Skip to main content

பாத்திரமா? பத்திரமா?

 பாத்திரமா? பத்திரமா?



அதற்கு கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும்  இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். (அப் 9:15,16)

தேவனுடைய கரத்தில் நாம் பாத்திரமாயிருந்தால், எந்த சூழ்நிலையிலும் நாம் பத்திரமாகவே இருக்கின்றோம் என்ற உள்ளுணர்வும் உள்ளத்தில் அனுதினமும் உண்டாகிக்கொண்டேயிருக்கவேண்டும். கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டு, கன்மலையின் மேலேயே நம்முடைய வீடு கட்டப்பட்டுமிருக்கிறது (மத். 7:24,25) என்ற ஆழமான சத்தியத்தினை விட்டு நமது மனது ஒருபோதும் அகன்று சென்றுவிடக்கூடாது. எனினும், இன்றைய நாட்களிலோ, கர்த்தருடைய கரங்களில் பாத்திரமாக அல்ல பத்திரமாகவே இருக்க விரும்பும் மக்களே அநேகர். பாத்திரமாகத் தெரிந்துகொள்ளப்பட்ட பவுல், பாடுகளை விட்டு பின்வாங்கவில்லையே. அடிக்கப்பட்டாலும், துன்புறுத்தப்பட்டாலும் 'பவுலின் பாத்திரம் நிரம்பி வழிந்துகொண்டேயிருந்ததே;' 'என் பாத்திரம் நிரம்பி வழிகிறது'  (சங். 23:5) என்ற தாவீதின் அனுபவம் இதுதானோ!

இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது (ஏசா 49:16); மற்றும் உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மனியைத் தொடுகிறான் (சகரி. 2:8) என்பது போன்ற வசனங்களை பிள்ளைகளான நாம் பிதாவினிடம் உரிமைபாராட்டுவது தவறல்லவே; எனினும், அதற்காக, நாம் உயிரோடிருக்கும் நாளெல்லாம் தேவராஜ்யத்திற்கு உபயோகமற்றவர்களாகவே வாழ்ந்துவிடுவோமென்றால், பரத்தினால் நமக்குக் கிடைத்த பாதுகாப்பினால் பரலோகம் பலனடையாது. மரணத்திற்குப் பின் தேவராஜ்யம் ஒருவேளை புறந்தள்ளாமல் நம்மை ஏற்றுக்கொள்ளலாம்; என்றபோதிலும், மரணத்திற்கு முன் நம்மால் செய்யப்பட்டிருக்கவேண்டிய தேவராஜ்யப் பணிகளை நாம் புறந்தள்ளிய பழி நம்மேலே சுமந்துவிடுமே. 'என் கன்மலையும் என் கோட்டையும் நீரே' (சங். 31:3) என்ற உறுதி, நம்மை நகரச்செய்யாமலிருப்பதற்கு அல்ல; மாறாக, 'நத்தையைச் சூழ்ந்திருக்கும் கூட்டைப் போல' 'ஆமை சுமந்துகொண்டேயிருக்கும் ஓட்டைப் போல' நாம் நகர்ந்துகொண்டிருக்கும் இடமெல்லாம் நம்மை பாதுகாப்பதே. 'அவரே என் கோட்டை' என்று கூறிக்கொண்டு, வீட்டை விட்டே வெளியேறாமலிருப்போமென்றால், நாட்டைச் சுதந்தரிப்பது என்பது நமக்கு இயலாததோர் இலக்காகவே மாறிவிடும். பயன்படுத்தப்படாத பாத்திரங்களாக பளபளப்பாகவோ,  அழகாக, அலங்காரமாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களாகவோ நாம் காணப்படக்கூhது. 'நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாய்?' (ரோமர் 9:20) என்று எஜமானை நோக்கி எதிர்த்துப் பேசும் பாத்திரங்களாக அல்ல; மாறாக, உருவாக்கப்பட்டதின் சித்தத்தை உயிரோடிருக்கும் நாளெல்லாம் உணர்ந்து வாழுவதோடு, உன்னதத்திற்கு உபயோகமாக உலகத்தில் வாழுவதே பாத்திரமாயிருக்கும் நமது பிரதான நோக்கமாயிருக்கவேண்டும். மண்ணின் மேல் அவருக்கு இருக்கும் அதிகாரத்தினாலேயே, மண்ணான நமது வாழ்க்கை வடிவமைக்கப்படுகிறது (ரோமர் 9:21) என்பதை புரிந்துகொள்வோமென்றால், வடிவமைக்கப்பட்டிருப்பதைக் குறித்து கவலை கொள்ளாமல், வடித்தவரைக் குறித்த கரிசனையோடு நாம் வாழத்தொடங்கிவிடுவோம். 

வனைந்துகொண்டிருக்கும்போதே கெட்டுப்போய்விட்ட பாத்திரத்தை, எஜமான் விரும்பின வடிவத்திற்கு வராத பாத்திரத்தை, மண்ணான நிலையில் இருக்கும்போதே மறுபடி வனைவதும், மீண்டும் உடைத்து உருவாக்குவதும் எளிதாயிருந்தது (எரே. 18:4); என்றபோதிலும், விரும்பின வடிவத்திற்கு வந்துவிட்ட பாத்திரமோ, பயன்படுத்துவதற்கு ஆயத்தமாக முழுவடிவமும் பெற்றுவிட்ட பாத்திரமோ, தன்னிலே தரப்படும் தாலந்துகளைச் சுமந்துகொண்டு, எஜமானின் தேவையைப் பூர்த்திசெய்யவேண்டுமே. இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம் (2கொரி 4:6,7) என்றல்லவா எழுதுகின்றார் பவுல். பொக்கிஷத்தை சுமந்துகொண்டிருக்கும் நாம், புறப்பட்டுச்செல்லாமலிருக்கக்கூடுமோ? இறக்கும்போது, திறக்கப்படாத பொக்கிஷத்தோடு இப்பூமியில் நம்முடைய சரீரம் புதைக்கப்படாதபடிக்கு, பாத்திரத்திலுள்ளதை இன்றே பயன்படுத்துவோம்.  

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி