Skip to main content

ஆசீர்வாதமா? வேதனையா?

 ஆசீர்வாதமா? வேதனையா? 


 மண்ணினாலே படைக்கப்பட்டவர்களாயினும் நம்மை விண்ணுக்குரியவர்களாகவே நடக்கப் பழக்குவிக்கிறவரும் (2 கொரி. 5:1), இவ்வுலகத்தின் சிறையிருப்புகளில் சிக்கிக்கொள்ளாமல் அவர் சிறகுகளின் கீழே  தஞ்சம் புக நம்மைத் தெரிந்துகொண்டவரும் (சங். 91:4), நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன் (லேவி. 20:26) என்று நம்மை முத்திரித்தழைத்தவரும், 'அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல' (யோவான் 1:27) என்று யோவான் ஸ்நானகனைப் போல சொல்லத்தக்கவர்களாகிய நம்மை, சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாக (எபே 6:15) அவரது பணியில் முன்னேறச்செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகள். 

'எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு' (யோபு 23:14) என்ற யோபுவின் வார்த்தைகளின்படி, மேற்படிப்பிற்காகக் காத்திருக்கும் நமது பிள்ளைகளின் வாழ்க்கையில் தடையின்றி தேவ சித்தம் நிறைவேற கர்த்தர் உதவிசெய்வாராக!   

அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, 'பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர்' என்று தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்ட பலிபீடத்தின் கீழேயிருந்த ஆத்துமாக்கள் கேட்ட கேள்விக்குப் பதிலாக, 'தங்களைப் போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும்' என்று சொல்லப்பட்டதைப் போன்ற (வெளி 6:9-11) காலம் இது. ஒருபுறம் ஆத்தும அறுவடை பெருகுகிறது என்றாலும், மறுபுறம் பணித்தளங்களிலே விதைகளாகும் ஊழியர்களின் தொகையும் நிறைவாகிக்கொண்டேயிருக்கின்றது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியமல்லவா! பலிபீடத்தினடியில் சேரும் பாக்கியம் ஒருவேளை நமக்குக் கிட்டாவிடினும், சம்பத்தைச் சேர்க்கும் நாளில், 'ஊழியஞ்செய்தவன்' என்று நாம் வித்தியாசமாவது காட்டப்படவேண்டுமே. (மல். 3:18)

எனவே, ஆத்துமாக்களாக அரிக்கட்டில் அங்கம் வகித்தால் மாத்திரம் போதும் என்ற மனநிலையோடு அல்ல, அறுவடையாளர்களின் தொகையை நிறைவாக்குவோரின் வரிசையில் வீரர்களாக முன்னேறுவோம்; கர்த்தரின் கண்களுக்கு முன் கதிர்களாக மாத்திரமே காட்சிக்கு நின்றுகொண்டிருப்பவர்களாக அல்ல, கோதுமை மணிகளாக விழுந்து பலனைக் கொடுக்கப் புறப்படுவோம்; அரண்மனை சுகமே போதும் என்று அடங்கிக்கிடப்பவர்களாக அல்ல; செத்தாலும் சாகிறேன் என்று ஆத்துமாக்களைக் காக்க அடியெடுத்துவைப்போம். இவைகளையே சிந்தையில் சுமந்தவர்களாக வருங்காலங்களில் ஆத்தும ஆதாயப் பணியில் முன்னேறிச் செல்ல கர்த்தர் துணைசெய்வாராக!  

