யாருக்குள் யார்?
நகமும் சதையும் போல, பூவும் நாறும் போல, உயிருக்கு உயிராக என நெருங்கி நிற்கும் நண்பர்களை, பிரிக்க இயலாதென வர்ணிப்பவர்களை உலகம் அவ்வப்போது அழைக்கும் வார்த்தைகள் இவைகள். அது ஒரு மாலை நேரம், வீட்டில் அமர்ந்திருந்தேன். வாலிபன் ஒருவன் என்னைத் தேடி வந்தான். வந்த காரியம் என்ன? என்று கேட்டேன். ஒரு உதவி வேண்டும் என்றான். சொல் என்ன உதவி என்று கேட்டேன். நாளைக்கு எனது கல்லூரி வகுப்பில் கடைசி நாள், மூன்றாண்டுகள் உடன்படித்து உயிருக்கு உயிராகப் பழகிய நண்பர்களை கல்லூரியில் பிரியும் நாள். நண்பர்களாயிருந்தாலும், நாள்தோறும் அவர்களை இனி சந்திக்க இயலாது. எனவே, ஒவ்வொரு நண்பர்களும் பிற நண்பர்களிடம் அவர்களது ஞாபகமாக ஏதாவது எழுதி வாங்குவார்கள்; எனவே, நானும் எனது நண்பர்களுக்கு எழுதவேண்டும் என்றான். அதற்கென்ன? என்றேன் நான். அப்போது அவன், என் உயிருக்கு உயிரான நண்பன் ஒருவன் என்னுடன் கல்லூரியில் படிக்கிறான்; அவன் நினைத்துக்கொண்டேயிருக்கும்படி, அவனுக்கு நான் எதையாகிலும் எழுதவேண்டும், அதுதான், என்ன எழுதுவதென்று எனக்குத் தெரியவில்லை, நீங்கள் கவிதை எழுதுகிறவர்கள், எனவே ஏதாவது சொல்லுங்களேன் என்றான். அவனது வார்த்தைகளில் பிரிவின் தாக்கம் ஏக்கக் குரலாக எனக்குத் தெரிந்தது. ஒரு சில வரிகளைச் சொன்னேன், அவைகளிலெல்லாம் அவன் திருப்தியடையவில்லை; வேறு சொல்லுங்க, வேறு சொல்லுங்க என்று என்னை துளைத்துக்கொண்டேயிருந்தான். அப்போது நான் அவனிடத்தில், ஒரே ஒரு வரி சொன்னா நீ திருப்தியாகிவிடுவாய் என்று நினைக்கிறேன், ஆனால் அந்த வரியைச் சொல்ல எனக்கே கூச்சமாகத்தான் இருக்கிறது; என்றாலும், அது நீ நட்பின் மேல் வைத்திருக்கிற அழுத்தத்தை உணர்த்தவே அல்லாமல், அசிங்கத்தை உணர்த்த அல்ல என்றேன். என்ன? என்ன? என்று ஆவலுடன் அறிந்துகொள்ள முற்பட்டான். இதை நான் தான் எழுதித்தந்தேன் என்றும் நீ சொல்லக்கூடாது, ஏனென்றால், நானும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்புகள் உருவாகிவிடும் என்றேன். அண்ணன், அதற்கெல்லாம் நான் பொறுப்பு, நீங்கள் சொல்லுங்கள் என்றான். சற்று யோசித்த நான், அவனிடத்தில், 'உன்னையே மணப்பேன், நீ பெண்ணாயிருந்தால்' என்ற வாக்கியம் எப்படியிருக்கிறது என்று கேட்டேன். அப்போது, அவனது முகத்தில் இருந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. போதும், இது போதும் என்று திருப்தியடைந்தான். ஆனால், எனக்கோ திருப்தியில்லாதிருநத்து. உங்கள் நட்பின் உச்சத்தை விளக்க ஒப்புமையாக எழுதப்பட்ட வரிகள்தான் இவைகளே ஒழிய, இது நடைமுறைக்கு ஒவ்வாததும், நடைபெறக்கூடாததுமான வரிகள். நட்பின் உயரத்தை மட்டுமே சுட்டிக்காட்ட எழுதினேன் என்றேன். இதை வாசிக்கும் மற்றவர்கள் உங்கள் இருவரையும் 'ஓரினச் சேர்க்கையாளர்கள்' என்று தவறாக கணித்துவிடக்கூடாதே என்று கேட்டேன். இதைவிட எங்கள் உறவை விளக்க வேறு வார்த்தையில்லை என்று அந்த வாக்கியத்தை தனதாக்கிக்கொண்டு புறப்பட்டான். ஆனால், சில நாட்களுக்குப் பின்னர், பத்திரிக்கை செய்தி ஒன்றில், நண்பர்கள் இருவர், ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துகொள்ள மனமில்லாமல், ஓரினத் திருமணம் செய்துகொண்டனர் என்று வாசித்தபோது, எனக்குள் நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை. நட்பை விளக்குவதற்காக எல்லை தாண்டி எழுதிவிட்டேன் என்ற உணர்வு எனக்குள் உண்டானது.
