Skip to main content

சவுலாக மாறிய சாலமோன்

 

சவுலாக மாறிய சாலமோன்

 

சாலமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபோது, அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான் (1இராஜா. 11:43). சாலமோனின் வாரிசு என்பதால் ரெகொபெயாமுக்கு வந்த பதவி அது. வாரிசு அடிப்படையில் ராஜ பதவி கிடைத்திருந்தபோதிலும், ஜனங்களும் அந்த வாரிசை ராஜாவாக ஏற்றுக்கொள்ளவேண்டுமே. எனவே, ரெகோபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் சீகேமுக்கு ஒன்றாகக் கூடிவந்திருந்தார்கள் (1இராஜா. 12:1). ஜனங்கள் ரெகொபெயாமை நோக்கி: உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள். (1இராஜா. 12:4)

ஜனங்களின் வார்த்தைகளைக் கேட்ட ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள் (1இராஜா. 12:6,7). ரெகொபெயாமின் அரசாட்சிக்குத் தேவையான நல்லதோர் ஆலோசனையினை கொடுத்தார்கள் முதியவர்கள். அவர்கள் சாலமோனின் ஞானத்தையும் அறிந்தவர்கள், சாலமோனின் வீழ்ச்சியையும் அறிந்தவர்கள். கர்த்தருக்காக சாலமோன் செய்த மாபெரும் காரியங்களையும் அறிந்தவர்கள், கர்த்தரை விட்டு விலகி அந்நிய தெய்வங்களுக்கு கோயில்களை உண்டாக்கியதையும் அறிந்தவர்கள் அவர்கள். சாலமோனின் ஆட்சியும் தெரியும் வீழ்ச்சியும் தெரியும் அந்த முதியவர்களுக்கு. சாலமோனைக் குறித்து இத்தனை அறிவு கொண்டிருந்த அந்த முதியவர்கள், சாலமோனின் வீழ்ச்சியைக் காக்கமுடியாவிட்டாலும், குமாரனான ரெகொபெயாமின் ஆட்சியையாவது வீழ்ந்துவிடாமல் காக்கவேண்டும் என்று விரும்பினார்கள். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன் (மத் 20:27) என்று இயேசு சீஷர்களுக்குக் கொடுத்த ஆலோசனையைப் போலவே, இந்த முதியவர்களும் ரெகொபெயாமை ஜனங்களுக்கு 'சேவகனாகும்படி' ஆலோசனை சொடுத்தனர். ஆனால், ஆட்சி பீடத்தில் அரசனாக அமர்ந்திருந்த ரெகொபெயாமுக்கோ முதியோரின் இந்த ஆலோசனை தகுந்ததாகத் தென்படவில்லை. அரசனாக வீற்றிருக்கும் என்னை சேவகனாகும்படி ஆலோசனை கொடுக்கின்றனரே என்று, முதியவர்களின் ஆலோசனையினைத் தள்ளிவிட்டான் ரெகொபெயாம் .

