Skip to main content

அரணை உடைக்கும் ஆண்டவர்

அரணை உடைக்கும் ஆண்டவர்



தேவனுடைய பெலனை புரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும் நாம் தவறுவோமென்றால், தேவையில்லாமல் சத்துருவைக் கண்டு பயந்துகொண்டிருப்போம். எதிர்க்க பெலனுள்ளவர் எனக்குள்ளே இருக்கிறார் என்ற அறிவுதான் அதைச் செய்கிறது. உலகத்திலிருக்கிறவனிலும், நம்மிலிருப்பவர் பெரியவர் (1யோவான் 4:4). அகத்திலிருக்கும் அவர் அரணை நிர்மூலமாக்கப் போதுமானவர். எனவே பவுல், எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது (2கொரி. 10:4) என்கிறார்.

புதிய அரசு, புதிய அமைச்சர்கள், புதிய சட்டதிட்டங்கள், புதிய கொள்கைகள் என பல்வேறு வித்தியாசங்கள், கோடை, மாரி, குளிர் காலங்களைப் போல பட படவென அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கின்றது தேசத்தில். மேகத்தைப் பார்த்து (தேர்தல்) என்ன வருமென்று எவருமே கணிக்க இயலாத நிலையில் முடிவுகள் அமைந்திருக்கிறது என நாம் நினைத்தாலும், தேவ அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரங்கள் எதுவும் அமைந்துவிடவில்லை என்பது நாம் வேதத்தின் வழியே அறிந்துகொள்ளவேண்டிய சத்தியம். தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது (ரோமர் 13:1). தடைகளை நமக்கு எதிரே அனுப்புவது நம்மை வீழ்த்துவதற்கு அல்ல நாம் தடைகளை வீழ்த்துவதற்கு. வழியில் இடறாக வரும் தடைகள் மீது நாம் இடறினாலேலே அவைகள் நமது பாதத்தின் பெலத்தால் இல்பொருளாகிவிடும் என்பது நாம் அறிந்திருக்கவேண்டிய ஒன்று. நமது விரலில் சற்று இரத்தம் கசிந்தாலும், காயம் உண்டானாலும், சத்துருவின் சத்தமோ அங்கே அடங்கியிருக்கும். சத்துருவின் பெலத்தை பறைசாற்றவோ, சத்துருவின் பெலத்தை பிரசங்கமாக்கவோ நமக்கு அவசியமில்லை. நமது வழி நம்முடையதே! தேவனின் விழியும் நமது வழியின் மேலேயே! அப்படியிருக்க, தடைகளைக் கண்டு வழியை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் நமக்கில்லையே.

தேவனுக்கு விரோதமான தலைவர்கள் ஆளும் தேசத்திற்குள்ளும், தேவனுக்கு விரோதமான ஜனங்கள் வாழும் தேசத்திற்குள்ளும் நாம் தள்ளப்படும்போது; நம்முடைய நிலை என்ன? தேவனுடைய திட்டம் என்ன? நாம் அடிக்கடி அறிந்த வேதபகுதிகள்தான் மீண்டும் நமக்குப் பாடங்களாக முன்நிற்கின்றன.

ஜீவரட்சணை : யூதர்கள் சமாரியர்களை ஒதுக்கியதுபோல, எகிப்தியர்கள் எபிரேயர்களை ஒதுக்கிவைத்திருந்தனர். எகிப்தியர் எபிரேயரோடே சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும் (ஆதி 43:32). சாப்பிடவே அருவருப்புப்படுகிறவர்கள், சாப்பாட்டை அவர்களுக்குக் கொடுப்பார்களோ? மாட்டார்களே. பஞ்சத்தில் எகிப்தியர்களிடம் மாத்திரமே உணவு இருந்தால், அதனை தன் ஜனத்திற்கு எடுத்துக் கொடுப்பது எப்படி? இதற்கு விடை கொடுத்தவரே நமது தேவன். எகிப்தின் எல்லைக்குள் தன் ஜனத்திற்குச் சாதகமான மனிதன் ஒருவனை ஊடுருவச் செய்தார், மாத்திரமல்ல, பார்வோனுக்கு நிகராக அவனை உயர்த்தவும் செய்தார். இதை அறிந்த யோசேப்பு : 'ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்' (ஆதி. 45:5) என்று அறிக்கை செய்கிறான். எனக்கு அன்பானவர்களே, தேவ ஜனத்திற்கு ஜீவரட்சணை செய்யும்படிக்கே நாம் புறப்பட்டுப்போகிறோம். எதிரியினால் உண்டாகும் உபத்திரவங்களும், பாடுகளும் 'ஜீவரட்சணை' திட்டத்திலிருந்து நம்மைத் திசை திருப்பவே.