எதற்கு எதுவரை இடமளிக்கவேண்டுமோ, அதையும் தாண்டி இடமளிக்கிறது உலகம்; எதற்கு உண்மையாய் உள்ளத்தில் இடளிக்கவேண்டுமோ அதை உலகம் உதறிவிடுகிறது. நண்பர்களுடன் கட்டிய மனைவியைப் போலவே சுற்றிக்கொண்டலைந்து, கட்டிய மனைவிக்கு தான் துணையாயிருக்கவேண்டும் என்று மறந்துவிட்ட புருஷர்கள் உண்டு. ஊரெல்லாம் சுற்றிவிட்டு கூட்டிற்கு வந்து சேரும் குருவியைப்போல அவர்கள் வீட்டிற்கு வந்து சேருவார்கள். நட்பை நான் அவமதித்து எழுதவில்லை; ஆனால், அது மாத்திரமே மதிக்கபட்டால் வாழ்க்கையில் ஆபத்து. 'close friends' என்று சொல்லிக்கொள்பவர்களால், மற்ற நண்பர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை; அவர்களது முக்கியத்துவம் எல்லாம் அந்த நண்பன் ஒருவனுக்கே. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மாத்திரமே மாறி மாறி சுற்றிவருவதால் அவர்களது எல்லை விரிவதில்லை. ஆலயத்திற்குச் சென்றால், அடுத்தவரைச் சந்திப்பதில்லை, அவரில்லாமல் இவரில்லை, இவரில்லாமல் அவரில்லை என்ற சங்கிலிக்குள் சிக்கிக்கொண்டவர்கள் ஏராளம். ஆனால், தேவனது திட்டத்தை நாம் அறிந்துகொண்டோமென்றால், நமது வாழ்க்கையின் ஓட்டம் நீளவும், வட்டம் விரிவடையவும் வாய்ப்புண்டே.
ஆதாமுக்குள், ஏவாள்; ஏவாளுக்குள் ஆதாம்
இது தேவன் வகுத்த அமைப்பு. குடும்பம் சபைக்கு ஈடானது, சபை வாழ்க்கைக்கு மாதிரியானது (எபே. 5:23). ஆதாமையும், ஏவாளையும் இணைத்து தேவன் உருவாக்கிய அந்த குடும்ப அமைப்பு எத்தனை அழகானது. தேவன் மனுஷனைப் பூமியின் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் (ஆதி. 2:7); அவனே ஆதாம். அவனை தனது சாயலாகவும், தனது ரூபத்தின்படியேயும் உண்டாக்கினார் (ஆதி. 1:26). சகலவித மிருகங்களும், பறவைகளும், ஆணும் பெண்ணுமாகப் படைக்கப்பட்டிருந்தன; மிருகங்களும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளும் மண்ணினாலேயே உருவாக்கியிருந்தார் தேவன்; அவைகளை உருவாக்கும்போதே ஆணும், பெண்ணுமாக உண்டாக்கினார். ஆண் விலங்குகளும் மண்ணினால் உண்டாக்கப்பட்டன, பெண் விலங்குகளும் மண்ணினால் உண்டாக்கப்பட்டன (ஆதி. 2:19). ஆனால், ஆதாம் மட்டும் ஆணாக, தனியாக இருந்தான். உண்டாக்கப்பட்டிருந்த விலங்கினங்களோ, பறவைகளோ, அவனுக்கு உடன் இருந்தாலும், அவைகள் அவனுக்குத் உற்றத் துணைகளல்ல.
ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை (ஆதி. 2:20). மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்ற தேவன் (ஆதி 2:18), ஆதாமின் துணையாகிய ஏவாளை அவனுக்கு உள்ளே இருந்த எலும்பினாலேயே உண்டாக்கினார் தேவன். ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். ஆதாம் அவளைக் கண்டதும், 'இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷp என்னப்படுவாள்' என்றான் (ஆதி 2:23).
ஆதாமுக்குள் இருந்து ஏவாள் வந்திருந்தபோதிலும், மனித சந்ததியின் தொடரோட்டம் பின்பு ஏவாளுக்குள்ளே இருந்தே புறப்பட்டது. அவர்கள் தங்களை ஒரே மாம்சமாக்கிக்கொண்டால் மாத்திரமே மறு சந்ததியைப் பெற்றெடுக்க முடியும். ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்றெடுத்தான்; அந்தக் குமாரன் ஏவாளுக்குள்ளேயிருந்தே வெளிவந்தான் (ஆதி 5:3). திருமணமான தம்பதியர்கள், தாங்கள் ஒருவருக்குள் ஒருவர் என்ற நிலையினை மறந்து வாழக்கூடாது. கணவனாக, மனைவியாக ஒன்றாக இணைந்திருந்தாலும், இன்றைய ஆதாம்கள் அனைவரும் ஏவாளுக்குள்ளிருந்தே வெளிவருகின்றனர்.
கோழி முட்டையிலிருந்து வந்ததா? அல்லது முட்டை கோழியிலிருந்து வந்ததா? என்று சிலர் விளையாட்டாகக் கேட்பதைக் கேட்டிருப்பீர்கள். கோழிதான் முதலில் மண்ணிலிருந்து வந்தது, ஆனால், அதன் பின்னரோ கோழிகள் முட்டையிலிருந்தே வருகின்றன. உயிரின் ஓட்டத்தை தேவன் தொடங்கிவிட்டார், அதனை உயிரினங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன; அவ்வளவே.
இயேசுவுக்குள் பிதா, பிதாவுக்குள் இயேசு
இயேசுவின் போதனைகளில் முக்கியமான போதனை; அவர் தன்னையும் பிதாவையும் இணைத்துப் போதித்ததே. உலக மக்கள் இயேசுவையும் பிதாவையும் பிரித்துப் பார்த்தனர்; ஆனால், இயேசுவும், பிதாவும் ஒன்றாயிருந்தனர்; பிதாவுக்கு பிள்ளையாக மாத்திரமல்ல, பிதா இயேசுவின் உள்ளேயும் இருந்து செலாற்றினார் இயேசு. 'நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை' (யோவான் 5:30) என்றார் இயேசு. பிதா அவருக்குள் இருந்து செயலாற்றுவதையும், அவரைக் குறித்து வேதத்தில் எழுதப்பட்டவைகளே நிறைவேறிவருகின்றன என்பதனையும் ஜனங்களுக்கு இயேசு எடுத்துச் சொல்லிக்கொண்டேவந்தார். இயேசு ஏதோ, புதிய ஏற்பாட்டுத் தெய்வமல்ல, அவர் உலகம் உண்டாவதற்கு முன்னே இருந்தவர். அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை (யோவான் 1:10) என்று எழுதுகிறார் யோவான். மேலும், 'பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்தில் மகிமைப்படுத்தும்' (யோவான் 17:5) என்று வேண்டுகிறார் இயேசு. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார் (யோவான் 1:2). தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் (யோவான் 1:18). நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள் (யோவா 14:11) என்றார் இயேசு.
