தீட்டு, தீட்டு
தனியொரு மனிதனை கெடுத்துப்போடுவதுடன், அவனைக் கொண்டு, தேவராஜ்யத்திற்கடுத்தவைகளையும் கெடுத்துவிட வலைதொடுப்பவன் சத்துரு. ஏவாளை ஏய்த்ததுடன், அவளைக் கொண்டு ஆதாமையும் அடிபிறளச்செய்ததினால், கீழ்ப்படியாமையினால் உண்டான தண்டனை சிருஷ்டிகள் அனைத்தின் மேலும் தென்படுவதினாலேயே, தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது (ரோம. 8:19) என்று வேதத்தில் வாசிக்கின்றோம். செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும் (பிர. 10:1). சரீரமாகிய ஆலயங்கள் கூடும் இடத்தில், சடலமாகிய ஆத்துமாக்கள் இருந்தால், சபை துர்நாற்றமெடுத்துவிடுவதுடன், சத்துரு தூற்றுவதற்கும் அது காரணமாகிவிடுமே. மரித்த மனிதர்கள் கூடினால், கூடிக்கொண்டே சென்றால், மயானமாகவும் மாறிவிடும். ஆண்டவர் கணக்கிலெடுப்பது, கட்டிடத்தை அல்ல, ஆத்துமாக்களையே; 'நீங்களே அந்த ஆலயம்' (1கொரி. 3:17) என்றல்லவோ எழுதுகிறார் பவுல்.
ஆராதிக்கச் செல்லுவோரைக் குறித்த இரண்டு கேள்விகளை, தீர்க்கதரிசியாகிய சகரியாவின் மூலம் சபைக்கு முன்வைக்கிறார் ஆண்டவர். ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக் கொண்டுபோகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல் அப்பத்தையாகிலும், சாதத்தையாகிலும், திராட்சரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த போஜனபதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ? என்று ஆசாரியரிடத்தில் கேட்டபோது, அவர்கள் பரிசுத்தமாகாது என்றார்கள்.
வேதத்தை கரங்களில் ஏந்திக்;கொண்டிருப்பதால், வெளிப்புறத்தில் ஒருவேளை பரிசுத்தவான்களைப் போன்று எதிர்ப்படுவோர்க்கு நாம் தோற்றமளித்துவிடக்கூடும்; ஆனால், அதன் உட்புறத்தை எழுதப்பட்டிருக்கும் தேவ வார்த்தைகளை வாசித்து, உள்ளத்தை ஒப்புக்கொடுக்காது ஒளித்துக்கொள்வோமென்றால், தேவனுடைய பார்வையில் நாம் துரோகிகளாகவே காணப்படுவோம். 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை' என்ற வரிசையிலும் நம்முடைய வாழ்க்கை சேர்க்கப்பட்டுவிடும்.
அனுதினமும் ஆலயத்திற்குச் சென்றும், ஆராதனையில் கலந்துகொண்டும், துணிகரமாக கிறிஸ்துவின் சரீரமாகிய இராப்போஜனத்தில் பயமின்றி பங்கேற்றும், இன்னும் அநேகருடைய வாழ்க்கை பரிசுத்தமாகவில்லையே. தேவாலயத்தில் உயர்ந்த பதவியிலிருந்தும், தேவனுக்கடுத்தவைகளைக் கையாளும் இருக்கைகளில் அமர்ந்திருந்தும், இருக்கிற வண்ணமாகவே இன்னும் இருக்கின்றனனரே. ஆலயத்தின் எத்தiயோ பொறுப்புகளைத் தொட்டபோதிலும், அதிகாரங்கள் அனைத்தையும் அள்ளிக்கொண்டபோதிலும், அவைகள் அவர்களை பரிசுத்தமாக்கவில்லை. ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள்; இறுதி வழக்கின்போது நரகத்திலேயே விழுந்துபோவது நிச்சயம். உலக அரசியலை ஆலயத்திற்குள் ஊடுருவச் செய்வதும், ஆவிக்குரிய முடிவுகளை சரீர பெலத்தினால் எதிர்த்து நிற்பதும்; தேவாலயத்திற்கு மாத்திரமல்ல, தேவனுக்கே அவர்களை சத்துருக்களாக மாற்றிவிடும் என்பது நிச்சயம்.
ஆகாய் தீர்க்கதரிசியின் நாட்களில், ஆலயத்தைக் கட்டவேண்டிய தேவ ஜனங்கள்; எருசலேமிலே, தங்களுக்கு வீட்டைக் கட்டத் தொடங்கிவிட்டார்கள். அதற்காகவே, பொருட்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்கள், உழைத்துக்கொண்டிருந்தார்கள், நேரம் அனைத்தையும் செலவழித்துக்கொண்டிருந்தார்கள். கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் (ஆகா 1:2). ஆத்துமா போஷpக்கப்படும் இடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சரீரத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தனர். இன்றும் அநேகருடைய மனநிலை இப்படியே மாறிவிடுகின்றது. கர்த்தருடைய ஊழியத்தைச் செய்யவேண்டும் என்று காலடி எடுத்துவைத்து புறப்படுகின்றனர்; ஆனால், காலஞ் செல்லச் செல்ல, காலடி பிசகி, தன்னுடைய வாழ்க்கையையும், பிள்ளைகளின் வாழ்க்கையையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும், தன்னுடைய வீட்;டையும் கட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக முழுகிவிடுகின்றனர். அவர்களுடைய முன்னுரிமை தலைகீழாகப் புரண்டுவிடுகின்றது. இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ? (ஆகா 1:4) என்று சொல்லும் நிலைக்கு அநேக ஊழியர்களுடைய வாழ்க்கை மாறிவிடுகின்றது.
நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான் (ஆகா 1:6). அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (ஆகா. 1:9). நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஆகா 1:8). ஆனால், மலையேறி, மரம் வெட்டி அநேகர் கட்டுவது வீட்டையே.
மேலும், மற்றும் ஒரு கேள்வியை ஆகாய் தீர்க்கதரிசியின் மூலமாக ஆண்டவர் கேட்கிறார். பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால் அது தீட்டுப்படுமோ? என்று கேட்டபோது, ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: தீட்டுப்படும் என்றார்கள் (ஆகா 2:11-13).
'குருடனான பரிசேயனே, உட்புறத்தை முதலாவது சுத்தாக்கு', 'மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்' (மத். 23:26,27) என்று இயேசு கிறிஸ்து எச்சரிக்கின்றாரே. இவர்களது சரீரத்தின் மீது சவுக்கு எடுக்கப்படுவதற்கு முன், ஆத்துமாவை ஆண்டவரிடத்தில் ஆத்துமாவைக் கொடுத்துவிடுவது நல்லது (யோவான் 2:15). இல்லையேல், இத்தகைய மனிதர்களால், சுத்தமாயிருக்கும் தேவாலயம் அசுத்தமாகிவிடும். தன்னுடைய உபதேசத்திற்கு தங்களது வாழ்க்கையை ஒப்புக்கொடுக்காத மனிதரை, 'மரித்தோர்' என்றே குறிப்பிடுகின்றார் இயேசு கிறிஸ்து. அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று கேட்டபோது, 'மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றே கூறினார் (மத் 8:21,22). தீட்டு, தீட்டு என்று கத்தவண்டியவர்கள் பலர், இன்று வீட்டுக்குள் வந்துவிட்டனர்.
Comments
Post a Comment