Skip to main content

நீங்களே சாட்சிகள்

நீங்களே சாட்சிகள்


அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்து கொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள். (யோசு 24:22)


இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவரது ரத்தத்தினால் கழுவப்பட்டு, பாவங்களைக் கழைந்து பரிசுத்த வாழ்வுக்குள் நுழைந்துள்ள நாம் ஒவ்வொருவரும் நாமே சாட்சிகள் என்பதை ஞாபகத்தில் கொள்ளல் வேண்டும். எவரோ ஒருவருடைய வற்புறுத்துதலினால் வழி மாறியவர்கள் அல்ல நாம். 'நானே, வழியும் சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்' என்ற இயேசுவின் வாய்மொழிக்கு நமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். நீங்கள் எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டீர்கள்? என்ற கேள்வி நமக்கு முன் வைக்கப்படுமென்றால், நமது பிரதி பதில் என்னவாயிருக்கும்? இயேசுவை நாம் எப்படி தெரிந்கொண்டாம். இயேசு நம்முடைய வாழ்க்கையில், வர நாம் இடம் கொடுத்தோமா அல்லது யாராலோ நம்முடைய வாழ்க்கையில் திணிக்கப்பட்டாரா? மெய்யான தெய்வம் யார்? இயேசு தெய்வங்களுள் ஒரு தெய்வமா? பாவங்களுக்குப் பரிகாரம் என்ன? போன்ற பல்வேறு கேள்விகளுடன் எங்கெங்கோ ஓடிக்கொண்டிருந்த நமக்கு சகோதரர்கள் மூலமாகவோ, ஊழியர்கள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ இயேசு அடையாளம் காட்டப்பட்டார். யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவா 1:29) என்று தன்னைச் சுற்றி நின்றவர்களுக்கு அடையாளம் காட்டிக்கொடுத்தான். யோவான் தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேருடன் நின்றுகொண்டிருந்தபோது, 'இதோ இதோ, தேவ ஆட்டுக்குட்டி' (யோவான் 1:36) என்று இயேசுவை அடையாளம் காண்பித்தான். ஊழியர்கள் யோவானைப் போல இயேசுவை அடையாளம் காட்டுபவர்களே. என்றபோதிலும், 'இவரே, இவர் ஒருவரே இனி என் வாழ்க்கையின் தெய்வம், அனைத்திற்கும் அச்சாரம்' என்று அவரை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு நம்முடையது. மெய்யான தெய்வம் என்ற உணர்வுள்ள இருதயத்தோடு, உள்ளத்தில் ஏற்றுக்கொள்வது நம்முடைய பொறுப்புதான். 'நாம் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கு நாமேதான் சாட்சிகள்'. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான் (வெளி 3:20) என்ற இயேசுவின் தட்டும் சத்தத்திற்கு செவிகொடுத்து, திறந்ததால் இன்று அவருடன் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கின்றோம். திறந்தது யார்? நாம்தானே!

