வேஷம் என்ற தலைப்பின் ஒரு செய்தியினை உங்கள் முன் கொண்டுவர விரும்புகின்றேன். இச்செய்தியின் தொடக்கத்தைப் பற்றி சற்று நான் எழுதினால் நலமாயிருக்கும். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. மாதத்தின் முதல் ஞாயிறு ஆனபடியினால், சபையில் ஆராதனையைத் தொடர்ந்து திருவிருந்து ஆராதனை நடைபெறவிருந்தது. திருவிருந்து ஆராதனைக்காக, நான் எழும்பிச் சென்று முன்னால் கர்த்தரின் அப்பத்தையும், ரசத்தையும் பெற முழங்கால் படியிட்டு நின்றுகொண்டிருந்தேன். அப்பமும், இரசமும் கொடுக்கப்படுவதற்கு முன்னர், எனது எண்ணத்தில் 'வேஷம்' என்ற ஓர் வார்த்தையினை கர்த்தர் விதை;தார். முழங்காலில் நின்றுகொண்டிருந்த நான், உடனே எனது சட்டைப் பையில் வைத்திருந்த சிறிய டைரியினை எடுத்து, கர்த்தர் ஞாபகமூட்டிய 'வேஷம் என்ற வார்த்தையினை எழுதிக்கொண்டேன். அது ஒரு செய்தியின் தலைப்பாகவோ அல்லது ஒரு கட்டுரையின் தலைப்பாகவோ கர்த்தர் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் அதனை எழுதி வைத்துக்கொண்டேன். ஏப்ரல் மாதம் முழுவதும் கடந்து, மே தொடங்கியது நானோ அந்த தலைப்பினைக் குறித்து அத்தனை கரிசனையுடனில்லாமல் காணப்பட்டபோது, கர்த்தர் என் உள்ளத்தில் அந்த வார்த்தையை விளக்க, செய்தியாக உங்கள் முன் அதனைக் கொண்டுவருகின்றேன். யார் யார் வேஷங்களை அணிந்துகொள்கிறார்கள்? வேஷங்கள் யாருக்கு தேவைப்படுகிறது? என்பதை நாம் கண்டுகொள்வோம்.
செத்தவன் ஆனால் உயிரோடு
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ (உலகத்தில்) உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் (எனக்கு முன்பாக) செத்தவனாயிருக்கிறாய்' (வெளி 3:1)
உலகத்தில் உயிருள்ளவனென்று பெயர், ஆனால் தேவ பார்வையில் செத்தவன்; இது இன்றைய அநேக விசுவாசிகள், ஊழியர்கள், போதகர்களின் நிலை. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் (1கொரி 10:12) என்ற வேதத்தின் எச்சரிப்பை அறிந்தும், விழுந்த பின்னும் விழாதவர்கள் போல் வாழ்ந்துகொண்டிருப்போரின் நிலைதான் இது. உலகத்தில் பெயர், புகழ், செல்வாக்கு இருந்தால் போதும், என்ற உலகத்தாரின் நோக்கமும், எண்ணமும் இன்று பல ஆவிக்குரியவர்களின் ஆத்துமாக்களையும் ஆக்கிரமித்துக்கொண்டது. சபையின் ஜனங்கள், தன்னைச் சூழ்ந்தவர்கள் மத்தியில் செல்வாக்கும், ஆதரவும், அன்பும், புகழும் இருந்தால் அது போதுமானது என்று தன்னுடைய ஆத்துமாவைக் குறித்த அக்கரை இன்றி, அதனை அனாதையாக விட்டுவிட்டு ஆட்டம் போடும் பலர் செத்தவர்களே. தேவனுக்கு முன் நான் எப்படி இருக்கிறேன்? என்பதை மறந்துவிட்டு, ஆவிக்குரிய ஜனங்கள் மத்தியில் ஆரவாரத்தோடு திரிகின்றனர் பலர்.
'வேஷம்' என்பது, தனது உண்மை நிலையை மறைத்துக்கொண்டு, பொய்யான தோற்றத்தை மேடையில் அல்லது மற்றவர்கள் முன் காட்டுவது. அப்படி வாழ்வோரின் உண்மை நிலையை அறிந்தவர்களுக்கு மட்டுமே, இவர் வேஷம் போடுகிறவர் என்பது தென்படும், மற்றவர்களின் கண்களுக்கோ அது மறைக்கப்பட்டிருக்கும். வேஷம் போடுகிறவர்கள் ஜனங்களை மோசம்போக்குகிறவர்களே. வேஷத்தை மறுமொழியில மாய்மாலம் என்றே வேதம் வர்ணிக்கிறது. நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயம் தீர்க்கப்படோம். என்னுடைய வீழ்ச்சி எனக்கு மட்டும்தானே தெரியும், என இறைவனுக்கு புகழ்ச்சியானவைகளைச் செய்தாலும், இறுதி நாளில் இகழ்ச்சிக்குள்ளாவது நிச்சயம்.
தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்படும் வேஷங்களை நாம் களைந்தெறியவேண்டும். கர்த்தருக்கு முன் உண்மையாக வாழ ஒப்புக்கொடுக்கவேண்டும். வேஷமில்லாத ஒரு வாழ்வு இறைவனின் நேசத்தை வாழ்வில் அள்ளித் தரும்.
இந்த உலகத்தில், பலர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேஷமிட்டு அலைகின்றனர். அவர்களின் உண்மை நிலை அவர்களுக்கு நன்றாகத் தெரியும், என்றாலும் அது வெளியே தெரிந்துவிடாதபடி அதற்கு மேலே வேஷம் போட்டுக்கொண்டு திரியும் ஜனங்கள் ஏராளம். இவர்கள் வலையில் விழும் மக்கள் கூட்டமும் ஏராளம். இவர்களைப் பின்பற்றும் மக்கள் பரலோகம் சென்றாலும், இவர்களது பாதங்கள் பரலோகத்தின் படிகளை மிதிக்கப்போவதில்லை என்பது திண்ணம்.
