அளந்தால் அளக்கப்படும்
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.(லூக் 6:38)
கோடை விடுமுறைக்காக பீஹாரிலிருந்து தூத்துக்குடிக்கு வந்திருந்தேன். விடுமுறை நாட்களின்போது, எனது மகள் ஜெரின் கிரேஷியாவின் மருந்துவ பரிசோதனைக்காக, மதுரையில் உள்ள அரவிந் கண் மருத்துவமனைக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். காரில் செல்ல தீர்மானித்திருந்த நான், எனது உடல் நிலையினைக் கருதியும், தூரத்தைக் கணக்கில் கொண்டும், பேருந்தில் செல்ல தீர்மாணித்தேன். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தூத்துக்குடியிலுள்ள எனது மனைவியின் வீட்டிலிருந்து ஆட்டோவில் புறப்பட்டு, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தேன். பேருந்து புறப்பட்டது; காலை சுமார் ஒன்பதரை மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்; அங்கிருந்து ஆட்டோவில் அரவிந் கண் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்து மருத்துவ ஆலோசனையினைப் பெற்று, தூத்துக்குடிக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அரவிந் கண் மருத்துவமனையிலிருந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம்; தூத்துக்குடி பேருந்து ஆயத்தமாயிருந்தபோதிலும், மதிய உணவை பேருந்து நிலையத்திலேயே உண்ட பின்னர் பயணிக்கலாம் என்று எண்ணி, பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கை இருக்கைகளில் அமர்ந்தவாறு கொண்டுவந்திருந்த உணவினைச் சாப்பிடத் தொடங்கினோம். நான் முதலில் சாப்பிட்டு முடித்தேன், தொடர்ந்து எனது மனைவி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அப்போது, ஒரு நபர் தனது வலது கையை வயிற்றில் மடித்து வைத்திருந்த வண்ணம் எங்களை நோக்கி நடந்து வந்தார். வலது கை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டது போன்றோ அல்லது பிறப்பிலேயே அப்படிப் பிறந்துவிட்டது போன்றோ அவர் தனது பாவனைகளால் வெளிக்காட்டிக்கொண்டிருந்தார். எங்கள் அருகில் வந்ததும், 'அண்ணே பசிக்குது' என்று சொன்னார். வலது கையைத் தவிர அவரது உடலில் எவ்வித பழுதையும் நான் காணவில்லை. எனவே, எனது கையால் அவரது வலது கையைப் பிடித்து இழுத்துப் பார்த்தேன், என்னால் இழுக்க முடியவில்லை, கை மடித்த வண்ணமாகவே இருந்தது. இந்த கையை நீட்ட முடியாதா? என்று அந்தச் சகோதரரிடம் கேட்டபோது, 'இல்ல முடியாதுண்ணே' என்று பரிதாபக் குரலில் பதில் சொன்னார். எங்காவது பணி செய்ய உங்களுக்கு விருப்பமா? வருகிறீர்களா? என்று கேட்டபோது, அமைதியாக நின்றுகொண்டிருந்தார். எனது மனைவியோ வலதுகையால் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள், இவரோ வலதுகையை வயிற்றில் வைத்த வண்ணம் நிற்கிறாரே என்று கலங்கினேன் நான். எங்களிடம் அவருக்குக் கொடுக்கும் அளவிற்குச் சாப்பாடு அதிகம் இல்லாததினால், பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். தனது இடது கையை நீட்டி அதனைப் பெற்றுக்கொண்டவண்ணம் திரும்பிச் சென்றார்.
அவர் சென்றதும், அவரைக் கண்காணிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உண்டானதினால், வேறொரு வழியில் அவர் அறியாத வண்ணம் நான் அவரைப் பின் தொடர்ந்து சென்றேன். எங்களை விட்டு, சுவரின் அந்தப் பக்கம் சென்றதும் அவர் வலது கையை நன்றாக நீட்டியவாறு நடந்து சென்றார். பேருந்து நிலையத்திற்குள் இருந்த ஒரு சாலையோரக் கடையில் நின்று நாவற்பழம் வாங்கினார். இதனைக் கண்டவாறு, நான் சற்று முந்திச் சென்று, பேருந்து நிலையத்தின் பிரதான வாசலில் நின்றுகொண்டிருந்தேன். பேருந்து நிலையத்திலிருந்து வெளியே அவர் செல்லும்போது, அவரது தோளில் கைபோட்டவாறு, அண்ணன் நல்லாயிருங்கீங்களா? என்னைத் தெரியுதா? என்று கேட்டேன். அவரோ, திரு திருவென விழித்தார். வேறோன்றும் பேச என் வாய் வார்த்தைகளைத் தரவில்லை. அவரைச் சந்தித்துவிட்டு திரும்ப வந்துகொண்டிருந்தேன். அப்போது, பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு அந்தச் சகோதரனை இத்தனையாய் நீ பின்தொடர்கின்றாயே, நான் உனக்குக் கொடுத்தவைகளுக்காக உன்னைத் தொடருகிறேன் என்பதையும் அறிந்துகொள் என்று இறைவன் பேசுவதைப் போன்ற சத்தம் என் இதயத்தில் தொனிக்க. எனக்கும் அன்று அது பாடமாயிற்று. சின்னச் சின்ன வியாதிகளையெல்லாம் காரணம் காட்டிக்கொண்டு, ஒன்றும் செய்ய இயலாதவர்கள் போல தேவனுக்கு முன் சாகும் வரை சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் மனிதர்கள் உண்டே. தலைவலி என்றாலே தாலந்துகளை ஒளித்து வைத்துக்கொண்டு உறங்கவே முற்படும் நமக்கு இத்தகைய மனிதர்கள் ஓர் பாடம்தானே. நானும் அன்று இப்பாடத்தைக் கற்றவனாக, மதுரை பேருந்து நிலையத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு பேருந்து ஏறி தூத்துக்குடி பயணமானோம்.
எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும். லூக்கா 12:48
Comments
Post a Comment