நெருப்பை அணைக்கும் நீர்த்துளிகள்
சத்தியத்தைக் கையிலேந்தி, வழியெங்கும் ஒளியாகி, மண்ணோடு ஒட்டியிருக்கும் மற்றவர்களையும் விண்ணை நோக்கி வழிநடத்தும் நம்முடைய வாழ்க்கையை, சத்துரு குறிவைத்துத் தாக்கிவிடாதபடியும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகின்ற (1பேது 2:5) நம்மைத் தகர்த்துவிடாதபடியும் தற்காத்துக்கொள்வதுடன், தாக்கும் சத்துருவின் சதிகளிலும் சிக்கிவிடாதபடி ஒவ்வொரு நாளும் நாம் எச்சரிக்கையோடிருக்கவேண்டும். முளையிலேயே தன்னால் கிள்ளிவிட முடியாதவைகளை, வளந்தபின் எப்படியாகிலும் வெட்டிவிட சத்துரு முயற்சிப்பான். ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்ப நிலையில் இடப்படும் அஸ்திபாரத்தைத் தடுக்க முடியாவிட்டால், மாளிகையாக உயர்ந்துவிட்டபின் அஸ்திபாரத்திலிருந்து அதனை அகற்றிவிடுவதற்கு சத்துரு திட்டம் தீட்டுவான். அர்ப்பணிப்பைக் கொண்டு அசையாமல், உறுதியாக, அஸ்திபாரமான கிறிஸ்துவாகிய கன்மலையின்மேல் கட்டப்பட்ட அழகான மாளிகையை, கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, அத்தனையையும் மொத்தமாக தரையில் சரிந்துவிழச்செய்யும் சத்துருவின் தந்திரத்தை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். அஸ்திபாரமாகிய கிறிஸ்துவை தொட்டுவிட சத்துரு சக்தியற்றவனே; எனினும், அஸ்திபாரத்திற்கும் (கிறிஸ்துவுக்கும்) அர்ப்பணிக்கப்பட்வர்களுக்கும் இடையிலான தொடர்பினைத் துண்டித்துவிட ஒவ்வொரு நாளும் முயற்சிக்கின்றானே.
இதனை நன்கு அறிந்திருந்ததினாலேயே, பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் (எபே 4:27) என்று எழுதுகின்றார் பவுல். பிசாசுக்கும், பிசாசின் குணங்களுக்கும், பிசாசின் குணங்களை உடையவர்களுக்கும் நாம் இடம் கொடுப்போமென்றால், அவன் நம்மை அஸ்திபாரமாகிய கிறிஸ்துவினிடமிருந்து பிரித்துவிவிடுவான். பிசாசின் ஆளுகைக்கு உட்பட்ட மனிதர்கள் மாளிகைக்கு உள்ளே நுழைந்தால், அழகான மாளிகையும் அழியத்தொடங்கிவிடும், அஸ்திபாரத்திற்கும் மாளிகைக்கும் இடையிலான தொடர்பு அத்தகையோரால் அரிக்கப்பட்டுப்போய்விடும்.
இயேசு கிறிஸ்து, வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று (மத் 21:19). இத்தகைய வளர்ச்சியையும், வளர்ந்தபின் பட்டுப்போகும் காட்சியையுமே ஆவிக்குரிய மனிதர்களிடத்திலும், ஊழியங்களிலும் சத்துரு விரும்புகின்றான். முளையிலேயே அத்திமரத்தை சத்துரு கிள்ளி எறிந்துவிடவில்லை; அல்லது அதன் வளர்ச்சியையும் சத்துரு முடக்கிவிடவில்லை; மாறாக, வளர்ந்த பின் அதனிடத்தில் என்ன காணப்படவேண்டுமோ அதனை காணக்கூடாமற்செய்துவிடுகின்றான். இன்றைய நாட்களிலும் இத்தகைய காரியத்தினையே சத்துரு செய்துவருகின்றான். வளர்ந்துவரும் ஊழியங்களில், கனிகொடுப்போரை கழற்றிவிட்டுவிட்டு, அழைப்பில்லாத மனிதர்களாகிய இலைகளால் மரத்தை அலங்கரித்து, வழியருகே பச்சைப் பசேல் என்று நிறைந்து செழிப்பாக நிற்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட முயற்சிக்கிறான். என்ன நோக்கத்திற்காக ஊழியம் தொடங்கப்பட்டதோ, அதனை மறந்து, தரிசனத்தை விட்டுத் தடம்புரளச் செய்துவிடுகின்றான். நிழலைத் தேடும் மக்களுக்கு ஒருவேளை அது ஆறுதலைத் தரலாம்; பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அடைக்கலப் பட்டணம் போலக் காட்சியளிக்கலாம். ஆனால், கனியைத் தேடிவரும் கர்த்தருக்கோ அது வெறுங்கையை விரித்ததாகவே வழியில் நின்றுகொண்டிருக்கும். இத்தகைய ஊழியங்கள் பட்டுப்போகும் காலம் தூரத்திலில்லை. சத்தியத்தை அறிவிக்கவேண்டிய அநேக ஊழியங்கள், சமூக சேவைகளில் மாத்திரம் திருப்தியடைந்து, மனந்திரும்புதலுக்கேற்ற கனிகனை மனிதர்களிடத்திலிருந்து எதிர்பார்க்காமல் விட்டுவிடுவது, வெற்று மரமாகவே ஊழியத்தை வீதியில் நிற்கச் செய்யும்.
