Skip to main content

பிரிவு

 பிரிவு



கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன். (லேவி 20:26)


உன்னதருடனான உறவைக் காத்துக்கொள்வதில் நாம் உறுதியுடன் இருக்கவேண்டும்; என்றபோதிலும், உலக மனிதர்களோ நம்முடனான உறவை சில நேரங்களில் காற்றடித்துப் பறந்து செல்லும் சருகைப் போல கத்தரித்துப்போட்டுவிடக்கூடும். காரணங்கள் ஏதுமின்றி உறவிலே எறியப்படும் கல் நம்மைக் கவலைக்குள்ளும் ஆழ்த்திவிடக்கூடும். என்றபோதிலும், நம்முயை ஆவிக்குரிய குணத்தையும், தன்மையையும் இழந்துவிடாமல் வேதனை என்னும் அத்தகைய ஆற்றைக் கடந்துவிடுவோமென்றால், நாம் அல்ல அக்கரையிலேயே நம்மைக் கல்லெறிந்தவர்கள் விடப்பட்டிருப்பதனை நமது கண்களால் காண முடியும். 

அடிமைத்தனம் என்னும் எகிப்தை விட்டு, ஆண்டவரை பிரித்துக்கொண்டுவரும்போது, பிரிந்துவரும் எகிப்தை நினைத்து நாம் வருந்திக்கொண்டிருக்கலாமோ? அல்லது விட்டுவந்த எகிப்தில் கிடைத்த உணவை விருந்தாக நினைத்து, 'நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே' (எண்; 11:4-6) என்று அழுதுகொண்டிருக்கலாமா? இன்றைய நாட்களிலும், சரீரத்திற்குக் கிடைக்கும் இரைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்கள்; தங்கள் வாழ்க்கைக்கு வரவிருக்கும் சிறையைக் குறித்து சிந்திப்பதில்லை. இரையைத் தேடி, தூண்டில்களில் சிக்கும் மீன்களைப் போலவும், கண்ணிகளில் சிக்கும் குருவிகளைப் போலவும் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர்.

கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணினபோது, நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்று கர்த்தர் சொன்லியிருந்தபோதிலும், லோத்துவின் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாளே (ஆதி 19:22,24,26). தேவன் இஸ்ரவேல் மக்களின் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தவராக (யாத் 2:24) அவர்களை எகிப்திலிருந்து பிரித்து அழைத்துக்கொண்டுவந்தார். லோத்துவின் குடும்பத்தையோ, நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; சோதோமின் மனிதர்களது கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்று கூறினவாறு காப்பாற்றினார்கள் தூதர்கள் (ஆதி 19:13). இவ்விரண்டு சம்பவங்களும் நமக்குப் போதிக்கும் சத்தியம் என்ன? நம்மை துன்பப்படுத்தும் மனிதர்களால் தேவனை நோக்கி நாம் பெருமூச்சு விட்டாலும் அவர்களை விட்டு தேவன் நம்மை பிரித்துவிடக்கூடும்; அல்லது, துன்பப்படுத்தும் மனிதர்களின் துன்மார்க்கத்தினிமித்தமும் தேவன் நம்மை அவர்களை விட்டுப் பிரித்துவிடக்கூடும். இத்தகைய சூழ்நிலையில், அத்தகையோரின் பிரிவினை நினைத்து வருந்தாமல், தேவன் வழிநடத்தும் பாதையில் பரத்திலிருந்து கிடைக்கும் விருந்தாகிய மன்னாவோடு முன்னேறவேண்டியவர்கள் நாம்.  

எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்ட இளையகுமாரன், பன்றிகள் தின்னும் தவிடுகூட கிடைக்காத நிலையில், தான் இருக்கும் இடத்தினை விட்டுப் பிரிந்து தகப்பனுடைய வீட்டை நோக்கி திரும்பிவந்துகொண்டிருந்தான் (லூக். 15:13,16). பிதாவைக் காட்டிலும், பிற மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வாழ்க்கையும் இந்நிலைக்கே நம்மைத் தள்ளிவிடும். உலக வழிகளில் சிக்கியிருக்கும் மனிதர்களுடனான உறவையே அதிகம் மதித்து, உன்னதருடனான உறவினை விட்டுப் பிரிந்துசென்று, 'ஆத்துமாவுக்கோ, தவிட்டையே கொடுத்துக்கொண்டிருக்கும்'  மனிதர்கள் இன்றும் உண்டு. இத்தகைய மனிதர்கள், பிதாவுடனான உறவைக் காத்துக்கொள்ளவேண்டுமென்றால், அத்தகைய மனிதர்களை விட்டுப் பிரிந்துவருவது அவசியமல்லவா. பிதாவின் வீட்டிற்கு வந்ததினால், இழந்துபோன உறவையும், உடையையும், உபசரிப்பையும், உணவையும் திரும்பவும் பெற்றுக்கொண்டானே. பிதாவின் வீட்டில் விருந்துண்ணும்போது, தவிட்டைத் திண்ற திண்ணைகளைக் குறித்து நாம் வருந்தவேண்டியதில்லை. சங்கீதம் 1 போதிப்பது இதுதானே. 

ஆண்டவருடனான உறவை வலுப்படுத்த, தாவீதைப்போல சொந்த வீட்டாராலேயே பிரிக்கப்பட்டு, ஆட்டுமந்தையோடுகூட நாம் வைக்கப்பட்டிருக்கலாம்; அல்லது, சிங்காசத்தில் உயர்த்தப்படும்படியாக சொந்த வீட்டிலிருந்து யோசேப்பைப் போல பிரிக்கப்பட்டிருக்கலாம்; அத்தகைய பிரிவுகள் அனைத்தும் நம்மை பிதாவோடு பிணைப்பவைகளே. 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...