தன்னுடைய ஜனம் பட்டினியில் வாடிவிடக்கூடாது என்பதற்காக, அரண்மனைக்குள்ளேயே யோசேப்பை அனுப்பிவைத்தார் தேவன். தேவ ஜனத்தைக் காப்பாற்றுவதற்காக, தேவ ஜனத்தைப் போஷிப்பதற்காக, தேவஜனத்திற்கு ஆதரவாய் இருப்பதற்காக எதிரியின் எல்லைக்குள் அனுப்பப்பட்டவர்கள் நாம். உள்ளே தொல்லை என்று நாமே வெளியே ஓடிவிட்டால், தேவஜனங்கள் பலர் வாடி நிற்பார்கள்; 'ஜீவரட்சணை' செய்யப் புறப்படுவோம்.

பார்வோனுக்கு முன் தேவனாக : யோசேப்பைக் கொண்டு தன் ஜனத்தை தேவன் காப்பாற்றியபோதிலும், யோசேப்பு மாண்டபோது மீண்டும் தேவஜனத்திற்கு சோதனை உண்டானது. யோசேப்பை அறியாத புதிய ராஜன் எகிப்திலே தோன்றியபோது, 'ஜீவரட்சணை' திட்டத்தினால் காப்பாற்றப்பட்ட இஸ்ரவேலரின் ஜீவனை எகிப்தியர் கசப்பாக்கினார்கள் (யாத். 1:14). கொடுமையாய் வேலைவாங்கினார்கள் (வச. 13), கொடுமையாய் நடத்தினார்கள் (வச. 14), இந்த அனுபவத்திற்குள் தள்ளப்பட்ட தன் ஜனத்தைக் காப்பாற்றவும், மீண்டும் தனது ஜனத்தில் ஒருவனான மோசேயை பிறப்பிலிருந்து காப்பாற்றி அரண்மணைக்குள் அனுப்பினார் தேவன். பார்வோனின் அரண்மனைக் காவலை உடைத்துக்கொண்டு எபிரேயனான மோசேயே தேவன் உள்ளே அனுப்பினார். 'ஜீவரட்சணை' திட்டத்தினால் காப்பாற்றப்பட்டவர்களின் ஜீவனைக் காப்பாற்ற எழுப்பப்பட்டவன் அவன். அரச குடும்பத்திற்குள்ளேயே நுழைத்து, அரண்மனையிலே வளர்த்தார். ஜீவனைக் கசப்பாக்கும் எகிப்தியரிடமிருந்து எபிரேயரை விடுவிக்க கர்த்தர் அவனைப் பயன்படுத்தினார். மோசேயைக் கொண்டு எகிப்து என்ற அரணை உடைத்தார், தன் ஜனத்தை வெளியே கொண்டுவந்தார். இந்த மோசேயின் பொறுப்பு இன்று நம்முடையதல்லவா. சத்துருக்களின் கொடுமையினால், சித்திரவதையினால், கோபத்தினால், செயல்களினால், முட்டுக்கட்டைகளினால் தேவஜனங்கள் தங்கள் ஜீவனைக் கசப்பாக எண்ணும்போது, பார்வோனுக்கு முன்னே தேவனாக நிற்க (யாத். 7:1) அழைக்கப்பட்டவர்கள் நாம் அல்லவா. எலியாவைப் போல நாம் ஒளிந்துகொண்டால், நம்மைக் காப்பாறிக்கொள்ளலாம், ஆனால், ஜீவன்கள் பல பலியாகும்; பதில் நம்முடையதாகும்.