இஸ்ரவேல் மக்கள் இருமனதால் இழுப்புண்டு, தேவனையும், தேவர்களையும் சேவித்துக்கொண்டிருந்தார்கள். தேவ மனிதனான யோசுவா அவர்களை நடத்திக்கொண்டு சென்றபோதிலும், அவர்களோ அந்நிய தேவர்களைச் சேவித்துக்கொண்டிருந்தார்கள். வெளிப்படையாக யோசுவாவின் தேவன், உள்ளாகவோ எகிப்தின் தேவர்கள். இஸ்ரவேல் ஜனங்களின் இத்தகைய வாழ்க்கை யோசுவாவுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. 'கர்த்தரையே சேவிப்போம்' என்று தனக்கும், தன் குடும்பத்தாருக்கும் இருக்கிற வைராக்கியம், தன்னோடு உடன் இருக்கும் ஜனங்களுக்கு இல்லாததைக் கண்டபோது, யோசுவா மனம் நொந்தவனாக அவர்களை நோக்கி, 'நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்' (யோசு 24:14) என்று அவர்களை எச்சரித்தான். யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள் என்று அவர்களை முடிவெடுக்க நெருக்கினான். யோசுவாவின் மனதைப் புரிந்துகொண்ட, யோசுவாவின் வருத்தத்தைப் புரிந்துகொண்ட ஜனங்களுக்கோ உண்மையாக மனம் திரும்ப மனதில்லை. அந்நிய தேவர்களை தங்கள் நடுவிலே வைத்துக்கொண்டே (யோசு. 24:23), 'நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம்' (யோசு. 24:18) என்றார்கள். ஆனால், யோசுவாவோ அவர்களது வார்த்தைகளில் திருப்தியாகிவிடவில்லை. கர்த்தரை விட்டுவிட்டு அந்நிய தேவர்களை சேவித்தால், நன்மை செய்த தேவன் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் (யோசு. 24:20) என்று யோசுவா அவர்களை எச்சரித்தான். 'நாங்கள் கர்த்தரையே சேவிப்போம்' (யோசு. 24:21) என்று மீண்டும் ஜனங்கள் உறுதிப்படக் கூறியபோது, 'நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே சாட்சிகள்' என்றான் யோசுவா. யோசுவாவின் குணத்தைக் கொண்ட தலைவர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் இந்நாட்களில் எழும்பட்டுமே. தேவனுக்கு விரோதமான பலவிதமான செயல்களைச் செய்துகொண்டிருந்தபோதிலும், 'ஆலயத்திற்கு வருகிறார்களே அது போதும்' 'காணிக்கை கொடுக்கிறார்களே அது போதும்' என்று திருப்தியடைகிறவர்களாக, ஜனங்களின் வாழ்க்கையைக் குறித்து கவலையற்றிருக்கின்ற போதகர்கள் உண்டு. தேவனுக்கு விரோதமானவைகளை அறுத்தெறிந்து, தேவனை மாத்திரமே தெரிந்துகொள்ளும்படி போதகத்தினாலும், ஆலோசனைகளினாலும், எச்சரிப்பினாலும் ஜனங்களை நெருக்குவோராக யோசுவாவைப் போல நாமும் மாறுவோமே.

நமக்கு நாமே சாட்சிகள் என்பதில் நிச்சயம் இருக்குமென்றால், மற்றவர்களுக்கும் முன்பாக சாட்சிகளாக தேவன் நம்மை உயர்த்துவார். இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன் என்று தைரியமாக தன்னுடைய சாட்சியை சொல்பவர்களே, மற்றவர்களை சாட்சிகளாக மாற்றுபவர்கள். ஆலயத்திற்குச் சென்றும், கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்திருந்தும் 'இரட்சிக்கப்பட்டேன்' என்றோ 'நான் தேவனுடைய பிள்ளை' என்றோ தைரியமாகச் சொல்லமுடியாமல் இருக்கும் மக்கள் அநேகர் உண்டு. 'நாங்களே சாட்சிகள்' என்று சொல்லும் ஜனங்கள் பெருகட்டும். பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம் (1யோவா 4:14) என்று எழுதுகின்றான் யோவான். அப்படியே பேதுருவும், யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம் (அப் 10:39). இயேசுவை தேவன் எழுப்பினார்; ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம் என்றான் (அப். 2:32; 3:15). ஆதி அப்போஸ்தலர்களும், இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம் (அப். 5:32) என்றே முழக்கமிட்டனர். பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார் இயேசு (அப் 1:8). 'நாங்கள் சாட்சிகள்' என்று சொல்லுவோரையே தேவன் 'தனது சாட்சிகளாக' மாற்றிக்கொள்கின்றார்.

நம்மைத் தொடர்கின்ற ஜனங்கள் எந்நிலையில் இருக்கின்றனர் என்பதைக் கண்காணிப்பது அவசியமே. மாறுபாடான தங்கள் கிரியைகளினாலும், செயல்களினாலும் நன்மை பெறவேண்டிய தேவனிடமிருந்து தீமை பெற்றுக்கொண்டிருப்பதற்கான காரணம் அறியாமல், கர்த்தர் மேலேயே குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கும் மக்கள் அநேகர். தலைவனும், தலைவனின் குடும்பமும் தேவனையே சார்ந்து நிற்க, தொடர்ந்து வரும் மக்கள் தேவனுக்குத் தூரமாய் நடந்துவரக்கூடாதே; கவனமுடன் இருப்போம்; யோசுவாவைப் போல நம்மையும், நம்மைச் சூழ்ந்தோரையும் பாதுகாத்துக்கொள்ளுவோம்.










 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...