காவலில் தேவன் நம்மை அடைத்துவைப்பதற்கும், கலாற வெளியிலே அலையவிடுவதற்கும் உண்டான காரணங்களை நாம் அறிந்துகொள்வோமென்றால்; கண்ணீர் விடுவதற்குப் பதிலாக, அவரது பாதத்தில் காத்திருக்கவும், காவல் முடியும் காலம் வரை அவரையே சார்ந்திருக்கவும் நாம் ஆயத்தமாகிவிடுவோம். முடக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் முழங்காலில் நிற்பதற்கே என்பதை புரிந்துகொண்டால், அடைக்கப்பட்டிருக்கும் வாசல்கள் திறக்கப்படுவதற்கு அல்ல, ஜெபத்தினால் வானம் திறக்கப்படுவதற்கு எதிர்பார்த்திருப்போம். காவலை நினைத்து நினைத்து கனத்த இதயத்துடன் அல்ல; மாறாக, காவலுக்குப் பின் தொடரவிருக்கும் கர்த்தரது தரிசனத்தின் நிறைவேறுதலுக்கான கனவுடன் நித்தமும் விழித்திருப்போம். சுரக்கும் பாலை பாலை சுற்றத்தாருக்குப் பகிர்ந்தளிப்பதற்காகவே சுவருக்குள் தான் கட்டப்பட்டிருப்பதனை பசுமாடு உணர்ந்துகொள்ளாவிட்டால், கால்நடையாய் சுற்றிக்கொண்டிருக்கும் காளைகளைப் பார்த்துதான் தினம் தினம் அது கவலைகொள்ளும்; அவ்வாறே, பாரஞ் சுமக்கிறதற்காகவே தான் வெளியிலே விடப்பட்டிருக்கிறேன் என்பதையும், வண்டிலிலே பூட்டப்பட்டிருக்கிறேன் என்பதையும் காளை மாடு உணர்ந்துகொள்ளாவிட்டால், கட்டப்பட்டு வேளைக்கு வேளை தன்னைத் தேடிவரும் உணவை உண்டுகொண்டிருக்கும் பசுவைப் பார்த்துதான் காளை கவலை கொள்ளும்.
எனவே வெளியிலே விடப்பட்டிருப்பதற்கான காரணத்தையும், உள்ளே அடைபட்டிருப்பதற்கான காரணத்தையும் நாம் உணர்ந்துகொள்ளாவிடில், பிறரைப் பார்த்து பார்த்து பொறாமை கொள்ளும் வாழ்க்க்கைக்குள் நம்மை நாமே பொதிந்துவைத்துவிடுவோம், புதைத்துவிடுவோம். அத்தகைய கவலை என்னும் காவலில் அடைப்பது ஆண்டவரல்ல, பிசாசும் அல்ல, நாமே நம்மை அடைத்துவிடுவோம். பிறரைப் பார்க்கும்போது, அவர்களைப் போன்ற வாழ்க்கையும், வசதிகளும், வேலையும், பொருளாதாரமும் நமக்குக் கிடைக்கவில்லையே என்றே பொருமிக்கொண்டேயிருப்போம். பொறுமை நமது வாழ்க்கைக்குத் தூரமாகிவிடுவதுடன், நம்முடைய வழியையும், நமக்கென கர்த்தர் வகுத்து வைத்திருக்கும் சித்தத்தினையும் மறந்து, மறுத்து பிறரைப் போல மாறிவிடவேண்டும் என்ற நினைவுடனேயே நித்தம் நித்தம் இலக்கை மறந்து இயங்கத் தொடங்கிவிடுகின்றோம். எதற்காக நாம் அழைக்கப்பட்டோமோ? உருவாக்கப்பட்டோமோ? அந்த உருவத்தையே உலகத்தில் இறுதியில் இழந்து நிற்போம்.
காவலுக்கான காரணங்களை நாம் உணர்ந்துகொள்ளும் முன்னதாக, காவலுக்கான அரண்களைக் காட்டி காட்டி நம்மை கண்ணீர் வடிக்கவைப்பதும், காவலின் முடிவிற்காகக் காத்திருக்க விடாமல், இடையிலேயே காவலரண்களை உடைத்துக்கொண்டு வெளியேற ஆலோசனகளையும் அறிவுரைகளையும் கொடுத்து தேவனுக்கு விரோதமாக நம்மை செயல்பட வைப்பதுமே சத்துருவின் தந்திரம்; இது, கர்த்தருடைய பிள்ளைகளுக்கு எதிரான சத்துருவின் யுத்தம். சத்துருவின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, கர்த்தரின் காலத்திற்குக் காத்திராமல், அவர் தங்களை விடுதலையாக்கும் வரை பொறுத்திராமல், காவலிலிருக்கவேண்டிய காலத்தில் தாங்களாகவே வெளியேறி, கர்த்தருடைய சித்தத்திலிருந்து சிதைந்துபோய்விட்டவர்கள் அநேகர்; இவர்களுடைய வாழ்க்கையில் சத்துரு ஜெயம் பெற, கர்த்தருடைய வழியோ அடைபட்டுவிடும். காலத்திற்கு முன் வெளியேறும் சிசுவைக் காப்பாற்றுவதும், பராமரிப்பதும் எத்தனை சிரமமான காரியமோ; அப்படியே, இத்தகைய மனிதர்களைச் சீரமைக்க விரும்புவோரின் செயல்களும் சிரமமானதே.
நாம் அடைக்கப்பட்டிருப்பதின் பிரதான நோக்கம், அவரோடு மாத்திரம் நேரத்தைச் செலவிடுவதற்காகவே. எனவே, அவரோடு நேரத்தைச் செலவிட்டுச் செலவிட்டு, ஆவிக்குரிய வாழ்க்கையின் உயிரை மென்மேலும் உரமேற்றி உரமேற்றி, அடைப்பு விலகும் நேரத்தில் ஆவிக்குரிய அசுரர்களாக உலகத்திற்குள் வலம்வரவேண்டியதே நமது பொறுப்பு. கர்த்தர் அடைத்துவைத்திருப்பதைக்கூட கண்டுகொள்ள இயலாமல், எல்லா காவலையும் சத்துருவின் மேலேயே சுமத்துவது காரணமற்றது. கர்த்தர் அனுமதித்திருக்கும் பெலவீனங்களைக்கூட சுமக்க இயலாத பெலவீனர்களாக நாம் காணப்படக்கூடாது. பிசாசினாலேயே முள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அது ஆண்டவரால் அனுமதிக்கப்பட்டதாயிற்றே! (2 கொரி. 12:9) அப்படியிருக்க, அந்த முள்ளிற்காக பிசாசைக் கடிந்துகொள்வதும் தவறுதான், ஆண்டவரிடத்தில் அழுதுகொண்டேயிருப்பதும் தவறுதான்; இவை அனைத்தையும் விட்டு விட்டு, கிருபைக்குக் காத்திருப்பதுதான் பிள்ளைகளான நமக்க பிரதானமானது.
பவுலின் கரங்களால் சில நிரூபங்களை கறப்பதற்காகவே, சிறையில் அவரை சிலகாலம் அடைத்துவைத்திருந்தார். அந்த பசு அன்று அடைக்கப்பட்டிருக்காவிட்டால், இத்தனை ஞானப்பாலான நிரூபங்கள் நமக்கு எப்படி கிடைத்திருக்கும்? ஒரு குமாரனைப் பெற்றெடுப்பதற்காகவும் சிறைக்குள் பவுல் அடைக்கப்பட்ட அனுபவம் உண்டே. 'கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்' (பிலே 1:10) என்றல்லவோ தனது காவலின் பலனை பவுல் வர்ணிக்கிறார். நாமும் கண்ணீரை விட்டு விட்டு, காவலின் பலனைக் காண நிதம் நிதம் காத்திருப்போம்.
Comments
Post a Comment