இந்த போருக்கு இதுதான் காரணம்
'மதமாற்றம்' என்ற பதம் அரசியல்வாதிகள் வாயில் அல்வாத்துண்டுபோல சுவைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற காலம் இது. 'மதமாற்றம்' ஒன்றையே மனதில் கொண்டு ஆட்சி செய்யும் மனிதர்களும் ஒன்றாகக் கூடிவிட்ட நாட்கள் இது. மதங்களைச் சார்ந்து நிற்போர் பலருக்கு இத்தகைய மனிதர்கள் அச்சத்தைத் தூண்டும் அடையாளங்களாகிவிட்டனர். 'மனமாற்றத்திற்கும், மதமாற்றத்திற்கும்' வித்தியாசம் காணமுடியாமல், இரண்டும் ஒன்றே என்று ஓலமிடுவதினால் வருகிற வினை இது. மனதைக் குறித்துக் கவலைப்படாமல், மனிதனைக் குறித்தும் கவலைப்படாமல், மதத்தைக் குறித்து மாத்திரம் கவலைகொள்ளும் மனிதர்கள் பெருகிவரும் நாட்கள் இவைகள். இன்று ஒரு கட்சியில், நாளையோ மற்றொரு கட்சியில், மறுநாள் அதற்கடுத்த கட்சியில் என அரசியல்வாதிகள் தாவிக்கொண்டிருந்தாலும், பாவி ஒருவன் பாவத்திலிருந்து தாவி நல்வழிக்குள் வருவதை அவர்கள் விரும்பாதது வேதனைக்குரியது. 'கட்சித்தாவல் தடைச் சட்டம்' என்று ஒன்று உருவாக்க முற்பட்டபோது, தாவமுடியாதே என்று தவித்துப்போனதுண்டு அரசியல்வாதிகள் பலர். தங்களுக்கு ஆதாயம் என்றால் அங்கும் இங்கும் ஓடும் அரசியல்வாதிகள், தங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ள ஜனங்கள் ஓடுவதை ஏன் தடைசெய்யவேண்டும்? தாங்கள் விரும்பும் எல்லைக்குளேயே ஜனங்கள் வாழவேண்டும் என்பது அதிகாரமல்ல, அடக்குமுறை.
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த ஓர் உரையாடலைக் கவனித்துக்கொண்டிருந்தேன், 'தாய்மதம் திருப்பும் நிகழ்ச்சி' என்ற பதத்தினை உபயோகப்படுத்தி, இந்து மதத்தைச் சார்ந்த அரசியல்வாதி ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்; இந்து மதத்திலிருந்து அநேகர் பிற மதத்திற்குச் சென்றுவிட்டதினால், இந்தியாவையே இழந்துகொண்டிருக்கிறோம் என்றார். அவரது வார்த்தைகளில், அவர்களது அரசியல் மக்களைச் சார்ந்ததல்ல, மதத்தைச் சார்ந்தது என்பதை யூகிக்க முடிந்தது. அந்த உரையாடலில் பங்கேற்ற கிறிஸ்தவ பெயரைத் தரித்த அரசியல்வாதி ஒருவரோ 'எனக்கு எல்லா மதமும் ஒன்றுதான்' என்று தனது ஓட்டுவங்கியை இழந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பேசிக்கொண்டிருந்தார். 'கிறிஸ்தவம்' ஒரு மதமல்ல, இறைவனை அடையச் செய்யும் (வழியே) மார்க்கமே; நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவா 14:6) என்றார் இயேசு. வழியை அறியாதவர்களுக்கு வழியை அறிவிக்கும் பணியினைத்தான் கிறிஸ்துவை அறிந்தவர்கள் செய்கின்றார்கள். ஆனால், தூரதிஷ்டவசமாக கிறிஸ்தவமும் ஒரு மதத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. பள்ளியிலும், பிற எந்த சான்றிதழ்களிலும் 'மதம்' இடம்பெற்றுவிட்டது. 'கிறிஸ்தவம்' மதத்துடன் சேர்க்கப்பட்டுவிட்டதினால், பிற மதங்கள் கிறிஸ்தவத்துடன் போட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றன, போர் தொடுத்துக்கொண்டிருக்கின்றன, எதிரிகளாக நிற்கின்றன. போருக்கு இதுவே பிரதான காரணம்.