ஆவிக்குரிய வாழ்க்கையில் வீழ்ந்துபோன பலர் இப்படிப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றனர். இரட்சிக்கப்பட்டது, அபிஷேகம் பெற்றது, தேவனால் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டது எல்லாம் அவர்களது வாழ்க்கையில் உண்மையாகவே நடைபெற்றவைகள் என்றபோதிலும், அதிலிருந்து சறுக்கி, சகதிக்குள் விழுந்து, சிக்கி வெளியேற வழிதெரியாவிட்டாலும், அவர்கள் யாரிடத்திலும் வழி கேட்பதில்லை. அப்படி வழி கேட்டால், தான் விழுந்துபோனவன் என்பது மற்றவர்க்கு தெரிந்துவிடும் என்ற எண்ணம் அவர்களை அடைத்துப்போடுகின்றது. இப்படிப்பட்டோர்கள், தங்கள் உண்மையில், இன்னும் தொடக்கத்தில் இருந்ததைப் போலவே மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்வதே வேஷம்; இது கர்த்தர் பரிகசிக்கும் ஒன்று. வேஷமிடுவோரைக் கர்த்தர் பயன்படுத்தினாலும் அவர்களது முடிவு மோசமாகவே அமையும். பரிசுத்த நகரம் அல்ல பிசாசின் நரகம் தான் அவர்களை வரவேற்கும்.
இவ்வுலகத்தின் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அல்ல, பரலோக பரிசுத்த தேவனின் கண்களுக்கு முன் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும் என்பதை மறந்ததால், ஆவிக்குரிய வாழ்க்கையில் இறந்து மற்றவர்கள் முன் உயிரோடு வாழும் ஊழியர்கள் ஏராளம். எனவே இயேசு, 'உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ (உலகத்தில்) உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் (எனக்கு முன்பாக) செத்தவனாயிருக்கிறாய்' (வெளி 3:1) என்று சர்தை சபையின் தூதனுக்கு எழுதுகின்றார். சர்தை சபையினிடத்தில் கிரியை இருந்தது, ஆனாலும் கர்த்தரின் பார்வையில் அது செத்திருந்தது. கிரியைகளைக் கண்டு நாம் ஏமாந்துவிடக்கூடாது, யாரோ ஒரு நபர் தேவனுக்காக பெரிய பெரிய காரியங்களைச் செய்கின்றார் என்பதால், ஆவிக்குரிய வாழ்க்கையில் அவர் உயிரோடுதான் இன்னும் இருக்கிறார் என நாம் எடை போட்டுவிடமுடியாது. வேஷம் போட்டுக்கொண்டு தேவனுக்காகக் கிரியை செய்யும் கூட்டம் உண்டு.
தான் இன்னும் உயிரோடே தான் இருக்கிறேன் என்பதை நிரூபித்துக்காட்ட, மற்றவர்களை நம்பவைக்க ஒருவர் பலவிதமான கிரியைகளை, ஊழியங்களைச் செய்யலாம், உயிருள்ளவன் என்ற பெயர் உலத்தாரால் கிடைக்கலாம், ஆனால் கர்த்தரின் பார்வையில் அவர்கள் செத்தவர்களாயிருப்பார்கள். நம்முடைய அனுதின வாழ்க்கையை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அனுதின வேத வாசிப்பு, ஜெபம் மற்றும் உபவாசம், தேவனோடு கொள்ளும் உறவு எத்தகைய நிலையி;ல் இருக்கிறது? உயிருள்ளவன் என்று சபையில், ஸ்தாபனங்களில், வீட்டில், கிராமத்தில் பெயர் பெற்று பிரஸ்தாபமாகி, தேவ பார்வையில் செத்தவர்களாயிருக்கிறொமா? எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
ஆத்தும பாரம், ஆண்டவரோ தூரம்
ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா (1சாமு 1:8)
எனது ஆவிக்குரிய நாட்களின் தொடக்க கால நிகழ்வுகளை நான் எழுதினால் நலமாயிருக்குமென எண்ணுகின்றேன். நண்பர்கள் ஜெப ஐக்கியத்தை திரும்பக் கட்டுவதற்காக தேவன் என்னை உபயோகப்டுத்தியபோது, தரிசனம் இருந்தது ஆனால், ஆத்துமாக்கள் (வாலிபர்கள் எதுவும் கிடைக்கவில்லை) முதன் முதலாக ஒரு ஆத்துமா கிடைத்தது, அந்த தம்பியினிடத்தில் எனது பாரத்தைக் காட்டத் தொடங்கினேன், எப்படியாவது அவனை கிறிஸ்துவுக்குள் நடத்தவேண்டும் என வெறிப்பிடித்து திரிந்தேன். எவ்வளவோ பேசியும், பின்னாலே திரிந்தும் ஏமாற்றம் தான் எனக்கு மிஞ்சியது. தேவன் உன்னை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்த ஏறக்குறைய நூற்றுக்கும் அதிகமான கவிதைகளை எழுதிக் கொடுத்தேன், பலனில்லை. நொந்துபோன நான், ஒரு நாள் இரவு எனது இரத்தத்தை எடுத்து அதில் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, ஆண்டவரே போதும், அவனைத் தாரும் அல்லது என்னை எடுத்துக்கொள்ளும் என போராடினேன். தேவனிடத்திலிருந்து பதில் வந்தது, 'வீணானவைகளை ஏன் செய்கிறாய்? உனது இரத்தம் அல்ல, எனது இரத்தம் தான் அவனை இரட்சிக்கும்' என்ற பதிலே அது. எனக்குப் புரிந்துவிட்டது. உணர்ச்சிவசப்பட்டு, முட்டாள்தனமானவைகளைச் செய்துவிட்டேன் என்று. என்றாலும், எனக்குள் போராட்டம். அவனை கிறிஸ்துவுக்குள் நடத்தவேண்டும் என்ற கவலை பெருக, பெருக, என்னுடைய வாழ்வில் வேத வாசிப்பு குறைய ஆரம்பித்தது. வேதத்தை வாசிக்க நான் திறக்கும்போது, 'அவனே இன்னும் இரட்சிக்கப்படவில்லையே, நாம் வேதம் வாசித்து என்ன செய்யப்போகிறோம்' என மூடி வைத்துவிடுவேன். இப்படியாக, வேதம் வாசிக்க, ஜெபம் செய்ய மனதின்றி ஏறக்குறைய ஒன்றரை மாதங்களைக் கடத்தினேன்.
