Skip to main content

ஒளியை ஒளித்துவைக்காதே (யோவான் 1:9)

ஒளியை ஒளித்துவைக்காதே



உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9) 

 

மனிதன் ஒளியினை அடையவே ஒரேபேறான குமாரன் உலகிற்குக் கொடுக்கப்பட்டார். தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது (1யோவான் 1:5) என்று எழுதுகின்றார் யோவான். இந்த ஒளியோடு இருந்த உறவை இழந்துபோயிருந்ததால், இருள் மனிதனை ஆக்கிரமித்துக்கொண்டது; ஆளுகைசெய்தது. என்றபோதிலும், படைத்தவரைப் புரிந்துகொண்டு, பரிசுத்தமாக வாழ தங்களை அர்ப்பணித்து, தீமைகளுக்குத் தங்களைத் தூரமாக்கிக்கொண்டு, தேவனுக்குச் சமீபமாய் வாழ்ந்த வெகுசிலர் 'நீதிமான்கள்' மற்றும் 'தீர்க்கதரிசிகள்' என்ற எல்லைக்குள் முன்குறிக்கப்பட்டனர். தேவனுக்காக ஜனங்களோடு பேசுபவர்களாகவும், ஜனங்களுக்காக தேவனோடு பேசுபவர்களாகவும் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் இவர்களே. நீதிமான்களாக வாழும் மனிதர்கள் மூலமாக பிறரையும் நீதியின் வழிக்குள் நடத்த தேவன் வகுத்த திட்டத்தினையே, எபிரெய ஆக்கியோன், பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன் (எபி. 1:1) என்று குறிப்பிடுகின்றார்; என்றபோதிலும், இருளின் ஆதிக்கத்திலிருந்து மீளுவதில் இழுபறியே நீடித்தது. மனிதர்கள் செய்த பாவத்தின் சம்பளமான மரணம், மிருகங்களின் மீதும், பறவைகளின் மீதும் பலி என்ற பெயரில் திணிக்கப்பட்டபோதிலும், பாவத்தின் வேலிக்குள்ளே மனிதனின் வாழ்க்கை அவ்வப்போது அகப்பட்டுக்கொண்டிருந்தது. 

பலியை நிறுத்தும் பலியாக உன்னதத்திலிருந்து பிதாவின் ஒளியை உலகத்திற்குக் கொண்டுவந்தார் இயேசு கிறிஸ்து. இதனையே, இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசா. 9:2) என்று தீர்க்கதரிசனமாய் உரைக்கிறார் ஏசாயா. இயேசு கிறிஸ்துவும், நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றாரே (யோவா 9:5). உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவா 1:12). இவ்விதமாக, பிதாவின் ஒளி பிள்ளைகளின் வாழ்க்கையில் வைக்கப்பட்டது. எனவே இயேசு கிறிஸ்து ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் (யோவா 8:12)என்றும், நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது (மத் 5:14) என்று குறிப்பிட்டுச்சொன்னாரே. பிதாவின் வெளிச்சம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மனிதர்களின் வாழ்க்கையில் வைக்கப்பட்டது. ஒளியாக உலகிற்கு வந்த வழியே இயேசு கிறிஸ்து. எண்ணெய் இல்லாமலும், எரியாமலும் விளக்காக மட்டுமே வாழ்க்கையை வைத்துக்கொண்டிருந்தால், வருகையில் விட்டுவிடப்படுவோம். 

மேலும், விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத் 5:15,16) என்ற இயேசு கிறிஸ்துவின் போதனை, ஒளியாய் நம்முடைய வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இயேசு கிறிஸ்துவை நாம் ஒளித்துவைத்துவிடாமல் மற்ற மனிதர்கள் காணும்படியாக உயர்த்திவைக்கவேண்டும் என்பதையே சுட்டிக்காட்டகின்றது. 

என்றபோதிலும், 'நாம் ஒளியல்ல, அவர் வாழ்க்கையில் இருப்பதாலேயே ஒளிருகிறோம்' என்பது ஒளிந்திருக்கும் இன்னுமோர் சத்தியம். எனவே யோவானைக் குறித்து, 'அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்' (யோவா 1:8) வாசிக்கின்றோமே. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள் (யோவா 15:4) என்பது எரிந்துகொண்டிருக்கும் நமக்கு விடுக்கப்பட்டிருக்கும் ஓர் எச்சரிப்பின் செய்தி.

 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...