அதுமாத்திரமல்ல, கசப்பான பழங்களையே தரும்படியாக தோட்டம் முழுவதையும் மாற்றிவிடவும் சத்துரு முனைகிறான். இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது (ஏசா 5:2) என்று ஏசாயா தீர்க்கதரிசியின் வாயிலாக உரைக்கப்பட்டிருப்பதுபோன்ற நிலைக்குத் ஊழியமாகிய திராட்சத்தோட்டத்தைத் தள்ளிவிட முயற்சிக்கின்றான்.
தன்னுடைய தோட்டத்தில் 'நற்குல திராட்சச் செடிகளையே' நட்டியிருந்தார் நேசர்; எனினும், நற்குலமாக நட்டப்பட்டிருந்த திராட்சச் செடிகள் தாங்கள் கெட்டுப்போவதற்கு இடங்கொடுத்துவிட்டபடியினால், கசப்பான பழங்களைக் கொடுக்கும் நிலைக்கு மாறிப்போயின. இன்றைய நாட்களிலும், இப்படிப்பட்ட நிலைக்கு தோட்டத்தை மாற்றிவிட சத்துரு முயற்சித்துவருகின்றான். நற்குலமாக, அழைப்பினைப் பெற்று, அர்ப்பணிப்போடு, ஆத்துமாக்களை ஆதாயம்பண்ணவேண்டும் என்ற பாரத்தோடு, பல்வேறு சிரத்தைகள் எடுத்து புறப்பட்டுவந்த அநேக மக்களை உலகத்திற்கடுத்த காரியங்களினால் கெடுத்து, கசப்பான கனிகளைத் தரும்படியான நிலைக்கு அவர்களைத் தள்ளிவிடுகின்றான் சத்துரு. ஆரம்ப நாட்களில் கொண்டிருந்த தரிசனத்திலிருந்தும், ஆண்டவர் மீதிருந்த அன்பிலிருந்தும் மெல்ல மெல்ல விலகச் செய்து, ஆண்டவரால் மென்று தின்ன முடியாத அளவிற்கு கசப்பாக கனிகளாக அவர்களது வாழ்க்கையினை மாற்றிவிடுகிறான் சத்துரு. ஆதியில் கொண்டிருந்த அன்பை இத்தகையோரிடத்தில் தேடினாலும் கண்டுபிடிப்பது கடினமாகவே இருக்கும். கால்களை கர்த்தருடைய தோட்டத்தில் ஊன்றிக்கொண்டு, கனிகளையோ சத்துருவுக்குக் கொடுப்பவர்கள் இவர்கள்.
பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான் (மத் 13:24,25) என்று இயேசு கிறிஸ்து சொன்னாரே. அப்படியே, நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது (மத் 7:18) என்றும் போதித்தாரே; எனினும், உலகத்தால், சுபாவத்தால் கெட்டுப்போன மரமோ கெட்ட கனிகளையே கொடுக்கும். எனவே பவுல், சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? (ரோம 11:24) என்று வெட்டப்பட்டதையும், ஒட்டப்பட்டதையும் எழுதியுணர்த்துகின்றாரே. அப்படியிருக்க, நல்ல ஒலிவமரத்தில் ஒட்டவைக்கப்பட்டிருந்தும், சுபாவத்தோடு தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருந்தால், கசப்பான கனிகளையே நாம் கொடுத்துக்கொண்டிருப்போம்; அவருடைய தோட்டத்திற்குள் இருந்தாலும் களைகளாகவே கணக்கிடப்படுவோம்.
கிறிஸ்துவின் தோட்டத்தில் இருக்கும் அநேகரை இப்படிப்பட்டவர்களாகவே வைத்துக்கொண்டிருக்க சத்துரு விரும்புகின்றான். கிறிஸ்தவர்கள் என்ற பெயரில், கிறிஸ்து விரும்பாத கனிளையே வாழ்க்கையில் கொடுத்துக்கொண்டிருக்கும் மக்கள் அநேகர். உள்ளத்தில் சத்துரு ஊடுருவ இடங்கொடுத்துவிட்டதினாலும், உலகத்தோடு வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டிருப்பதினாலும், தோட்டத்தை விட்டு வெளியே வெட்டி எறியப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றனர். இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாதமரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (மத் 3:10) என்ற நிலைக்கு, ஒரு காலத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் 'விலைகொடுத்து வாங்கப்பட்டவர்களும் விலகிப்போவது' எத்தனை துக்கமானது.
வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாகவிட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான். கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள். கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள் (மத் 21:33-39). வீட்டெஜமானாகிய குமாரனையே வெளியே தள்ளிவிடும் நிலைக்கு குத்தகைக்காரர்களை மாற்றிவிடுகின்றான் சத்துரு. இந்த நிலையில், கிறிஸ்துவுக்கும் தனக்கும் தொடர்பில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் ஊழியங்கள் ஏராளம். என்றபோதிலும், தனது திட்டத்தை கர்த்தர் நிறுத்திக்கொள்வதில்லை. அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் (மத் 21:41) என்று உவமையாக இயேசு கிறிஸ்து சொன்னதின்படி, பிற மனிதர்கள் மூலமாக பரலோக திட்டம் தொடர்ந்து நிறைவேறும்.
தாலந்துகளுக்கு அடுத்த உவமையினில், ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன் (மத் 25:24) என்று சொன்னபோது, அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி, அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் (மத் 25:27-29) என்று இயேசு கிறிஸ்து சொன்னாரே. அவருடைய திட்டத்தின்படியும், சித்தத்தின்படியும், எதிர்பார்ப்பின்படியும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் வேறே தோட்டக்காரர்களாகிய மனிதர்களுடைய கரங்களில் சித்தத்தை நிறைவேற்றாதவர்களின் தோட்டம் ஒப்படைக்கப்படும்.
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர் (யோவா 15:1) என்று அழுத்தமாகக் கூறிச்சென்றார் இயேசு கிறிஸ்து; ஆனால், இன்றைய நாட்களிலோ, குத்தகைக்காரர்கள் பலர் தங்களையே 'தோட்டக்காரர்கள் என்றும் வீட்டெஜமான் என்றும்' நினைத்துக்கொண்டிருப்பது, வேதத்திற்கு விரோதமானதே. 'உங்க ஊழியம் நானேன் கலங்கனும்' என்று உதட்டளவில் பாடினாலும், 'உள்ளத்திலோ, இது என்னுடைய ஊழியம், நான் சம்பாதித்த ஆத்துமாக்கள், இந்த ஊழியத்தின் நிலங்கள் பொருட்கள், கட்டிடங்கள் என அனைத்தும் என்னுடையவைகளே' என்ற எண்ணத்தில் காணப்படும் மனிதர்கள் அநேகர். கர்த்தருடைய ஊழியம் என்று சொன்னாலும், வாரிசுகளையே (வாரிசுகள் தேவனுக்குப் பயந்தவர்களாக இல்லாதபோதிலும்) தனக்குப் பின் வரிசைப்படுத்தும் நிலைக்கு ஊழியர்களது மனம் உந்தப்படுவதின் காரணம் இதுவே. தன்னுடையது என்ற எண்ணம், குத்தகைக் காரர்களைத் தடம்புரளச் செய்யும். உலகப்பிரகாரமாகவும் குத்தகைக்கு விட்ட நிலத்தை மீட்க இயலாத எஜமான்கள் உண்டு; ஆனால், பரலோகமோ தன்னுடையதை பலவந்தமாகப் பிடுங்கிக் கொடுத்துவிடும்.
கர்த்தரால் ஞானத்தைப் பெற்ற சாலமோன், 'ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது (பிர 7:8) என்று எழுதி உணர்த்துகின்றபோதிலும், தன்னுடைய ராஜ்யபார வாழ்க்கையிலோ இந்த சத்தியத்தைச் சாத்தியப்படுத்த இயலாதபடி தவறிப்போனானே. தன்னுடைய ராஜ்யபாரத்தின் தொடக்கத்தில், 'உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும், ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும்' (1இரா 3:9) என்று வேண்டிக்கொண்ட சாலமோன், விவாக வாழ்க்கையில் அந்நிய தெய்வங்களை வணங்கும் ஸ்திரீகளையும் தன்னுடைய வாழ்க்கையோடு சேர்த்துக்கொண்டான். அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள், அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள் (1இரா 11:1,3). விளைவு, சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான். அதுமாத்திரமல்ல, எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான் (1இரா 11:5,7).
அடர்த்தியான பாலாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக தண்ணீர் சேர்க்கப்பட்டுக்கொண்டேயிருக்குமென்றால், பாலின் தன்மையும், சுவையும் பறிபோய்விடுமே. நன்றாக எரிந்துகொண்டிருக்கும் விளக்கில் எண்ணெயொடு சிறிது சிறிதாக தண்ணீரையும் சேர்த்துக்கொண்டிருந்தால், எரியும் விளக்கு அணைந்துபோய்விடுமே. அப்படியே, அழைப்பில்லாதவர்களால் ஊழியத்தின் நெருப்பு அணைக்கப்பட்டுவிடக்கூடும். யூதாகோத்தரத்துச் சோராகுடைய குமாரனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டபோது. இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது (யோசு 7:1), ஆயியின் மனுஷருக்கு முன்பாக இஸ்ரவேல் ஜனங்கள் போரில் முறிந்தோடினார்கள். சாபத்தீடான ஒரு மனிதன், முழு இஸ்ரவேல் ஜனத்திற்கும் தோல்வியைக் கொண்டுவந்துவிட்டானே.
உலகத்தின் பார்வையில் உயர்ந்தவர்களாயிருக்கலாம்; ஆனால், அர்ப்பணிப்பில்லையேல், அவர்கள் நெருப்பை அணைக்கும் நீர்த்துளிகளே.
Comments
Post a Comment