பிலிப்பு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் (யோவான் 14:8) என்று சொன்னபோது, 'என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்' என்றும், 'நான் பிதாவிலும், பிதா என்னினும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார் என்றார் (யோவான் 14:9-10).
இயேசு பிதாவுக்குள் வாசம்பண்ணுகிறதோடு மாத்திரமல்லாமல், நம்மையும் பிதாவுக்குள் எடுத்துச் செல்கிறவர். நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள் (யோவா 14:20) என்ற வசனம் அதனை தெளிவாக நமக்கு விளக்குகின்றதே. பிதாவுக்குள் நாம் வாசம்பண்ண ஒரே வழி இயேசுவே என்பதைத்தான் இந்த வசனம் எடுத்துக்கூறுகின்றது. பிதாவுக்குள் செல்ல, அவரே வழி, வேறு வழி இல்லை. இயேசுவை நாம் ஏற்றுக்கொண்டால், இயேசு நமக்குள்ளே வாசம்பண்ணுவார், நாம் இயேசுவுக்குள்ளே வாசம் பண்ணுவோம், பிதாவுக்குள் பிரவேசிப்போம்.
நமக்குள் ஆவியானவர், ஆவியானவருக்குள் நாம்
இயேசு இந்த உலகத்தை விட்டு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நம்மை திக்கற்றவராக அவர் விட்டுச் செல்லவில்லை. நமக்கு உள்ளே இருந்து நமக்கு உதவி செய்ய ஆவியானவரை அருளிச் செய்தார். அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள் (யோவா 14:17) என்றார் இயேசு. இந்த கடைசி நாட்களில் வாழும் நாம், இயேசுவின் ஊழியத்தை தொடர்ந்து செய்ய பணிக்கப்பட்ட நாம், ஆவியானவருக்குள் வாழவேண்டும், ஆவியானவரை நம்மில் வாழவிடவேண்டும். ஆவியானவருக்குள்ளும், ஆவியானவர் உள்ளும் இருப்பதே ஒரு கிறிஸ்தவனை முன் எடுத்துச் செல்லும்.
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார் (அப் 1:8). பெந்தெகோஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டார்கள் (அப். 2:3,4). பின் நாட்களில் ஆவியானவரே அவர்களை நடத்தினார். நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று ஆவியானவர் பிலிப்புடனே சொன்னார் (அப் 8:29). இதோ மூன்று புருஷர்கள் உன்னைத் தேடுகிறார்கள் என்று பேதுருவிடம் சொன்னார் (அப். 10:19). ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார் (அப். 16:7). நாம் பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார் (ரோமர் 8:16). நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறவரும் ஆவியானவரே, நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கும்போது, ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். அதுமாத்திரமல்ல, ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படி பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறவர் (ரோமர் 8:26,27). தேவனுடைய ஆவியாகிய மகிமையின் ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார் (1பேதுரு 4:14) என்று பேதுரு எழுதுகிறார். இதையே பவுல், முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான்; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானவர் (1கொரி. 15:45).
அப்படியே, இறுதி நாட்களின் எச்சரிப்பின் செய்தியினையும் ஆவியானவரே அறிவிக்கிறார் 'ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்' என்றே வாசிக்கிறோம் நாம் (வெளி. 2:7,11,17,29; 3:6,13,22).
இத்தனை காரியங்களைச் செய்துகொண்டிருக்கும் ஆவியானவர் இன்று உங்கள் உள்ளத்தில் உண்டா? உங்களை அவர் நடத்துகிறதை உணர்கின்றீர்களா? அவருடைய தூண்டுதலினால் நீங்கள் செயல்படுகிறீர்களா? அவருடைய தேற்றரவை உணர்கின்றீர்களா? அவருடைய போதனையைப் பெற்றுக்கொள்ளமுடிகிறதா? நீங்கள் அவருக்குள்ளும், அவர் உங்களுக்குள்ளும் வாழ்வதே வெற்றிக்கு உங்களை வழிநடத்தும்.
Comments
Post a Comment