யாருக்கு முன்னுரிமை?
எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை ஒரு மனிதன் அறியாதிருந்தானால், அவனுடைய உரிமை கூட பறித்துக்கொள்ளப்படும் தவறான திசையில் அவன் பயணம் அமைந்தவிடும். பள்ளியில் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கல்விக்கு முன்னுரிமை வழங்காமல், நட்புக்கும், காதலுக்கும், போதை வஸ்துக்களுக்கும் முன்னுரிமைக் கொடுத்து, படிப்பினைக் கெடுத்து, முன்னுரிமையைத் தள்ளிவிட்டு வாழ்க்கையில் பின்தங்கிய நிலையின் பரிதாபத்தைச் சந்திக்கின்றனர். படிப்பினைக் கெடுத்த வாலிபர்கள் பலர் பாதையோரத்தில் நின்று பள்ளிநாட்களையும், கல்லூரி நாட்களையும் நினைத்துக்கொண்டிருந்தால், கல்வி திரும்ப வந்துவிடாதே. முன்னுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் தனி உரிமை; என்றாலும் கூட, அது மனிதனோடு கூட இணைந்து பயணித்துக்கொண்டிருப்பது. ஒரு நொடியிலும், ஒரு நிமிடத்திலும் தீர்மானிப்பதைப் பொறுத்து அடியோடு மாறிவிடக்கூடியது. இறைவனுக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை என்பது மாற்றத்தகாதது. பிள்ளைகளுக்கு, பெற்றோருக்கு, கட்டிய மனைவிக்கு, கணவனுக்கு, நண்பர்களுக்கு என ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவருக்கும் நாம் கொடுக்கவேண்டிய விதத்தினை அறிந்திருப்பது அவசியம். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33) என்று முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய தேவனுடைய ராஜ்யத்தை இயேசு வலியுறுத்திப் பேசினாரே. தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கும் மனநிலையினைப் பின்னுக்குத் தள்ளுகின்ற உலகத்தின் மனப்பாங்கோடு ஒட்டியிருப்போர், முன்னுரிமையைத் தள்ளிவிடுகின்றவர்களே. தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கும் மனந்திரும்புதலுக்கு முன்னுரிமை கொடுக்காமல், தேவையற்ற பிற நமது இதயத்தை ஆட்சிசெய்துகொண்டிருந்தால், இயேசுவின் வருகையின்போது பரலோகத்தில் பிரவேசிக்கும் நமது உரிமை பறிபோய்விடுமல்லவா! உனது வாழ்க்கையில் எனக்கே முன்னுரிமை என்பதை இயேசு அழுத்தமாய் கூறினாரே. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல (மத் 10:37). தேவனையும் நேசிக்கவேண்டும், பெற்றோரையும் நேசிக்கவேண்டும் என்றாலும், தேவனுக்குப் பின்னரே பெற்றோர் என்ற வரிசை மாற்றத்தக்கதல்ல. திருமணத்தின்போது, விழாக்களின்போது, முன்வரிசையில் முக்கியமானவர்களுக்கென்று போடப்பட்ட இருக்கைகளில் யாராவது வந்து அமர்ந்தால், அவர்களை நாம் எழும்பச்சொல்லுகிறதில்லையோ. அப்படியிருக்க, முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய தேவனுடைய ஸ்தானம் உன் வாழ்க்கையில் தள்ளப்படலாகுமோ. பல்வேறு அழுத்தங்கள் வௌ;வேறு திசைகளில் நம்மை நகர்த்த முற்பட்டாலும், முதலிலிடம் இதற்குத்தான் என்பதைத் தெரிந்துகொள்வதில் நாம் கவனமாயிருக்கவேண்டும். தேவராஜ்யத்திற்கும், மனந்திரும்புதலுக்கும் வாழ்க்கையில் முன்னுரிமை கொடுக்காதவர்களே, வாழ்க்கையில் பின்தங்கியிருப்பவர்கள்; நித்திய வாழ்வுக்கு அப்பாற்பட்டுக் கிடப்பவர்கள்.
காணாமல் போனவர்களைக் குறித்து நாம் அடிக்கடி தியானித்திருப்போம்ளூ ஆனால், காணாமற்போனவைகளைத் தேடிய மேப்பன், விதவை, தகப்பன் என்பவர்களைப் பற்றிய தியானமும் நம்மை முன்னேற்றத்தின் பாதையில் கொண்டுசெல்லப் போதுமானது. தேவனை விட்டு, தேவனுக்குக் கொடுக்கவேண்டிய முன்னுரிமையை மறந்து தூரமாய் வாழ்வோர் ஒருபுறமிருக்க; தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் பல்வேலு நிலைகளில், ஊழியத்தின் பாதையில், வாழ்க்கையின் வழிகளில் முன்னுரிமையினை அடையாளம் கண்டுகொள்ள இயலாதிருக்கின்றனர். மந்தையைக் காக்கும் போதகர்கள் எப்படி செயல்படவேண்டும் என்றும், எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும் உவமையினாலேயே இயேசு உபதேசித்தார். காணாமல் போன ஆடுகளைத் தேடி அலையும் கண்கள் மேய்ப்பர்களுக்கு வேண்டும் என்றார். உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ? (லூக் 15:4) என்றார் இயேசு. மனந்திரும்பிய நீதிமான்களை, விசுவாசிகளை கொண்ட சபைகளை உடைய போதகர்களின் கண்கள் இன்று சபையையே பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஒருபுறம் அறிவிக்கப்படாத ஜனம் கூட்டம் கூட்டமாய்க் கிடக்க, முன்னுரிமை சபைக்குத்தான், சபைக்கு வரும் மக்களுக்குத்தான், சபையில் உள்ள விசுவாசிகளுக்குத்தான் என்று இராக்காலம் நெருங்கவிருக்கும் நேரத்திலும் மந்தையையே ஆந்தைபோல காத்துக்கொண்டிருக்கும் மேய்ப்பர்கள் அநேகர். அநேக இடங்களில் மேய்ப்பர்கள் சபையை விட்டு வெளியேறுவதே இல்லை, மந்தையை விட்டு எங்காவது போய்விட்டால், ஏதோ தவறு செய்துவிட்டதைப் போன்ற எண்ணம் அவர்களைப் பிடித்துவிடுகின்றது. ஞாயிற்றுக் கிழமை என்றால், நான் என் சபையில்தான் இருக்கவேண்டும், சபையை விட்டு வேறெங்கும் போகமாட்டேன் என்று தங்களது தீர்மானத்தை பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் போதகர்கள் அநேகர் உண்டு. தன்னுடைய சபை, தன்னுடைய விசுவாசிகள் என்று உரிமை பாராட்டிக்கொண்டு, முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய மக்களை மறந்துவிடுகிறார்கள் இவர்கள். மந்தையின் மேலேயே கண்களை வைத்துக்கொண்டு, வெளியே கிடக்கும் ஆடுகளை வாடவிட்டுவிடுபவர்கள்.
ஒரு ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை மனந்திரும்பிய பிற ஆடுகளை வனாந்தரத்திலே விட மேய்ப்பர்கள் பலருக்கு மனம் வருவதில்லை, ஆடுகளும் மேய்ப்பர்களை விடுவதில்லை. ஒரு காலத்தில் தேடித் தேடிச் சென்று தொழுவத்திற்குள் கொண்டுவந்த ஆடுகளே இன்று மேய்ப்பனைத் தேட விடுவதில்லை. 'பாஸ்டர் நீங்க இருந்தாதான் ஆராதனை நல்லா இருக்கு, நீங்க செய்தி கொடுத்தால்தான் நல்லாயிருக்கு' இங்கேயே, எங்களுடனேயே இருங்கள், வெளியே எங்கும் போகவேண்டாம் என்று விஷமான பாசவார்த்தைகளை பேசும் ஆடுகளும் இந்நாட்களில் ஏராளம் ஏராளம். சபைக்கு வந்து காணாமல் போனவர்களைத் தேடும் மேய்ப்பர்கள் உண்டு, ஆனால், சபைக்கு வராமல், மந்தையை அறியாமல் கிடக்கும் ஆடுகளைத் தேடும் பணி முன்னுரிமை கொடுக்கப்படவேண்டியதல்லவா. இப்படி வனாந்திரத்தில் அலைந்து திரியும் மேய்ப்பர்களால் வருத்தத்தைச் சந்திக்கும் பிற ஆடுகள் அதனைத் தாங்கிக்கொள்ளவேண்டுமே. நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்ற (அப் 21:13) பவுலின் தைரியம் மேய்ப்பர்களுக்கு வரவேண்டுமே.
ஆனால், இத்தகைய நிலையை இன்றைய சபைகளும், சபைப் போதகர்களும் பொறுத்துக்கொள்வதில்லை; எனவே, மனந்திரும்பிய மந்தையைத் தேடியே ஒவ்வொரு நாளும் போதகர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 15:7) என்றார் இயேசு. ஆனால், பல மேய்ப்பர்களுக்கோ, மனந்திரும்பிய தொண்ணூற்றொன்பது ஆடுகளுடன் ஆராதனை செய்வதுதான் ஆனந்தம். இதன் நிமித்தமாகவே, அறிவிக்கப்பட்டவர்களுக்கே சுவிசேஷத்தை அறிவிப்பதிலும், போதிக்கப்பட்டவர்களுக்கே வேதத்தை தொடர்ந்து போதித்துக்கொண்டிருப்பதிலும் மேய்ப்பர்கள் பலர் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கின்றனர். பல்வேறு பெயர்களில், பல்வேறு தரப்பட்ட கூட்டங்கள் அனைத்தும் 'மனந்திரும்பியவர்களுக்காகவே நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது'. விதவையாயிருந்தாலும், மீதமிருக்கிற வெள்ளிக்காசுக்கல்ல, காணாமல் போன வெள்ளிக்காசுக்குத்தானே முன்னுரிமை கொடுத்தாள். (லூக். 15:8)
காணாமல் போனவர்களுக்காகச் செய்யப்படும் செலவுகளை, மந்தையில் உள்ளோர் புரிந்துகொள்ளவேண்டுமே. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே (லூக் 15:30) என்று கதறுகிறவர்களாகக் காணப்படக்கூடாது. ஒவ்வொரு ஆடாக மேய்ப்பன் கண்டுபிடித்து, 'என்னோடு கூடச் சந்தோஷப்படுங்கள்' (லூக். 15:6) என்று சொல்லும்போது, அந்த சந்தோஷத்தின் பங்காளிகளாக பிறர் காணப்படவேண்டுமே; அது பரலோகத்தின் சந்தோஷமல்லவா. அறிந்தவர்களுக்கு அவர் உரிமை; அறியாதவர்களுக்கே முன்னுரிமை.
Comments
Post a Comment