இயேசு இந்த உலகத்தில் பிறந்தபோது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, 'யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்' என்றார்கள் (மத் 2:2). 'ராஜா' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அப்போது ஆண்டுகொண்டிருந்த ராஜாவாகிய ஏரோது அதிர்ந்துபோனான்; அவனுக்கு கோபம் உண்டானது. தனக்கு நிகராக இன்னொரு ராஜாவா? அப்படியென்றால், எனது பதவி என்னாவது? தனது பதவியைக் காப்பாற்றவேண்டுமென்றால், அவரைக் கொன்றேயாகவேண்டும் என்ற எரிச்சலில் அவன் செயல்படத்தொடங்கினான். குழந்தைகள் பலரைக் கொன்றும் குவித்தான். இயேசு, உலகத்தில் ராஜ்யபாரம் செய்யும் ராஜா அல்ல என்பதை அவன் அறியாதிருந்தான். இன்றும் கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் பலர் எதிர்த்து நிற்பதற்குக் காரணம் இதுவே. இயேசு அரண்மனையில் பிறக்கும் ராஜா அல்ல, நமது அகத்தில் பிறக்கும் ராஜா என்பதைப் புரிந்துகொள்ள இயலாதவனாயிருந்தான். பிலாத்துவும் இயேசுவுவின் ராஜரீகத்தன்மையை அறிந்துகொள்ள இயலவில்லை. அவன் இயேசுவை நோக்கி, 'நீ யூதருடைய ராஜாவா?' என்று கேட்டபோது, நீர் சொல்லுகிறபடிதான் என்றார் இயேசு (மத். 27:11). அவர் தனக்குப் பதிலாக, தனக்கு விரோதமாக, உலகத்தில் ஆளுகின்ற ராஜா என்ற அர்த்தம்கொண்டதினாலேயே, இயேசுவின்மேல் அவர்கள் மூர்க்கவெளி கொண்டார்கள், அவரை அடித்தார்கள். அவரை சிலுவையில் அறைந்தபோது, இயேசு எந்த ராஜா என்று தெரியாமலேயே, 'இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு' என்றுதான் அவர் சிரசுக்கு மேலாக எழுதிவைத்தார்கள் (மத். 27:37). அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள் (யோவா 19:21). நிந்தித்தவர்களும், 'இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும்' (மத். 27:42) என்றே சொல்லி நிந்தித்தார்கள். ஆட்சிபீடத்திலிருந்த அரசர்கள், தேசாதிபதிகள் மனதில் மாத்திரமல்ல, இயேசுவை சுற்றியிருந்த ஜனங்களும் கூட அவரை உலகத்தின் ராஜாவாகவே நினைத்துக்கொண்டிருந்தனர். அதனாலேயே இயேசுவை தங்களுக்கு விரோதியாகவும், எதிரியாகவும் எண்ணிக்கொண்டிருந்தனர்.
அதுமாத்திரமல்ல, ஜனங்களுடைய நிலையும் அப்படியே. இயேசு செய்த அற்புதங்களை ஜனங்கள் கண்டபோது, அவரை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருந்தார்கள்' (யோவான் 6:15) என்றே யோவான் எழுதுகின்றான். அற்புதம் நடக்கிறது, அப்பம் கிடைக்கிறது இப்படிப்பட்ட ஒரு நபர் தேசத்தின்மேல் ராஜாவாக இருந்தால் நன்றாயிருக்குமே என்று விருப்பங்கொண்டார்கள் ஜனங்கள். ஆனால் இயேசுவோ, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார் இயேசு (யோவா 18:36). ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, ராஜ்யம் இவ்விடத்திற்குரியதுமல்ல, ஆனால் இயேசு ராஜா என்றே தன்னை அறிமுகப்படுத்துவதின் காரணம் 'பரலோக ராஜ்யத்திற்கடுத்ததே.' மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று இயேசு பிரசங்கம் செய்தார் (மத். 4:47). இயேசு உலகத்தில் இருந்தபோது, உலகத்தில் ஆளும் ராஜாக்களின் அரண்மனைகளையோ, சிங்காசனங்களையோ அவர் ஆக்கிரமிக்கவில்லை.
இயேசுவும் அவருடைய சீஷர்களும் கப்பர்நகூமில் வந்த போது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார். அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே. ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார் (மத் 17:27). எனினும், பூமியின் ராஜாக்கள் இயேசுவை புரிந்துகொள்ளவில்லை.
பரலோக ராஜ்யத்திற்கடுத்தவைகளைக் குறித்தும், பிதாவுக்கடுத்தவைகளைக் குறித்துமே அவர் பேசினார். 'உம்முடைய ராஜ்யம் வருவதாக' (மத். 6:10) என்று பிதாவை நோக்கி வேண்டினார். பரலோகத்திற்குள் நுழையப்போகின்ற ஒவ்வொருவருக்கும் அவர்தான் ராஜா என்பதை உணர்த்துவித்துப் பேசும் இயேசுவின் வார்த்தைகளை உணர்ந்துகொள்ளக்கூட பெலனற்ற நிலையில் இருந்தார்கள் உலகத்தின் ராஜாக்கள். 'தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே' (மத். 12:28) என்று இயேசு சொல்வதின் பொருள், பிசாசின் ராஜ்யத்தினின்றும், இருளின் அதிகாரத்தினின்றும், பாவத்தின் பிடியினின்றும் ஜனங்களை விடுதலையாக்கி, தேவனுடைய ராஜ்யத்திற்குட்படுத்துவதே.
ஆனால், இன்றைய நாட்களிலும், கிறிஸ்துவை யாராவது ஏற்றுக்கொண்டுவிட்டால், உலகத்தின் ராஜ்யம் பறிபோய்விட்டதைப் போல ஆளுவோர் நினைப்பது முற்றிலும் தவறானது. பூமியை ஆளும் ராஜாக்களே, பிரதம மந்திரிகளே, அமைச்சர்களே, முதலமைச்சர்களே, அதிபர்களே, இயேசு உங்களுடைய சிங்காசனத்தை கவிழ்த்துப்போட வரவில்லை. உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனின் இருதயத்திலும் சிங்காசமிட வந்திருக்கிறார். இதைப் புரிந்துகொள்ளாததினாலேயே அவருடன் போரிடத் துணிந்துநிற்கின்றனர் ஆட்சியாளர்கள்.
'கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களே கிறிஸ்தவர்கள்.' கிறிஸ்துவைப் பின்பற்றுவோரின் குடும்பத்தில் பிறந்தவன் கிறிஸ்தவனல்ல, கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறந்தவனே கிறிஸ்தவன். இதனை வலியுறுத்தும்படியாகவே, 'ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றார் இயேசு (யோவான் 3:3). இக்கருத்தினை வெளிப்படுத்தியே, புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது (ரோம 2:29) என்கிறார் பவுல்.
மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் மனிதர்களாகவே பிறக்கின்றனர். உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் மனிதனை உண்டாக்கிய தேவனுடையது; எந்த உயிரும் எந்த ஒரு மதத்தையும் சார்ந்து பிறப்பதில்லை, அது தேவனைச் சார்ந்தே பிறக்கின்றது. கிறிஸ்தவ பெற்றோருக்குப் பிறக்கும் பிள்ளைகளானாலும், பிற மக்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளானாலும், மதங்களைச் சார்ந்து வாழும் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளானாலும் அனைத்தும் மனிதர்களாகவே, இறைவனுக்குச் சொந்தமான சுதந்திரங்களாகவே பிறக்கின்றன. கர்ப்பத்தில் உருவாகும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆவி ஆண்டவரிடமிருந்தே வருகின்றது. என்றாலும், ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் மனிதர்கள் அறியாதிருக்கிறார்கள் (பிரச. 11:5). குழந்தைகளுக்கு முதலில் கர்த்தரைக் காட்டவேண்டிய பொறுப்பு பெற்றோருடையதே. கிறிஸ்தவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளை கிறிஸ்தவர்கள் என்றும், இஸ்லாமியருக்குப் பிறக்கும் பிள்ளைகளை இஸ்லாமியர்கள் என்றும், இந்துக்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளை இந்துக்கள் என்றும் குழந்தைகளை மதத்தின் பிண்னணியத்தில் வளர்ப்பது பெற்றோர்களே, பெற்றொரைச் சார்ந்து பிள்ளைகளையும் அந்த மதத்தைச் சார்ந்தவர்களாகவே அங்கீகரிக்கிறது உலகம். நீ இந்துவாயிருந்தால் உனது பிள்ளை இந்துவாகிவிடாது, நீ முஸ்லீமாக இருந்தால் உன் பிள்ளை முஸ்லீமாகிவிடாது, நீ கிறிஸ்தவனாக இருந்தால் உனது பிள்ளை கிறிஸ்தவனாகிவிடாது.
அநேக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை புறம்பான இந்துக்களாகவும், முஸ்லீம்களாகவும், கிறிஸ்தவர்களாகவுமே முதலில் மாற்றுகின்றனர். எனினும், அதனைத் தொடர்ந்து, உள்ளத்தில் பெற்றோர்களின் வழியை ஏற்றுக்கொள்ளும்போதுதான் அவன் அதற்குச் சொந்தமாகிறான். உள்ளத்தில் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல், கிறிஸ்தவன் என்ற கணக்கில் இருக்கும் ஜனங்கள் அநேகர். இவர்களையே பெயர்கிறிஸ்தவர்கள் என்று ஆவிக்குரிய உலகம் அழைக்கின்றது. அடுத்த நிலைக்குக் கடந்துபோகாமல், பெற்றோரின் வழியில் அப்படியே கிடந்துபோவதனால் நிகழ்வது இது.
'இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்' (சங் 127:3) என்பதுதான் தாவீதின் பாட்டு. அப்படியென்றால், கர்த்தரை அறிந்தவர்களுக்கு மாத்திரம்தான் பிள்ளைகள் பிறக்கின்றனவா? மற்றவர்களுக்குப் பிறப்பதில்லையா? அப்படியல்லவே.
எந்த மதத்தைச் சார்ந்தவராயிருப்பினும், எந்த இனத்தைச் சார்ந்தவரென்று அடையாளப்படுத்தப்படினும், குடும்பம் என்ற வீட்டிற்குள் குழந்தை என்ற விளக்கை கர்த்தரே ஏற்றிவைக்கிறார். அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார் (மத் 5:45) என்று இயேசு போதிக்கிறாரே. கொடுப்பவரை அடையாளம் கண்டுகொள்ளாத பெற்றோர்கள் குழந்தையைக் கெடுத்துவிடுகின்றனர். 'நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி தேவன் மனிதர்களை ஆசீர்வதித்தார்' (ஆதி. 1:28) என்பது முதல் தம்பதியர்களுக்கு ஆண்டவர் கொடுத்த வாக்கு. மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? (யாத் 4:11) என்றும் தனது உரிமையைச் எடுத்துச் சொல்லுகின்றாரே. உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக் குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக் குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ? (ஏசா. 29:16). அனாதையாக தெருவில் நிற்கும் குழந்தை ஒன்றிடம், உனது அப்பா-அம்மா யார்? என்று கேட்கும்போது, தெருவில் படுத்துக்கிடக்கும் ஒரு நாயைக் காட்டினால் நாம் நம்பிவிடுவோமா? அத்தனை புத்தியீனரா நாம்? ஆனால், இன்றைய உலகம் அறிவியல் என்ற பெயரிலும், ஆராய்ச்சி என்ற பெயரிலும் அப்படி புத்தியீனமானவைகளைத்தான் பேசிக்கொண்டிருக்கின்றது. 'குரங்கிலிருந்து மனிதன் வந்தான்' என்று அவர்கள் சொல்லும் வார்த்தைகள், குரங்கு மனிதக் குட்டியைப் போட்டது என்ற அர்த்தத்தில் அல்ல, குரங்குகள் வளர்ந்து, வளர்ந்து மனிதனாகிவிட்டன என்ற அர்த்தத்திலேயே சொல்லுகின்றார்கள். தென்னை மரம், மாமரமாகிவிடக்கூடுமா? அப்படிப்பட்ட ஆராய்ச்சியைச் செய்து செய்துதான் உலகம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆணை பெண்ணாக மாற்றுகிறார்கள், பெண்ணை ஆணாக மாற்றுகிறார்கள். ஆண்டவர் படைத்தவற்றை அழித்துப்போடுபவர்கள் இவர்கள். பலுகிப்பெருகவேண்டும் என்ற வார்த்தைக்கு விரோதமாக பலுகிப்பெருக இயலாக ஓரினச்சேர்க்கைத் திருமணங்கள், குஞ்சு பொறிக்காத முட்டைகள், முட்டையிடாத கோழிகள் என பலுகிப்பெருகும் ஆண்டவரின் திட்டத்திலிருந்து விலகி அழிவின் ஆபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது உலகம்.
'பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்' என்று ஆதி மனிதர்களுக்கு ஆண்டவர் கொடுத்த வாக்கிலேதான் மனிதனின் வாழ்க்கை இன்றும் விரிந்துகொண்டேபோகிறது. 'பிறப்பிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ?' (ஏசா. 66:9) என்ற சட்டத்தின் கீழ் தன்னைக் கட்டிவைத்திருப்பவர் அவர். அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னே ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே (மல். 2:15). மேலும், மனிதனைக் குறித்து சாலமோன் வகையறுத்து எழுதும்போது, 'இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்குப் போகிறது' (பிரச. 12:7) என்று எழுதுகின்றார். எந்த மதத்தைச் சார்ந்தவர்களைக் குறித்தோ, இனத்தைச் சார்ந்தவர்களைக் குறித்தோ இங்கு குறிப்பிடப்படவில்லை, 'மனிதர்கள் அனைவரையும்' குறித்து எழுதப்பட்டிருக்கின்ற வார்த்தை இது. இந்துக்களானாலும், முஸ்லீம்களானாலும், கிறிஸ்தவர்களானாலும், வேறெந்த மதப்பிரிவைச் சார்ந்தவர்களானாலும், மண்ணை விட்டதும் (உடலை விட்டதும்) ஆவி தன்னைத் தந்த தேவனிடத்தில்தான் போய் நிற்கும். ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின் மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது (பிரச. 8:8). பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர்கள் அடக்கம்பண்ணப்பட்டாலும் (பிரச. 8:10) அவர்கள் ஆவி தேவனிடத்திற்குத்தான் போய் நிற்கும். சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது (யோபு 12:10) என்றும், தேவனுடைய ஆவியானவர் என்னை உணடாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது (யோபு 33:4)என்றும் சொல்லுகிறான் யோபு. 'மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே' (எண். 16:22) என்ற அடைமொழியோடு ஆண்டவரை அழைக்கின்றனர் மோசேயும், ஆரோனும். மேலும், 'தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவர்' (தானி. 5:23) என்று பெல்ஷாத்சார் ராஜாவுக்கு கர்த்தரைக் குறித்து அறிமுகப்படுத்துகின்றான் தானியேல். எனவேதான், சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக என்றும் (சங். 150:6), அவரே நம்மை உண்டாக்கினார் (சங். 100:3) என்றும், நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் (சங். 95:6) என்றும் பாடுகிறான் சங்கீதக்காரன்.
மெய்யான தேவனை அடையாளம் கண்டுகொண்டவர்களாக ஒரு சந்ததியார் வளர்ந்துகொண்டே சென்றாலும், மற்றொருபுறமோ, உலகத்தின் தீமைகளால் தங்களைக் கெடுத்துக்கொண்ட சந்ததியாரும் வளர்ந்துகொண்டேதானிருக்கின்றார்கள். இம்மாபெரும் பிரிவினையை தொடக்கத்திலேயே கண்ட கர்த்தர், பொல்லாதோரை வேரறுத்துவிட முயன்றார். 'நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன், நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது' என்றார் கர்த்தர் (ஆதி. 6:7). மனிதர்களை உண்டாக்கியதற்காக மனஸ்தாபப்பட்ட கர்த்தர், மனிதனோடு கூட, தான் படைத்த மிருகங்களையும், பறவைகளையும்கூட அழித்துவிட எண்ணினார். பல மிருகங்களுக்கும், பலவிதமான பறவைகளுக்கும் அழிவு வந்ததற்குக் காரணம் மனிதர்களின் வழிமாறியப் பாதையே.
தனக்குப் பிரியமான சந்ததியைப் பெறவேண்டும் என்று மனிதனை உண்டாக்கிய தெய்வம் எத்தனையாய் முயன்றாலும், அவர் தனக்கென தெரிந்தெடுத்த அத்தனை மனிதசந்ததியினின்றும் தீவினை செய்யும் மற்றுமோர் சந்ததி இன்றும் வளர்ந்துகொண்டேயிருக்கிறது.
இயேசு போதித்த ஒரு உவமை இதற்குப் பொருத்தமானதே. ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார் இயேசு (மத் 13:27-30). இயேசுவை அறியாதவர்கள் அனைவரும் களைகளே. மெய்யான தெய்வத்தைக் கண்டுகொள்ளாத அனைவரும் களைகளோடு கட்டப்படப்போகின்றவர்களே. தவறு செய்துவிட்ட மனிதர்களுக்குத் தண்டனையாக, அவர்களின் குழந்தை பெறும் தன்மையை அவர் தடுத்து நிறுத்தவில்லை; மாறாக, அவர்களை திருத்தும் முயற்சிகளையே தன்னை மனிதனுக்கு முன்பாக தேவன் எடுத்துவைத்தார். அவரது விருப்பத்தின்படி வாழும் பிரிவினர், அவரது விருப்பத்திற்கேற்ப மற்றவரையும் வழிநடத்த விரும்புவதில் தவறு உண்டோ? தாங்கள் அறியாதவைகளும், தங்கள் பிதாக்கள் பயப்படாதவைகளும், நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டுக்கொண்டிருக்கும் ஜனங்களை, ஜெநிப்பித்த கன்மலையை நோக்கித் திருப்புவது அவரை அறிந்தவர்களின் கடமையல்லவா? (உபா. 32:17).
உண்டாக்கிய மெய்தேவனை அறிந்தவர்கள் ஒருபுறம் பலுகிக்கொண்டிருந்தாலும், மெய்தேவனை அறியாதவர்களும் மற்றொருபுறம் பலுகிக்கொண்டிருக்கின்றனர். அவரை அறியாத மாபெரும் கூட்டத்தினருக்கு அவரை அறிவிக்க, அறிந்தோர் படும் கஷ்டங்கள் அநேகம். தந்தையைக் கண்டுகொள்வதுதான் மனித வாழ்க்கையின் விந்தை.
Comments
Post a Comment