யாரும் என்னிடத்தில் வேதம் வாசித்தாயா என்று கேட்கவில்லை, ஜெபித்தாயா என்று கேட்கவில்லை. மற்றவர்களை நடத்தும் தலைவனாக நான் இருந்ததால், என்னிடத்தில் யாரும் கேட்கவில்லை. வேதம் வாசிக்காமல் பிரசங்கம் பண்ணத் தொடங்கினேன், முதலில் சற்று மனது உறுத்தியது. பின்னர் பழகிப்போனது. பிரசங்கம் செய்யும் தாலந்தினை கர்த்தர் தந்திருந்ததால், அதனை பயன்படுத்திக்கொண்டேன். எனது தனி வாழ்க்கையை நான் விட்டுவிட்டேன். வெளியிலோ பிரசங்கி, தனி வாழ்விலோ தேவனோடான உறவுக்கு முற்றுப் புள்ளிவைத்துவிட்டேன். பாவத்தில் நான் விழவில்லை, அந்த வாலிபன் எப்படியாவது ஆண்டவருக்குள் வரவேண்டும் என்ற பாரத்தின் பரிதாப நிலை அது. தேவன் வேண்டாம், அவன் வேண்டும் என்ற நிலைக்கு நான் என்னைத் தள்ளிவைத்திருந்தேன். ஒரு நாள் மாலை காட்டுப் பகுதிக்கு நடந்து சென்று அங்கிருந்த ஓர் பனை மரத்தின் கீழே அமர்ந்திருந்தேன். சோகம், ஒரு ஆத்துமாவுக்கே இந்த பாடா ஆண்டவரே? என்ற சோர்வு என்னை சொர்க்க வாழ்விலிருந்து தூரப்படுத்தியிருந்தது. அப்போது, தேவன் என்னோடு இடைபட்டார், ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா (1சாமு 1:8) என்று தேவன் பேசியதுடன், ஒருவனுக்காக மட்டுமல்ல ஊருக்கே உன்னை அழைத்திருக்கிறேன் என்று சொன்னபோது, புரிந்தவனாக தேவனை அண்ட ஆரம்பித்தேன். அவனைப் பற்றிய நினைவுகளிலிருந்து மெல்ல மெல்ல என்னுடைய ஆவிக்குரிய வாழ்வின் பெருக்கம் விடுதலை கொடுத்தது.
மற்ற வாலிபர்களுக்காக ஜெபிக்கத் தொடங்கினேன். பலரைக் கர்த்தர் தந்தார், ஐக்கியம் வளர்ந்தது. தேவனுக்குக் கொடுக்கவேண்டிய இடத்தை 'ஆத்தும பாரம்' என்ற பெயரில் ஆக்கிரமித்துக்கொண்டு வேதவாசிப்பின்றி, ஜெபமின்றி திரிந்த என்னுடைய வாழ்க்கை மீண்டும் மலரத் தொடங்கியது. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த வாலிபன் இரட்சிக்கப்பட்டு, அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் பாக்கியத்தைத் தந்தார். கர்த்தர் பெரியவர்; ஆத்தும பாரத்தைக் காட்டிலும் ஆண்டவர் பெரியவர் என் நான் கற்றுக்கொண்டேன்.
ஊழியம் என்ற பெயரில் தேவ உறவு உடைந்துவிடக்கூடாது. ஆத்தும பாரம் நம்மை தேவனிடமிருந்து பிரித்து ஆத்துமாக்களோடேயே ஒட்டவைத்துவிடக்கூடாது. தேவனுக்கு முன் நாம் நம்மை எப்போதும் தேவ நீதியிலும், நியாயத்திலும், சத்தியத்திலும், ஆவிக்குரிய வளர்ச்சியிலும் நிலை நிறுத்துவதே நமக்கு முதலானது பிரதானமானது. நமது ஆவிக்குரிய வாழ்க்கையைக் கூட கவனிப்பதற்கு நேரமில்லாத ஊழியங்கள் நமக்குத் தேவையில்லாதது; அதனால் தேவன் மகிமைப்படப்போவதில்லை. நாம் செய்யும் ஊழியங்களினால் பல மக்கள் பயன் பெற்றாலும், ஆத்துமாக்கள் இரட்சிக்கப்ட்டாலும் நாம் வேஷத்துடன் தான் அதனை செய்கிறோம் என்பதனை மறந்துவிடவேண்டாம்.
எனக்கல்ல, உனக்குத்தான்
இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? (மத் 7:4)
'ஊருக்கு உபதேசம்' என்று எளிதான இரண்டு வார்த்தைகளில் ஒருவரின் நிலையை வேஷத்தைச் சொல்லிவிடலாம். போதகர்கள், ஊழியர்கள், மிஷனரிகள் இவைகளில் கவனமாக இருக்கவேண்டும். மற்வர்களை கிறிஸ்துவுக்குள் நடத்த, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க கர்த்தர் நம்மை அழைத்தது உண்மையே. என்றாலும், நாம் சொல்லும் அனைத்தும் நமது வாழ்க்கையை மாற்றியவைகளாக இருக்கவேண்டும். மற்வர்களையே உற்றுப் பர்த்துக்கொண்டிருந்தால், நமது கண்களில் உள்ளவைகள் தெரியாமல் போய்விடும் என்பதை இயேசு எத்தனையாய் எடுத்துரைத்தார். மற்றவர்கள் கண்களில் உள்ள துரும்பைக் கூட பார்க்கும் அளவிற்கு நமது கண்களுக்கு சக்தி இருக்கலாம், பலரால் காணக்கூடாத பல சிறு சிறு கர்த்தருக்குப் பிரியமில்லாத காரியங்களைக் கூட பிரசங்கிக்கும் சக்தி நமக்கு இருக்கலாம். மற்றவர்கள் வாழ்க்கையில் உள்ள துரும்பைக் கூட நீக்கவேண்டும் என நாம் நினைத்துக்கொண்டிருக்கலாம். மற்றவர்கள் வாழ்க்கையை அப்பழுக்கற்றதாக மாற்ற நாம் மணிக்கணக்காக செலவழித்துக்கொண்டிருக்கலாம், மற்றவர்களை பரிசுத்தப்படுத்த, தேவனண்டை நடத்த, கிறிஸ்துவின் குணத்தை அவர்கள் வாழ்வில் விதைக்க பல்வேறு காரியங்களை ஊழியங்களை நாம் செய்யலாம். ஆனால், நம்முடைய கண்களில் உத்திரத்தோடு நாம் இருந்துவிடக்கூடாது.
பரிசுத்தமாய் வாழாவிட்டாலும், பரிசுத்தமாய் வாழ்வது எப்படி என்று அழகாகப் பிரசங்கம் செய்யலாம்; அது எளிதானதே. மற்றவர்கள் பரிசுத்தத்தில் அத்தனை அக்கரை கொள்ளும் பிரசங்கியார்கள், ஊழியர்கள், போதகர்கள் தங்கள் வாழ்க்கையினை மறந்துவிடக்கூடாது. எனவே இயேசு, 'நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்' (லூக் 11:46) என அத்தனை அழகாய் சொன்னார். கடினமானவைகளைக் கற்றுக்கொடுப்து தவறல்ல, ஆனால் அவைகளை கற்றுக்கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது தவறு. அப்படிப்பட்டோர் வேஷதாரிகள். எனக்கல்ல உனக்குத்தான், உபதேசம் உனக்குத்தான் என்று தன்னை விட்டுவிட்டால் பரலோகமும் பிரசங்கிப்பவர்களுடையதாகாது, பிரசங்கத்தைக் கேட்டவர்களுடையதாகிவிடும்; எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
ஜெபிப்பவர்களுக்காக ஜெபம்
அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.(மத் 6:5)
சற்று வித்தியாசமான ஓர் குறுந்தலைப்பு. புரிவதற்கு சற்று கடினமாயிருந்தாலும், விளங்கிக்கொள்ளவது எளிதானதே; தொடர்ந்து வாசியுங்கள். நம்முடைய ஜெபத்தில் கூட நாம் ஜெபிக்க வருகிறவர்களுக்காக வேஷம் தரித்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருக்கவேண்டும். ஜெபிக்க நாம் தொடங்கும்போதெல்லாம், முன்னே நிற்கின்ற நபரல்ல உன்னதங்களின் தேவனிடத்தில் பேசுகிறோம் என்ற உணாவு நம்மை விட்டு ஒருக்காலும் நீங்கக்கூடாது. இன்று பல ஊழியர்கள் ஜெபிக்க வருகிறவர்களிடத்திலேயே ஜெபித்துவிடுகிறார்கள்; தேவனிடத்தில் அவர்கள் ஜெபிப்பதில்லை. தேவனிடத்தில் ஜெபிக்கிறோம் என்ற மனநிலை ஜெபிக்கும்போது அவர்களுக்கு இருப்பதில்லை. ஜெபிக்க வருகிறவர்களின் நிலையினை அறிந்துகொண்டு, தெரிந்துகொண்டு, எப்படிப்பட்ட ஜெபத்தை அவர்களுக்கு செய்யவேண்டும், எப்படி செய்தால் அவாகள் சந்தோஷப்படுவார்கள் என தந்திரமாய் ஜெபித்து, தேவனிடத்தில் ஜெபிக்கிறோம் என்பதை மறந்து, அவர்கள் தருகிறவைகளைப் பெற்று தேவனைத் துறந்துவிட்டவர்கள் அநேகர் உண்டு.
யாருக்காக ஜெபித்தாலும், யாரிடத்தில் ஜெபிக்கிறோம் என்ற சிந்தை நம்மை விட்டு அகலக்கூடாது. இல்லையேல் நமது ஜெம் வேஷமாகிவிடும். ஜெபிக்க வந்தவர்களை சந்தோஷப்படுத்தும் ஜெபமாகவும், தேவனை துக்கப்படுத்துவதாகவும் மாறிவிடும். ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது (மத் 10:12,13) என்று இயேசு சொல்லியிருக்கின்றாரே. அறியாமல், அடுத்தவர்களை ஆசீர்வதித்து ஜெபிப்பது ஒருபுறமிருந்தாலும், பாவி என அறிந்தும், குடிகாரர் என அறிந்தும், விபச்சாரக்காரர் என அறிந்தும், திருடர் என அறிந்தும் அவரை ஆசீர்வதித்து ஜெபித்தால் அந்த ஆசீர்வாதம் அவரது வீட்டில் தங்காது என தெரிந்தும், ஆசீர்வாதமான ஓர் ஜெபத்தை ஏறெடுப்பது அந்த நபரை ஏமாற்ற போடும் வேஷமே.
அப்படியே, மாயக்காரர்கள் செய்யும் மேலும் பல காரியங்களை இயேசு வெளிப்படுத்தி வன்மையாக அவைகளைக் கண்டிக்கின்றார். தர்மஞ் செய்யும்போது, ஜெபம் செய்யும்போது, உபவாசிக்கும்போது மாயக்காரரைப்போல இருக்கவேண்டாம், அவர்களைப் போன்ற வேஷத்தை நாம் தரித்துக்கொள்ளக்கூடாது என்று இயேசு கூறுவதை மத்தேயு 6:2,16 மற்றும் 7:5 போன்ற வசனங்களில் மேலும் அதனைத் தொடர்ந்த வசனங்களிலும் நாம் வாசிக்கமுடியும்.
நமது கிரியைகளைக் கொண்டும், பிரசங்கங்களைக் கொண்டும், சபைகளில் மற்றும் ஊழியங்களில் நாம் செயல்படுவதைக் கொண்டும் நாம் உயிருள்ளவர்கள் என்ற முத்திரையை நாம் நம்மைச் சூழ்ந்தவர்கள் மனதில் பதித்திருக்கலாம். இந்த முத்திரையை வைத்துக்கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கையில் வீழ்ந்த பின்னும் முன்னேறினால், கடைசி நாளில் முகத்திரை கிழிபடும். ஆசரிப்பு கூடாரத்தின் திரையை மேலிருந்து கீழாகக் கிழித்தவர்க்கு நமது முகத்திரையினைக் கிழிப்பது லேசான காரியம். வேஷமிட்டவர்கள் இவர்கள் என்பதும் நியாயத்தீர்ப்பின் நாளில் மற்றவர்களுக்கு முன்பாக வெளிப்படும். சிங்காசனத்தின் முன் கிடைக்கப் போகும் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்ய வழி ஏதும் இல்லை, இல்லை, இல்லை. கிரியைகளைக் கொண்டு கர்த்தரை ஏமாற்ற முடியாது.
அழிக்கப்பட்டோரைத் தேடும் அழித்தவன்
அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம் பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச் செய் என்றான்.(1சாமு 28:8)
தன்னைக் குறித்து கரிசனை கொள்ளாவிடில், எந்த நிலையிலும் எவரும் சறுக்கி விழலாம். யாரோடு நாம் ஐக்கியம் கொள்கிறோம், யாரிடத்தில் எதற்காகப் போகிறோம் என்பது தேவ ஊழியர்களுக்கு முக்கியமான ஒன்று. நமது தேவைகளை நிறைவேற்றுகிறவர் தேவன் ஒருவரே. தேவனற்றவர்களின் உதவி ஊழியங்களுக்கும், ஊழியர்களுக்கும் தேவையில்லாதது. உதவிக்காகவும், ஒத்தாசைக்காகவும் அப்படிப்பட்டோரைத் தேடித் திரிவதும் தவறானதே. அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவர்களிடத்தில், இயேசுவை கூறலாம். இரட்சிப்பின் வழிகளை சொல்லலாம். ஆனால், ஊழியத்திற்காக அவர்களின் உதவியைத் தேடுவது கூடாது. தேவனுக்கு விரோதமாய் கிரியை செய்யும் மக்களில் உதவிகள் எந்த நேரத்திலும், எப்போதும் நமக்கு தேவையில்லாதது. நமக்கு ஒத்தாசை பர்வதங்களிலிருந்து வரும். பர்வதங்களில் இருக்கும் பரிசுத்தரை நமது கண்கள் நோக்கிப் பார்த்தால், அத்தனையையும் நிறைவேற்ற அவர் வல்லமையுடையவர்.
பல ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பத்திரிக்கையில் வெளியான ஒரு புகைப்படம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரை இழிவு படுத்தும்படியாக அல்ல, சிறு தவறானாலும் அதனை நாமும் செய்துவிடக்கூடாது என நமது எச்சரிப்புக்காகவே இதனை எழுதுகிறேன். அந்த புகைப்படத்தில், தமிழகத்தின் பிரபலமான ஊழியர் ஒருவர் ஒரு காரியத்திற்காக இந்து மடாதிபதி ஒருவரைச் சந்திக்கச் சென்றதுதான் அந்த புகைப்படம். எத்தனையோ மக்கள் மனதில் அதிருப்தியை உண்டாக்கியது அது. எதற்காக சென்றார்? என்பது பூரணமாக தெரியாவிட்டாலும், இப்படிப்பட்டவர் இவரை இதற்காகத் தேடிச் சென்றிருக்கிறாரே என்ற மனதரிப்பு கொண்டனர் மக்கள்.
தேவனுக்கு விரோதமாகச் செயல்படுவோரை நமது தேவைகளுக்காகத் தேடிச் செல்லக்கூடாது. தேவனால் கூடாதது ஒன்றுமில்லை, இன்றுமில்லை.
சவுலின் வாழ்க்கையில் இத்தகைய நிலை உண்டானது. அழித்தவர்களிடத்தில் (குறி சொல்லுகிறவர்கள்) சென்று ஆலோசனை கேட்கும் சவுலின் வீழச்சியையே வேதம் வெளிச்த்திற்குக் கொண்டுவருகின்றது. அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறி சொல்லுகிறவர்களையும் சவுல் தேசத்தில் இராதபடிக்க நிர்மூலமாக்கிக்கொண்டிருந்தான். ஆனால், இப்பொழுதோ, அப்படிப்பட்டவர்களிடத்திலேயே சென்று விசாரிக்கும்படியான ஒரு நிர்ப்பந்தம்; கர்த்தரால் கைவிடப்படடதாலேயே சவுலுக்கு இந்த நிலை உண்டானது. 'கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு', 'கர்த்தர் மேல் ஆணையிட்டு' (1சாமு 28:10) என சொல்லிக்கொண்டு, தேவனுக்கு விரோதமான, தான் அழித்தவர்களுக்கு முன் முடங்கி நிற்கிறான் சவுல். ராஜாவுக்கு தெரிந்துவிடக்கூடாது என குறி சொல்லுகிற அந்த ஸ்திரீ பயப்படுகிறாள், ராஜாவோ (சவுல்) தான் ராஜா என அந்த ஸ்திரீக்கு தெரிந்துவிடக்கூடாது என நினைக்கிறான். இதற்கு சவுல் பயன்படுத்திக்கொண்டது வேஷம்.
தேவன் ஒழிக்கச் சொன்னவைகளை, அழிக்கச் சொன்னவைகளை நாம் ஒருக்காலும் ஒரு நாளும் தேடிச் செல்லக்கூடாது. சினிமா இல்லை சீரியல்தான் பார்க்கிறேன் என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டு மாற்று வேஷத்தில் திரிகிறார்கள் பலர். பலர் வெளியில் அலங்கார ஆடையுடன் வாழ்ந்தாலும், அந்தரங்கத்தில் அருவருப்புகளையே தேடி அலைகின்றனர். இத்தகையோரால் வேஷமிடாமல் வாழ முடியாது.
வேஷம் போடுபவர்கள், அழிம்பர்களுக்குத் தோழனாயிருப்பார்கள்; ஜாக்கிரதை. வேஷம் போடுபவர்கள், இரட்iடை வாழ்க்கை வாழுபவர்கள், வேஷம் போடுபவர்கள் தேவ தொடர்பை இழந்தவர்கள்.
மிஞ்சிய நீதிமான்கள்
ஆவிக்குரிய வாழ்க்கையில் மற்றுமோர் வேஷத்தினைத் தரிப்போரைக் குறித்து நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். இவ்வகையினர், தங்களை ஆவிக்குரிய வாழ்;க்கையில் உன்னத நிலையில் உள்ளவர்களாகக் காட்டிக்கொண்டே இருப்பர். விசுவாசத்தில் பெலவீனமாயிருப்பவர்களை சேர்த்துக்கொள்ள மனதில்லாது, அவர்களைக் கண்டு அதிருப்தி அடைபவர்கள் இவர்கள். தங்களைத் தவிர எவரின் பிரசங்கமும் இவர்களுக்கு ருசிக்காது. எல்லாருடைய செய்திகளிலும் குற்றங்களையே கொய்துகொண்டுவருபவர்கள்; அதனை மற்றவர்களிடத்தில் சொல்பவர்கள் இவர்கள். தாழ்மையைக் குறித்து அல்ல மற்றவர்களின் தரத்தைக் குறித்து பேசுபவர்கள். மற்றவர்களுக்கு இடம் கொடுக்க மறுப்பவர்கள். மேடையை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க மனதற்றவர்கள். என்னைத் தவிர எவரும் சுத்தமில்லை, உயர்ந்தவரில்லை என்ற எண்ணத்தின் மேலோங்குதல் மற்றவர்களை மதிக்காத மதிலுக்குள் இவர்களைத் தள்ளியிருக்கும். தன்னையே பிரசங்கங்களில் மேன்மைப்படுத்திக் காட்டுபவர்கள், இயேசுவின் சுவிசேஷத்தை விட இவர்களது ஆவிக்குரிய வாழ்வின், நிகழ்வின், அனுபவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, மனிதர்களின் மதிப்பைப் பெற்றுக்கொள்ள வழி தேடுபவர்கள். மற்றவர்கள் செய்யாததை தான் செய்ததாகக் கூறி, எத்தனை திரளான கூட்டத்தின் மத்தியிலும் தன்னைத் தனியானவன் என காட்டிக்கொள்பவர்கள். ஆவிக்குரிய வாழ்க்கையில் எல்லாரைக் காட்டிலும் அவர் உயர்ந்தவரைப் போலவே அவரது, தோற்றம், வார்த்தைகள், நடவடிக்கைகள் காணப்படும்; வசனத்தின் அடிப்படையில் அளந்து பார்த்தால் வீழ்ந்துபோனவர்கள் என கண்டுகொள்ளலாம்.
இவர்களின் வார்த்தைகள் ஆவிக்குரியவைகளாகவே காணப்படும், ஆனால் ஆவியானவர் மூலமாக தேவன் எழுதிய வசனங்களுக்கு முரண்படும். மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? (பிர 7:16) என்ற வார்த்தைக்குப் பொருத்தமானவர்கள் இவர்கள். தங்களைத் தாங்களே கெடுத்துக்கொள்கிறோம் என்பதை உணராமல், மற்றவர்களிடத்தில் துடுக்காய் பேசி மிடுக்காய் நடைபோடுகிறவர்கள். இவர்களின் ஆவிக்குரிய ஆடை, இவர்களது பார்வையில் மற்றோரைக் காட்டிலும் விலை மிக்கது.
காணக்கூடாத, மகிமை நிறைந்த, ஒளிமயமான தேவனே பரலோகத்தை விட்டுவிட்டு, மனித உரு எடுத்து மனிதர்கள் மத்தியில் வாசம் பண்ண வந்தார். ஆனால், தங்களைத் தாங்களே மிஞ்சிய நீதிமான்களாக எண்ணுபவர்கள் பூமியில் இருந்தாலும், பூமியில் உள்ள மனிதர்களைப் ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள். அவர்களது பிரசங்கங்கள் எல்லாவற்றிலும் அனல் பறக்கும், ஆனால் மனிதர்கள் மேலான அன்பு இத்தகையோரின் வாழ்க்கையில் இறந்து கிடக்கும். மற்ற மனிதரின் மேலான அன்பே, மனிதனின் உணர்வுக்கு மூல காரணம்; அதற்கும் முடிச்சு போட்டு, மூலையில் வைத்து விட்டு அவர்களுக்காகப் பிரசங்கிப்பவர்கள். இவர்களின் வாழ்க்கையில் ஆவிக்குரிய பலவற்றைப் பார்க்கலாம்; ஆனால், அன்பின் பண்பைக் காண முடியாது. அன்பான தேவனின் சாயல் இவர்களின் கண்களின் பார்வையில் இருக்காது, எந்நேரமும் தன்னைத் தானே உயர்த்தி உயர்த்திப் பார்த்து குருடராகிவிட்டபடியினால். வழியில் குற்றுயிராய் கிடக்கும் மனிதன் கூட இவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆசாரியனைப் போல, லேவியனைப் போல பாடுபடுவோரைக் கண்டும் பக்கமாய் விலகிப்போகிறவர்கள். (லூக் 10:31-33). கிட்ட வந்து, காயங்களில் கட்டுப் போடவும், சத்திரத்திற்குக் கொண்டுபோகவும் மனதற்றவர்கள்; ஆனால், சத்திரங்களில் சத்தமாகப் பிரசங்கிப்பார்கள்; என்ன பயன்? என்ன பயன்? வேஷந்தானே!
கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தவனுக்கல்லவா (லூக் 10:34) இயேசுவை நாம் ஒப்பிட்டுப் பேசுகின்றோம். மிஞ்சின நீதிமான்களிடத்தில் மனிதாபமானங்கள் மரித்திருக்கும்.
இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள். அவள் அழுகிறதையும் அவளோடே கூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித்துயரமடைந்து: அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள. இயேசு கண்ணீர் விட்டார்.(யோவா 11:32-35)
இயேசு நேசித்த லாசரு மரித்துவிட்டான்; செய்தி வந்தது; தாமதித்துச் சென்றார்; தான் செய்யப்போவதை அறிந்ததால் அவர் அவசரப்படவில்லை. லாசருவை உயிரோடு எழுப்பப்போகிறேன் என்பது இயேசுவுக்குத் தெரியும்; அதற்காகவே அவர் வந்திருந்தார். இன்னும் சற்று நேரத்தில் லாசரு கல்லறையை விட்டு வெளியே உயிரோடு வந்துவிடுவான் என்பதை அறிந்தவர் அவர். என்றபோதிலும், அந்த அற்புதத்தை அவர் செய்யும் முன்னர், தன்னைச் சுற்றி இருக்கிற ஜனங்களின் அழுகையைக் கண்டு, அவர்கள் துக்கப்படுவதைக் கண்டு, அவரும் துக்கமடைந்தார், கண்ணீர் விட்டார். மற்றவர்களின் துக்கங்களில் எப்படி நம்மை இணைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு எத்தனை நல்லதோர் மாதிரி இயேசு. மனிதாபிமானம் இருந்தால்தான், மனிதர்கள் மேல் மனஸ்தாபம் உண்டாகும். மத்தேயு 14:14; 20:34; மாற் 1:11; 6:34; லூக் 7:13; 10:33; 15:20 ஆகிய வசனங்கள் அனைத்தும் இயேசுவின் மனதுருக்கத்தை வெளிப்டுத்துகின்றனவே; மனதர்கள் மேல் அவர் கொண்டிருந்த அன்புதான் அதற்குக் காரணம்; அதுதானே மனிதர்களுக்காகத் அவரது ஜீவனையும் கொடுக்கச் செய்தது. மற்றவர்கள் ஜீவன் போனாலும், கவலையற்றவர்களைக் குறித்து என்ன சொல்வது?
சகோதரர் ஒருவர் சபையில், நான் எனது தாத்தாவின் மரணத்திற்கும் அழவில்லை, எனது அப்பா இறந்துபோனபோதும் அழவில்லை என்று சொன்னார். சபையின் மக்களை எந்த மரணத்திற்கும் நீங்கள் அழக்கூடாது, ஆவிக்குரிய வாழ்க்கையில் உன்னத நிலையில் உள்ளவர்கள் அழமாட்டார்கள், நான் அப்படிப்பட்டவன் என்று தன்னை உயர்த்திக் காட்டும்படியாக அவர் சொல்லியிருக்கலாம் அல்லது அவர் மனித உணர்வுகளை இழந்தவராயிருக்கலாம். தகப்பனின் மரணத்தைக் கேட்ட கண்ணீர் வீடுவதும் தகப்பனைக் கனம் பண்ணுவதே. துக்கம் உண்டானது கர்த்தருக்குள் என்னைத் தேற்றிக்கொண்டேன் என்ற வார்த்தையே சரியான அளவுகோல். அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு (பிர 3:4). அழவேண்டிய நேரத்தில் துக்கத்தை வெளிப்படுத்த அழுவது தவறல்ல, சிரிக்கவேண்டிய நேரத்தில் சிரிப்பதும் தவறல்ல; இயேசுவே செய்தாரே. மற்றவர்கள் தன்னை உயர்ந்தவர்களாகக் கருதவேண்டும் என்பதற்காக உணர்வுகள் உண்டாகும்போதும் வேஷமிட்டாலும் அது மாய்மாலமே. உணர்வுகளை இழக்கச் செய்யும் வேஷமிகு வார்த்தைகள் வீணானவைகளே.
