உன்னை அறிந்தவர்
நம்மை நன்கு அறிந்தவர் தேவன், வெளிப்புறச் செயல்களை மாத்திரமல்ல, உள்ளத்தின் உட்புற நினைவுகளையும் உன்னிப்பாகக் கவனிக்கிறவர் அவர். நமதனைத்தும் அவருக்கு முன் வெட்ட வெளிச்சமாகவே இருக்கின்றது. அவரிடத்தில் மறைத்துவிட்டதாக நினைத்துக்கொள்ளும் மனிதன் அவரை ஏமாற்றிவிடமுடியாது, ஏமாற்றம்தான் அடைவான். நம்முடைய நடக்கைகள், நமக்கு இருக்கும் பெலன் அத்தனையையும் அறிந்தே அவர் நம்மை உபயோகப்படுத்துகின்றார். திசை தெரியாமலும், திக்கறியாமலும் நாம் சென்றுகொண்டிருந்தாலும், நாம் சென்றுகொண்டிருக்கும் வழியினை அறிந்தவர் அவர். முற்புறத்திலும் அவர் இல்லை, பின்னாகப் போனாலும் அவரைக் காண இயலவில்லை, இடது புறத்தில் அவர் கிரியை செய்துகொண்டிருக்கிறார், ஆனால் அவரையோ காண இயலவில்லை, வலது புறத்திலே நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார் (யோபு 23:8-9) என்றாலும், 'நான் போகும் வழியை அவர் அறிவார்' (யோபு 23:10) என்கிறார் யோபு. மேலும், 'உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது' (யோபு 7:8) என்று அதனை அறிக்கையும் செய்கிறார் யோபு. கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது (சங். 33:19; 34:15; 101:6). கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்குகிறவர் (சங். 14:2; 53:2; ஏசாயா 63:15). இதையே எரேமியாவும், 'உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின் மேலும் நோக்கமாயிருக்கிறது' (எரே. 32:19) என்று உரைக்கிறார். ஆம், அது நமக்குப் போதுமே. இதையே சங்கீதக்காரனும், 'உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும் (சங் 139:7-11) என்று எழுதுகின்றான். நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் (சங் 32:8) என்பதுதானே அவர் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தம்.
இயேசு பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் (லூக். 22:9) என்றார். ஒரு பெரிய வேலைக்கான பொறுப்பு அவர்கள் கையில் கொடுக்கப்பட்டது. அதனைச் செய்வதற்கு முழு சுதந்திரமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. அவர்களது விருப்பப்படி அதனை ஆயத்தம்பண்ண இயேசு அனுமதித்திருந்தார். ஆனால் அவர்களோ, நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர்? என்று இயேசுவினிடம் கேட்டார்கள் (லூக் 22:9). அப்பொழுது இயேசுவே அவர்களை வழிநடத்தும் நிலை உண்டானது. இயேசுவோடு கூட வழிநடக்கும் நாம், இயேசுவின் கட்டளைகளை சீஷர்களைப் போன்று கேள்விகேட்போராகக் காணப்படுகின்றோமா? அவர் நம்மை அறிந்தவர், நாம் என்ன செய்வோம் என்றும், எப்படிச் செய்வோம் என்றும் தெரிந்தவர்; அப்படியிருக்க, உடனே புறப்பட்டுப் போவாம், அவருடைய சத்தத்தைக் கேட்டபின், சித்தத்தை நிறைவேற்றும் பணியினை சீஷர்களான நாம் கையிலெடுப்போம்.
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார் இயேசு (மத் 28:19,20). 'சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்' என்பது நம் அனைவருக்கம் கிடைத்த கட்டளை. அப்படியிருக்க, எந்த ஜாதிக்காக ஆண்டவரே நீர் என்னை அழைத்திருக்கிறீர்? என்பதை அறிந்துகொள்வதிலேயே காலங்கடத்தவேண்டாம். முதலாவது அறிவிக்க முற்படுங்கள், பின்பு அறிய முற்படுங்கள். அப்படி தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருப்போரிடத்தில், சீஷர்களுக்குச் சொன்னதுபோது, குறிப்பிட்ட திசையையும், ஜாதியையும் கர்த்தர் காட்டுகின்றார். காலங்கடத்துதலை முடிவுக்குக் கொண்டுவரவே கர்த்தர் அப்படிச் செய்கின்றார். சவுல் சந்திக்கப்பட்டபோது, ஞானஸ்நானம் பெற்றதும், தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான் (அப். 9:20). இயேசுவே இரட்சகர் என்பதை அறிந்த நீங்கள், இயேசுவை இரட்சகராகக் கொண்ட நீங்கள் தாமதிக்காமல் அவரை அறிவியுங்கள்; அதுவே, அவரை நீங்கள் அறிந்துகொண்டதற்கான முதல் அத்தாட்சி.
