Skip to main content

அறியாவிட்டால் அழிவுதான்

 

அறியாவிட்டால் அழிவுதான்

 

வாழ்க்கையில் நேரிடும் துன்பங்களின் தொடக்கங்கள் பல வேளைகளில் நமக்குத் தென்படுவதில்லை. எங்கோ இருந்து அவைகள் வருவதாகவே நாம் யூகித்துக்கொள்கிறோம், அதற்குக் காரணம் வேறு யாராகவோ இருக்கலாம் என்றே சந்தேகிக்கிறோம். ஆனால், பல நேரங்களில் துன்பங்களுக்குக் காரணம் நாமே. எனினும் துன்பங்களைச் சந்திக்கும் வேளைகளில், அதற்கானக் காரணம் தாங்களாகவும் இருக்கக்கூடுமோ என்ற கோணத்தில் ஆராயமுற்படாவிட்டால், துன்பங்கள் முற்றுப்பெறாதே. நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம் (1கொரி. 11:31) என்று கொரிந்தியருக்கு பவுல் ஆலோசனை சொல்லுகின்றார். இதையே யோவானும், 'நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.' (1யோவான் 1:8) என்று எழுதுகின்றார். துன்பங்களைச் சந்திக்கும்போது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை அலசி ஆராய்வது அவசியம்.

இயேசு பவனியாய் வந்துகொண்டிருந்தபோது, எருசலேமைப் பார்த்து அதற்காகக் கண்ணீர் விட்டு அழுதார். உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது என்று சொன்னார். உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார். (லூக் 19:42-44)

இரண்டு காரியங்களைக் குறித்த அறிவில்லாத ஜனங்களை இயேசு இங்கே குறிப்பிடுகின்றார். ஒன்று சமாதானத்துக்கு ஏற்றவைககை; குறித்த அறிவில்லாமை, இரண்டாவது சந்திக்கும் காலத்தைக் குறித்த அறிவில்லாமை. இவ்விரு அறியாமைகளும் நம்மை அழிவின் முடிவுக்குள் தள்ளிவிடப் போதுமானவை; அறியாமை என்றும் ஆபத்தானதே. உலகத்தில் வாழும்போது, நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த நாட்களில் சமாதானத்திற்கேற்றவைகளை முதலில் நாம் அறிந்துகொள்ளவேண்டும். பாவத்தின் நிமித்தம், அக்கிரமத்தின் நிமித்தம், உலக ஆசைகளின் நிமித்தம் தேவனை விட்டு விலகிக்கிடக்கும் நமது தூரத்தை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடாது. உலகத்தில் வாழும்படி நமக்குக் கொடுக்கப்பட்ட நாட்கள், 'வாழ்க்கையில் பாவத்தை அதிகரிக்கச் செய்ய அல்ல' 'தேவனோடு அதிகமாக நெருங்கிச் சேரவே.' இந்த அறிவற்ற மனுடரே, உலகத்தின் சிற்றின்பங்ளின் சிக்கிக்கிடக்கின்றனர். உலகத்தில் பிறந்தது அனுபவிக்கவே, புசித்துக் குடித்து வெறிக்கவே என்ற எண்ணத்துடனேயே தங்கள் வாழ்நாட்களைக் கடத்துகின்றனர். தங்களுக்கும் தங்களைப் படைத்த தேவனுக்கும் உள்ள தூரத்தை அதிகரிக்கச் செய்துகொண்டேயிருக்கின்றனர். தூரத்தை அதிகரிக்கச் செய்யும் இடங்களையே அவர்கள் தேடிச் செல்கின்றனர். குடியும், போதையும், விபச்சாரமும், அசுத்தமான செயல்கள் அத்தனையும் அவர்களை இழுத்துக்கொண்டு செல்ல, முடிவில், மரணத்திற்குப் பின்னர், பரலோகத்தில் வீற்றிருக்கும் தேவனைச் சந்திக்க இயலாதவர்களாகவும், பரலோகத்திற்குத் தூரமானவர்களாகவும் பரிதபிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

தூரமாயிருந்த நம்மை தேவனுக்கு சமீபமாக்கவே இயேசு இந்த உலகத்திற்கு வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார் (எபே 2:17). இயேசுவின் இரத்தம் மாத்திரமே நம்மை தேவனுக்குச் சமீபமாகக் கொண்டுவர வல்லது. முன்னே தூரமாயிருந்த நாம் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானோம். (எபே 2:13).

பிரியமானவர்களே! உங்கள் சமாதானத்திற்கேற்றவைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்கள் பாவங்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருக்கிறீர்களா? அவரை உங்கள் சொந்த இரட்சகராக உள்ளத்தில் வீற்றிருக்க அனுமதித்திருக்கிறீர்களா? இரட்சிப்பிப்பின் சந்தோஷம் உங்களில் உண்டா? நான் தேவனுடைய பிள்ளை என்ற நித்தியத்திற்குக் கொண்டுசெல்லும் நம்பிக்கை உங்களுக்கு உண்டா? பொருளாசையையும், சிற்றின்பங்களையும் கொடுத்து தேவனை விட்டுத் தூரமாக சத்துரு உங்களைத் துரத்திக்கொண்டு செல்வதை அறிந்துகொள்ளுங்கள்; சமாதானத்தை இன்றே தெரிந்துகொள்ளுங்கள். மரணத்திற்குப் பின், மனந்திரும்புதல் உங்கள் கண்களுக்கு மறைக்கப்படும் காலம் வரும், தேடியும் காணக்கூடாத நிலை வரும். 'இதோ, இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள் (2 கொரி. 6:2). தேவன் நம்மைச் சந்திக்கும் காலத்தைப் பற்றிய அறிவு நமக்கு உண்டா? சபைகளுக்குச் செல்லும்போது, ஆவிக்குரிய கூட்டங்களில் பங்கேற்கும்போது அங்கு செய்யப்படும் பிரசங்கங்கள் அனைத்தும் யாருக்கோ அல்ல, உன்னைச் சந்திக்கவே. ஆனால், இந்த அறிவு இல்லாமலேயே ஆலய ஆராதனைகளிலும், கூட்டங்களிலும் பங்கேற்பதினால் பிரயோஜனம் என்ன?

பல நேரங்களில், நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சந்திப்பதற்கான காரணங்கள் இதுவே. நம்மிடத்தில் உள்ள அறியாமையினால் வரும் அழிவினைக் காண இயலாமல், அங்கும் இங்கும் நாம் ஓடி அலைவதில் பிரயோஜனம் இல்லை. அறியவேண்டியவைகளை நாம் அறிந்துகொண்டால், அழிவைத் தடுத்துவிடலாமே. சந்திக்கும் காலத்தைக் குறித்தும், சமாதானத்துக்கடுத்ததைக் குறித்ததுமான அறிவு இல்லாமல் சந்தோஷமாக வாழவேண்டும் என்று விரும்பும் மக்களே அதிகம். ஊழியர்கள் பலர் தேவனைக் குறித்து எடுத்துச் சொல்லியும், வேதத்தைக் குறித்து எடுத்துச் சொல்லியும் அதனைப் புரிந்துகொள்ள மனதற்றவர்களாகவும், அந்த அறிவு தங்களுக்குத் தேவையற்றதைப் போல உணர்வவற்றவர்களாகவும் வாழும் ஜனங்கள் அநேகர். தேவ அறிவும், வேத அறிவும் உங்கள் வாழ்க்கையை சத்துருவின் கையிலிருந்து காப்பாற்றும். வேதத்தைக் கைகளில் வைத்திருந்தும், வேதத்தைக் குறித்த அறிவில்லாமல், தேவனை விட்டுத் தூரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களை சத்துரு சூழ்ந்துகொள்கிறான். வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளைக் கொடுத்து, அவர்களை வாதிக்கின்றான். தேவனால் பாதுகாக்கப்படாத அவர்களது வாழ்க்கையை, வேதனைகளினால் பாழ்படுத்திவிடுகின்றான். வசனத்தைக் குறித்த அறிவிருந்த இயேசுவினிடம், 'இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்பச் செய்யும்' என்று சொன்னான், ஆனால், வசனத்தைப் பற்றிய அறிவில்லாதிருந்தால், அந்தக் கல்லுகளாலேயே நம்மை அடித்துக் கொன்றுவிடுவான்.

தேவன் வேண்டாம் தேவைகள் போதும் - அவர் 
சந்திக்க வேண்டாம் சந்தோஷம் போதும் - என்று
துரத்தும் சத்துருவின் கரத்தைப் பிடித்துக்கொண்டாய்
தூரமாய் நின்றுகொண்டாய் துன்பத்திலேயே வாழ்ந்துகொண்டாய் 
மரணம் வந்தது உனக்கு இனி மனந்திரும்புதலில்லை
மறுமுறை உயிர்த்தாலும் மரணம்தான் உன் எல்லை 
சந்திக்கும் காலத்தை அறியாமல் நீ வாழ்ந்ததினால்
வேதனையே வாழ்வானது, வாழ்வோ பாழானது

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...