அதிகாரமும், பதவியும் கிடைத்த பின்பு நான் சேவகனாவதா என்பதே இன்றைய நாட்களிலும் பலரது போராட்டமாயிருக்கின்றது. அதிகாரம் என் கையிலே, நான் சொல்வதைத்தான் இனிமேல் ஜனங்கள் கேட்கவேண்டும், ஜனங்கள் சொல்வதையெல்லாம் நான் கண்டுகொள்ளத் தேவையில்லை என்ற மமதை அநேகரை ஆட்கொள்கின்றது. அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குச் சாதகமாக ஆலோசனை கொடுப்போரையே ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர்களைச் சுற்றி இருப்பவர்களும், அவருக்குப் பிரியமான, விரும்புகின்ற ஆலோசனையையே கொடுக்கின்றனர். இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள் (1இரா 22:6). சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள் (1இரா. 22:12). மிகாயா தீர்க்கதரிசியை அழைத்தபோது, மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான் (1இரா 22:13). தங்களைப் புகழ் பாடுபவர்களையே தங்களைச் சுற்றிலும் வைத்துக்கொண்டிருக்கும் தலைவர்கள் இத்தகைய ஆபத்தில் அகப்பட்டுக்கொள்வார்கள். தாங்கள் மனதில் நினைப்பதற்கு இசைவாக ஆலோசனை கொடுப்பவர்களையே விரும்பும் தலைவர்களுக்கு ரெகொபெயாமிற்கு நடந்ததுபோலவே நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முதியோரின் ஆலோசனை தனக்குப் பிரியமாயிராததினால் அதனைத் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து, தன் சமூகத்தில் நிற்கிற வாலிபரோடே ரெகொபெயாம் ஆலோசனை பண்ணினான் (1இராஜா. 12:8). அவர்களிடத்திலிருந்து அவனுக்குச் சாதகமான பதில் வந்தது. அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார்; நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும். இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார்; நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன், என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார்; நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்ல வேண்டும் என்றார்கள் (1இரா 12:10,11). சாலமோனின் சமூகத்தில் நின்று, கர்த்தர் கொடுத்த சாலமோனின் ஞானத்தைக் கேட்ட முதியவர்களின் ஆலோசனையினை ரெகொபெயாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த முதியவர்கள் அவனது கண்களுக்கு முக்கியமானவர்களாகத் தென்படவில்லை. அந்த முதியவர்களைக் கொண்டு தனது ராஜாங்கத்தைக் கட்டவும் அவன் முற்படவில்லை. தன்னோடு கூட வளர்ந்த வாலிபர்களே அவனுக்கு முக்கியமாகத் தோன்றினர்.

ரெகொபெயாம் முதியவர்களின் ஆலோசனையைத் தள்ளிவிடுவதள்கும் இத்தகைய சிறு கூட்ட வாலிபர்களே காரணம். ஊழிய ஸ்தாபனங்களிலும் இந்நாட்களில் இத்தகைய நிலை உருவாகிவருகின்றது. ஊழியத்தைத் தொடங்கிய ஒருவரது மரணத்திற்குப் பின், ஊழியத்தின் பிரதானமான பொறுப்புக்களில் அமர்த்தப்படும் அவரது பிள்ளைகள், தகப்பன் சமூகத்தில் நின்று அவருடன் பணி செய்தவர்களைத் தள்ளிவிடுகின்றனர். அவர்களது ஆலோசனையை அற்பமாக எண்ணுகின்றனர். முதியோர் தங்களுடன் இருப்பது, தங்களது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை என அவர்களுக்குத் தோன்றுகின்றது. அவர்கள் காலாட்களோடே (கூட இருக்கும் வாலிபர்களோடே) ஓடுகிறவர்கள், குதிரைகளோடு (முதியோரோடு) சேர்ந்து ஓடத் தெரியாதவர்கள் (எரே. 12:5); முதியோரின் ஞானத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாதவர்கள்; முதியோரின் சொல்லுக்கு கீழ்ப்படிய விரும்பாதவர்கள். முதியோர் தங்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது, அவர்கள் தங்கள் மேல் ஆளுகை செய்கிறார்கள் என்ற தவறான எண்ணம்கொள்பவர்கள். அவர்களது ஆலோசனை எல்லாம், அவர்களுடன் வளர்ந்த, படித்த, விளையாடிய வாலிபர்களுடனேயே.

தலைவனைச் சுற்றி நிற்கும் மக்கள் கூட்டம் தலைவனையே திசை திருப்பிவிடும் வலிமை உள்ளது. தேவ சமூகத்தில் அமர்ந்து, ஜெபத்தோடு எடுக்கவேண்டிய முடிவுகள் பலவற்றை, தலைவர்கள் பலர் தன்னோடு தன்னைச் சூழ்ந்து நிற்கும் சிலரைக் கொண்டே எடுத்துவிடுகின்றனர். தலைவனோ எடுப்பார் கைப்பிள்ளையாகிப்போகிறான். தலைவனை தேவன் இயக்க இடங்கொடுக்காமல், சுற்றியுள்ளோர் இயக்கும் நிலை உண்டாகிவிடுகின்றது. நாம் தலைவர்களாக இருந்தால், உடன் இருப்போரைக் குறித்து எச்சரிக்கையாயிருப்போம். அவர்கள் தங்கள் பசியை நம்மைக் கொண்டு ஆற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு; தங்கள் பகையை நம்மைக் கொண்டு தீர்த்துக்கொள்ள வாய்ப்பு உண்டு; தங்களுக்கு விருப்பமில்லாத நபரை நம்மைக் கொண்டு பழிவாங்க வாய்ப்பு உண்டு. கூடியிருப்போரின் கூண்டுக்குள் தலைவன் ஒருவன் சிக்கிக்கொண்டானென்றால், அவன் தலைவனாக இருந்தாலும் சிறைக் கைதியே.அலுவலகத்தில் எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள், அந்த சிறு கூட்டத்தில் எடுக்கப்பட்டுவிடும். அந்த சிறு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையே அலுவலகத்தில் நிறைவேற்றும் நிலை தலைவனுக்கு உருவாகிவிடும். சுருங்கச் சொன்னால், இத்தகைய தலைவன் 'பொம்மை' யாகவே மாறிவிடுவான். கூட இருப்போரின் கூண்டுக்குள் நாம் அடைக்கப்பட்டுவிடாதபடி நம்மைக் காத்துக்கொள்ளுவோம்.

உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே (நீதி 27:10) என்று தகப்பன் எழுதி வைத்திருந்தும், மகனாகிய ரெகொபெயாம் அதற்குக் கீழ்ப்படியவில்லையே. ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும் (நீதி 11:14). பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டது போல (லூக். 7:30), ரெகொபெயாமும் முதியோரின் ஆலோசனையைத் தள்ளி தனக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டான். வாலிபர்களின் ஆலோசனையின்படியே ஜனங்களுக்கு ரெகொபெயாம் உத்தரவு கொடுத்தபோது, 'தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள்' என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடும் 1இரா 12:16) நிலை உண்டானது. தலைவனை இயக்கும் ஒரு சிறிய கூட்டத்தினரால், ஒரு பெரிய வீடு உடைந்து போனது. இன்றும், சபைகளை விட்டோ, ஊழியத்தை விட்டோ மக்கள் ஓடிப்போகும் நிலை உருவாகுமென்றால், தொடருமென்றால், தலைவர்கள் தாங்கள் எவ்விடத்தில், யாருடன் கூட இருக்கிறோம் என்பதையும், முடிவுகளை தேவ சமூகத்தில் எடுக்கிறோமா அல்லது சுற்றி நிற்கும் நண்பர்களின் சமூகத்தில் எடுக்கிறோமா என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். ஒரு பெரிய வீட்டை வீழ்த்துவதற்கு சத்துரு ஒரு சிறிய கூட்டத்தைப் பயன்படுத்துவதைஅடையாளம் கொண்டு அகன்றுசென்றால் மாத்திரமே இந்த ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

சவுல், கர்த்தருக்கு விரோதமான காரியத்தைச் செய்தபோது, கர்த்தர் தாவீதை அவன் சிங்காசனத்தில் ராஜாவாக அபிஷேகம் செய்தார். சவுலின் மரணத்திற்குப் பின்னரே தாவீது ராஜாவாக சிங்காசனத்தின் அமருவான் என்றபோதிலும், தனக்குப் பின் தனது சிங்காசனத்தில் தாவீது அமரக்கூடாது என்ற எண்ணத்தோடு தாவீதைக் கொல்ல முயற்சித்தான் சவுல். சவுல் தாவீதை தனது ஆயுததாரியாக வைத்துக்கொள்ள விரும்பினான் (1சாமு. 16:21), ஆனால் தாவீது தேசத்தை ஆளுவதை விரும்பவில்லை. தாலந்து படைத்தவர்களும், திறமை படைத்தவர்களும் உடனிருந்தபோதிலும், அவர்களைக் கொண்டு அநேக காரியங்களைச் செய்துகொண்டிருந்தபோதிலும், ஆளும் அதிகாரத்தையோ ஊழியர்கள் பலர் தங்கள் வாரிசுகளுக்கே கொடுக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். தனது வாரிசுகளுக்கு இடையூராய் இருப்பவர்களை இடத்தை விட்டு அகற்றுவதும், விடைகொடுத்து வெளியேற்றுவதும் அத்தகையோருக்கு வழக்கமாகிவிடுகின்றது. ஆவிக்குரிய சபைகளும், ஊழிய ஸ்தாபனங்களும் இதற்கு விலக்கல்ல.வாரிசுகளுக்காக ஊழியத்தையே விலைக்கிரயம் செலுத்திவிடுகின்றனர் பல ஊழியர்கள்.

