விரோதியை விரட்டிய விருந்து
ஆவிக்குரிய வாழ்க்கையில் திடமாயிருப்பினும், பலமாயிருப்பினும், ஸ்திரமாயிருப்பினும், தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவனாயிருப்பினும் (1கொரி 10:12) விரோதிகளைச் சந்திக்கும்போது தங்களது மாம்சம் விரும்பியபடி செயல்பட்டு, சற்று சமயத்திற்கென கிடைத்துவிட்ட வெற்றிய முற்றிலும் கிடைத்துவிட்டதாக எண்ணி ஏமாந்துவிடுகின்றனர். விரோதிகளைச் சந்திக்கும்போது எப்படி செயல்படவேண்டும் என்ற தேவ நோக்கத்தை மறந்துவிடுகின்றனர். எனவே பவுல், 'நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல' (2கொரி 10:3) என்று கொரிந்திய சபைக்கு எழுதினார்.
விரோதிகள் நமக்கு விரோதமாய் எழும்பும்போது நமக்குள் இருக்கும் ஆவியை முந்திக்கொண்டு சரீரம் செயல்படத் துடிக்கிறது. இதனாலேயே முடிவு ஆவிக்குரியதாயிராமல், மாம்சத்துக்குரியதாக மாறிவிடுகிறது.
உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு, அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு (நீதி 25:21) என அன்று சாலமோன் மூலமாக தனது ஞானத்தை வெளிப்படுத்தினார் தேவன். அப்படியே இயேசுவும், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்' (மத் 5:44) என்று சத்துருக்களுக்கு முன்பாக நாம் எடுக்கவேண்டிய ஆவிக்குரிய ஆயுதத்தை கற்றுக்கொடுத்தார்.
மேலும், எபேசியருக்கு பவுல் எழுதும்போது, 'ஆகையால், போராட்டங்களை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்' (எபே 6:13) என்று ஆலோசனை கொடுக்கிறார். தொடர்ந்து,
சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம், இரட்சணியமென்னும் தலைச்சீரா அத்துடன், எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள் (எபே 6:14-18) என ஆவிக்குரிய, தேவனுக்குரிய, தேவன் நமக்குக் கொடுத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஆவிக்குரியதோர் யுத்தத்திற்கு தேவனால் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதோர் யுத்தத்தினைச் செய்ய அழைப்பு விடுக்கிறார்.
சத்துருக்களை சந்திக்கும்போது இந்த சத்தியம் மறந்துவிடுகிறது அல்லது மறக்கப்பட்டுவிடுகிறது. சத்துருக்களைச் சந்திக்கவேண்டியது சரீரமல்ல சத்தியமே என்ற நிலைப்பாட்டிலிருந்து தவறிவிடுவதால் யுத்தத்தின் முடிவில் தோல்வியடைகிறது ஆவிக்குரிய வாழ்க்கை. நாம் மாம்சத்தின்படி யுத்தம் செய்ய அழைக்கப்பட்டவர்கள் அல்ல, மாம்சம் தூண்டுகிறபடி யுத்தம் செய்யவும் அழைக்கப்பட்டவர்கள் அல்ல. மாம்சத்தை சிலுவையில் அறைந்துவிட்டு, ஆவிக்குரியவர்களாக வாழ்பவர்களிடத்தில் எதிரியை எதிர்க்க மாம்சம் இல்லை. எதிரியை அல்லது நமக்கு விரோதமாய் செயல்படுகிறவர்களை காணும்போது, மாம்சம் ஆவிக்கு விரோதமாக செயல்படுகிறது, ஆலோசனைகளைத் தரத் தொடங்குகிறது, இந்த ஆபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.
சவுலை கொல்லும்படியான சந்தர்ப்பம் தாவீதிற்குக் கிடைத்தபோதிலும், தாவீதிற்குள் இருந்த தேவ ஆவி அவனை மேற்கொண்டதினால் அவன் தனது கையிலிருந்த பட்டயத்தால் சவுலை வெட்டவில்லை. எதிரியை அங்கேயே கொன்றுவிட்டு நிம்மதியாய் வாழ்ந்துவிடும் சந்தர்ப்பம் உண்டானபோதிலும், ஆவியினால் தன்னை ஜெயித்த்து. தேவ ஆவியைப் பெற்றிருந்தும் சவுலுக்கு விலகி ஓடுவதையே தனதாக்கிக்கொண்டவன் தாவீது.
சத்துருக்களை சந்திக்கும்போது, பார்க்கும்போது, அவர்கள் செய்யும் தீமையைக் காணும்போது, நமக்குள் இருக்கும் சக்தியாகிய சத்தியத்தின் ஆயுதத்தை மறந்துவிடக்கூடாது.அது காட்டும் வழியிலேயே நாம் செல்லவேண்டும். இல்லையேல் சறுக்கல்களே நேரிடும்.
அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான், அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள், சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை.(2இரா 6:23)
சீரியாவின் இராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் பண்ண ஆயத்தமாகி, ஆலோசனை செய்துகொண்டிருந்தபோது. அவனது யுத்த ஆலோசனை எலிசா தீர்க்கதரிசிக்கு கர்த்தர் வெளிப்படுத்தினார். இதனை அறிந்த சீரிய இராஜாவின் கோபம் இஸ்ரவேல் என்ற பெரிய தேசத்தை விட்டுவிட்டு எலிசா என்ற ஒரே ஒரு மனிதன் மேல் சென்றது.
மாம்சத்தின் ஓர் கோணத்தினை நாம் அறிந்துகொள்ளவேண்டும். சீரிய இராஜாவினால் நாம் கற்கவேண்டிய பாடம் உண்டு. இஸ்ரவேல் என்ற முழு தேசத்தை தன்வசப்படுத்தும் நோக்கம் சீரிய இராஜாவுக்கு இருந்தது. அவனது கண், மனம் முழுவதும் இஸ்ரவேல் தேசத்தையே நினைத்துக்கொண்டிருந்தது. எப்படியாவது இஸ்ரவேல் தேசத்தை முற்றிகை போட்டு அதனைப் பிடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடம் தீவிரமாய் செயல்பட்டுக்கொண்டிருந்hன், தன்னுடைய சேனாபதிகளோடு ஆலோசனையும் செய்துகொண்டிருந்தான். இஸ்ரவேல் தேசத்தின் பட்சமாய் இருக்கும் எலிசா சீரிய இராஜாவுக்க எதிரியாய் தென்பட்டபோது, இஸ்ரவேல் தேசத்தை பிடிக்கவேண்டும் என்ற கவனத்தை விட்டுவிட்டு, எலிசாவைப் பிடிக்கவேண்டும், அழிக்கவேண்டும் என்று தனது கவனத்தை திசை திருப்புகிறான். 'தேசத்தின் மேல் இருந்த பார்வை, தனி மனிதனின் மேல் திரும்பிற்று'.
ஆத்துமாக்களை, மனிதர்களைப் பிடிக்கும் வேலையை விட்டு விட்டு எதிரியாய் தென்படுவோரை விரட்டிக்கொண்டு அலையும் வேலையை செய்யவேண்டாம். அப்படிச் செய்தால், வாழ்க்கையின் முடிவில் எதிரியை விரட்டிக்கொண்டு அலையும் வேலையைத்தான் செய்து முடித்திருப்போம், தரிசனத்தையோ இழந்து நிற்போம். சீரிய இராஜா அனுப்பி சேனை பட்டணத்தை வளைந்துகொண்டது, ஆனால், சேனையின் பார்வையோ எலிசா என்ற ஒரு மனிதன் மேலேயே இருந்தது. தேசத்தை பிடிக்கும் நோக்கமும் தரிசனமும் அங்கே இல்லாதுபோயிற்று. கோபமெல்லாம், எலிசா என்ற அந்த ஒரு மனிதன் மேலேதான், தேசத்தைப் பார்க்கக்கூடாதபடிக்கு முதலில் பார்வை போனது சீரிய இராஜாவுக்குத்தான் அவன் எலிசாவுக்கு விரோதமாய் அனுப்பிய சேனைக்கு அல்ல. எண்ணமெல்லாம், நோக்கமெல்லாம் எலிசா எலிசா என்றாகிவிட்டபோது, இஸ்ரவேலும் காக்கப்பட்டது.
இச்சம்பவத்தினை அப்படியே நமது ஆவிக்குரிய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும், அப்போது ஓர் சத்தியம் புரியும். ஆவிக்குரியவர்களாகிய நாம் தேசத்தை சுதந்தரிக்கவேண்டியவர்கள், எதிரியாய் செயல்படும் தனி மனிதனை நோக்கித் திரும்பிவிடக்கூடாது. தேசத்தை சுதந்தரிக்க அழைக்கப்பட்டவர்கள் நாம். எதிரியை நோக்கித் திரும்பிவிட்டால் தேசத்தை மறந்துவிடுவோம், இது சத்துருவின் தந்திரம். தேசத்தைப் பிடிப்போம், எதிராய் திரியும் எதிரியை அல்ல.
எலிசா இருந்த பட்டணத்தைச் சூழ்ந்துகொண்ட சீரிய சேனையும், எலிசா இருந்த பட்டணத்தை ஒன்றும் செய்யவில்லை. பார்வை எல்லாம் தனி மனிதன் எலிசாவின் மேலேயே, அவனை அழிக்கவேண்டும் என்ன எண்ணமே சீரிய சேனையின் பிரதான நோக்கமாயிருந்தது.
எலிசாவைச் சுற்றிலும் சீரிய இராஜா அனுப்பிய சேனை நின்றுகொண்டிருந்தபோது, எலிசாவுக்குள்ளோ எவ்வித கலக்கமும் இல்லை. அவன் எந்நாளும்போல தனது வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டிருந்தான். எலிசாவின் ஆவிக்குரிய கண்கள் எதிரியின் சேனையை அல்ல கர்த்தரின் சேனையைப் பார்த்துக்கொண்டிருந்தது. எலிசாவின் வேலைக்காரனின் கண்களோ கர்த்தரின் சேனையை அல்ல எதிரியின் சேனையைப் பார்த்துக் கலங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் தன்னிடத்தில் வராதிருக்கும்வரை எலிசா அவர்களை ஒன்றும் செய்யவில்லை. தூரத்தில் நின்ற சேனை தன்னை நெருங்கியபோதே கர்த்தரிடத்தில் வேண்டுதல் செய்கிறான். அது ஓர் பதட்டமான வேண்டுதலுமல்ல, மிக சாதாணமானது, 'ஆண்டவரே இவர்களுக்கு கண் மயக்கம் உண்டாகும்படி செய்யும்' (2இராஜா 6:18) என்பதே எலிசாவின் வேண்டுதல். உடனிருந்த தேவனோடு எலிசா செய்த உரையாடல் என்றே அதனைச் சொல்லலாம்.
எலிசாவின் வேண்டுதலைக் கேட்டு கண் மயக்கம் உண்டானபோது, எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல, இது பட்டணமும் அல்ல, என் பிறகே வாருங்கள், நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோனான் (2இரா 6:19).
சீரிய சேனை சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான், பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள் (2இரா 6:20). எப்படி இருந்திருக்கும் சீரிய சேனையின் வீரர்களுக்கு, அவர்கள் இருதயம் அப்போதே இறந்திருக்கும்.
எலிசா சீரிய சேனையினை தேவ ஆவியின் நடத்துதலினாலேயே எதிர்கொண்டான். ஆனால், இஸ்ரவேலின் இராஜாவோ அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான். (2இரா 6:21)
அதற்கு எலிசா: நீர் வெட்டவேண்டாம், நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக் கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான். அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான், அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள், சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை.(2இரா 6:22-23)
விரோதிப்போரை, சந்திக்கும் ஆவிக்குரிய பெலம் பெருகட்டும் நம்மில். எதிர்ப்போரை சந்திக்கும்போது அதிர்ச்சியில்லாமல் ஆவியின் முதிர்ச்சியோடு செயல்படவேண்டும்.
இஸ்ரவேல் இராஜாவின் மாம்சத்தைச் சார்ந்திருந்ததையே அவனது வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. எதிராய் வருவோரை வென்றுவிட பெலம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களைக் கொன்றுவிடும் மனம் இருந்தது. இப்படி தேசத்தின் இராஜா மாம்சத்தைச் சார்ந்திருந்தாலும், ஆவிக்குரிய ஒரு மனிதனான எலிசாவைக் கொண்டு தேவன் தேசத்தைக் காப்பாற்றினாரே.
எலிசா விருந்து கொடுத்து எதிரியை விரட்டியடித்தான்
Comments
Post a Comment