தனது உபதேசத்தைக் கேட்ட ஜனங்களை போஷிக்க விரும்பிய இயேசு தனது சீஷர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங் கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள் (லூக் 9:13). இயேசுவும் அந்த நிலையினை அறிந்தவரே, என்றாலும், தனது சீஷர்கள் எப்படி இச்சூழ்நிலையினைச் சந்திக்கிறார்கள் என்பதைக் காண அவர் வாஞ்சையாயிருந்தார். இயேசுவின் கட்டளையினைக் கேட்டதும், உங்களிடத்தில் என்ன உண்டு? என்று கேட்டதும், சீஷர்கள் அப்பத்தையும், மீனையும், ஜனங்களையும் மாத்திரமே பார்த்துக்கொண்டிருந்தார்கள், இது இந்த ஜனத்திற்குப் போதாதே, இதைக்கொண்டு எப்படி போஷிப்பது? என்றே நினைத்துக்கொண்டிருந்தார்கள்; பிதாவைப் பார்க்க மறந்துவிட்டார்கள்; அவர்கள் செய்ய மறந்ததை இயேசு அவர்களுக்குச செய்து காண்பித்தார். நம்மால் செய்யக்கூடாததை இயேசு செய்ய நிர்ப்பந்திப்பதில்லை, நம்முடைய பெலனை அறிந்தவர் அவர். அப்படியிருக்க, அவரிடத்திலிருந்து நமக்குக் கட்டளைகள் புறப்படும்போது, பிதாவையே நோக்கிப் பார்த்து, செய்து முடிப்போம்.
நாம் அறியாத நமது பாதைகளை அறிந்தவர் அவர். அவருடைய கட்டளையின்படி நாம் புறப்பட்டுச் செல்லும்போது, வழியில் நம்மைக் காக்கிறதற்கும், அவர் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, அவர் ஒரு தூதனை நமக்கு முன்னே அனுப்புகிறார். (யாத் 23:20). கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ (ஆதி 12:1) என்று சொன்னபோது, எங்கே? எப்படி? ஏன்? என்ற கேள்விகள் அல்லாமல் அவனுடைய பயணம் உடனே தொடங்கிவிட்டது. கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான் (ஆதி. 12:4). ஆபிரகாமை எத்தனை பாதுகாப்புடன் கர்த்தர் நடத்திக்கொண்டுவந்தார், எத்தனை விரோதிகளிடமிருந்து பாதுகாத்தார். தான் சொன்ன தேசத்திற்கு ஆபிரகாமைக் கொண்டு வந்து சேர்த்த பின்பு, ஆபிரகாமை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே (ஆதி 15:7) என்று, பயணத்தில் முழுவதும் உடனிருந்து நடத்தியவர் நானே என்று தேவன் தன்னை ஆபிரகாமுக்குச் சொல்கின்றார். கர்த்தர் நமக்கக் காட்டும் வழிகளில் நாம் பிரயாணிக்கத் தொடங்கினால், பாதுகாப்பு தேவனிடமிருந்தே வரும். இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கி கானானை நோக்கி கர்த்தர் கொண்டுசென்ற போதும், இப்படியே பாதுகாத்தாரே. உங்கள் பயணம் தேவன் காட்டிய திசையில் உள்ளதா? உங்கள் கால்கள் தேவன் விரும்பும் இலக்கை நோக்கிச் செல்கிறதா? அப்படியென்றால் அவரே உங்களுக்குப் பாதுகாப்பு; கவலைவேண்டாம். அவருடைய பாதுகாப்பு வேண்டுமென்றால், அவருடனான உறவைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
Comments
Post a Comment