மன்னனுக்கு மனைவியாக : தேவ ஜனத்தை மீண்டும் தொடர்ந்தது ஓர் ஆபத்து. சூசான் அரண்மனையில் இருந்த ஆமான் என்பவன், தேவ ஜனத்திற்கு விரோதமாக திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தான். கொஞ்சமாயிருக்கும் யூதரையும் கொன்றுபோட வகைதேடிக்கொண்டிருந்தான். தேவ ஜனங்களை அழித்துவிடும்படிக்கு ஆமான் துடித்துக்கொண்டிருந்தான். தேவ ஜனத்தை அழிக்க ராஜாவுக்கு கடிதம் எழுதி அனுப்பினான், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும் ராஜாவின் கஜானாவுக்குக் கொடுக்கிறேன் என்று சொன்னான் (எஸ். 3:9). மனைவியின் ஜனத்தாருக்கு வரும் அழிவை அறியாத ராஜா மோதிரத்தினால் அதற்கு முத்திரையும் வைத்தான்; வெள்ளியை நீயே வைத்துக்கொள் என்று மனப்பூர்வமாக ஆமானிடத்தில் கொடுத்தும் விட்டான். அழிக்கப்படப்போகிறது தேவ ஜனம் என்ற அறிவில்லாதவன் அவன்; ஆகையால் அப்படிச் செய்தான். ஆனால், அவனது மனைவியாகிய எஸ்தரோ 'அழிக்கப்படப்போவது தேவஜனம்' என்பதை அறிந்துகொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ச்சியாக அல்ல, ஒரே நாளில் அழித்துவிடவேண்டும் என்பதுதான் ஆமானின் திட்டமாயிருந்தது (எஸ்தர் 3:13). பார்வோன் போட்டிருந்த திட்டத்தைக் காட்டிலும் ஆமானுடைய திட்டம் கொடுமையானது.

ஆமான் இந்த திட்டத்தைத் தீட்டும்போது, அரண்மனைக்குள் தன் ஜனத்தில் ஒருத்தியை மன்னனுக்கு மனைவியாக்கிவைத்திருந்தார் தேவன். மனைவியின் வார்த்தைகளுக்கு மடியுமளவிற்கும் கணவனை (ராஜாவை) மாற்றியிருந்தார். ஆமான் தேவ ஜனத்தை அழிக்க திட்டம்போட்டுக்கொண்டிருந்தபோது, கோபங்கொண்டிருந்தபோது, அவனுக்கும் ராஜாவுக்கும் விருந்துகொடுத்து அதனை வெளிப்படுத்தினாள் எஸ்தர். 'எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும்' என்று அழைப்பு விடுத்தபோதும், இரண்டாம் நாள் விருந்தின்போதும், ராஜா எஸ்தரைப் பார்த்து கேட்டபோது (எஸ்தர் 72), ராஜாவே, என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக (எஸ்தர் 7:3) என்றாள். ஆமானுடைய மனைவி சிலுவையை செய்யும்படி ஆலோசனை சொன்னாள், ராஜாவின் மனைவியோ அந்தச் சிலுவையை ஆமானுக்கே மாற்றிவிட்டாள். அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன், அழிக்கப்படுவதை சம்மதிக்கமுடியாது (எஸ்தர் 7:4) என்பதுதான் எஸ்தரின் வைராக்கியம். நாம் அடக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்டாலும் ஒருவேளை தேவன் மௌனமாயிருக்கலாம்; ஆனால். அழிக்கப்பட அவர் அனுமதிக்கமாட்டார். பிரினமானோரே! தேவஜனமே! நமக்கான அழிவின் சட்டம் எழுதப்படும்போது, அதை அழிப்பதற்காக அரண்மனைக்குள்ளே ஒரு நபரை அனுப்புவார் நமது தேவன்; திடன்கொள்ளுங்கள், ஜெயம் நம்முடையதே!

எங்கள் தேவன் தப்புவிப்பார் : தானியேலின் நாட்களில், தேவ ஜனத்திற்கு எதிராக வந்த நேபுகாத்நேச்சார், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும், அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாiஷயையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான் (தானி 1:3,4). தேவனைப் பற்றிய அறிவை அழித்துவிட்டு, தன்னைப் பற்றிய அறிவை உட்புகுத்த நினைத்தான் ராஜா. அத்தோடு மாத்திரமல்ல, தேவ ஜனத்தின் உணவை மாற்றி, தன்னுடைய பாரம்பரிய உணவினைக் கலக்க நினைத்தான். இத்தனை அறிவையும் கொடுத்துவிட்டால், தங்கள் தேவனை அவர்கள் மறந்துவிடுவார்கள் என்று ராஜா நினைத்தான்போலும். தானியேல் மற்றும் அவனோடு நின்ற மூன்று வாலிபர்களின் பெயரையும் மாற்றினான்; ஆனால், அவர்களோ தங்கள் போஜனத்தை விட்டு மாறவில்லை. தேவனோடு தாங்கள் கொண்டிருந்த தீர்மானத்தின்படி எப்படி வாழவேண்டும் என்று விருப்பப்பட்டார்களோ, தன் வாழ்க்கையைக் குறித்து நிர்ணயம் பண்ணியிருந்தார்களோனோ, அதிலிருந்து விலகும்படி எவர் தள்ளினாலும், அவர்களது ஆலோசனையினைத் தள்ளி ஆண்டவர் பக்கத்திலேயே தனது வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொண்டார்கள். இதையே இன்றைய நாட்களிலும் சத்துரு செய்ய விரும்புகின்றான். அவனது அறிவை நம்முடைய மூளையில் ஏற்றி அவரை மறக்கச் செய்யவிரும்புகினான்.

தேவன் ராஜாவுக்கு முன்பாக அவர்களை சமர்த்தர்களாக்கி, சமஸ்தானத்தில் அமர்த்தினார். அது மாத்திமல்ல, தானியேல் சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கியபோது, 'நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கினான்'. அவனை தேவனாகப் பார்த்தான் (தானி. 2:46). மறைபொருளை தன் ஊழியர்களிடத்தில் வெளிப்படுத்தி, சத்துருவை மண்டியிடவைப்பவர் நம்முடைய தேவன். ஆனால், பொற்சிலையை வணங்கவேண்டும் என்று சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற தானியேலின் தோழர்கள் ஆநிர்ப்பந்தப்படுத்தப்பட்டபோது, 'உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்?' என்றான் நேபுகாத்நேச்சார் (தானி. 3:15). அவர்கள் வணங்க மறுத்தபோது, அக்கினிச் சூளையை ஏழுமடங்கு சூடாக்கி அதிலே அவர்களைப் போட்டான்; தேவன் தப்புவித்தார். தானியேலுக்கு மாத்திரமல்ல, அவன் தோழருக்கும் அவரே தேவன் என்பதை அந்நிகழ்வினால் அறிந்துகொண்டான் அவன்.

நான் உன்னை வணங்குகிறேன், நீ என்னை வணங்கு என்பது சத்துருவின் தந்திரம். நேபுகாத்நேச்சார் தானியேலை வணங்கியதால், தானியேல் தன்னை வணங்குவான் என்று நேபுகாத்நேச்சார் எதிர்பார்த்தான்; ஆனால், அது நடக்கவில்லை. இப்படிப்பட்ட சத்துருவின் சதிக்குள் நாம் ஈர்க்கப்பட்டுப்போய்விடக்கூடாது. அரண்மனையில் இருந்தாலும், ஆண்டவரோடு கூடவே இருப்போம். அரண்மனை கைவிட்டாலும், ஆண்டவர் காப்பாற்றுவார். அரண்மனைக்கு உள்ளே இருந்தாலும் அவர் பாதுகாப்பார், அரண்மனைக்கு வெளியே இருந்தாலும் அவர் பாதுகாப்பார். பூட்டிய அறையாயிருந்தாலும் சீஷர்களோடு இருப்பார், வெளியிலேயும் எம்மாவுக்குப் போன சீஷர்களோடு நடப்பார். நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. தன் ஜனங்கள் வெளியே போகவேண்டுமென்றால் எகிப்தை உடைப்பார், தன் ஜனங்கள் உள்ளே போகவேண்டுமென்றால் எரிகோவை உடைப்பார்.