பொது இடங்களில், மற்றவர்கள் கல கல என பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டே கண்களை மூடி தனியே ஜெபித்துக்கொண்டிருக்கிறேன் என்கிற நபர்களும் எச்சரிக்கப்படவேண்டியவர்கள். ஜெபிக்கவேண்டும் என்றால் தனியே சென்று ஜெபிக்கலாமே? அல்லது கண்களை மூடாமலே அவர்கள் மத்தியில் ஆண்டவரே இவர்களை இரட்சியும் என மனதிற்குள் ஜெபிக்கலாமே? இவ்விரண்டையும் செய்யாமல், அவர்கள் மத்தியில் அமைதியாக கண்களை மூடி மௌனிப்பது அவர்களுக்கு முன் அவர்கள் இடும் வேஷம் என்பதை கண்டுகொள்ளவேண்டும்.
விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப் போகவேண்டியதாயிருக்குமே.(1கொரி 5:9,10)
இவ்வுலகத்தின் மற்றோர்களோடு நாம் எப்படி வாழ்கிறோம். நாம் இரட்சிக்கப்பட்டிருக்கலாம், அதற்காக இரட்சிக்கப்படாதோரைக் கண்டு விலகிச் சென்றுவிட முடியுமா? அப்படி என்றால் அவர்களுக்கு இரட்சிப்பின் வழி அறிவிக்கப்படுவது எப்படி? உலக வாழ்க்கையில் உடன் வாழுவோரோடு பழகும், பேசும் மனிதர்களாக நாம் வாழவேண்டும். வெளியிலே யாரிடத்திலும் பேசாமல், மற்றவர்கள் எல்லாம் பாவிகள் என்பதைப்போல அவர்களினின்று விலகியே வாழ்ந்து, சபையில் மேடையில் வேதத்தை வைத்துக்கொண்டு முழங்கினால் ஜனங்கள் முணங்கத்தான் செய்வார்கள். ஜனங்களிடத்தில் பேசுவதற்கு பிரசங்க பீடத்தை மட்டுமே உபயோகின்றனர் சிலர். தெரு ஓரங்களில், வீதிகளில், வீடுகளில், வேலை ஸ்தலங்களில் மற்றும் மனிதர்களைச் சந்திக்கும் பல இடங்களில் மனிதர்களிலிருந்து தன்னை விலக்கி வாழ்ந்து, தன்னை ஆவிக்குரியவனாக நினைத்துக்கொண்டிருப்போர் ஏராளம். பாவிகளோடு பேசி, பழகி, வாழ்ந்து, உண்டதால்தானே இயேசு அவர்களது வாழ்வின் இரட்சிப்புக்குக் காரணமானாhர். தேவ ஆலயங்களில் மாத்திரமே அவர் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கவில்லையே. தனியாக வீதியில் ஸ்திரீயை சந்தித்தார், வியாதியஸ்தர்களைச் சந்தித்தார் அவர்களோடு ஒருவராக வாழ்ந்தாரே.
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களை, வழி தப்பியவர்களை நாம் வெறுமனே சந்தித்தால்கூட தங்களுடைய ஆவிக்குரிய அடையாளம் அழிந்துபோய்விடுவதாக எண்ணுவோர் பலர். இவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் மெலிந்துபோனவர்கள், பக்குவப்படாதவர்கள். இவர்களது வாழ்வில் வேஷங்களுக்கு வழிகள் எளிதில் உண்டாகிவிடும். ஆத்துமாக்களை தேடிச் செல்லாமல் ஆத்துமாக்களை அறுவடை செய்ய நினைப்போர். 'விதைக்காத இடத்தில் அறுக்கிற' குணம் இவர்களிடத்தில் காணப்படும்.
பிரசங்கம் செய்யும்போதும், தன்னைத் தவறவிட்டுவிடுகிறவர்கள் ஏராளம். மற்றவர்களை எப்படியாவது கவரவேண்டும் என்பதற்காக, தேவன் தரும் வார்த்தைகளை விட்டு விட்டு வழி தப்பிப் பிரசங்கிப்பவர்கள் உண்டு. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லவேண்டும் என்ற இயேசுவின் அறிவுரைகளுக்கு காதுகளை அடைத்துக்கொண்டதினால் வரும் விளைவுதான் இது. யாரோ ஒருவர் ஜெபிக்க வந்திருக்கலாம், ஆனால் அதனை 'ஒருவர் கண்ணீரோடு என்னிடத்தில் ஜெபிக்கும்படி ஓடி வந்தார்' என உருவேற்றி மெருகூட்டிச் சொல்வதினால், பிரசங்கம் அழகுபடும், கவரப்படும், ஈர்க்கும் என நினைக்கின்றனர். தேவன் பார்வையிலோ அவர் நிற்பது குற்றவாளியாக. எதற்கும் வேஷமிட தேவன் நம்மை அழைக்கவிலல்லை. தேவன் சொல்வதை அப்படியே சொன்னாலே, ஜனங்கள் சத்தியத்தினால் சந்திக்கப்படுவார்கள். எடுத்துக்கட்டிக் கூறி, தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை வெட்டிப் புதைத்துப் போடும் பிரசங்கியார்களாக இருக்கக்கூடாது.
நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர் (சங் 73:20) என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகள் நமக்கு எச்சரிப்பூட்டட்டும்.
இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் நாம் தரிக்கக்கூடாது. .(ரோம 12:2)
கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்களாக, கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாக இருக்கக்கூடாது. (2கொரி 11:13)
ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்ளக்கூடாது. (2கொரி 11:14)
ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டு தேவனுக்கு விரோதிகளாக வாழக்கூடாது. (2கொரி 11:15)
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாக இருக்கக்கூடாது. (2தீமோ-3:5)
நம்முடைய வாழ்க்கை இப்படி காணப்படாது, தேவ பார்வையில் நீதியுள்ளதாக அமைய முயலுவோம்.
Comments
Post a Comment