கர்த்தர் சாலமோனுக்குக் கற்பித்ததைக் அவன் கைக்கொள்ளாமற்போனதினால், அவன்மேல் கோபமானார். ஆகையால் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன் (1இரா 11:10,11) என்றார். சாலமோன் கர்த்தருக்கு விரோதமான காரியங்களைச் செய்தபோது, கர்த்தர் யெரொபெயாமை ராஜாவாக அபிஷேகம் செய்தார். எனது வாரிசு மற்றும் எனது மகன் ரெகொபெயாமுக்குக் கிடைக்கவேண்டிய பதவி யெரொபெயாமுக்குக் கிடைக்கப்போகிறது என்பதைக் கேள்விப்பட்டசாலமோன், சவுலாக மாறிவிட்டான், சவுல் தாவீதைக் கொல்லத் துடித்ததுபோல, சாலமோன் யெரொபெயாமைக் கொல்லத் துடித்தான், துரத்தினான். யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்குச் சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய், சாலமோன் மரணமடையுமட்டும் எகிப்தில் இருந்தான் (1இரா 11:40; 12:2).

எத்தனையாய் துரத்தினாலும், கொல்லத் துடித்தாலும் ஓடிப்போன தாவீதே சிங்காசனத்தில் அமர்ந்தான். அப்படியே, சாலமோன் யெரொபெயாமைக் கொல்லத் துடித்தாலும், துரத்தினாலும் கர்த்தர் யெரொபெயாமின் கையிலேயே ராஜ்யத்தைக் கொடுத்தார். சபைகளிலோ, ஊழிய ஸ்தாபனங்களிலே வாரிசான தனது பிள்ளைக்கு இவர்கள் மூலமாய் ஆபத்து என்று கண்டு, அவர்களை வெளியேற்றுவதும் தலைவர்கள் சவுலைப் போன்றவர்களே. தாவீதுக்கும், யெரொபெயமுக்கும் ராஜ்யம் கொடுக்கப்பட்டது போல, இப்படிப்பட்டவர்களின் ஊழியமும் சபையும் ஓடிப்போனவர்கள் கையில் தேவனால் ஒப்புக்கொடுக்கப்படும்.

சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை (கலா 4:1). ஆனால், இதனையே இறுதிவரை சுதந்தரவாளியினிடத்தில் அடிமையானவன் எதிர்பார்க்கமுடியாது. ஊழியர்களின் பிள்ளைகள் வாரிசுகளாக, சுதந்தரவாளிகளாக மாறும்போது, அத்தகைய வித்தியாசம் காணப்படக்கூடாது என்று விரும்புபவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். ஊழியர்களின் பிள்ளைகள் இன்று சிறுவர்களாக இருந்தாலும், ஒரு காலத்தில் உனக்கும் மேலே வைக்கப்படலாம், இந்த ஊழியத்திற்கு நானே எஜமானன் என்று நினைக்கும் ஊழியர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே அனைத்திற்கும் அதிகாரிகளாக வைப்பார்கள். அதிகாரத்தை அடுத்தவரிடத்தில் அளிக்கத் தயங்குவார்கள். இப்படி உயர்ந்த நிலையில் வைக்கப்படும் சுதந்தரவாளிகள், மூத்தோரின் ஆலோசனைகளை மதிக்காததினால், ஆபத்துக்களை தாங்களை வருவித்துக்கொள்கிறார்கள். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி