திங்கள், 18 அக்டோபர், 2021

அறியப்படாதவருக்கு ஆராதனை

 

அறியப்படாதவருக்கு ஆராதனை

 

இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப்போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார். (எபி 8:5)

ஆராதனையின் அழகு என்பது அவரையும், அவரை ஆராதிக்கும் முறையையும் அறிந்துகொள்வதிலேயே. அவரைக் குறித்த அறிவில்லாமலும், ஆராதிக்கும் முறையைக் குறித்த தெளிவில்லாமலும் ஆலயத்தில் கூடும் கூட்டத்தினருக்கு முதன் முதலாக கற்றுக்கொடுக்கப்படவேண்டிய காரியமும் இதுவே. நம்முடைய ஆராதனை பரலோகத்தில் செய்யப்படும் ஆராதனைக்கு ஒத்திருக்கவேண்டும் என்பதே தேவனது விருப்பம். ஆசரிப்புக் கூடாரத்தை அமைக்கும்படியாக மோசேயினிடத்தில் தேவன் சொன்னபோது, 'மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக' (யாத். 25:40, 26:30) என்ற கட்டளையும் அவரது வாயிலிருந்து சேர்ந்தே பிறந்துவந்தது. நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக (யாத் 25:9) என்றார். கர்த்தர் மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான் (எண்; 8:4), பிற காரியங்களையும செய்து முடித்தான்.

ஆண்டவர் மோசேக்கு மாதிரியைக் காண்பித்தது போல, கர்த்தருக்காக ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று விருப்பங்கொண்டிருந்த தாவீது, தன் குமாரனான சாலலொமோனை நோக்கி: இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி (1நாளா 28:10) என்று சொன்னதுடன், ஆவியினால் தேவன் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் (1நாளா. 28:12) தன் குமாரனுக்கு தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான மாதிரியைப் போதித்தான் (1நாளா. 28: 11,12).

பிரியமானவர்களே, ஆண்டவரை ஆராதிக்க நாம் விரும்புவோமென்றால், அவர் காட்டியிருக்கும் மாதிரி நமக்குத் தெரியவேண்டும். வேதத்தை மறந்தவர்களாக தேவனை ஆராதிப்பது என்பது தவறான பாதைக்கு நம்மைத் தள்ளிச் சென்றுவிடும். அன்றைக்கு மலையில் மோசேக்கு ஆசரிப்புக் கூடாரத்தின் மாதிரி காட்டப்பட்டதுபோல, இன்று வேதத்தில் நாம் ஆராதிக்கும் மாதிரி எழுதித்தரப்பட்டுள்ளது; அதன்படியே செய்ய கவனமாயிருப்போம்.

இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன் (1கொரி 13:12) என்கிறார் பவுல்; இதையே யாக்கோபும், என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் (யாக்.1:23) என்று எழுதுகின்றார்.

கண்ணாடி இரண்டு விதமான காரியங்களைச் செய்யும், ஒன்று நாம் பார்க்கும்போது நம்முடைய முகத்தின் நிலையினை அது நமக்கே காட்டிக்கொடுக்கும்; இரண்டாவது, கண்ணாடியின் மீது சூரிய ஒளி படும்போது அதனை அது நமக்கு பிரதிபலிக்கும். வேதமும் இதைப் போன்றதே. நம்முடைய மீறுதல்கள், பாவங்கள், அக்கிரமங்களை நமக்குக் காட்டுவதுடன், தேவனுடைய குணத்தையும், அன்பையும், விருப்பத்தையும், சாயலையும், ஏக்கத்தையும், திட்டத்தையும் நமக்குப் பிரதிபலித்துக் காட்டுகின்றது. நம்முடைய முகத்தை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்புகிறவர்களாக நாம் காணப்படக்கூடாது. தேவனுடைய முகமும் நமக்குத் தென்படவேண்டும். நம்முடைய தேவைகளுக்காகவும், நம்மை திருப்தி செய்யும் வசனங்களையும் மாத்திரம் வாசித்துவிட்டு விட்டுவிடக்கூடாது. தேவனுடைய முகத்தையும் அதில் காண முயற்சி செய்வோம்.

இயேசுவும், பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 18:18) என்று போதித்தாரே. நாம் பூலோகத்தில் செய்பவைகளுக்கும் பரலோகத்திற்கும் உள்ள ஒற்றுமையைத்தானே இது நமக்குச் சுட்டிக்hட்டுகின்றது.

பவுல் அத்தேனே பட்டணத்தாரை நோக்கி: நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் (அப் 17:23) என்று சொன்னான். அநேகருடைய நிலை இன்று அத்தேனே பட்டணத்தாரைப் போன்றதே. தேவனை யாரென்று அறியாமல், அவருக்குத் தங்கள் வாழ்க்கையில் இடம் கொடுக்காமல், பாவங்ளை விட்டு விலகாமல், பரிசுத்தமாக வாழாமல், கர்த்தர் விரும்பும் காரியங்களைச் செய்யாமல் ஆலயத்திற்கு மட்டும் போய்வந்துகொண்டிருந்தால், நீங்கள் 'அறியாத தேவனுக்கு ஆராதனை செய்கிறவர்களே.'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக