Skip to main content

நாணல்

 

நாணல்



அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். (மத் 12:18-20)


வாழ்க்கையில் உண்டாகும் போராட்டங்கள், நம்மை போருக்குத்தான் ஆயத்தப்படுத்துகின்றன என்ற சத்தியம் நமது சிந்தையிலெங்கும் பரந்து, படர்ந்து, புதைந்து, பரவியிருக்குமென்றால், எப்போதும் போருக்கு ஆயத்தமாகவேயிருக்கும் வீரனைப் போல பட்டயத்தோடு பயமின்றி உலாவிக்கொண்டிருப்பது மாத்திரமல்ல, பின்வாங்காமல் போர்முனையினையும் எதிர்நோக்கிக் காத்திருப்போம். எத்திசையில் சத்துருவின் சத்தம் நித்தம் நித்தம் முழங்கிக்கொண்டிருந்தாலும், சத்தியத்தை அறிவிக்க முடியாதபடி நம்மை ஒருபோதும் அது தடுத்து நிறுத்திவிட முடியாதே. எக்காளத்தை வாயில் வைத்து, எரிகோவை ஜெயிக்கவேண்டியவர்களல்லவா நாம். அவ்வாறே, கர்த்தருடைய வீட்டின் மேல் சத்தரு கழுகைப்போல் பறந்துவரும்போது, எக்காளத்தை வாயில் வைத்து எச்சரிக்கவேண்டியவர்களல்லவா நாம் (ஓசியா 8:1).

விழுப்புண்களைப் பார்த்து அழுதுகொண்டிருப்பதற்கு அல்ல; வெற்றியைப் பார்த்து களிகூரும்படியாக அழைக்கப்பட்டவனே வீரன். காயங்கள் பல பட்டாலும், கல்லெறி பட்டாலும், கனிகளைப் பறித்திருப்போமென்றால்; நம்முடைய கரங்கள் காயங்களை ஆற்ற அல்ல, கனிகளை நினைத்து ஆர்ப்பரிக்கவே முந்திக்கொள்ளவேண்டும். 

நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை (2கொரி 4:8,9) என்று எழுதுகின்றாரே அப்போஸ்தலனாகிய பவுல். நாணலைப் போல நம்முடைய வாழ்க்கை நெரிக்கப்பட்டாலும், அவருக்கும் நமக்கும் இருக்கும் உறவிலோ நாம் ஒருபோதும் முறிக்கப்படுகிறதில்லை என்பதை அறிந்துகொள்வது அவசியம். என்றபோதிலும், பாடுகளைச் சந்திக்கும்போது, நெருக்கங்களில் அகப்படும்போது, உபத்திரவங்கள் உண்டாகும்போது, ஆண்டவருக்கும் தங்களுக்கும் இடையிலான உறவிலிருந்து தூரமாகப் போய்விடும் மக்களே இன்றைய நாட்களில் அநேகர். 

வாழ்க்கையில் உண்டாகும் பல்வேறு போராட்டங்களில், உன்னதருடனான உறவைக் காத்துக்கொள்வதே ஆத்துமாவுக்கு முதல்.ஆண்டவருக்கும் நமக்கும் இடையிலான உறவினை முறிக்க, பல்வேறு சூழ்நிலைகளை சத்துரு உருவாக்கினாலும், நெரிந்த நாணலைப் போல நம்முடைய வாழ்க்கை காணப்பட்டாலும், நாணலாகிய நம்முடைய வாழ்க்கையை சத்துருவின் கைகள் அசைத்துவிட முடியாதே. 

நெரிந்த நாணலாக ஒருவேளை நாம் இருந்தாலும், நமக்கு இருக்கும் சிறந்த வலிமையை நாம் புரிந்துகொள்வது அவசியம்; நம்முடைய வலிமையை வெளிப்படுத்தும் வார்த்தைகள் சத்துருவின் வாயிலிருந்தே வெளிப்படுகின்றதே. அசீரியாவின் ராஜா லாகீசிலிருந்து தர்தானையும், ரப்சாரீசையும், ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு அனுப்பினபோது, ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன? யுத்தத்திற்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கைவைத்திருக்கிறாய்? இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான் (2இரா 18:19-21) என்றல்லவா கூறுகின்றான்; நெரிந்த நாணலைப் பற்றியதோர் சிறந்த குணம் ரப்சாக்கேயின் வார்த்தைகளில் இங்கே வெளிப்படுகின்றதல்லவா. நம்முடைய வாழ்க்கையும் இப்படிப்பட்டதே; எத்தனையாய் நாம் நெரிந்திருந்தாலும் சத்துருவின் கைகள் நம்மை பறித்துவிடமுடியாது, முறித்துவிடமுடியாது. நமக்கும் தேவனுக்கும் இடையிலான உறவிற்கு இடையில், சத்துரு ஊடுருவ முயன்றால், அவனது உள்ளங்கையில் நாம் பட்டு உருவிப்போய்விடுவோம் என்பது நிச்சயம். இஸ்ரவேல் மக்களை விடுக்கும்படியாக தெரிந்துகொள்ளப்பட்ட மோசே நாணலுக்குள்ளேயே மறைத்துவைக்கப்பட்டான். மோசேயைக் காக்கும்படியாக பெட்டியாக மாறவும் சில நாணல்கள் பறிக்கப்பட்டிருந்தன ஆனாலும், ஆண்டவருடைய திட்டத்திலிருந்து அவைகள் முறிக்கப்பட்டிருக்கவில்லை; பறிக்கப்படாத நாணல்களோ, சத்துருவின் கண்பார்வையினை மறித்து நின்றன; நம்முடைய வாழ்க்கையும் இத்தகைய நாணலைப் போலக் காணப்படக்கூடும். (யாத். 2:3,4)

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...