தனலாகட்டும் தனிமை
என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார். (யோவா 8:29)
அகில உலகமும் வெளியே உலாவ முடியாதபடி அடைபட்டுக் கிடக்கும் இத்தருணத்தில், ஆவிக்குரிய மனிதர்களாகிய நம்முடைய அனுதின வாழ்க்கை அணைந்துவிடக்கூடாது என்பதிலும், மீண்டும் எரியக்கூடாதபடி; சத்துரு ஊற்றும் தண்ணீரில் நனைந்துவிடக்கூடாது என்பதிலும் நாம் அதிகக் கவனமாயிருக்கவேண்டும். தேவனோடு இணைந்து தனித்து எரியும் திறனுள்ளோரையும், திறமையுள்ளோரையும் வாசற் தாழ்பாள்கள் தடுத்துவிடமுடியாது; மாறாக, தேவனோடு தனித்திருக்க கிடைத்திருக்கும் நேரம் அதிகமாக அதிகமாக அவர்களது ஆவிக்குரிய வாழ்க்கையின் சூளையில் ஏழுமடங்காகவோ அல்லது ஏழெழுபது மடங்காகவோ அக்கினி கொளுந்துவிட்டெரியக்கூடும்; என்றபோதிலும், சேர்ந்தால் மாத்திரமே மற்றோர்களிடமிருந்து பறந்துவரும் நெருப்புத் தழலினால் தங்களை அனல் மூட்டிக்கொள்ளும் மனிதர்களுக்கோ, தனிமை என்பது ஆவிக்குரிய வாழ்க்கையின் தடைக்கல்லே. இதனைத் தகர்க்கத் தெரியாதோரின் ஆவிக்குரிய தொடரோட்டம் தடைபட்டுவிடும் என்பதனை அறிந்துகொள்வது அவசியம்.
ஆழமான கடலில் கூட்டமாக சேர்ந்து படகில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென உண்டான அலையினாலும், கடுமையாக வீசும் புயலினாலும் படகு அலைவுபட்டுச் சேதமாகுமென்றாலோ, படகைக் காப்பாற்ற படகோட்டியினால் எத்தனையாய் முயன்றும் இயலாது போகுமென்றாலோ என்ன நடக்கும்? படகு உடைந்து அல்லது கவிழ்ந்து பயணிகள் அனைவரும் கடலில் விழும் சூழ்நிலை உண்டாகிவிடுமே. அத்தகைய தருணத்தில், ஆழமான கடலிலும், அலைகளின் மத்தியிலும் நீந்த அறிந்திருந்தால் முந்தி கரைசேர்ந்துவிடலாமே. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையும் இதைப் போன்றதே. ஆலயங்களில் கூடி ஆராதிக்கும் வாய்ப்பு இன்றைய நாட்களில் தொற்றுநோயினால் ஒருவேளை தடைபட்டிருக்கலாம்; ஆனால், வரும் நாட்களிலோ ஆலயங்களிலே ஆராதிக்கவே கூடாது என்று கிறிஸ்தவர்களுக்கு விரோதமான கட்டளை பிறக்கலாம்; அத்தகைய தருணத்தில், தனித்து நீந்த அறிந்திருந்தால் மாத்திரமே நம்முடைய ஆவிக்குரிய ஜீவன் தப்பிக்கொள்ளும்.
மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் (ஆதி 2:18) என்று ஏதேனில் தேவன் சொன்னபோதிலும், உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள் (1கொரி 7:5) என்று பவுல் எழுதுகின்றாரே. இவ்விரு வசனங்களிலும் பொதிந்திருக்கும் சத்தியம் என்ன? 'தனிமையாயிருப்பது நல்லதல்ல' என்று துணையை தேவன் நமக்கு உண்டாக்கிக் கொடுத்தபின்பு, அவரோடு தனிமையாயிருப்பதை நாம் தவிர்த்துவிடக்கூடாது என்பதுதானே. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும் (எபி 10:24,25) என்பது உண்மையே; மேலும், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் (மத் 18:20) என்று இயேசு கிறிஸ்து போதித்ததும் மெய்யே; என்றபோதிலும், கூடிவருதல், ஆண்டவரை மகிமைப்படுத்துவதோடு, ஒருவரையொருவர் அனல் மூட்டுவதற்கும் உபயோகப்படுகிறது என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். என்றபோதிலும், 'நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்' (மத் 6:6)
என்ற இயேசு கிறிஸ்துவின் போதனையையும் நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியமல்லவா. உடனிருக்கும் மனிதர்கள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உந்துசக்தியாகவும், ஊக்கமளிப்பவர்களாகவும் காணப்படக்கூடும்; என்றபோதிலும், தேவனுக்கும் நமக்கும் இடையிலான தனிப்பட்ட உறவிலிருந்து அவர்கள் நம்மைத் துண்டித்துவிடக்கூடாதே. பெரிய பெரிய மேடைகளில் பிரசங்கித்தாலும், அற்புதங்களைச் செய்தாலும், பிசாசுகளைத் துரத்தினாலும், அவரது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தாலும், 'நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்' (மத் 7:23) என்று இப்படிப்பட்டோரைக் குறித்தே இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டுகின்றார். எத்தனை பெரிய காரியங்களை அவரது நாமத்தில் நாம் செய்தாலும், 'அவருக்கும் நமக்கும் இடையில்' தனிப்பட்ட தொடர்பு இல்லாதிருக்குமென்றால், மணவாட்டி என்ற ஸ்தானம் நமக்கு மறுக்கப்பட்டுவிடும். அப்பொழுது, ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள் (மத் 24:40,41) என்ற நிலை தேவனோடு தனிமையை மறந்த நமக்கு உண்டாகிவிடக்கூடாது.
Comments
Post a Comment