பிரியமானவர்களே! ஆண்டவரின் அழைப்பினை ஏற்று, ஆத்தும ஆதாயப் பணியில் முன்னேறிச் செல்ல முனைந்து நிற்கும் நாம், நம்முடைய வாழ்க்கையை பயணத்திற்குப் பாரமானதாகவும், பாதகமானதாகவும் மற்றும் பாதை மாறக்கூடியதாகவும் ஒருபோதும் மாற்றிவிடக்கூடாது என்பதிலும் கவனமாயிருக்கவேண்டும். ஏனெனில், நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் குறைவுகள், தடைகள் மற்றும் நிறைவேறாத எதிர்பார்ப்புகள் போன்றவை, அநேக நேரங்களில் தவறான திசைகளிலும் மற்றும் தவறான பாதைகளிலும் நம்மை வழிநடத்திவிடவும் மற்றும் தவறான மனிதர்களுடன் நம்மை இணைத்துவிடவும், அவர்களுடன் உறவினை உருவாக்கவும், அவர்களோடு ஐக்கியம் கொள்ளும்படிச் செய்யவும் போதுமானவை. தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள நாம் ஆசைப்படுவது ஒருபோதும் தவறல்ல; அது தன் விருப்பங்களை மனதில் சுமந்துகொண்டிருக்கும் ஒரு பிள்ளை, தந்தையினிடத்தில் சென்று கேட்பதைப் போன்ற ஒரு சுதந்திரமான உரிமை உணர்வே. என்றபோதிலும், நாம் எத்தனையாய் வேண்டினாலும், 'சகலத்தையும் அதினதின் காலத்திலே (in His time) நேர்த்தியாகச் செய்கின்ற தேவன்' (பிர. 3:11), நம்முடைய வாழ்க்கையிலும், 'அவருடைய வேளையிலேயே' தகப்பனாக அவர் நமக்குத் தர வேண்டுமென்று விரும்புகின்றவைகளைத் தருகின்றார் என்பதை அறிந்துகொள்வது அவசியம். எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; 'ஏற்ற வேளையிலே' (due time, proper time, right time) நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர் (சங். 145:15) என்றும், 'என்வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது' (யோவான் 2:4; 7:6) என்றும் வாசிக்கின்றோமே. எனவே, நம்முடைய தேவைகளிலும், தேவனுக்காகவே காத்திருக்கக் கற்றுக்கொள்ளுவோம். தேவைகளைக் குறித்த அறிவு மாத்திரமல்ல, அவைகளைத் தரும் தேவனைக் குறித்த அறிவும் நம்மை ஆட்கொள்ளுமென்றால், 'காத்திருக்குதல் நமக்கு கடினமாயிராது, நமது கால்களும் வழிதப்பிப் பயணிக்காது'

மேலும், 'நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை' (யாக்கோபு 1:17) என்பது மெய்தான்;; என்றபோதிலும், அவருடைய சித்தத்தின்படி கேட்டால் மாத்திரமே அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதையும் கூடவே நாம் அறிந்திருக்கவேண்டுமே (1யோவான் 5:14). ஆத்துமாவைக் குறித்து எவ்வளவேணும் எள்ளளவேணும் கவலைகொள்ளாமல், சரீரத்தின் காலம் இவ்வுலகத்தில் காலாவதியாகின்ற நேரத்திலும், ஆஸ்திகளின் மீது மாத்திரமே ஆசைகொண்டு, அவைகளையே வாழ்க்கையின் இலட்சியமாகவும் இலக்காகவும் மனதிற்கொண்டு, அவைகளால் மாத்திரமே தங்கள் வாழ்க்கையை நிறைக்க முற்படுவோரை, 'மதிகேடனே' (லூக். 12:20) என்றுதானே அவர் அழைக்கின்றார். இத்தகைய மதிகேட்டிற்குள் நமது மனம் நுழைந்துவிடாதபடி கர்த்தர் நம்மைக் காப்பாராக!  

அத்துடன், நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் அவர் நமக்குள்ளே கிரியைசெய்கிறார் (எபே. 3:20) என்பதும் உண்மையே; என்றபோதிலும், அது நம்முடைய வேண்டுதலின் குறைபாட்டை அதாவது, அவர் கொடுக்கவிருந்ததைக் காட்டிலும் நாம் குறைவாக அவரிடத்தில் வேண்டிக்கொண்டதைத் தான் சுட்டிக் காட்டுகிறதே தவிர, நம்முடைய வாழ்க்கைக்கு மிஞ்சிய அல்லது மிகுதியான தேவைகளை நமக்கென்று மாத்திரமே கொடுத்து நம்மை நிறைத்து விடுவதைச் சுட்டிக் காட்டவில்ல என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டியது அவசியம். 'அதிகம்' என்று நம்முடைய கரங்களில் அவர் கொடுப்பவைகளில், அவருக்கும் அத்துடன் பிறருக்கும் பங்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாத மனிதர்களே, சுயநலவாதிகள் என்ற சிறைக்குள் தங்களை அடைத்துக்கொள்ளுகிறார்கள். தங்களது ஆசீர்வாதங்களுக்குள் அந்நியர் அத்துமீறிவிடாதபடி அரண்களுக்குள் வாழ்க்கை நடத்துகின்றார்கள். இவர்கள், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்த (மத். 25:18) மனிதனுக்கு ஒப்பானவர்களே.பிரியமானவர்களே! ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணக் கொடுக்கப்பட்டவைகளையும், சரீரத்திற்காகச் சேர்த்துவைக்கும் மனிதர்களாக நாம் காணப்படக்கூடாதே! 

ஆனால், 'ஆசீர்வாதங்கள் அளிக்கப்பட்டதற்கான காரணத்தை' அறிந்தவர்களோ, தேவன் விரும்புகின்ற வண்ணம் அவைகளை தேவனுக்காகத் திரும்பக் கொடுக்கவும், தேவனுடைய இராஜ்யத்திற்காகச் செலவழிக்கவும் மற்றும் மற்றவர்களுக்காகப் பகிர்ந்து அளிக்கவும் அறிந்திருப்பார்களே (லூக். 8:3; அப். 2:45; எபி. 10:34). 'நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்' (லூக். 16:9) என்பதுதானே இயேசு கிறிஸ்துவின் போதனை. பெற்ற ஈசாக்கையே பலியாகக் கொடுக்க ஆயத்தமாயிருந்த ஆபிரகாமைப் போலவும் (ஆதி. 22:2), பெற்ற சாமுவேலை ஆலயத்திலே கொண்டுவந்து அர்ப்பணித்த அன்னாளைப் போலவும் (1 சாமு. 1:28) நம்மையும் தேவன் மாற்றுவாராக!    

'போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக் கொண்டிருக்கிறேன்' (மாற். 10:20) என்று நியாயப்பிரமாணத்தின்படி தன்னை நீதிமானாகக் காண்பிக்க முயன்ற மனிதனிடத்தில், 'உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு' (மாற். 10:21) என்று 'கொடுக்கப்பட்டதற்கான காரணத்தை' இயேசு கிறிஸ்து சொன்னபோது, அதைக் கொடுமை என நினைத்த அவன் தடுமாறிவிட்டானே (மாற். 10:24); நீதிமான் என்று தன்னை நிரூபிக்க முயன்றவன்  நித்திய ஜீவனுக்கே தூரமாகிவிட்டானே! பிரியமானவர்களே! தேவன் தரும் ஆசீர்வாதங்களை மாத்திரமல்ல, கூடவே, அவைகளுக்கான காணரங்களையும் காணும்படியாக நமது கண்கள் திறக்கப்படட்டும். ஆசீர்வாதங்களை எப்படியாவது அள்ளிக்கொள்ளவேண்டும் அடைந்துவிடவேண்டும் என்று ஆவல் கொள்ளுகின்ற ஜனம், அவைகளை அடைந்த பின், அதற்கான காரணங்களை அறிந்துகொள்ள விரும்பாததினாலேயே, ஆசீர்வதிக்கப்படும்வரை அவரோடு கூட இருந்துவிட்டு, ஆசீர்வதிக்கப்பட்டபின் இளைய குமாரனைப் போலப் பிரிந்து சென்றுவிடுகின்றனர். ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதில், ஆபிரகாம் மற்றும் சாராய் இவர்களுடைய குடும்ப வாழ்க்கையிலிருந்தும், சில பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முயற்சிப்போம்! 

'கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே' (ஆதி. 15:2) என்று ஆபிரகாம் ஆண்டவரிடத்தில் சொன்னபோது, 'இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி, அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்' (ஆதி. 15:4,5) என்றார். உடனே, 'அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ஆதி. 15:6) என்று வாசிக்கின்றோம்;. 

என்றபோதிலும், அந்த விசுவாசத்தைத் தொடர்ந்து, 'இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே' என்று சொன்னபோதோ, 'கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன்' (ஆதி. 15:8) என்ற  ஆபிரகாமின் வார்த்தைகள், அவனுக்குள் இருக்கும் சந்தேகத்தைச் சுமந்துவருகின்றதே. 'சந்ததியைத் தருவேன்' என்றபோது இருந்த விசுவாசம், 'சுதந்தரமாகத் தேசத்தைத் தருவேன்' என்றபோது காணப்படவில்லையே! இந்த சந்தேகத்தைச் சுமந்த ஆபிரகாமின் கேள்விக்குக் கிடைத்த வேதனையான விடை தான், 'உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்' (ஆதி. 15:18) என்பது. பிரியமானவர்களே! நம்முடைய ஆசீர்வாதத்திற்கடுத்த காரியங்களில் நமக்கு இருக்கும் உறுதியான விசுவாசமும் நம்பிக்கையும், ஆத்தும அறுவடைக்கடுத்த காரியங்களிலும் நமக்குக் காணப்படவேண்டுமே. நம்முடைய வாழ்க்கைக்கடுத்தவைகளில் இருக்கும் விசுவாசம், தேசத்தைச் சுதந்தரிப்போம் என்ற நிலைக்கு வளர தேவன் உதவிசெய்வாராக.    

இரண்டாவதாக, 'உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்' என்று கர்த்தர் ஆபிரகாமோடு பேசியிருந்தபோதிலும், 'அவன் கர்த்தரை விசுவாசித்தான்' என்று எழுதப்பட்டிருந்தபோதிலும், சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்று சொன்ன வார்த்தைகளுக்கு, 'தேவனிடத்தில் கேட்காமல் ஆபிராம் கீழ்ப்படிந்துவிட்டானே' (ஆதி. 16:2); இது அடுத்த வேதனையை ஆபிரகாமின் வாழ்க்கையில் ஆரம்பித்துவைத்தது. ஆகார் தான் கர்ப்பவதியானதினால், தன் நாச்சியாராகிய சாராயை அர்ப்பமாக எண்ணினபோது, சாராய் ஆபிரகாமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும் (ஆதி. 16:4,5) என்று சொல்லுகிறாள்; அதுமாத்திரமல்ல, வீட்டை விட்டே ஓடிப்போகுமளவிற்கு ஆகாரை கடினமாக நடத்துகிறாள் சாராய் (ஆதி. 16:6). இவை அனைத்தும், சாராயின் சத்தத்தைக் கேட்டதினால் வந்த விளைவுகள்தானே! அநேக நேரங்களில் நம்முடைய வாழ்க்கையிலும், தேவனுடைய வார்த்தைகளைக் காட்டிலும், மனிதர்களுடைய வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் பெற்றுவிடும்போது, மேலோங்கி நின்றுவிடும்போது, நம்மை ஆள அவைகளுக்கு நாம் அனுமதி அளித்துவிடும்போது, தேவனுடைய திட்டத்திற்கும் விருப்பத்திற்கும் விரோதமாகவே அவைகள் நம்மைத் தூண்டிவிடுகின்றன, வழிநடத்திவிடுகின்றன; இவைகள் வேதனைகளின் வழியிலேயே நம்மைக் கொண்டுசேர்க்கும். கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா (சங்கீதம் 127:1) என்ற வார்த்தை சாராயின் வாழ்க்கையில் எத்தனையாய் பொருந்திப்போனது. 

அவ்வாறே, ஆதாம், 'ஏவாளின் வார்த்தைக்குச் செவி கொடுத்து', பூசிக்கக் கூடாத மரத்தின் கனியைப் புசித்தபோது, 'நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றும், ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்' (ஆதி 3:16,17) என்றும் வேதனையை தங்கள் வாழ்க்கையில் வருவித்துக்கொண்டார்களே. 

மேலும், அனனியா மற்றும் சப்பீராள் தம்பதியினர், ஒருவர் சொல்ல ஒருவர் சம்மதித்து அல்லது ஒருவருக்கொருவர் செவிகொடுத்து, கர்த்தருக்கு விரோதமாக வஞ்சித்து வைத்ததினால் மரணமடைந்தார்களே. 'நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள்?' என்று பேதுரு கேட்டபோது 'ஆம், இவ்வளவுக்குத்தான்' (அப். 5:8) என்ற  'கீழ்ப்படிதலுக்குள் கலந்த பொய்' அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிட்டதே. 'தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல' (மத். 10:37)  என்று இயேசு கிறிஸ்து சொல்லுவதின்  அர்த்தம், இந்தச் சூழலுக்கு இன்னும் அதிகமாகப் பொருந்துகின்றதது. 

பிரியமானவர்களே! நம்முடைய வீடு, நாம் மாத்திரம் அல்ல கர்த்தரும் இணைந்து கட்டத்தக்க பாத்திரமுள்ளதாகக் காணப்படவேண்டுமே. கர்த்தருக்குப் பிரியமில்லாத இடங்களில், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்தால், அது நிச்சயம் தேவனுக்குத் தூரமாகவும் மற்றும் துரோகமாகவும் மாறிவிடுவது நிச்சயம். மனைவிகளே, 'கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல', உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள் (எபே. 5:22) என்ற பவுலின் வார்த்தைகள், கணவனோ அல்லது மனைவியோ என்ன சொன்னாலும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படியுங்கள் என்பதைக் குறிக்கவில்லை; மாறாக, கீழ்படிதலில் புருஷனையும் மனைவியையும் இணைத்து நிற்கும் 'கர்த்தருக்குக் கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தையே' எடுத்துரைக்கின்றது. அதாவது, 'கர்த்தருக்குக் கீழ்ப்படிதல்' என்ற வட்டத்திற்குள்ளேயே கணவன் மனைவியின் கீழ்ப்படிதல் அடங்கியிருக்கின்றது' என்பதையே தெளிவுபடுத்துகின்றது; இதற்கு மிஞ்சியது வேதனையே! 

மூன்றாவதாக, தேவனுக்குக் காத்திராமல், நமது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள நாம் காட்டும் அவசரத்தினால், தேவன் விரும்பாத வழிகளில் பயணித்து பலன்களை அடைந்தாலும், அதன் முடிவில் வேதனையே ஒட்டியிருக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. நான் பிள்ளைபெறாதபடிக்குக் 'கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்;' (ஆதி. 16:2) என்பதை அறிந்திருந்த சாராய், கர்த்தருக்குக் காத்திருக்கவில்லை; தன்னுடைய குறை நிவர்த்தியாகும்படியாக, தேவனிடத்திற்குச் சென்று முறையிடவில்லை; தனது குறைக்கானக் காரணங்களை தேவனிடத்திற்குச் சென்று அறிய முற்படவில்லை; மாறாக, குறுக்கு வழியில் தனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள, தனது தேவையை பூர்த்தியாக்கிக்கொள்ள தனது அடிமைப்பெண்ணாகிய ஆகாரை கையிலெடுத்ததினால், தன்னுடைய வாழ்க்கைக்கும் வருங்காலச் சந்ததிக்கும் தானே வேதனையை வருவித்துக்கொண்டாளே! 

தனது ஆசைப்படியும் மற்றும் தனது விருப்பப்படியும், தனது கணவனையே ஆகாரினிடத்தில் சேரும்படியாக சாராய் அனுமதித்தபோதிலும், அதனை விரும்பாத ஆண்டவர் அதனால் உண்டாகும் பலனைத் தடுக்கவில்லை; அதாவது, ஆகாரின் கர்ப்பத்தை அவர் அடைக்கவில்லை; என்றபோதிலும்,  சாராளின் செயலினால் உண்டான பலனைக் குறித்து, 'அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான்' (ஆதி. 16:12) என்ற வேதனையான வார்த்தைகளைக் கூடுதலாகக் கூறுகின்றாரே. இது நமக்கு கற்பிப்பது என்ன? தவறான வழிகளில் விரும்பினவைகள் வாய்த்தாலும், அது வேதனைகளையே வாழ்க்கையில் சுமந்துவரும் என்பதைத்தானே! இராஜாவாகிய சவுல் அஞ்சனம் பார்க்கிறவளிடத்தில் விசாரிக்கும்படியாகச் சென்றதும், இஸ்ரவேலின் இராஜாவாகிய அகசியா பாகால்சேபூலினிடத்திலும் விசாரித்து அறிய முற்பட்டதும் இத்தகையத் தவற்றைத்தானே நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. தேவனிடத்திற்குச் செல்லும் தகுதியை இழந்திருந்ததினால்தானே இவர்களுக்கு இந்த நிலை.  

பிரியமானவர்களே! இன்றும், தேவனிடத்தில் செல்வதற்கானத் தகுதியை இழந்ததினாலேயே, அநேகர் வழிதவறிப் பயணித்து வேதனைகளைத் தங்கள் வாழ்க்கையில் கூட்டிக்கொள்ளுகின்றனர்.  தங்கள் வாழ்க்கையில் காணப்படும் குறைகளுக்கானக் காரணங்களைத் தேவனிடத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ள முற்படாமல், அக்கம் பக்கத்திலும், எட்டிய தூரத்திலும், கண் பார்வையின் எல்லைகளுக்குள்ளும், மனித பெலத்திற்குள் கிடைப்பவைகளாலும் தங்கள் தேவைகளையும் மற்றும் ஆசைகளையும் உடனடியாகத் தீர்த்துக்கொள்ள விரும்புகின்றனர்; இத்தகைய வழிகளில் நாம் விலகிப்போகாதபடிக்கு கர்த்தர் நம்மைக் காப்பாராக. நம்மை திருப்திப்படுத்திக்கொள்ள தேவன் விரும்பாத வழிகளில் நாம் பயணிப்போமென்றால், நம்முடைய பயணத்தின் பலனை ஒருவேளை நாம் காணக் கூடும்;; ஆனாலும், அந்த பலனின் பின்னால் மறைந்திருக்கும் வேதனையை நிச்சயம் ஒரு நாள் உணர நேரிடும். 'கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்' (நீதி 10:22) என்று வாசிக்கின்றோமே, அத்தகையை ஆசீர்வாதங்களை அவரிடத்திலிருந்து மாத்திரமே பெற்று வாழ கர்த்தர் உதவிசெய்வாராக! 


தவறான முடிவுகள் தேவனுக்கு நம்மைத் தூரமாக்கும்

தேவவையற்ற மனிதருடனும் ஐக்கியத்தை உருவாக்கும்

விரும்பினவைகள் வாய்த்தாலும் வேதனைகள் கூடவரும்

வருங்கால வாழ்வினையும் வலிகளால் நிறைத்து நிற்கும்


மத்தியஸ்தர் ஒருவரே இதை மறந்துவிடலாகாது

மற்றவர் மூலமாக மதிலைத் தாண்ட இயலாது  

பிள்ளைகள் நாமானால் பிதாவின் கண்கள் தூங்காது

பதிலாய் வரும் பலன்கள் தரித்து எங்கும் நிற்காது


ஆசீர்வாதங்களுக்கு மட்டுமே ஆண்டவரென்றால்

ஆத்துமத் தாகம் நம்மில் அணைந்துபோகுமே

ஆசீர்வதிக்கப்பட்டதின் காரணம் கண்டால் 

ஆண்டவரின் இராஜ்யம் பலன் அடைந்திடுமே


அரிக்கட்டில் மாத்திரம் அங்கம் வகிக்கின்றோமா, அல்லது 

அறுவடையாளர்களாக முன்னேறுகின்றோமா 

கதிர்களாக மாத்திரமே காட்சியளிக்கின்றோமா, அல்லது 

கழுத்தையும் கொடுக்க துணிந்து நிற்கின்றோமா


தேகத்தைக் காட்டிலும் தேசத்தின் தேவை அதிகம்

தேவனின் அழைப்பு ஏற்று புறப்படுவோம் இன்று நாமும்

வருகையின் நாட்கள் விரைந்து எண்ணப்படுகிறதே

வரவேற்க வெறுங்கையாய் நாம் நிற்கக் கூடாதே 


அன்பரின் அறுவடைப் பணியில் 

அன்பு சகோ.  P. J. கிருபாகரன் 


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...