Skip to main content

சில்லரையில் விழுந்த சீஷன்

 

சில்லரையில் விழுந்த சீஷன்

 

அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.(மத் 26:14-16)


தேவஜனம் என்று நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாம், அவ்வப்போது நமது மனநிலையினை ஆராய்ந்து பார்க்கவேண்டும். எல்லாவற்றையும் துறந்து இயேசுவை பின்பற்றும் ஊழியர்கள் பலர், ஆத்தும ஆதாயத்தினை விட்டு திசை திருப்பி, தனக்கான ஆதாயத்திற்கான பாதையில் வழிமாறிவிடுகின்றனர். அழைப்பினை ஏற்ற அன்று, 'ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்' (பிலி 3:7) என்று தைரியமாகத் அர்ப்பணித்த மனிதர்கள் பலர், நாட்கள் செல்லச் செல்ல நஷ்டமாகத் தாங்கள் எண்ணியவைகளை இலாபமாக நினைக்கத் தொடங்குகிறார்கள். ஓடிப்போ, என்ற அழைப்பைப் பெற்ற லோத்து குடும்பமாக ஓடும்போது, மனைவி பின்னிட்டுத் திரும்பிப் பார்த்ததினால் அங்கேயே உப்புத்தூணாக மாறிவிட்டாளே. ஆவிக்குரிய வாழ்க்கையிலும், அழைப்பின் ஓட்டத்திலும், நஷ்டமென்று நாம் விட்டவைகளை ஆசையோடு எட்டிப் பார்ப்பதும் நம்மை அப்படியே மாற்றிவிடும்.

சீமோன், யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரை இயேசு சீஷர்களாக அழைத்தபோது, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள் (லூக். 5.11). எல்லாவற்றையும் விற்று, பொருட்களை பணமாக்கி வைத்துக்கொள்வோம், இயேசுவுக்குப் பின்னே சென்றாலும் நமக்கு அது உபயோகப்படும் என்ற எண்ணம் அவர்களில் உண்டாகவில்லை. இயேசுவுக்காகவே தங்கள் வாழ்க்கையை தியாகித்துவிட்டதின் தொடக்கமே அவர்களது அழைப்பு. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, 'நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே' என்று தாங்கள் செய்த தியாகத்தை சொல்லிக்காட்டுகின்றனர், அத்துடன், 'எங்களுக்கு என்ன கிடைக்கும்?' (மத். 19:27) என்ற சுய ஆதாயத்தின் வலைக்குள்ளும் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள். தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று (லூக் 9:46). யாக்கோபும், யோவானும் இயேசுவினிடத்தில் வந்து: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் (மாற். 10:37) என்று தங்கள் சுய ஆதாயத்தைத் தேடுகின்றனர். பூமியில் இத்தனை காரியங்களை இயேசுவுக்காக நாம் இழந்திருக்கின்றோம், எனவே, மகிமையில் அந்தத் தியாகங்களுக்குப் பதிலாக ஈடுகட்டப்படவேண்டும் என்ற எண்ணம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.

ஊழியத்தின் பாதையிலும், அர்ப்பணித்தோர் பலரை இத்தகைய சுய ஆதாயம் ஆட்டிப்படைக்கின்றது. தாங்கள் செய்த தியாகத்தையே எப்போதும் சொல்லிச் சொல்லி மற்றோரைக் காட்டிலும் பெரியவனாக தங்களை வேறுபடுத்திக்காட்ட நினைக்கும் மனிதர்களுக்குள்ளே சுய ஆதாயமே புதைந்து கிடக்கின்றது. பூமிக்குரிய வாழ்க்கையில் மேன்மையானவைகளைத் துறந்து, ஆவிக்குரிய வாழ்க்கையில் அது ஈடுகட்டப்படவேண்டும் என்று அலையும் மனிதர்களால் நிலையான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ இயலாது; சுய ஆதாயம் அவர்களை அவ்வப்போது சோர்ந்துபோகப்பண்ணும். ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது (மத் 5:3).

'எனக்கு என்ன கிடைக்கும்' என்கேள்வியே யூதாஸ் வாழ்க்கையிலும் காணப்பட்டது. இயேசுவை அவன் பின்பற்றிக்கொண்டிருந்தபோதிலும், சீஷனாக இருந்தபோதிலும், ஊழியத்தின் பணப்பையும் அவனிடத்திலேயே இருந்தபோதிலும், தன்னுடைய பணப்பையில் ஒன்றுமில்லாத உணர்வு அவனை தொற்றிக்கொண்டது. கையில் எவ்வளவோ ஊழியத்தின் பணம் இருக்கிறது, ஆனால், அதில் எனது சுய வாழ்க்கைக்குரிய பணம் ஒன்றுமில்லையே!என்று கணக்குப் பார்த்த யூதாஸ், தன்னுடைய பணப்பையில் பணத்தைச் சேர்க்க விரும்பினான். எனக்கு என்ன கிடைக்கும்? என்ற கேள்வி வளர்ந்து வளர்ந்து, இயேசுவைக் காட்டிக்கொடுத்தாகிலும் தனக்கு ஏதாகிலும் கிடைக்கட்டும் என்ற நிலைக்கு யூதாசைத் தள்ளியது. மாபெரும் தவற்றை தான் செய்துவிட்டதை பிற்பாடு அவன் உணர்ந்தான். குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் (மத் 27:4) என்று தனது தவற்றை அவன் உணர்ந்தவனாக, கொடுத்தவர்களிடமே சென்று காசைக் கொடுத்தபோதிலும், 'அது உன்பாடு' என்ற பதிலே மிஞ்சியது. அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான் (மத் 27:5). அவரைப் பின்பற்ற தன்னை அர்ப்பணித்த மனிதர்கள், திசை திரும்பி பொருளாசையைச் சார்ந்துபோகும்போது, அவர்களுடைய வாழ்க்கையிலும் இந்நிலையே உண்டாகின்றது.

'எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்ட பேதுரு இயேசுவை மறுதலிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான். அதுபோன்று, இயேசுவிடமிருந்து எனக்கு இனி எதுவும் கிடைக்காது, மனிதர்களிடமிருந்தாவது எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டியதுதான் என்ற எண்ணத்துடன், 'நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்?' என்று கேட்ட யூதாஸ் இயேசுவின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டான். அவருக்காக அர்ப்பணித்த நாம், எதற்காக அவருக்குப் பின்னே சென்றுகொண்டிருக்கின்றோம். 'ஆதாயம்' என்ற எண்ணம் நமது ஊழியத்தின் ஓட்டத்தை அழித்துவிடுவதுடன், உடனிருப்போரையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது. கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும் தரித்திரரானதில்லை, என்றபோதிலும் தியாகம் செய்துவிட்டதால் நான் தரித்திரனாகிவிட்டேன் என்று நினைவு கிறிஸ்துவை நாம் இழக்கச்செய்துவிடும். எனக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வியும், என்னுடைய பெயரில் எவ்வளவு பணம் இருக்கிறது, வருங்காலத்திற்கென எனக்கு என்ன இருக்கிறது போன்ற கேள்விகளும் நம்மை யூதாசைப் போல மாற்றிவிட வலிமை பெற்றவைகள்.

ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் (பிலி 3:18-20) என்று இவ்வுலகத்தில் ஊழியத்தினால் ஆதாயம் தேடும் மனிதரையும், இரட்சகராகிய இயேசுவின் வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்போரையும் பவுல் எத்தனையாய் வித்தியாசப்படுத்திக் காண்பிக்கின்றார். நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்ளூ எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் (2தீமோ 4:7,8) என்ற எண்ணமே நமது சிந்தைதனை நிரப்பட்டும். 'கிரீடம் தந்தால் நான் ஓடுகிறேன்' என்று கிரீடத்திற்காக ஓடுபவர்கள் அல்ல நாம், ஓட்டத்தை உண்மையாய் முடித்தால் கிரீடம் நிச்சயமாக நமது தலையில் சூடப்படும்.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...