யோசேப்புக்குப் பின் இஸ்ரவேல் ஜனம் மறக்கப்பட்டதுபோல, பின்; நாட்களில் இந்நால்வரும் மறக்கப்பட்டனர். தரியு ராஜாவின் நாட்களில், உம்மைத் தவிர வேறு எந்த தேவனையாகிலும் வணங்கினால், அவன் சிங்கக்கெபியில் போடப்படவேண்டும் என்று எதிரிகள் ராஜாவுக்கு ஆலோசனை கொடுத்தபோது. தானியேலைத் தப்புவிக்க முடியாமல், தண்டனையையே நிறைவேற்றும் நிலைக்கு ராஜா தள்ளப்பட்டிருந்தாலும்; தேவன் தானியேலைத் தப்புவித்தார். அரணுக்குள்ளே அவனைக் காப்பாற்ற அவரே வந்தார். வணங்கப்படவேண்டும், என்று சொல்லப்பட்ட ராஜாவே 'நீ இடைவிடாமல் ஆராதிக்க உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்' என்றான் (தானி. 6:16). தேவ ஜனமே, உனக்கு விரோதமாக எழுதப்படும் தாக்கீதுகளைக் குறித்து தளர்ந்துபோகாதே, விடுவிப்பவர் யார்? என்று கலங்கி நிற்காதே. முன்னேறுவோம் நாம்; நம்மை முடக்குவாரில்லை. ஆணைக்குப் பயப்படாமல், அவருக்குப் பயப்பட்டால், அவரே நமக்கு அரணாயிருப்பார்.

ஏரோது பேதுருவை சிறைச்சாலையில் அடைத்துவைத்தான். இரண்டு சங்கிலிகளினாலே பேதுரு கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. தூதன் பேதுருவை தட்டி விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது (அப். 12:7). சிறைச்சாலையை வெளியே இருந்து திறக்கவில்லை தூதன், உள்ளே இருந்து திறந்தான்; இதுதான் தேவனது முறைக்கும், மனிதனுடைய முறைக்கும் உள்ள வேறுபாடு. ஜெயிலுக்கு வெளியே நின்று கூச்சல் போடுபவரல்ல அவர், உள்ளே இருந்து உடைத்துவிடுகிறவர்.

அசீரியா ராஜா தன் ஜனத்திற்கு விரோதமாக எழும்பிவந்தபோது, கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளையத்தில் லட்சத்தொண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள் (2இராஜா. 19:35). அசீரியா இராஜா தேவஜனங்கள் வாழும் தேசத்திற்குள் வரும் முன்னதாக, தேவதூதன் அசீரியருக்குள் நுழைந்துவிட்டான்; போரையும் வெற்றியாய் முடித்துவிட்டான். தேவஜனம் புறப்படும் முன்னர், தேவன் புறப்பட்டார். விடிந்திருக்கும் முன்னர் போர் முடிந்திருந்தது.

என்னை விடுவிக்க யார் வருவார்? என்னைச் சந்திக்க எவரும் வரமுபடியாத நிலையில் நான் அடைக்கப்பட்டுவிட்டேனே? இனிமேல் என் வாழ்வின் கட்டுகளை எவராலும் அவிழ்க்கவே முடியாது, முடிவை நோக்கியதுதான் என் பயணம் என்று நொந்துகொண்டு வாழ்கையை நகர்த்துவோரே, எனவே சோர்ந்துபோகவேண்டாம். அருகில் பாருங்கள் அவர் உங்கள் உடனேயே இருக்கிறார். உங்களுக்காக அரண்மனையிலும் அவர் உண்டு, உங்களருகிலும் அவருண்டு. எனக்குப் பிரியமானவர்களே, தேவனது முறையைத் தெரிந்துகொள்ளுவோம், தேவயற்ற கவலையினின்று பிரிந்து வாழ்வோம். அவர் தன் ஜனத்தை ஒருபோதும் கைவிடுகிறவரல்ல. 











Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...