பதை அறிந்திருந்தவன் எலியா; அந்த தெய்வம் யாருக்கு உத்தரவு அருளுவார்? என்பதையும் அறிந்திருந்தவன் எலியா. பலமான இருதயத்துடன் பாகால் தீர்க்கதரிசிகளை எதிர்த்து நின்றான். 'நீங்கள் ஒரு காளைளை கொண்டுவாருங்கள், நான் ஒரு காளையை கொண்டுவருகிறேன்' என்று எலியா சொல்லவில்லை; மாறாக, இரண்டு காளைகளையும் கொண்டுவரும் பொருப்பை பாகால் தீர்க்கதரிசிகளிடத்திலேயே விட்டுவிட்டான். அவர்கள் கொண்டுவந்த காளைகள் பாகாலுக்குரியவைகளாயிருக்கும், பரிசுத்தமில்லாதவைகளாயிருக்கும், பாகாலுக்கென்று நேர்ந்தவைகளாயிருக்கும் என்றும் எலியா எண்ணங்கொள்ளாமல், அவைகளுள் ஒரு காளையையே தெரிந்துகொண்டான். அதுமாத்திரமல்ல, முதலில் பாகால் தீர்க்கதரிசிகள் தங்கள் தெய்வத்தை வேண்டிக்கொண்டு, அக்கினி ஏதும் வந்துவிடக்கூடாது என்று எலியா சந்தேகப்படாமல்; அவர்கள் நிச்சயமாக தோல்வியையே தழுவவேண்டியவர்கள் என்பதை தன் மனதில் நிறுத்திக்கொண்டவனாக. தோல்வியுறப்போகிற அவர்களுக்கு முதலில் இடங்கொடுத்தான். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள் (1இரா 18:26). மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை (1இரா 18:29).

பிந்தி கிடைத்த வெற்றி

அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு: உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து, அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான். (1இரா 18:30-33)

பிற்பாடு அவன்: நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாந்தரமும் ஊற்றினார்கள். அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான். (1இரா 18:34,35)

அவர்களது ஆட்டத்திலே, பலிபீடத்தைக்கூட தகர்த்துவிட்டார்கள். பலிபீடங்களை அவர்கள் ஏன் தகர்த்துப்போடுகிறார்கள் என்பது தெரிகின்றதா? தேவனை அறியாததினாலேயே பலிபீடங்களைத் தகர்க்கிறார்கள். இன்றை நாட்களிலும், ஆலயங்களை தகர்க்கும் அனைவரும் அப்படிப்பட்டவர்களே. போட்டியில் தோற்கப்போகிறவர்கள். ஆலயங்களை தகர்ப்பதும், ஆராதிப்பவரைச் சிதறடிப்பதும் தங்கள் தேவர்களை உயிருள்ளவைகளாக நிரூபித்துவிடும் என்று முயல்கின்றார்கள். இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்தினாலும், தங்களையே கீறிக்கொண்டாலும் தெய்வங்களல்லாதவைகள் எப்படி தெய்வங்களாக வெளியே வரும்? எனவே எலியா, உரத்த சத்தமாய் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான் (1இரா 18:27). அவர்கள் செய்கின்ற எந்த ஒரு செயலும், அவர்கள் தெய்வங்களை உண்மையுள்ளவைகளாக நிரூபிக்கப்போவதில்லை, அவைகள் மெய்தெய்வங்களும் அல்லவே. நம்முடைய தெய்வமோ, நம்முடன் தியானத்தில் இருப்பவர், நம்மைக் காப்பவர், நம்முடன் பிரயாணத்தில் வருபவர், நாம் தூங்கினாலும் தூங்காமல் நம்மை பாதுகாப்பவர்.
அவர்கள் உடைத்தெறிந்துப் போட்ட பலிபீடத்தையே தெரிந்துகொண்டு, அதை சீர்ப்படுத்தி பலியிட்டான்; இதுவே நம் பணி. அவர்கள் கற்களை வைத்து பலிபீடம் கட்டியிருந்தார்கள்; எலியாவோ, நாமங்களை வைத்து பலிபீடத்தைக் கட்டியெழுப்பினான். நாங்கள் முடிக்கிற நேரத்தில் அக்கினி வரத்தொடங்கியிருந்தது என்ற ஏமாற்று வார்த்தைகளுக்குக் கூட பாகால் தீர்க்கதரிசிகள் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக தண்ணீரை குடம் குடமாக அவர்கள் கண்களுக்கு முன்பாக ஊற்றி பலிபீடத்தை குளிப்பாட்டினான். சத்துரு எந்த பகுதியிலும், எந்த காரணத்தைக் கொண்டும் சதிச் சொல் சொல்லிவிடக்கூடாது என்பதில் எலியா கவனமாயிருந்தான். 'நாங்கள் நித்திபைண்ணுகையில், சீஷர்கள் இரத்திரியிலே வந்து, களவாய்க் கொண்டுபோய்விட்டார்கள்' (மத். 28:13) என்று இயேசுவின் சரீரத்தைக் குறித்து பரப்பினார்களே.

அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் (1இரா. 18:36,37) என்ற ஐந்து காரியங்களை முன்வைத்து, எலியா செய்த சிறிய ஜெபத்திலேயே அக்கினி புறப்பட்டுவந்தது; கர்த்தரே மெய்யான தெய்வம் என்றும், எலியா அவருடைய ஊழியக்காரன் என்னும் நிரூபணமானது. அதுவரை அமைதியாயிருந்த ஜனங்களின் வாய் திறக்கப்பட்டது, ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம் என்றார்கள். (1இரா. 18:39)

பாகாலின் தீர்க்கதரிசிகள் ஆடி, பலிபீடத்தை தகர்த்துப் போடும் நாட்கள் இவைகள். அவர்களது ஆட்டம் நிறைவுக்கு வரும்; அப்போது நாம் இஸ்ரவேலின் தேவனின் நாமத்தில் பலிபீடத்தை சீரமைத்து, 'கர்த்தரே தேவன்' என்று சொல்லத்தக்கதாக ஜனங்களின் வாயைத் திறப்போம். இன்றே, கர்த்தரை ஏற்றுக்கொள்ளாவிட்டால், உலகத்தின் முடிவில் வரவிருக்கும் அக்கினி அவர்களையும், சுற்றியிருக்கும் சமுத்திரங்களையும் நக்கிப்போடவிருக்கிறது. ஆபத்துக்குத் தப்பவேண்டுமென்றால், நாம் செய்யும் ஆத்தும அறுவடைக்கு உடன்படவேண்டும்; அதைத் தவிற வேறு வழி இல்லை. இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது (2பேது 3:7) என்பதுதான் இந்த பூமியைக் குறித்து எழுதப்பட்டுள்ள கடைசி வார்த்தை.

பிரியமானவர்களே, இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள், அவரே உங்களுக்காக அடிக்கப்பட்டு, உங்கள் பாவங்களைச் சுமந்தவர்; அவரே மெய்யான தெய்வம். நீங்கள் எத்தனையாய் பகைத்தாலும், அவரில் அன்பின் சுபாவத்தை உங்களால் என்றும் காணமுடியும். 

 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி