Skip to main content

நீதியும், பீதியும்

 

நீதியும், பீதியும்

 

ஒவ்வொரு மனிதனையும் இவ்வுலகிற்கு அனுப்பியதற்கு பிதாவிற்கொரு நோக்கம் உண்டு. மனிதர்களை முன்குறிக்கும் மனம் கொண்டவர் அவர். சிம்சோன் தாயின் கர்ப்பத்தில் பிறக்கும் முன்னரே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன். நான்; கர்ப்பத்திலிருந்து வெளிப்படும்போதே உமது சார்பில் விழுந்தேன், நான் என் தாயின் வயிற்றில் இருந்தது மதல் நீர் என் தேவனாயிருக்கிறீர் (சங். 22:10) என்கிறான் தாவீது. அதுமாத்திரமல்ல, என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர் (சங். 139:13) என்பதும், 'நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே (சங். 71:6) என்பதும் அவனது கூற்றே. உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது : என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷ{ரனே பயப்படாதே (ஏசா. 44:2) என்று ஏசாயா தீர்க்கதரிசியும் இதையே உறுதிப்படுத்துகின்றார். கர்த்தர் எரேமியாவை நோக்கி, நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன், நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்றார் (எரே. 1:5) இது தேவனது தெரிந்தெடுத்தலின் உயர்ந்த படியல்லவா! எனினும், நாம் எப்படி தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை அவரை நெருங்கும் முதல்படியில்தான் நம்மல் அறிந்துகொள்ளமுடியும். இயேசுவை விசுவாசிக்காமல், வேதத்திற்குக் கீழ்ப்படியாமல், தேவனுக்குத் தூரமான வழியில் நின்றுகொண்டு, 'நான் எப்படி தெரிந்தெடுக்கப்பட்டவன்?' என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தால், விடையறிய இயலாது. 'நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்' (யோவான் 1:23) என்று யோவான் தன்னைக் குறித்து நன்கு அறிந்துவைத்திருந்தான். அந்த அறிவே, இயேசுவுக்கு பாதையை உண்டாக்கவேண்டும் என்ற அறிவை அவனுக்குக் கொடுத்தது.

சகோதரனே, சகோதரியே நீ எதற்காகப் பிறந்தாய் என்று புலம்புகின்றாயோ? சோதனையின் மேல் சோதனை, வேதனைதான் வாழ்க்கை என்று அங்கலாய்க்கின்றாயோ; கவலைப்படவேண்டாம், கர்த்தரண்டை வா; நீ இந்த உலகத்தில் பிறந்ததின் நோக்கம் உனக்கு வெளிப்படும். எப்படிப் போவது என்ற கேள்வியுடன் நிற்கும் உனக்கு இப்படிப் போ என்ற அறிவுரை பிறக்கும். செய்வதறியாது திகைத்து நிற்கும் உனக்கு செய்யவேண்டியதெல்லாம் அறிவிலே உதிக்கும். வாழ்க்கை ஏன்? என்று கேட்ட உனக்கு வாழ்க்கையின் மேன்மை புலப்படும். உன் பயணத்தைத் தொடங்க பக்கத்தில் அவரே இருப்பதும், பாதம் கல்லில் இடறாதபடிக்குக் கரம்பிடித்து உன்னை நடத்துவதும் உனக்கே தெரியும். யோவானைப் போல நீ சத்தமாயிருந்தால், செத்தபின் உன்னால் அவருக்குப் பயன் கிடைக்குமோ? உயிர் இருக்கும்போதே உணர்ந்துகொண்டால் மாத்திரமே அது சாத்தியமாகும். இதுதான் பாதை என்றால், அதில் நீ விதையானாலும் விட்டுவிடாதே.

நம்முடைய தெரிந்தெடுத்தலையும், பயணிக்கவேண்டிய பாதையையும் நாம் கண்டுகொண்ட பின்னர், தூரத்திலிருக்கும் இலக்கை நோக்கி துணிவுடன் செல்லவே நாம் அழைக்கப்பட்டவர்கள்; வழியில் கிடக்கும் விரியன்களுக்கெல்லாம் பயந்து வழியை மாற்றிக்கொள்ளக்கூடாது. தனது அழைப்பை அறிந்தும், தான் பயணிக்கவேண்டிய பாதையினைப் புரிந்தும், நீதியைத் தெரிந்துகொண்ட பின்னரும் பயந்த மனதுடன் முன்னேற மனமின்றி முடங்கிப்போனவர்கள் ஏராளம். 'நான் அதற்காக அழைக்கப்பட்டவன்' என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள், ஆனால் அந்த அழைப்பிற்காக தாங்கள் செய்யவேண்டிய செயலையோ மறந்தவர்களாயிருப்பார்கள். விளையாட்டு மைதானத்திற்குள் வீரனாக நுழைந்த பின்னும், ஓட மனதின்றி இலக்கை கண்களாலேயே பார்த்துக்கொண்டவர்களாக இருப்பிடத்திலேயே நின்றுகொண்டிருந்தால் 'இலக்கு நமது கையை வந்தடையாது'; நிச்சயம் நாம் ஓடியாகவேண்டும், போராடியாகவேண்டும். உலகத்தைக் கண்டோ, உடனிருப்போரைக் கண்டோ, உபத்திரவங்களைக் கண்டோ நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தை நாம் நிறுத்திவிடக்கூடாது. நீதியின் பாதையில் (ஆத்துமாவுக்கு) ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் (ஆத்துமாவுக்கு) மரணம் இல்லை (நீதி. 12:18).

நீதியின் வழியை அறிந்துகொண்ட பின்னரும், பிரயாண பயம் பலரைப் பிடித்தாட்டுகின்றது. பயண வழி அறிந்தும், புறப்படாமல் ஓரத்திலேயே ஒதுங்கி நின்று உயிரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் மக்களாக நாம் வாழக்கூடாது. வீரன் என்றால் போருக்குப் புறப்படவேண்டுமே. பெற்றோருக்குப் பயந்தும், நண்பர்களுக்குப் பயந்தும், உறவினருக்குப் பயந்தும் நீதியை நிறைவேற்ற பெலனில்லாமற் போனவர்கள் ஏராளம். நீதி என தெரிந்திருந்தும், பயம் அவர்களை செயல்படவிடாமல் தடுப்பதே அதற்குக் காரணம்.

யூதர்கள் இயேசுவைக் கொலை செய்ய வகைதேடினார்கள்; என்றாலும், யூதர்களை விட்டு முற்றிலும் ஒதுங்கியே வாழ்ந்துவிடவில்லை இயேசு. வரவேண்டிய நேரத்தில் யூதேயாவுக்கு வருவதற்கு அவர் தயங்கவில்லை. லாசரு வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார் இயேசு. அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள் (யோவா 11:6-8). யூதேயாவைக் குறித்த பயம் சீஷர்களின் மனதில் நிறைந்திருந்தது. எனவே அவர்கள் தங்கள் ஊழியத்தின் பட்டியலிலிருந்து 'யூதேயா' வையே நீக்கிவிட்டனர். எலியாவைக் கொல்லவேண்டுமென்று யேசபேல் எழுந்துநின்றபோது, ஆண்டவர் சொல்லாமலேயே எலியா ஓடி ஒளித்துக்கொண்டான். தன் பிராணனைக் காக்க அவன் சென்றான், என்றபோதிலும் ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் (1இராஜா. 19:2). இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடக்கூடாது. மேலிடத்திலோ, ஆட்சியிலோ யாரோ வந்துவிட்டார்கள் என்று ஓடி ஒளியவேண்டாம். சத்துரு வாசலை மூடும் முன்னதாக நீங்களே வீட்டிற்குள் உட்கார்ந்துகொள்ளவேண்டாம். பயப்படுத்தி நம்மைப் பதுங்கச் செய்வது சத்துருவின் தந்திரமே.

ஆனால், யூதேயாவில் இயேசுவுக்கு லாசரு என்ற நண்பன் உண்டே. அந்த நண்பன் வியாதியாயிருந்த செய்தி வந்தடைந்தபோது, அந்த நண்பனைக் கூட சந்திக்கச் செல்ல இயேசுவை சீஷர்கள் அனுமதிக்க மனதற்றவர்களாயிருந்தார்கள். சீஷர்கள் இயேசுவை நோக்கி: ரபீ, இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள் (யோவா 11:8). லாசருவை உயிரோடு எழுபப் சென்றார் இயேசு, ஆனால், சீஷர்களோ, 'இயேசுவும் மரித்துவிடுவார், தாங்களும் மரித்துவிடுவோம்' என்ற எண்ணத்துடன் சென்றனர். திதிமு என்னப்பட்ட தோமா மற்ற சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான் (யோவான் 11:16). அந்த நண்பனின் மரணத்தை யூதர்களுக்கு பிதாவை அறிவிக்கச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் இயேசு. கல்லெறியத் தேடினவர்களைக் கூட்டிக்கொண்டு கல்லறைக்குச் சென்றார், யூதேயா இயேசுவின் பிறப்பிடம் (மத். 2:1), அங்கிருக்கும் சொந்த ஜனங்களுக்குக் கூட நற்செய்தியை அறிவிக்க இயலாதபடி பயம் சீஷர்கள் நெஞ்சை அடைத்திருந்தது.

நண்பனாகிய லாசரு மரித்திருந்தாலும், நாம் மரித்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தனர் சீஷர்கள். இப்படிப்பட்ட நிலையில் இருப்போரும் உண்டு. ஆத்துமாக்கள் அநேகம் காணப்படும் இடமாயிருந்தாலும், ஆபத்தையே இத்தகையோரின் கண்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. பாதுகாப்பான இடத்திலேயே பணியினைத் தொடரலோமே என்ற விருப்பம் அவர்களுக்குள் வேரூன்றிவிடுகின்றது. மிஷனரிகளை அடித்துவிரட்டும் இடத்திற்கு ஊழியம் செய்யப் போகவேண்டுமா? மனிதர்களையே நேசிக்கத் தெரியாத ஜனத்தினர் மத்தியில் ஊழியம் செய்யப் போகவேண்டுமா? அந்த இடத்தில் இருக்கும் ஆத்துமாக்களை எண்ணாமல், ஆபத்துக்களையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இயேசுவை அறியாதவர்கள் ஆயிரமாயிரமாய்க் காணப்பட்டாலும், பாவத்தில் மரணத்தைத் தழுவுவோர் பலஆயிரம் பெருகிக்கொண்டிருந்தாலும், அவர்களது ஆத்தும மரணத்தைத் தடுத்து நிறுத்தும் சுவிசேஷத்தைச் சுமந்து செல்லும் பயமில்லாத ஆவியே ஒரு மனிதனை பணித்தளத்திற்குக் கூட்டிச் செல்லும். வெளியிலே மரணம் என்றே நினைப்போர் நிச்சயம் குகையிலேயேதான் ஒளிந்துகொண்டிருப்பர் என்பது நிச்சயம். ஆத்துமாக்களுக்காக சுவிசேஷத்தை கொடுக்க மாத்திரமல்ல, ஜீவனையும் கொடுக்க அழைக்கப்பட்டவர்கள் என்ற அறிவே நம்மை பணிக்களத்திற்குக் கொண்டுசெல்லும். நாம் ஒதுக்கிவைத்திருக்கும் கிராமங்கள் எத்தனை? நாடுகள் எத்தனை? மனிதர்கள் எத்தனை? சீஷர்கள் 'யூதேயாவை' ஒதுக்கிவிட்டதுபோல நாம் எதனையும் ஒதுக்கிவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம்.

அப்போஸ்தலரின் வாழ்க்கையில் நடந்ததுவே இதுவே. இயேசுவின் சீஷர்களைக் கொலை செய்வது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று ஏரோது அறிந்து, யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலை செய்தான் (அப். 12:2), சபையில் உள்ளவர்களைத் துன்பப்படுத்தினான் (அப். 1:1), தொடர்ந்து பேதுருவையும் ஏரோது பிடித்து சிறையிலே அடைத்தான். எனினும், துன்பப்பட்டுக்கொண்டிருந்த சபையினரின் ஊக்கமான ஜெபம் பேதுருவை சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தது. ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரனைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு (ஏரோது) யூதேயாதேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான் (அப் 12:19). கொலை செய்யும் ஏரோது இருந்தாலும், இயேசுவை அறிவிக்கவேண்டியது நம் கடமையே.

தேவன் என்னை இந்த ஊழியத்திற்கு அழைத்திருக்கிறாரே, நான் சென்றால் என்னுடைய வாழ்க்கையின் எதிர்காலம் என்னவாகும்? யார் என்னை போஷிப்பார்கள்? யார் எனக்கு பண உதவி செய்வார்கள்? எனது குடும்பம் மற்றும் பிள்ளைகளின் நிலை என்னவாகும் என்ற பல்வேறு காரியங்களை மனதில் கொண்டு பயணிக்க மனதில்லாமல் பீதியடைந்து பயணத்தையே விட்டுவிடுகின்றனர் அழைப்பைப் பெற்றவர்கள். அழைத்தவர் உண்மையுள்ளவர் என்பதை மறந்துவிடவேண்டாம். தகப்பன் இளையவனிடத்தில் வந்து நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்று சொன்னபோது, அவன், போகிறேன் ஐயா என்று சொல்லியும் போகவில்லை (மத். 21:30); இந்தக் கூட்டத்தில் நாம் இடம்பெறவேண்டாம்.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...