மீறுதல்
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். (சங் 32:1)
'மீறுதல்' என்னும் குணம், அடுத்தவருடையதை பறிப்பதோடு மாத்திரமல்ல, தங்களுடையதையும் பறிகொடுக்கும் நிலைக்கு மனிதர்களைத் தள்ளிவிடும். யூதாவின் மனைவியாகிய தாமாருக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன. அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். அது தன் கையை திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான்; அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்கு பாரேஸ் என்று பேரிடப்பட்டது. பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது (ஆதி 38:27-30). மூத்தவனாகப் பிறந்துவிடவேண்டும் என்று முந்திக்கொண்ட பாரேஸ் 'மீறுதலை' முதுகில் சுமந்துகொண்டே வெளிப்பட்டான். கையை முதலில் நீட்டினபோதிலும், கையில் அடையாளமாக நூல் கட்டப்பட்டிருந்தபோதிலும், பிறப்பின் போதோ சேராவை பாரேஸ் பின்னுக்குத் தள்ளிவிட்டான். மீறுதலினால் முந்தி பிறந்துவிட்டபோதிலும், அடையாளமோ பிந்தி பிறந்த தம்பியின் கரத்தில் அல்லவோ கட்டப்பட்டிருந்தது.
'பாரேஸ்' மற்றும் 'சேரா' -வின் பிறப்பில் கருவறையில் நடைபெற்ற போட்டி, நம்முடைய வாழ்க்கையிலும் நடைபெற்றுவிடக்கூடும். சகோதரர்கள் என்ற வார்த்தையின் கீழ் சமமாக இருந்தபோதிலும், முன்னுரிமையைப் பெறவேண்டும் என்பதற்காக, ஏதாவது சதி செய்தாகிலும் 'முந்திக்கொள்ளவேண்டும்' என்ற மனநிலை நம்மிடத்திலும் உருவாகிவிடக்கூடும். இத்தகைய மனிதர்களின் வாழ்க்கையில் மீறுதல் கூட்டப்பட்டுவிடுகின்றது. 'நீ என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை' (யோபு 2:3) என்று கர்த்தரே சொன்னபோதிலும், 'என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது' (யோபு 14:17) என்று அறிக்கையிடும் நீதிமானாகிய யோபுவின் வார்த்தைகள், எத்தனை பெரிய பாடத்தை நமக்குப் போதிக்கின்றன. ஆண்டவரே 'உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான யோபு' என்று சொன்னபோதிலும், 'மீறுதலாயிருந்திருக்குமோ?' என்று தன்னுடைய வாழ்க்கையின் சில பகுதிகளை மீண்டும் ஒருமுறை ஆராய்ந்து பார்த்ததினால், அவனது வாயிலிருந்து பிறந்த வார்த்தைகளோ இவைகள். ஆனால், அவனது
சிநேகிதர்களோ, 'நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை' (யோபு 33:9) என்று சொன்னதாக யோபுவின் வார்த்தைகளைப் புரட்டுகின்றார்களே. யோபுவைப் போல, மீறுதலைக் குறித்த இத்தகைய 'முன்னெச்சரிக்கை' நம்முடைய வாழ்விலும் காணப்படுமென்றால், வேதனைகளின் மத்தியிலும், அடுத்தவருடையதைப் பறிக்காமல், ஆவிக்குரிய முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவதற்கு எவ்வித தடையும் நமக்கு இருக்காது.
இதைப் போலொத்த சம்பவம், ஈசாக்கு மற்றும் ரெபெக்காளின் குடும்ப வாழ்க்கையிலும் நிகழ்ந்தது. நீண்ட காலமாய் பிள்ளையில்லாதிருந்து, பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்த ரெபெக்காளின் கர்ப்பத்திலே இரட்டைப் பிள்ளைகள் இருந்ததுடன், கர்ப்பத்திலேயே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; கருவில் நடக்கும் கலாட்டாவைக் கண்ட ரெபெக்காள், 'இப்படியானால் எனக்கு எப்படியோ?' என்று கலக்கமுற்றவளாக, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படியாகச் சென்றபோது, 'இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும்; அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்' என்ற உத்தரவு கர்த்தரிடத்திலிருந்து பிறந்தது. மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள். பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள் (ஆதி 25:22-26). தெரிந்துகொள்ளப்பட்டி ருந்தபோதிலும், பிந்தியே பிறந்தான் பயாக்கோபு. தெரிந்துகொள்ளப்பட்டிருப்போமென்றால், பிந்தி பிறப்பதைக் குறித்தும், புறம்பே தள்ளப்படுவதைக் குறித்தும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை; கடைசியாய்ப் பிறந்து காட்டிலே வாழ்ந்துகொண்டிருந்த தாவீதைத் தேடின தேவனின் கண்கள் நம்மையும் தேடும். ஆனால், மூத்தவனாகப் பிறந்திருந்தபோதிலும், தனது முதிர்ச்சியின்மையால், சேஷ்டபுத்திரபாகத்தையே விற்றுப்போட்டுவிட்டான் ஏசா (ஆதி. 25:33). ஏசாவைப் போல முந்தி பிறந்திருந்தபோதிலும், முன்னுரிமையையே இழந்து நிற்கும் மனிதர்களும் உண்டு; நம்முடைய வாழ்க்கை ஏசாவைப் போல மாறிவிடக்கூடாதே. 'மூத்தவன்' என்ற உரிமையில், கிடைத்த உடமையை விற்றது ஏசாவின் மீறுதலன்றோ?
இன்றைய நாட்களிலும், பிந்தி பிறந்தவர்களுக்கு முன்பாக, தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்தங்கி நிற்கும் மனிதர்கள் உண்டே. முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் (மத் 19:30) என்ற வசனம் நம்மை எச்சரிப்பதற்காகவே.
Comments
Post a Comment