Skip to main content

நீதியும், நீதிமானும்

நீதியும், நீதிமானும்

 

நீதி நீதிமானுக்கு அரணானது; துன்மார்க்கனுக்கோ அதுதான் முரணானது. நீதிமான்கள் பட்டணத்திற்கு அரணானவர்கள்; ஞானமுள்ள மனிதர்களே பட்டணத்தைக் காக்க வலிமையுள்ளவர்கள். பட்டணத்துக்கு விரோதமாக ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டும்போது, அதிலே வசிக்கும் ஞானமுள்ள ஏழை மனிதனே தன் ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவிக்கின்றான் (பிரசங்கி 9:14,15). கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.

ஆபிரகாம் தேவனைச் சந்தித்தபோது, அவரிடத்தில் கேட்ட மூன்று கேள்விகளைச் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.

1. 'துன்மார்க்கனோடே நீதிமான்களையும் அழிப்பீரோ?' (ஆதி. 18:23)
2. சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ? (ஆதி. 18:25)
3. ஐந்துபேர் நிமித்தம் பட்டணமுழுவதையும் அழிப்பீரோ? (ஆதி. 18:28)

சோதோம் கொமோராவின் பாவம் மிகவும் கொடிதாயிருந்தது (ஆதி. 18:20).கூக்குரல் தேவனிடத்தில் வந்தெட்டியது மாத்திரமல்ல, அது தேவனுக்கு முன்பாக நிரூபணமுமானபோது, அப்பட்டணம் நிர்மூலமாகவிருந்தது. நிர்மூலமாக்க இரண்டு தூதர்களை தேவன் அனுப்பியபோது, அப்பட்டணத்தில் உள்ளோரோ இறப்பை எதிர்நோக்கிக்கொண்டிருந்தார்கள். அதன் அழிவு ஆபிரகாமுக்கு தெறிவிக்கப்பட்டபோது, ஆபிரகாம் சோதோமில் இருந்த லோத்துவை காப்பாற்றும் முயற்சியில் கர்த்தருக்கு முன்னே நின்றுகொண்டிருந்தான். ஆபிரகாமின் கேள்வியும், கர்த்தரது பதிலும் பல்வேறு காரியங்களை நமக்கு விளக்கப் போதுமானவைகள்.

'துன்மார்க்கனோடே நீதிமான்களையும் அழிப்பீரோ?' (ஆதி. 18:23) என்பதே ஆபிரகாமின் முதற்கேள்வி. துன்மார்க்கர்கள் தங்கள் துன்மார்க்கத்தினிமித்தம் அழிக்கப்படலாம், ஆனால், அவர்களுக்குள்ளே அங்கு வசிக்கும் நீதிமான்களுக்கும் அதே தண்டனை கிடைக்கக்கூடாதே என்பதுதான் ஆபிரகாமின் மனநிலை. ஆபிரகாமின் கேள்வியே இன்று நம்மில் பலருக்கும் உண்டாகின்றது. 'துன்மார்க்கர்களோடு கூட நீதிமான்களாக வாழும் நாமும் அழிக்கப்பட்டுவிடுவோமோ?' என்றும், துன்மார்க்கத்தின் நிமித்தமாக உலகத்தில் நடைபெறும் அழிவுகளில் நீதிமான்களாக வாழும் நாம் சிக்கிக்கொண்டோமோ என்றும் பலர் சந்தேகப்படுகின்றனர். சூழ்ந்திருக்கும் துன்மார்க்கருக்கு மத்தியில் தாங்கள் சிக்கிக்கொண்டோம், எனவே, அவர்களைத் தொடரும் அழிவு நம்மையும் பற்றிப்பிடிப்பது நிச்சயம் என்று நினைத்துவிடவேண்டாம். 'நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்னேன்' (யாத். 15:26) என்று எகிப்து தேசத்தின் ஜனத்தையும், தன் ஜனத்தையும் தேவன் வித்தியாசப்படுத்திக் காண்பித்தாரே. கடைசி நாளிலே கர்த்தருடைய சம்பத்தான நாம் கர்த்தரிடத்திலேயே சேர்க்கப்படுவோம்.துன்மார்க்கமும், துன்மார்க்கரும் நம்மை வாரிக்கொள்ள முடியாது.

கிதியோனுக்கும், தேவனுக்கும் இடையிலா உரையாடலும் இதனை நமக்கு விளக்கப் போதுமானது. கிதியோன் தேவனை நோக்கி: இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன், பனி தோலின் மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருக்கவேண்டும் என்றான், மேலும், தோல் மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான் அதுவும் அப்படியே ஆயிற்று (நியா. 6:38,39). துன்மார்க்கரின் நிமித்தமாக தேவனால் உண்டாகும் அழிவு நீதிமானைத் தொடுவதில்லை. தன்னுடைய ஜனத்தைத் தற்காக்க தேவன் போதுமானவர். இதையே தாவீதும், 'நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும், நீதிமான் கைவிடப்பட்டiதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை' (சங். 37:5) என்று கூறுகின்றான். கைவிடப்படும் துன்மார்க்கர் மத்தியிலே, தேவனோ நீதிமானைக் கைப்பிடித்திருக்கிறார் என்பதை மறந்துவிடவேண்டாம்.

மனிதர்களின் பாவங்களினால் மனம் நொந்த தேவன், 'நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது' என்று தேவன் அங்கலாய்த்தபோதிலும், நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது (ஆதி 6:7,8). நீதிமானும், உத்தமனுமாயிருந்து, தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தவனும், கிருபை பெற்றவனுமாகிய நோவாவை (ஆதி. 8:9) துன்மார்க்கரோடு கூட அவர் அழித்துவிடவில்லையே.

இதனை விளக்கும் ஒரு உவமையையே சீஷர்களுக்கும் இயேசு போதித்தார். நல்ல நிலத்தில் நல்ல விதைகளை விதைத்திருந்தபோதிலும், ஊடே வளர்ந்துவிட்ட களைகளைக் கண்டபோது வேலைக்காரர்கள் பரிதபித்தார்கள். 'ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது' என்று வேலைக்காரர் கேட்டபோது, 'சத்துரு அதைச் செய்தான்' என்றான் எஜமான். வேலைக்காரரோ, 'நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா?' என்று கேட்டபோது, 'வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள்' (மத். 13:27-29) என்றான் எஜமான்; எனினும், அறுவடை அன்று இரண்டும் தனித்தனியே வேறுபிரிக்கப்பட்டு, களைகள் தீயினால் கொழுத்தப்படும், கோதுமையோ களஞ்சியத்திலே சேரும் (மத். 13:30) என்றார் இயேசு. களைகளையும், பயிரையும் வேறுபிரிக்கும் பணியினைச் செய்பவர் அவர் ஒருவரே. மனிதர்கள் பலர் அதனை செய்ய முற்பட்டு, பயிர்கள் பலவற்றையும் பிடுங்கிவிடுகின்றனர். எது களை, எது பயிர் என்று உணராமலும், அறிந்துகொள்ளாமலும் இருப்பவர்கள் இத்தவற்றினைச் செய்யலாம், அத்துடன் களைகளின் மேல் உள்ள ஆத்திரத்தினால், அவசரத்தினால் வேகவேகமாக களைகளைப் பிடுங்க நினைப்பவர்களும் இத்தவற்றினைச் செய்துவிடலாம். களைகளோடுகூட, பயிரும் பிடுங்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாயிருக்கிறார் தேவன்.

கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும் (சங். 1:6). துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார் (சங். 37:17). துன்மார்க்கருடைய கொம்புகள் வெட்டிப்போடப்படும்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும் (சங். 75:10). துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார் (நீதி. 3:33). நீதிமானுடைய பேர் புகழ் பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும் (நீதி. 10:7). சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன் (நீதி. 10:25). நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை (நீதி. 10:30). துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோகும் (நீதி. 13:9) ஆனால், நம்முடைய தீபமோ கர்த்தருக்கு முன்பாக எரிந்துகொண்டே இருக்கும்.

துன்மார்க்கரோடு கூட நீதிமான்களை தேவன் அழிப்பதில்லை என்பதையே மேற்கண்ட சம்பவங்களும், வசனங்களும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. நீதிமானுக்கும், துன்மார்க்கனுக்கும் உள்ள வித்தியாசத்தை காண்பிக்கிறவர் நம் தேவன் (மல். 3:18).

மேலும், கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள். ஆகையால், என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் (யாத். 32:9,10) என்றார். இஸ்ரவேல் ஜனங்களின் மீது கர்த்தருக்கு கோபமிருந்த போதிலும், மோசேயையும் அந்த கோபத்திற்கு உட்படுத்திவிடவில்லை அவர்.

சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ? (ஆதி. 18:25) என்பது ஆபிரகாமின் அடுத்த கேள்வி. நீதிமான்கள் நீதியாய் நடப்பவர்கள் மாத்திரமல்ல, நீதிக்காக தேவனிடத்திலேயே போராடுபவர்கள். துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக என்றான் ஆபிரகாம் (ஆதி 18:25). தேவன் தன்னுடைய நீதியிலிருந்து தவறிவிடக்கூடாது, தேவனுடைய செயல்பாட்டை பிற மக்கள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்பதை மனதில் கொண்டவனாயிருந்தான் ஆபிரகாம். நியாயாதிபதி அநீதி செய்துவிட்டார் என்றோ, துன்மார்க்கரோடுகூட நீதிமானையும் சங்கரித்துவிட்டார் என்றோ புறஜாதியினர் பேசுவதற்கு இடங்கொடுத்துவிடக்கூடாது என்பதில் ஆபிரகாம் கருத்தாயிருந்தான். இது நீதிமான்களின் உயர்ந்த குணம். 'என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு' என்று கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபோது, மோசேயும் கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன? மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும் (யாத் 32:11,12) என்று வேண்டினான்.

நீதிமான்கள் தப்புவிக்கப்படவேண்டும் என்பதில் மாத்திரம் நீதிமான்கள் திருப்தியடைந்துவிடவில்லை. கர்த்தருடைய பெயருக்குக் களங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார்கள் நீதிமான்கள். கர்த்தருடைய நாமத்தைச் சுமந்து நிற்கும் நாம் செய்யும் காரியங்கள் கர்த்தருடைய நாமத்திற்குக் களங்கம் உண்டாக்கிவிடாதபடி எச்சரிக்கையோடிருப்போம்.

ஐந்துபேர் நிமித்தம் பட்டணமுழுவதையும் அழிப்பீரோ? என்பது ஆபிரகாமின் அடுத்த கேள்வி. கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (சங். 34:15). தேவனுக்கும், ஆபிரகாமுக்கும் இடையிலான உரையாடல்கள், தேவ மனதையும், மனித குணத்தையும் நமக்கு வெளிப்படுத்துகின்றது. ஆபிரகாம் கர்த்தரிடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள்; அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? (ஆதி 18:24) என்றான். பட்டணம் காக்கப்படுவதற்கு 'ஐம்பது நீதிமான்கள் இருந்தால் போதுமானதாயிருக்குமா?' என்று ஆபிரகாம் தனக்குள்ளேயே கணக்குப்போட்டுக்கொண்டுக்கொண்டான். ஆபிரகாமின் கேள்விக்குப் பதிலளித்த கர்த்தர், 'சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால் அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுவதையும் இரட்சிப்பேன்' என்றார் (ஆதி. 18:26).

தொடர்ந்து கர்த்தரிடத்தில் பேசிக்கொண்டிருந்த ஆபிரகாம், ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர் நிமித்தம் பட்டணமுழுவதையும் அழிப்பீரோ? என்றான் (ஆதி. 18:28). ஐம்பது பேருக்கு நாற்பத்தைந்து பேர் இருந்தால், அந்த நாற்பத்தைந்து பேர் நிமித்தம் பட்டணத்தை காப்பீரா? என்று ஆபிரகாம் கேட்கவில்லை; மாறாக, 'ஐந்து பேர் நிமித்தம் அழிவு வந்துவிடுமோ' என்று சந்தேகித்துக்கொண்டிருந்தான். ஆபிரகாமின் பார்வையில் நின்றதெல்லாம் சோதோமின் துன்மார்க்கமும், துன்மார்க்கரின் எண்ணிக்கையுமே. ஆனால், கர்த்தரோ, நீதிமான்களையே கணக்கில் கொண்டவராக, நீதிமான்களையே நோக்கிப்பார்க்கிறவராக, 'நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை' என்றார் (ஆதி. 18:28). துன்மார்க்கரை அல்ல நீதிமான்களைக் குறித்தே கரிசனை கொள்பவர் கர்த்தர் என்பதை கர்த்தரின் பதிலிலிருந்து ஆபிரகாம் அறிந்துகொண்டான். எனவே தொடர்ந்து அவரிடத்தில் பேசும்போது, 'நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ, முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ, இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ, பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ' என்று (ஆதி. 18:29-32) நீதிமான்களின் எண்ணிக்கையை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தான். எலியாவும் இப்படியே காணப்பட்டான்; 'நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்' என்பதுதான் அவனது புலம்பலாயிருந்தது (1இராஜா. 19:10). ஆனால், கர்த்தருடைய கணக்கிலோ ஏழாயிரம்பேர் இருந்தனர். ஆபிரகாமின் பார்வைக்கும், கர்த்தரின் பார்வைக்கும் இருந்த வித்தியாசத்தை இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிந்துகொள்ளமுடிகிறதே. நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும், சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன்' (எசே. 22:30) என்கிறார் கர்த்தர். மேலும், நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டு பிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன் (எரே 5:1) என்கிறார். இதுதானே கர்த்தருடைய கணக்கு. 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி