Skip to main content

ஆமான் ஆகிவிடாதே (எஸ்தர் 3:5)

 ஆமான் ஆகிவிடாதே



ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான். (எஸ்தர் 3:5)


சரீரத்தையும், சிந்தையையும், மனதையும் பாதிக்கும் காரியங்களைக் கொண்டு, ஆவிக்குரிய வாழ்க்கையையே அடக்கம்செய்துவிட முற்படுகிறான் சத்துரு. உடலின் வெளிப்புறத்தில் ஆற்றக்கூடிய அளவிற்கே உண்டான காயத்தை, உள்ளத்தின் உட்புறம் வரைக்கும் கொண்டு சென்று, ஆற்றக்கூடாததாகவும், ஆத்துமாவையே அழிக்கக்கூடியதாகவும் மாற்றிவிடுகின்றான் சத்துரு. நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது (எபே. 4:26) என்று ஆலோசனையாக எழுதுகின்றார் பவுல்; என்றாலும், சூரியன் மறைந்த பின்னும், சுகமாக நித்திரை செய்யவேண்டிய வேளையிலும், சுமையாக கோபத்தைச் சுமந்துகொண்டிருப்பதினால், சரீரம் சந்திக்கும் இரவு ஆத்துமாவையும்; இருளாக்கிவிடுவதோடு, இருதயமும் இறுகிவிடுகின்றது. கனத்த இதயத்துடனேயே காலையிலேயே கண்விழிக்கும் நிலையும் உண்டாகிவிடுகின்றது.  

இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட ராஜாவாகிய அகாஸ்வேரு (எஸ்தர் 1:1), அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்திருந்தான். ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. (எஸ்தர் 3:1,2)

மொர்தெகாய் ஆமானை வணங்காததையும், நமஸ்கரியாததையும் பிற ஊழியக்காரர்கள் கண்டபோது, அதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் வாழ்க்கையிலும் நடந்தது இதுவே (தானி. 3:12). நாங்கள் ஆமானை வணங்குவதைப்போல நீயும் ஆமானை வணங்கவேண்டும் என்று 'நாளுக்கு நாள்' மொர்தெகாயினிடத்தில் அவர்கள் சொல்லியும், மொர்தெகாய் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர்கள் அதை ஆமானுக்கு அறிவித்தார்கள் (எஸ். 3:3,4). 

ஆமான் அதைக் கேட்டபோது, நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாளும் அகாஸ்வேருவின் ராஜ்யத்தில், சகல பிரபுக்களுக்கும் மேலாக தன்னுடைய ஆசனம் உயர்த்திவைக்கப்பட்டிருப்பதை மறந்து (எஸ்தர் 3:1), மொர்தெகாயையும், அவனது ஜனங்களையும் அழிக்க முற்பட்டான்; பதவியை மறந்து, பழிவாங்கப் புறப்பட்டான். இன்றும் கோபத்தினால், இருக்கையை மறந்து, தெருக்களில் சுற்றுவோர் அநேகர்.அதுவே, ஆமானின் அன்றாடக அலுவலகப் பணியாகிப்போனது. விருந்துக்கு ராஜாவுடனேகூட அழைக்கப்பட்டிருந்தபோதிலும், அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான். அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப் போகலாம் என்று சொன்னபோது, இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான் (எஸ்தர் 5:14). எனினும்,  தாழ்வோ அமானைத் தேடிவந்தது. (எஸ். 6:13)

ஆமானை வணங்கிக்கொண்டிருந்த மக்கள், மொர்தெகாயைக் குறித்து தங்களுக்கு இருந்த கோபத்தை ஆமானிடம் கடத்தினார்கள், ஆமான் மொர்தெகாயைக் குறித்த கோபத்தை, யூத இனத்தின் மேல் காட்ட முற்பட்டான்; ஆனால், இதற்கிடையில், ராஜா குறுக்கிட்டுவிட்டார்; ராஜாவின் கோபம் ஆமானை தூக்குமரத்திற்குத் தள்ளிற்று (எஸ்தர் 7:10). மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரத்திலேயே அவன் தூக்கிப்போடப்பட்டான். கோபத்தை சுமந்துகொண்டேயிருப்போமென்றால், அது நம்மை தண்டனைக்கு நேராகத் தள்ளிவிடும்; சிங்காசனத்தில் இருக்கும் நமது நிலை, பிறர் சிரிக்கும் அளவிற்கு மாறிவிடும். சூரியன் அஸ்தமிப்பதற்கு முன், கோபத்தை அடக்கம்பண்ணிவிட்டால் 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' என்ற சிலுவையின் அன்பு நம்மிலே தென்படும். இல்லையேல், அதுவே நமது ஆவிக்குரிய வாழ்க்கையை அடக்கம்பண்ணிவிடும். .


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...