நற்கிரியை
இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத் 26:10)
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத் 5:16) என்று நற்கிரியைகளைச் செய்யும்படியாக இயேசு ஜனங்களை உற்சாகப்படுத்தினார். அப்படியே பேதுருவும், புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் (1பேது 2:12) என்று எழுதுகின்றார். மேலும், இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக (எபி 13:21) என்று எபிரேய ஆக்கியோனும் எழுதுகின்றார்.
மேற்கண்ட மூன்று வசனங்களும், நற்கிரியைகளைத் தொடர்ந்து மகிமை தேவனுக்கே சென்றடைகின்றது என்ற சத்தியத்தையே நமக்கு உணர்த்துகின்றன. ஆம் அன்பானவர்களே, நாம் எந்த கிரியைகளைச் செய்தாலும், மகிமை தேவனுக்கே. நற்கிரியைகளை நாம் செய்யப்பழகாவிடில், நாம் கனியற்றவர்களாக மாறிவிடுவோம்; எனவே நற்கிரியைகளைச் செய்வதில் ஜாக்கிரதையாகவும், ஆயத்தமாகவும் இருப்போம் (தீத்து 2:14; 3:1,8,14) என்று தீத்துவுக்கு எழுதுகின்றார் பவுல். 1தீமோ 2:10, 5:10, 5:25, 6:18, 2தீமோ. 2:21,3:16 போன்ற வசனங்களில் தீமோத்தேயுவுக்கும் நற்கிரியைகள் செய்வதையே நல்லாலோசனையாக கடிதத்தில் எழுதுகின்றார்.
இந்த உலகத்தின் மனிதர்கள் நற்கிரியைகளைச் செய்து, மனிமையை தாங்கள் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். அன்னதானம், இலவசம், உதவிகள் என்ற பெயரில் செய்யப்படும் நற்கிரியைகள் அனைத்தும் அவர்களது பெயர் பிரஸ்தாபத்தை உண்டாக்குவதையே பிரதானமாகக் கொண்டுள்ளது. அரசியல்வாதிகள், தேசத்தலைவர்கள் தங்கள் தலைகளை மக்கள் மத்தியில் உயர்த்துவதற்காக இத்தகைய நற்கிரியைகளைக் கையில் எடுக்கின்றனர். ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றும் நாமோ, நற்கிரியைகளைச் செய்து தேவனை மகிமைப்படுத்தவேண்டியவர்கள். நாம் செய்யும் நற்றிகிரியைகள் ஒவ்வொன்றையும் கண்டு, பரலோகத்தில் உள்ள பிதாவை ஜனங்கள் மனிமைப்படுத்தவேண்டும். நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது (மத் 6:3) என்று நற்கிரியைகள் செய்வதின் அஸ்திபாரச் சத்தியத்தைக் கற்றுக்கொடுத்தார் இயேசு. ஆனால், சத்துருவோ இன்று நம்மை வஞ்சிக்கப்பார்கிறான். அநேகருக்குத் தெரியும்படி நாம் செய்யவேண்டும் என்ற விருப்பத்தை இதயத்தில் விதைக்கிறான்; இதில் விழுந்துபோன ஊழியர்கள் அநேகர். இந்த உலகத்தில் நாம் செய்யும் நற்கிரியைகள், இலட்சக்கணக்கான மனிதர்களுடைய மனங்களில் அல்ல பரலோகக் கணக்கில் எழுதப்படவேண்டியது என்பதை அறிவில் கொள்ளுவோம். மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 6:2) என்றார் இயேசு. முன் நிற்கும் மாயையைக் காண்பித்து, பரலோகத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றவர்களாக நாம் காணப்படக்கூடாது. இன்றைய நாட்களில் பல ஊழியர்கள்த தாங்கள் இத்தனை வருடங்கள் ஊழியத்தில் இருந்திருக்கிறேன் என்று 10 ஆண்டுகள், 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள் என்று கொண்டாடத் தொடங்கிவிட்டனர். இந்த விழாக்களில் பேசுவோரும் ஊழியரையே புகழாரம் சூட்டுகின்றனர். நற்கிரியைகளைச் செய்துகொண்டிருந்த அந்த ஊழியரை முடிவில், தேவனது முடியில் உள்ள மகிமையையே திருடும்படிச் செய்து சத்துரு மொட்டையடித்துவிடுகின்றான். வாழ்க்கையின் கடைசி நாட்களில் ஊழியத்தை சாதனைகளாக நினைத்து நினைத்து ஊழியர்களைச் சரிந்துவிழும்படிச் செய்துவிடுகின்றான். இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று (தானி 4:30) என்று நேபுகாத்நேச்சார் சொன்னதைப் போல சொல்லிக்கொண்டிருக்கும் ஊழியர்கள் இன்றும் உண்டு; அவர்களின் பின் நிலமை பரிதாபமாகவே இருக்கும். இந்திய தேசத்தில் கலாச்சாரமாகவே மாறிவரும் இச்செயல் நம்மால் மாற்றப்படட்டும்.நற்கிரியைகளைச் செய்யும் நாம், தேவனுக்குக் கொடுக்கப்படவேண்டிய கனத்தையும், மகிமையையும் எடுத்துக்கொள்ளாதபடி ஜாக்கிரதையாயிருப்போம்.
பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; (மத் 25:35) மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 25:40) என்று இயேசு போதித்தாரே. உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதில் நினைத்தருளப்பட்டது (அப் 10:31) என்று தேவ தூதன் மூலமாக கொர்நேலியுவுக்குப் பதில் வந்ததல்லவா. இயேசுவை அறிந்தவர்களாக, பிறருக்கு நாம் செய்யும் உதவிகள், தானதருமங்கள் அனைத்தும் தேவனால் நினைவுகூறப்படுகின்றன; எனினும், மகிமை அவருக்கே சென்றடையட்டும்.
நற்கிரியைகளைக் குறித்த மற்றும் ஒரு காரியத்தையும் நான் அறிந்துகொள்வது அவசியம். மற்றவர்களுக்குக் கொடுப்பதிலும், மற்றவர்கள் மூலமாக தேவனுக்குக் கொடுப்பதிலும் மட்டுமே நாம் திருப்தியடைந்துவிடக்கூடாது. நம்மையே தேவனுக்குக் கொடுக்கும் உன்னத நிலைக்கு நாம் முன்னேறவேண்டும். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து, இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணிக்கொண்டிருந்த வேளையில் (மத் 26:3,4), ஒரு ஸ்திரீ செய்த நற்கிரியை இன்றும் உலகெங்கும் சுவிசேஷம் எங்கெங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் நினைவுகூறப்படுகின்றது. என்றபோதிலும், இயேசுவோடு கூட இருந்த சீஷர்கள் அந்த ஸ்திரீயின் செயலை நற்கிரியையாகப் பார்க்கவில்லை, வீண் செலவாகவே பார்த்தார்கள்.
மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது (லூக் 10:39), மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள் (லூக் 10:40). இயேசுவோ, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் (லூக் 10:42) என்று மார்த்தாளுக்குப் பதில் கொடுத்தார். வேலை செய்யவேண்டிய நேரத்தில் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்திருந்தது, நேரத்தை வீணடிப்பதாகத் தோன்றியது மார்த்தாளுக்கு.
இயேசுவைப் பின்பற்றுவோராக நாம் இருந்தபோதிலும், அநேக நேரங்களில் நம்மாலும் நற்கிரியைகள் செய்வோரை அடையாளம்கண்டுகொள்ள முடிவதில்லை. உலகத்தோடு நிற்பவர்களுக்கு ஒத்துப்போய்விடுகின்றோம், தேவனது பக்கம் நிற்பவர்களை ஒதுக்கிவைத்துவிடுகின்றோம். பலரது நற்கிரியைகளை வீண்செலவுகள் என்றே நாம் எண்ணிவிடுகின்றோம்.
உலகத்தின் பதவிகளை, சொத்துக்களை, சொந்தங்களை, வசிப்பிடங்ளை, சுகமான சூழ்நிலைகளைத் துறந்து, தேவனுக்காகத் தங்களை அர்ப்பணிக்கும் மனிதர்களின் கிரியைகளை வீண்செலவாகவே உலகம் மதிப்பிடுகின்றது. இந்த வேலையில் அவன் இருந்திருந்தால், ஊழியத்தைத் பணத்தால் தாங்கியிருக்கலாமே, வேலையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அநேக சபைகளுக்கு உதவி செய்திருக்கலாமே, ஏழைகளைப் போஷித்திருக்கலாமே, பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்திருக்கலாமே, குடும்பத்தை நன்றாக நடத்தியிருக்கலாமே, பெற்றோரை கடைசி நாட்களில் நன்றாகக் கவனித்திருக்கலாமே, வீணாக வேலையை விட்டு விட்டு ஊழியத்திற்குச் சென்றுவிட்டானே என்று அர்ப்பணிப்போரின் நற்கிரியைகளை வீணாக எண்ணிப் பேசும் உலக மனிதர்கள் தொகை ஏராளம். சீஷர்களில் ஒருவன் இயேசுவை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் (மத் 8:21) என்று கேட்டபோது, மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா (மத் 8:22) என்று பதிலளித்தார் இயேசு. தகப்பனின் அடக்கத்தைவிட என்னைப் பின்தொடருவதே நற்கிரியை என்பதை இயேசு அந்தச் சீஷனுக்கு உணர்த்தினாரே.
தெரிந்தெடுப்பதில் இன்னும், இன்றும் பலர் குழம்பிக்கொண்டேயிருக்கின்றனர். ஊழியத்திற்கென்று தங்களை அர்ப்பணித்த பலர் இத்தகைய சீஷர்களின் 'வீண் செலவு' என்ற வார்த்தைகளைக் கேட்டு, அழைப்பிற்கே முட்டுக்கட்டை போட்டு, இருப்பிடத்திலேயே சுகமான வாழ்க்கையிலே முடங்கிவிட்டனர். நற்கிரியைகளைச் செய்ய தங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்துவிட்டனர்.
ஊழியத்திற்கு உதவிசெய்வது நற்கிரியைகளாகத் தென்படுகின்றது, ஆனால், ஊழியனாகப் புறப்பட்டுச் செல்வதோ வீணாகத் தென்படுகின்றது. எத்தனை பெரிய காரியங்களை நாம் இழந்திருந்தாலும், சுவிசேஷம் அறிவிக்கப் புறப்பட்டுச் செல்வோரின் பாதங்கள் அழகானவைகளே. அந்த நற்கிரியையை வாழ்க்கையில் இழப்பாகப் பார்க்கும் மனிதர்களின் பார்வையுடைய கண்களாக நம்முடைய கண்கள் மாறாதிருக்கட்டும். என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான் (மத் 19:29) என்பது அத்ததையோருக்குரிய வாக்குத்தத்தம் அல்லவா.
Comments
Post a Comment